வெள்ளி, 20 மே, 2016

21. பயணங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

21. பயணங்கள்

பயணங்கள் தான் எவ்வளவு இனிமையானது. ஒவ்வொரு பயணமும் மனதில் பல மாற்றங்களுக்கான விதைகளை தூவிச்செல்கிறது. பொதுவாக பயணங்கள் என்பது ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதாக மட்டுமே அல்லாமல் நமது வாழ்க்கை மாறுதல்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் சேர்த்தே குறிப்பிடலாம்.. இந்தவாரம் நாமும்  கொஞ்சம் வலைவீசி பயணிப்போம்.

வாழ்க்கை என்பது நாம் அணுகும் முறையில் யாதர்த்தமான பயணமாக சிலருக்கும், அமைதியான பயணமாக சிலருக்கும், சிக்கலான துன்பமான பயணமாக சிலருக்கும் அமைகிறது. எல்லாமே  அவரவர்கள் எப்படி வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்பதின் அடிப்படையிலேயே இருக்கிறது.

எப்படி நாம் வாகனம் எடுத்துக்கொண்டு ஒரு பயணத்திற்கு கிளம்பும்போது இடையில் வரும் போக்குவரத்து நெரிசல்கள், எதிர்பாராத தடங்கல்கள், நாம் பின்பற்றும் போக்குவரத்து விதிகள், விதி மீறல்கள் எல்லாம் கடந்தே நம்முடைய இலக்கை அடைய முடிகிறது.

வாழ்க்கையில் நாம் இன்பமாக, தேக ஆரோக்கித்துடன் வாழ வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கை முறையில் சில கட்டுப்பாடுகளை நிச்சயம் பின்பற்றவேண்டியது எப்படி அவசியமோ அது போலவே நமது வாழ்க்கைப் பயணங்களும் நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாட்டுக்கும் இடையில் செல்கிறது.

உண்மையில் நாம் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அதனோடு வரும் நன்மை, தீமைகளை நாமே பிரித்தறிந்து கடந்து செல்ல வேண்டும். தாமரை பூவை பறிப்பதானால் சேறுள்ள குளத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும். முள்ளிலா ரோஜா என்பது எப்படி சாத்தியமில்லையோ அதுபோலவே நமது பயணங்களில் வரும் இடர்களும்...

நம்முடைய வாழ்க்கையில் கனவுகளும், எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும் கூடும்போது இலவச இணைப்பாக பிரச்சனைகளும் சேர்ந்தே வரும். நாம் தான் அதை எதிர்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயந்தாலோ, எதிர்கொள்ள தயங்கினாலோ, எதிர்கொள்ள வலிமையற்றுப்போனாலோ நம்முடைய பயணம் அப்படியே முடங்கிப்போகும்.

நமது வாழ்க்கைப்பயணம் அதுவே வகுத்துக்கொண்ட பாதையில் செல்லும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சாதாரணம். ஆனால் நமக்கென ஒரு பாதை வகுத்து நமது பயணத்தை திட்டமிடும்போது நிச்சயம் அதற்கு ஏற்றார்போல் அணிவகுத்து வரும் பிரச்சனைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். அது தான் நமது புதிய பாதையை சிறப்புற அமைக்க உதவும்.

எதிர்ப்பு இல்லாத இடத்தை போர்க்களம் என்று சொல்லமுடியுமா? யாருமில்லா இடத்தில் வாள் சுற்றினால் வீரம் எடுபடுமா? ஒரு கல் தன்னை செதுக்க அனுமதிக்கும்போது தான் நல்ல சிற்பமாக உருவாரும். ஒரு ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொள்ள முற்படும்போதே அந்த பிரச்சனை நம் கைக்குள் வந்துவிடுகிறது. ஆம் தரையில் இருக்கும் ஒரு பொருளை எடுக்க முனையும்போது ஒரு முனை உங்களிடம் தானே இருக்கிறது? அப்புறம் என்ன எளிதில் மறுமுனையும் தூக்கிவிடலாமே?

நாம் நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய  கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் இடையில் வரும் இன்னல்களை கண்டு தயங்கி, மனம் தளர்ந்து அங்கேயே நின்றுவிடாமல் பயணத்தை தொடர வேண்டும். சில நேரங்களில் நாம் நம் கனவுகளை நோக்கி நடக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்முடைய பயணம் ஆரம்பித்த இடத்திற்கே கூட வரலாம்.

இந்தச் சூழ்நிலையில் நம் மனதை எப்படி நேர்மறையாக நினைப்பது. ரொம்ப எளிமை.. எறும்புகள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கும் பாதையை ஒரு விரலால் தடுத்து நிறுத்தும் போது அந்த எறும்புகள் நமது விரலை கண்டு பயந்து அங்கேயே நிற்பதில்லை அதைத் தவிர்த்து வேறு வழியை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்கிறது. நாமும் வரும் தடைகள், தடங்கல்கள் அனைத்தையும் விட்டு விட்டு வலிமையான எண்ணம் மனதில்  கொண்டு வேறு வழியைத் தேடிச் செல்ல வேண்டும்.

நமது பயணத்தில் நாம் வெறும் வரலாறு படிப்பவர்களாக மட்டும் இல்லாமல் வரலாறு படைப்பவர்களாக இருப்போம். படிப்பவர்கள் உலகில் நினைக்கப்படுவது இல்லை. படைப்பவர்களே நிலைத்து நிற்கிறார்கள்.

எப்போதும் சொல்வது போல வாழ்க்கை என்பது மிக இனிமையானது. அதை நாம் வாழ்த்து தான் அனுபவிக்கக் வேண்டும்.

எப்படி கொல்லன் பட்டறையில் வெள்ளியை சுத்தப்படுத்தும் போது அதில் தன்னுடைய முகத்தை பார்த்ததும் வெள்ளியின் சுத்தத்தை அறிகிறோமோ அதுபோலவே வாழ்க்கைப்பயணத்தில் பிரச்சனைகளின் முடிவில் தெளிவான முகம் நம்மை பரவசப்படுத்தும்.
நாம் சிகரத்தை அடைய வேண்டுமானாலும் சிரமமான பல பாதைகளை கடந்தால் தான் அது சாத்தியப்படும். சோதனைகளுக்கு ஆட்பட மறுக்கும் எதுவும் தன்னை நிரூபித்துக்காட்டிய வாய்ப்புகளை இழக்கிறது.

நாமே அறியாத உண்மை என்னவென்றால் இந்த் உலகத்தில் நம்மிடம் தோற்றுப் போவதற்குப் பல பேர் காத்துக்கொண்டிருக்கும் போது நாம் தான் தேவை இல்லாத பயம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றில் நம்மை இழந்து வெற்றிக்கான பாதையை தவற விடுகிறோம்.

பாரதி சொன்னான்..

“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

எதற்கு தயக்கம். ஏன் பயம். மனதில் பாரதியின் வரிகளை பதித்து நம்முடைய பயணத்தில் முன்னேறுவோம்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

கருத்துகள் இல்லை: