ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நம்பிக்கை

பூமழை சொரியும் வானத்தைத் தேடி
நான் காத்து நிற்கிறேன்..

கனவுகளை மட்டுமே சுமக்கும்
கண்கள் என்னைச்சுற்றிலும்
களைத்துக் கிடக்கிறது..

நிலவுக்கு தாலாட்டுப் பாடியே
என் இரவுகள் விடிகிறது..

எல்லா சுமைகளும்
மயிலிறகு போல மென்மையானதும் அல்ல..
படிமத்துக்கரி போல கடினமானதும் அல்ல..

அமிலத்தின் வார்த்தையால்
என் இதயத்தை நீராடினாலும்
இன்னும் கரையாமல் துடிக்கிறது..

நெறிஞ்சி முள்ளாய் குத்தும்
பாதைகளையும் எளிதாய் கடந்துவிடுகிறேன்..

ஆனாலும்... சில சொல்லின்
கூர்முனைகள் என் நெஞ்சை சல்லடையாக்கி
நம்பிக்கையை சலித்து எடுக்கிறது..

இருந்தாலும்.. என் மேல்.
என் நம்பிக்கை நீர்த்துப்போகவில்லை..
என் பார்வைகளும் மாறவில்லை..

இதற்காக இன்னொரு பிறவி வேண்டாம்..
இந்த ஆயுளின் முடிவுக்குள்ளே
என் எல்லைகளை அடைவேன்..

நீர்த்துப்போக நம்பிக்கையோடே..
திடமான மனதும் இருக்கிறது..
பிறகென்ன.......???



சனி, 26 செப்டம்பர், 2015

வேண்டும்.. வேண்டும்..

அன்பே..

சில்லென்ற தூறல் விழும்
அந்திமாலைப் பொழுதில்
உன் கரம் பற்றி ஒரு
சின்ன நடை போட வேண்டும்..

வசந்தகால பூக்களைத் தூவும்
மரங்களின் நிழலில் உன்
மடி சாய்த்து
சிறிது துயில வேண்டும்...

சிலிர்க்கின்ற அருவிக்கரையில்
பாதம் நனைத்து உன்
புன்சிரிப்பில்
மனம் கரைந்து போகவேண்டும்

கடலைகள் கம்பளம் விரித்த
மணற்பரப்பில் உன்
பாதச்சுவடு
பற்றி நடக்க வேண்டும்..

விண்ணுயர்ந்த மலையுச்சியிலே
மேகம் தழுவும் வேளையிலே
உன்னோடு இருந்து
மகிழ வேண்டும்..

கனவுகளின் ராஜ்யத்தில்
மாயவன் கோட்டையிலே உன்னை
ராணியாகி
ரசித்திட வேண்டும்..

வேண்டும்.. வேண்டும்..
எல்லாம்.. வேண்டும்..

அதற்கு முன்..
எனக்கு உன்..

நிபந்தனையில்லா உன்
நேசம் வேண்டும்..
எதிர்பார்ப்பில்லா
இதயம் வேண்டும்..
நெகிழ்ந்துருக உன்
அன்பு நெஞ்சம் வேண்டும்...
கனிவு கொண்ட உன்
கண்ணோடு.. காதலும் வேண்டும்....


மந்திர வார்த்தை

இந்த நிலை மாறும் 

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒரு சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு அறிவிக்க சொன்னான்
“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .
நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .
எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”, பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .
இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .
சில வருடங்களுக்குப்பின் . . .
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .
நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .
தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .
அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”
இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .
'இந்த நிலை மாறும்'
அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .
தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .
நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .
இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் . அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .
ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.
சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .
'இந்த நிலை மாறும்'
இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .
நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.
இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !
அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை . ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.
'இந்த நிலை மாறும்'
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் ....
இன்றைய நாள் இனிதாக அமைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ..! 

புதன், 23 செப்டம்பர், 2015

ரகசியம்

திறக்கப்படாத கதவுகளின் பின்னே
ஒளிந்திருக்கும் ரகசியங்கள்..
மூடிவைத்திருக்கும்மனதின்அடியில்
கனன்றுகொண்டிருக்கும் ஆசையின் தகிப்பு..
உச்சரிக்கப்படாத வார்த்தையில் தான்
எல்லா ரகசியமும்...
ஊசியின் காதுவழி உலகத்தை
பார்க்க தெரிவதென்ன?
கவிழ்த்து வைத்த கோப்பையில்
என்ன நிரப்புவது?
கேள்விகளின் சங்கிலிகள்....
விடையில்லா முடிச்சுகளாய்...
ஓடாது தேங்கும்நீர் புழு நெளியும்
சகதியன்றோ?
சாளரங்கள் திறந்துவைக்க
வெளிச்சக் கோலத்தோடு சுகந்தம்
ஏந்திவரும் கற்று...
திறந்துவைத்த கதவின் பின்னே
ரகசியமும் இல்லை..
சங்கடமும் இல்லை...
நேர்வழியில் பயணிக்க
நிபந்தனையின் தேவை என்ன????

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

நம்பிக்கை

இலையுதிர்ந்த மரமாய்
கானகத்தின் நடுவில்...
ஒரு நிறையாத கோப்பையாய்
இருக்கிறேன்..

காய்ந்துபோன நதியின் தடத்தில்
தண்ணீரைத்தேடி
தாகமாய் அலைகிறேன்..

சுழலில் சிக்கிய சருகாய்
மீளா வெளியில்
யாருமின்றி.. திசையுமின்றி..

நகர்ந்து செல்லும் நாட்களும்..
சுழன்று செல்லும் காலமும்
நிற்காது அதன் போக்கில்..

சுமையில்லா காலப் பயணியாய்
தொடரும் என் பயணம்..

சுற்றிவரும் வல்லூறுகளின்
பார்வை..
எப்போது வீழ்வேனென்று...

புரிவதில்லை..

இலையுதிர்காலம்
தன்னைப் புதிப்பிக்கவே..
திணிப்பையும் விட
வெற்றுக்கோப்பை நலம்..

ஓங்கிப் பரிகசிக்கும்
ஓநாய்களின் கொட்டம்
விடியும் மட்டுமே..

யாருக்குமே மறுவிடியல்
இல்லாமல் போவதில்லை..

திங்கள், 21 செப்டம்பர், 2015

அமைதி


தேடிப்பிடிக்கச் செல்ல
மெல்ல பறந்து சென்றது
பட்டாம்பூச்சி....

காலவெளியில் தேடியும்
பிடிக்க முடியவில்லை...

பொறுமை தொலைத்து
ஓடித்துரத்த
விட்டு விலகிச் சென்றது...

கோபத்தோடு வேகம் காட்ட
பூக்காட்டில் ஒளிந்துகொண்டது..

வேதனைக்கண்ணீரோடு அழைக்க
நெருக்க மறுத்தது..

செயலற்று மெல்ல அமர்ந்தேன்..
கண்கள் மூடி சுவாசத்தை
நேசிப்போடு நோக்கினேன்..

பூக்களின் கூட்டத்தைப்
புன்னகையோடு பார்த்தேன்..

சூழ்ந்த வனத்தை அதன் வனப்பை
அன்போடு கட்டிக்கொள்ள..

புற்களின் மேனி வலிக்காது
மெல்ல ஸ்பரிசம் கொடுக்க..

எல்லா குரோதங்களைய்ம் விட்டு
கனிவோடு உலகை பார்த்து
அமைதியில் ஆழ்ந்திருக்க...

என் கரம் அமர்ந்தது
மெல்ல சிறகடிக்கும்
பட்டாம்பூச்சி......

கற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்


ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.

அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான
கற்றல் மட்டுமே…எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக்
கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே
இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத்
தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல்
தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன்
தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொண்டு போய் வை’ என்றார் ஞானி.

அட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!

‘கண்ணா… உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன்
மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம்
கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால்
அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும்
 இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.

மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!

தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…

நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு
குட்டிக் கதை சொல்கிறேன்…

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக
வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு
கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை
பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.

எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க
முடிகிறது என்று பலரும் கேட்டனர்.

ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.

எப்படி?

‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம்
 படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத்
தெரியாது. சுகமாகத் தெரியும்.

அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க
வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின்
மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.
இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.
படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.



பதிவு நன்றி: http://classroom2007.blogspot.in/2015/09/blog-post_21.html

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விழி மொழி



இருவிழி கருவிழி
சொல்லிடும் பலமொழி
உன் ஓரப்பார்வையே
இதயம் துளைத்திடுமே..
இமைகள் அசைத்திடாமல்
எய்யும் அம்புபோல
உந்தன் பார்வை
என் உயிர் உறிஞ்சுமே....
காதல் கொண்டு உன் கண்கள்
நோக்க
காற்றாய் பறந்திடுமே
கவலையின் வலிகள்...

பயணத்தின் வழியே

பயணத்தின் வழியே தான் என் வாழ்வை மேம்படுத்தி கொள்கிறேன் .பயணம் கற்றுத்தருகிறது .பரஸ்பர அன்பையும் நட்பையும் உருவாக்குகிறது .

பயணத்தில் தான் நம்மை நாமே அடையாளம் காணத்துவங்குகிறோம் .
ஒரே வானம் தான் என்றாலும் ஒவ்வொரு பறவையும் ஓர் இலக்கை நோக்கி பயணிக்கிறது .சில பறவைகள் தனியே பறக்க விரும்புகின்றன .எனக்கு கழுகை பிடிக்கும் .அது மிக உயரத்தில் பறக்க விரும்புகிறது .மொத்த வானமும் தன் ஒருவருக்கே என்பது போல தனியே அலைகிறது .கழுகு பயம் அற்றது .அதன் கூர்மையான கண்கள் ,இரையை எங்கு இருந்தாலும் கண்டு கொள்கின்றன .காத்திருந்து அடைகின்றன .கழுகின் ஆவேசம் எப்போதும் என்னை எழுச்சி கொள்ள செய்கிறது .அதே கழுகு தான் தன் குஞ்சுகளை அக்கறையோடும் பாசத்தோடும் கவனித்து கொள்கிறது .
பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பது இல்லை.
பறக்க வேண்டும் என்ற இடையறாத வேட்கையால் மனதால் பறக்கின்றன.அதுதான் அந்த கண்ணுக்கு தெரியாத மூன்றாவது சிறகு .நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது .அதை விரித்து பறக்க நாம் எத்தனிப்பது இல்லை ..
வாழ்க்கை பரமபத கட்டத்தை விடவும் புதிரானது .எந்த ஏணி ஏற்றி விடும்? எந்த பாம்பு இறக்கி விடும்? என தெரியாது .அதை விடவும் எது ஏணி ?எது பாம்பு? என கண்டுகொள்வதும் எளிதானது இல்லை .ஆனாலும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் .
ஒரு கல் கல்லாகவே இருக்க விரும்புகிறது .ஒரு மரம் மரமாகவே இருக்க ஆசைப்படுகிறது .ஆனால் உலகம் அப்படி எதையும் அதன் ஸ்திதியில் வாழ அனுமதிப்பதில்லை .எல்லா பொருட்களும் தாமாகவே இருக்க வேண்டியே முயற்சி செய்வதாக தத்துவவாதி ஸ்பினோஸோ கூறுகிறார் .உண்மை தான்.
'திரும்பிப்பார்' என உலகம் எப்போதும் மனிதர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது .திரும்பி பார்ப்பது என்பது வெறும் தலை திருப்புதல் இல்லையே.நேற்றை ,அதன் முந்தின நாளை ,கடந்த வருடங்களை ,கடந்த நூற்றாண்டை ,ஏன் இந்த புவியில் மனிதன் வாழ தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடரும் வாழ்வின் பக்கங்களை நினைவு கொள்ளுதல் தானே திரும்பிப்பார்த்தல் .இதன் தீவிரமான ஆதாரங்களுடன் கூடிய தொகுப்பே வரலாறு ஆகிறது .
இந்தியவானம் -எஸ் .ராமகிருஷ்ணன் -ஆனந்தவிகடன்

குட்டிக்கதை

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். 
ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். 
ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர்  தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறைவாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்கொண்டான். 
அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும். அவன்ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான் ,பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லைஎடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்றுஎன் உயிர் நண்பன் என் உயிரைக்காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி எழுதினான். 
இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்குஎன்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை"என்று சொல்லி கேட்டான். 
அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்து அழியாது" என்றுசொன்னான். 

நீதி : மறப்போம் மன்னிபோம் அன்பை செலுத்துவோம் இந்த புவிக்கும் இதில் வாழும் அனைவருக்கும் ..

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

நேரம்

செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன் ஒருவனை அனுப்பியிருந்தார் .
செல்வந்தன் வழக்கம் போலகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தான்.  எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன்  கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.
“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?” “நான் எமதர்மராஜனின் ஏவலாள்.
இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”
“நான் சாவதற்கு தயாராக இல்லை.எனக்கு இன்னும் கடமைகள் பலபாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சிலகாலம் கழித்து வா!”  
“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!” 
செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார்தெரியுமா? இந்த நாட்டிலேயே பெரியபணக்காரர்களுள் ஒருவன்!”அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு!”
“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு10 % உனக்கு தருகிறேன். அதுவே 50கோடிகளுக்கு பெறும். எதுவுமேநடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட்ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!” “நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?  நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டிஇழுத்துக்கொண்டு போகவா?”அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில்அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். ஒரு மாதம் என்பதைஒரு வாரம் ஆக்கினான்.
சொத்தில்பாதியை தருவதாகவும் சொன்னான். கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான்.ஆனால் எமதூதன் எதற்குமேமசியவில்லை. இறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்
தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன்.
எனக்குஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும்,மனைவியையும், குழந்தைகளையும்அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை  மிகவும் நேசிப்பதாகசொல்லவேண்டும். இதுவரை நான்அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை.
அப்புறம் நான்என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! எனக்குதேவையெல்லாம் ஐந்து நிமிடம்மட்டும் தான்! இதையாவது செய் ப்ளீஸ்!!”
எமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறுகோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம்பிடித்தது?” “30 வருஷம் நண்பா. 30 வருஷம்.
ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தைதர்றேன்னு சொல்றேன். இது ரொம்பபெரிய டீல். பேசாமவாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூடவேலை செய்யவேண்டாம். பத்துதலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!
”எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவேமுடியலே.   முப்பது வருஷமா நீங்க சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்தஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க?  முடிவுவரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன?  வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே?  யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!” 
அடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.
நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள். உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

தனிமை

தூரத்திலிருந்து வெளிச்சக்கீற்று
வழிகாட்ட - மெல்ல மெல்ல
செல்கிறது என் பயணம்..
சில்வண்டுகளின் கூக்குரலில்
என் வார்த்தைகள் மௌனமாயின..
இருள்சூழ்ந்த காடுகளின்
சலனமற்ற அமைதி
மெல்ல என்னை அசைத்துப்பார்க்க
தடம்மாறது அனிச்சையாக
நடைபோடுகிறேன்..
தனிமைக்காடு தாண்டி
வெளிவரும் பயணத்தில்
மெல்லப்பெருகிவரும்
ஒளிப்பிரவாகத்தில்
திரும்பிப்பார்க்க - என்
நிழலும் இல்லாது போனது...

அன்பு


ஏன் அம்பறாத்தூணியை
அம்புகளால் நிறைக்கிறாய்?
என்னை வீழ்த்த ஒற்றை
அம்பு போதுமே....
கோபக்கணை கொண்டு
என்றும் வீழ்த்த முடியாது...
பார்வைக்கணையாலே
எரிக்கவும் முடியாது...
சொல்லின் கணையாலே
என்ன செய்யமுடியும்...
எல்லாக் கணைகளையும்
வீசி எறிந்துவிடு...

அன்பை எடுத்துக்கொள்..

இந்த ஒற்றைக்கணை போதும்...
என்னை மட்டுமா?
இந்த உலகையே வீழ்த்தலாம்..

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது நான்கு வகைப்படும். மனித உடம்பை நான்கு பாகங்களாக வகைப் படுத்தினார். அவை:
இந்திரிய ஒழுக்கம் : கண் ,காது, மூக்கு ,வாய், உடம்பு என்பதாகும்
கரண ஒழுக்கம்: மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆச்சர்யம் என்பதாகும்.
ஜீவ ஒழுக்கம் : உயிர் என்பதாகும் .
ஆன்ம ஒழுக்கம் : உயிரை இயக்கம் உள் ஒளியாகும்.
இவைகள் மனித உடம்பை இயக்கும் கருவிகளாகும். இவைகளை கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கம் என்பதாகும் .
ஒழுக்கம் என்பது என்ன ?
மனிதனாக பிறந்தவர்கள் ஓழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.எல்லா ஞானிகளும் சொல்லி உள்ளார்கள் திருவள்ளுவரும் திருக்குறளில் பதிவு செய்துள்ளார் .
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் .
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி !
வள்ளலார் அவர்கள் ஒழுக்கம் எனபது எவை என்பதை தெளிவான முறையில் விளக்கம் தந்துள்ளார்கள்.
இந்திரிய ஒழுக்கம் என்பது ;—.
கொடிய சொல் செவி [காது ] புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக் கேட்டல்
அசுத்த பரிச இல்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் .
குரூரமாக பாராது இருத்தல்,
ருசி விரும்பாமல் இருத்தல் .
சுகந்தம் விரும்பாமல் இருத்தல் .
இன் சொல்லால் பேசுதல் .
பொய் சொல்லாமல் இருத்தல் ,
ஜீவர் களுக்கு துன்பம நேரிடும் போது எவ்வித தந்திரம் செய்தாவது தடை செய்தல் ,
பெரியோர்கள் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ,
ஜீவ உபகார சம்பந்தமாக சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும் ,திவ்ய திருப்பதிகளிலும் செல்லுதல் .
நன் முயற்ச்சியில் கொடுத்தல், வருவாய் [ வருமானம் ] செய்தல் ,
மிதமான ஆகாரம் செய்தல்,
மிதமான போகம் செய்தல் ,
மலம சிரமம் இல்லாமல் வெளியேற்றுதல் ,
கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,பவுதிக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் சங்கறபத்தாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,
[மந்ததரனுக்கு ] சுக்கிலத்தை [விந்து ] அதிகமாக வெளியேற்றாமல் நிற்றல் .
[தீவிரதரனுக்கு ]எவ்வகையிலும் சுக்கிலம் வெளியே விடாமல் நிறுத்தல் ,
இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் [துணியால் ]மறைத்தல்,
இதே போல் உச்சி ,[தலை ] மார்பு முதலிய அங்க அவையங்களை மறைத்தல் ,
வெளியில் செல்லும் காலங்களில் காலில் கவசம் [செருப்பு] தரித்தல்
அழுக்கு ஆடை உடுத்தாமல் இருத்தல் ,
இவை யாவும் இந்திரிய ஒழுக்கங்களாகும்.
கரண ஒழுக்கம் ;–
மனதைச் சிற்சபையின் [புருவ மத்தி ]கண்ணே நிறுத்தல் ,அதாவது புருவ மத்தியில் நிற்கச செய்தல் .
கெட்ட விஷயத்தை பற்றாமல் இருக்க செய்தல் ,
ஜீவ தோஷம் விசாரக்காமல் இருத்தல்.
தன்னை மதியாமல் இருத்தல்
செயற்கை குணங்களால் ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி]நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதல்,
பிறர மீது கோபம கொள்ளாமல் இருத்தல்,
தனது சத்துருக்கள் ஆகிய தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் ,
முதலியன கரண ஒழுக்கமாகும் ,
ஜீவ ஒழுக்கம் என்பது ;–
ஆண் மக்கள்,பெண் மக்கள்,முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி ,சமயம் ,மதம், ஆசிரமம் ,சூத்திரம் ,கோத்திரம், குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேச மார்க்கம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,–என்னும் பேதம் நீங்கி எல்லோரும் நம்மவர்கள் என்பதை சமத்திற கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும் ,
ஆன்ம ஒழுக்கம் ;—
யானை முதல் எறும்பு ஈறாகத் தோன்றிய உடம்பில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச சபை யாகவும் ,அதன் உள் ஒளியே அதாவது பரமானமாவே பதியாகவும் ,கொண்டு ,யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் –ஆன்ம ஒழுக்கமாகும் ,
இத்துடன் இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல், ஜெப தபம் செய்தல் ,தெய்வம் பராவல். பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங் குணம் பற்றல் ,பாடிப் பணிதல், பத்தி செய்து இருத்தல்,–முதலிய நல்ல செய்கைகளில் பல காலம் முயன்று முயன்று பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .
இவையே மனித ஒழுக்கமாகும் .இவற்றை முழுவதும் பின் பற்றுபவர்கள் நான்கு புருஷார்த்தங்கள் அடைவார்கள் .
அவைகள் ;–
சாகாக் கல்வி .
ஏமசித்தி,
தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ,
கடவுள் நிலை அறிந்து அம மயமாதல் .
என்பதாகும் இவையே மனிதன் மரணத்தை வெல்லும் வழியாகும் .இதை வள்ளலார் கடை பிடித்தார் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் ,நாமும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

