திங்கள், 30 நவம்பர், 2015

உயிர்ப்பு


ஏதாகிலும் செய்...
ஏதாகிலும் சொல்..
ஏதாகிலும் கேள்...
உன் உயிர்ப்பைக் காட்ட
அதுவே  வழி..

ஏதாகிலும் நினை..
ஏதாகிலும் படி..
ஏதாகிலும் எழுது..
உன் செயலைக் காட்ட
அதுவே  வழி..

தூங்கினாலும் விழித்திருக்கட்டும்
உன் அகம்..
விழிப்புடன் கழியட்டும்
உன் நாட்கள்..
பொல்லாத உலகம்..
உன்னை படிக்கல்லாக்கி
மிதித்தோடிவிடும்


-சங்கர் நீதிமாணிக்கம்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

தன்னம்பிக்கை - சாமர்த்தியம்

வாழ்க்கையின் தேவை எது??
வெற்றியின் தேவை எது??
கொஞ்சம் தேடுதல்..
கொஞ்சம் அலசல்..

ஏற்றம் தருவதும்
வெற்றி தருவதும்
தன்னம்பிக்கையா?
சாமர்த்தியமா?.

எதை வேண்டுமானாலும்
அடைய ஆசைப்படலாம்
ஆசை நியாயமானதா?
சாதிக்க திறமை இருக்கிறதா?
திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு...??

எதையும் சாதிக்கலாம்.
செயல் என்பது உயிரின் இசை
சொல்லுவது தன்னம்பிக்கை..
செய்வது சாமர்த்தியம்..

அச்சமகற்றி துணிவு தருவது
தன்னம்பிக்கை..
வாழ்வியல் கணக்கீட்டில்
வெற்றிக்கு கொண்டுசெல்வது
சாமர்த்தியம்..

தவழ்தலிலே மலரும்
தன்னம்பிக்கை...
மெல்ல எழுவதில்
நிற்குது சாமர்த்தியமாய்

விழுந்தாலும் எழுவது
தன்னம்பிக்கை..
எழுந்ததும் வலிகாட்டாது
வாள்பிடிப்பது சாமர்த்தியம்...

தேவைகளை தேடத்தருவது
தன்னம்பிக்கை...
தேவைகளை பெற்றுத்தருவது
சாமர்த்தியம்..

தன்னம்பிக்கை போதையல்ல
தனிமனித சிந்தனையின் ஏற்றம்..
சாமர்த்தியம் தீண்டாமையல்ல..
தீயவழி செல்லா வரை..

தன்னம்பிக்கை கைப்பிடியாகின்
சாமர்த்தியம் கூர்கத்தி..
நல்லதா, கெட்டதா..
உள்ளோர்கை செயலே...

தன்னம்பிக்கை
வாழ்கையை வாழவைக்கும்..
சாமர்த்தியம்
வாழ்க்கையை  கொண்டாடவைக்கும்..


-          சங்கர் நீதிமாணிக்கம்


வெள்ளி, 27 நவம்பர், 2015

எனக்குள் நான்


எனக்குள் நான் என்பது
என்னைப்பற்றிய கேள்வியா....?
என் உள்ளத்தைப் பற்றிய பார்வையா...?
இல்லை நான் என்பது தத்துவத்தேடலா....?

எதுவாகிலும் இருக்கட்டும்..
நான் என்றும் நானாக இருந்ததில்லை..
இதுவே உண்மை...

எனக்குள் நான்..
ஒரு உலகார்ந்த மனிதன்..
நல்லது கெட்டது நிறைந்த சராசரி..
நிறைதூக்கிப் பார்க்க..
கொஞ்சம் கெட்டவனும்..
மீதியாய் நல்லவனும்..

நான் நானாக எனக்காக வாழ்வது குறைவுதான்..
முன்பு பெற்றோர் சகோதரர்களுக்காக..
இன்று மனைவி பிள்ளைக்காக..
நான் எனக்காக வாழ்ந்தது
இந்த வாழ்க்கையினிடையில் ஒளிந்துள்ளது...

எனக்குள் நான் என்னைத் தேடினேன்..

பாசத்திற்காக வாழும் நான்..
நேசத்திற்காக வாழும் நான்..
நட்புக்காக வாழும் நான்..
நம்பிக்கைக்காக வாழும் நான்..

எனக்குள் நான் என்பது இதுதானென்றால்
நான் சுயநலமில்லாதவன்..

எனக்குள் நான் என்பது எனக்காகவென்றால்..

நான் எழுதும் கவிதைகள் எனக்காக..
நான் தேடும் நட்பு எனக்காக..
நான் நேசிக்கும் அன்புகள் எனக்காக..
நான் சுவாசிக்கும் மூச்சு எனக்காக..

எல்லோருக்கும் புரிபடாத கேள்வியாய்
இருப்பதே எனக்குள் நான் .என்பது...!

எனக்குள் நான் என்பவன்
இயற்கையை ரசிப்பவன்..
அழகைப் போற்றுபவன்..
தமிழை ரசிப்பவன்...
நட்பை நேசிப்பவன்..
அன்பை சுவாசிப்பவன்..

தனிமை எந்தன் வாசம்..
சோகம் எந்தன் கீதம்..
நம்பிக்கை எந்தன் சுவாசம்..
காதல் எந்தன் மோகம்..
அமைதி எந்தன் ராகம்..

எனக்குள் நான்
முற்றும் துறந்த முனிவனுமல்ல..
ஆசையை துறந்த புத்தனுமல்ல..
பொருளைத் துறந்து பட்டினத்தாருமல்ல..
புகழைத் துறந்த சித்தனுமல்ல..

என் ஞாபகங்கள் மட்டுப்பட்டது..
என் வார்த்தைகள் கட்டுப்பட்டது..

தனிமனிதனாய் என்னில் நான்
உலகின் சராசரிகளில் ஒருவனே..
நான் முரண்களின் உருவமே..

எனக்கும் சுயநலமுண்டு..
எனக்கும் ரகசியமுண்டு...
எனக்கும் கனவுகளுண்டு..
எனக்கும் முடிவுகளுண்டு..

ரகசியங்களை பூட்டிக்கொண்டு
முகமுடியோடு உங்கள்முன் நிற்கும்
பலரில் நானும் ஒருவன்..

நான் ஒரு திறந்த புத்தகமல்ல..
திறக்கப்படாத புத்தகம்..

இதோ எனக்குள் நான் என்பவன்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறான்
என்ற ரகசியம்..
கேள்விகளாலும், பதில்களாலும்
தெரிகிறது..

ஆனாலும்...
நான் என்றும் நானாக இருந்ததில்லை..

இதுவே உண்மை...

வியாழன், 26 நவம்பர், 2015

அச்சம்.


அச்சம் தவிர்..
இது நம் மீசைக்கார கவிஞன்
பாரதியின் துடிக்கும் வாக்கல்லவோ...
 
அச்சமென்பது நெஞ்சின்
கோழைத்தனம்...
அச்சமென்பது கோழையின்
அகராதி..
அச்சமென்பது அடிமையின்
மொழி..

அச்சம் தவிர்த்தலே
உண்மையின் வீரம்..
அச்சம் தவிர்த்தலே
நேர்மையின் வழி..
அச்சம் தவித்தாலே
மனிதத்தின் மொழி..

அன்பில் அச்சமென்பது இருக்காது..
அச்சம் தரும் மனிதரின் பால்
அன்பு பிறக்காது..

அச்சமில்லா உயிர்கள் இல்லை..
அச்சமில்லா மனிதரில்லை
எல்லாம் முகமுடி தரிதவரே..

ஆனாலும்..
அச்சமில்லாதவன் அம்பலம்
ஏறுவான் இது பழமொழி..
சரிதானே...
அச்சமில்லாதவர்க்கு
எதைக்கண்டு மனதில் பயம்...

அச்சமே தீமையின் தாய்..
அச்சமே அழுகையின் பிறப்பு..
இது வீரத்துறவியின்
வீர மொழிகள்..

புரிந்துகொள்வோம்..
அச்சப்படுபவனால் சிறு குட்டையையும்
தாண்ட முடியாது..
இது சாணக்கியன் சொல்..

எப்போதும்.. யாவரும்..
மனதில் வைப்போம்..
அச்சங்கொள்வோம் பசி கண்டு
அச்சங்கொள்வோம் சினத்தைக் கண்டு..
பசியும், சினமும் பெருகப்பெருக
அது மிகப்பெரும் அழிவாயுதமாய்
நம்முன் நிற்கும்..

அச்சப்படுவோம்.. தீங்கு செய்ய....
அச்சப்படுவோம்.. தவறு செய்ய....
அச்சப்படுவோம்.. பொய் சொல்ல..
அச்சப்படுவோம்... பிறரை ஏமாற்ற...

-சங்கர்  நீதிமாணிக்கம்



செவ்வாய், 24 நவம்பர், 2015

புத்திசாலித்தனம்

படித்ததில் உறைத்தது.
ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!

அன்பு

அன்புக்கு
அணையில்லை
இந்த வெள்ளம் போல

நீறு பூத்த நெருப்பு போல..


நெஞ்சுக்குள்ளேயே கறுவிகொண்டு இருந்தது. தன்னுடைய வாழ்விடத்தை, வரும் பாதைகளை அனுமதி இன்றி சுற்றி வளைத்தவர்கள் மீது. கேட்ட யாருமில்லை என்ற இறுமாப்பில் வளைத்து வளைத்து ஓரிடம் நிற்க முடியாமலும், தன் போக்கில் நிம்மதியாய் ஓடமுடியாமலும் தன்னை முடமாக்கியவர்கள் மீதான தன்னுடைய கோபத்தை நீறு பூத்த நெருப்பு போல மனதில் தேக்கி வந்தது. சூரியனின் துணை இருப்பதால் ஆட்டம் போடும் உங்களின் கொட்டம் ஒருநாள் அடங்கும். வாழ்க்கை வட்டத்தில் எனக்கும் ஒரு காலத்தில் ஏற்றம் வரும். அப்போது நான் யார் என்று காட்டுகிறான் என்று அமைதியும் காத்துக்கொண்டு இருந்தது. வானம் வழி விட, வளியும் வாய்ப்பு தர சுற்றிச்சுழன்று அடித்த மழையில் தன்னுடைய ஆற்றாமைகளை வாரிக்கொண்டு வழியில் கண்டதை எல்லாம் சுருட்டி கொண்டு தன்னுடைய வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது வாழிடம் பறிகொடுத்த தண்ணீர்....

ஞாயிறு, 22 நவம்பர், 2015

காதலே


ஒருநிலை ஒருமனம் கொண்டது
இருநிலை இருமனம் கண்டது

நேசத்தில் தைத்த
என் நெஞ்சது நைந்தது

புரியாத புதிராக
ஒருகாதல் உதிர்ந்தது..

பூத்திடும் பூக்கள்
வீழ்வது நிஜம்தான்
புன்னகை பூத்திடும்
வாழ்வில் அதனால்..

கைவிரல் கோர்த்து
கனவினால் ஈர்த்து
கண்ணுக்குள் நிறைந்த
காதலும்  நிஜம்தான்

எண்ணிலா வார்த்தை
எண்ணிலா கனவு
எண்ணிலா இன்பம்
எல்லாம் உன்னால்..
வந்தது நிஜம்தான்

சொன்னது வார்த்தை
சுடுவது மனது
அழுவது கண்கள்
கரையுமோ காதல்?

தேகங்கள் தீண்டிட..
மோகங்கள் மலர்ந்திட
முத்தங்கள் சிதறிட..
மௌனமாய் காவியம்..

எல்லாம் மறந்தது
இருள்வந்து சூழ்ந்தது..
மழைத்துளி கானா
வனமாய் காய்ந்தது..

புரிதலின் ஊற்று
இல்லாத மனமாய்
உப்பாய் கரையுது
கடலில் தெறித்த
சிறுதுளியாய்
காதல்...