பதிவு நன்றி: http://pkrishnan.net/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

திசை

ஆழி சூழ் உலகில் 
தனியாய் ஒரு பயணம்..
அக்கறையோ.. இக்கரையோ..
ஏக்கரையும் எல்லையில்லை..
சுற்றிச்சுற்றி வந்தாலும்
திசைமாறிப் போவதில்லை..
ஆதவன்...


தாய்மை

ஒன்றான உலகத்தில்
பலவான உயிர்கள்..
திசைபிரிந்து திக்கொன்றாய்
இருந்தாலும்..என்றும்
எங்கும்.. எப்போதும் 
மாறவேயில்லை..
தாயன்பு...


வாழ்க்கை

சோர்ந்து இருக்கும்போது
ஒரு அழகு பட்டாம்பூச்சி
தோள்மேல் அமர்ந்தால்
எப்படி இருக்கும்....
மெல்ல நாம் சாலை கடக்கும்போது
எதிர்படும் எவரையும்
நட்புடன் புன்னகைத்து
கடந்து செல்ல வரும் உணர்வு
எத்தகையது...
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றவர்களுக்கு செய்யும்
உதவி எதைப்போன்றது..
வாழ்க்கை மிக
அற்புதமானது...
எதிர்பார்ப்பு இன்றி
வாழ்ந்து பார்க்கும்போது
மட்டுமே உணரமுடியும்..

தவிப்பு

கோழி கிளறிபோட்ட குப்பையாய்
மனது...
பற்பல எண்ணங்கள்..
பற்பல வீச்சங்கள்..
பற்பல எச்சங்கள்..
எதை எடுப்பது..
எதை தவிர்ப்பது..
சிறகடிக்கும் கழுகின் பார்வை
அதன் இரையின் மீது...
சீராட்டி வைத்தாலும் பன்றி
இருப்பது சேற்றில்..

மனம்

காற்று வீசும் திசை நோக்கி
கலையும் மேகமாய் 
அலைபாயும் மனது..
நேசங்கள் தேடி..