-சங்கர் நீதிமாணிக்கம்

கோபம்


பாரதியின் வாய்மொழியில்
ரௌத்திரம் பழகு என்று 
கோபத்தை கொண்டாடினான்..
வள்ளுவனின் ஈரடியோ
சினம் கொண்டாரைக் கொள்ளும்
நோய் என்றது கோபத்தை
கோபம் கொள்ளும்மிடத்து அதை
கொல்லுபவன் மிகச்சிறந்தவன்..
கோபத்தில் சொற்கள் ஒவ்வொன்றும்
நம் நிம்மதியோடு
ஆயுள் அழிக்கும்
தன்மீது கல்லெறிபவன் மீது
கோபங்காட்டமல் கனிகளை
பரிசளிக்கும் நல்மரம்
கோபத்தால் குணமழியும் குலமழியும்
உனைச்சுற்றி எல்லாமழியும்..
இருக்குங்கால்
எதற்கிந்த வீண் கோபம்..
கோபங்கள் துயர்மீட்கும்
இடமுண்டு
கோபத்தில் ஊற்றினிலே
குணம் வாழும்
மனமும் உண்டு
கோபத்தின் குணமது தான்
நெருப்புப் போல..
கோபமது..
தீபமும் ஏற்றும்
தீயும் வைக்கும்..
-சங்கர்நீதிமாணிக்கம்

விடை என்ன?

நிறமற்று போனாலும்
நீ யற்று போவதில்லை கனவுகள்
நீயே என் வானத்தின்
விடிவெள்ளி...
நீயே என் சுவாசத்தின்
உயிர் காற்று...
நீயே என் வார்த்தைகளின்
வாழும் அர்த்தம்....
நீயே என் கண்ணீரின்
காரணம்..
நீயே என் மனதின்
சாந்தி..
நீயே என் வேதனைகளின்
சாரம்..
நீயே என் வலிகளுக்கு
மருந்து..
நீ நீயாக இருக்கும்போது தரும்
வேதனைகளை
நீ நானாக மாறும்போது
ஆறுதலாகிறாய்..
நீ என்பது நீயா இல்லை
நீ என்பது என் நிழலா
நீ என்பது என் மனமா
நீ என்பது என்ன?
வினாக்களாய் சூழ்ந்திருக்க
விடையாய் நீ வேண்டும்

கடவுள் இருக்கிறானா?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு.
அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.
அப்ப அந்த முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......
அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்?
ஏன் இத்தனை நோயாளிகள்?
கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"
இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்கு வாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.
அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,
"உங்களுக்கு ஒன்று தெரியுமா?
முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."
"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
முடி திருத்துபவர் பதிலுக்கு.. "ஆஹா..,நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.
“கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா.........
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும்
எனக்கு
"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.......”

புதன், 18 நவம்பர், 2015

எதிர்மறை சிந்தனை

எல்லா வாகனமும் சரியாக
சாலையில் சென்றுகொண்டு இருக்கையில்
யாருக்கென்ன பிரச்சனை...
எல்லோர் பணயமும் இலகுவாய்..
எல்லாம் ஒரே சீராய்..
எல்லோர் சிந்தனையும் நேர்மறையாய்..
எல்லோர் இலக்கும் எளிதாய் எட்டக்கூடியதாய்...

சாலையில் மேடுபள்ளம் வரும்போது.....
நமக்கு முன்னே செல்பவர் சீரற்று
செல்லும்போது….
நமது நேர்மறை சிந்தனை அங்கே தோற்றுப்போகிறது..

மனம் பல சாத்தியக்கூறுகளை சிந்திக்கிறது..
கண்கள் மிகமிக விழிப்போடு
சாலை நோக்குகிறது..
எதிர்மறை சிந்தனையும் உள்ளத்தில் வந்து
எதை எப்படி சமாளிக்கலாம்
என்ற உணர்வுடன் அங்கங்கள் எல்லாம்
விழித்துக்கொள்கிறது....

அனைத்து உணர்வுகளும் விழிப்போடு
எந்த செயலையும் எதிர்பார்த்து..
உங்கள் வாகனம் செலுத்தப்படும் போது
உங்களின் பயணப்பாதுகாப்பு கூடுகிறது..


இதுவே தான்  வாழ்க்கையிலும்..

கேள்விகள்

கேள்விகள் தான்
நமது வாழ்வை சீரமைத்து
நாகரீக சமுதாயம் மிளிர வைத்துள்ளது.

கேள்விகளே
எல்லா கண்டுப்பிடிப்புகளுக்கும்
வேராக இருந்திருக்கிறது..

பலகேள்விகள் இன்னும்
விடை தெரியாமல் பவனி வருகின்றன...

சில கேள்விகளுக்கு விடைகள்
எந்த சூழ்நிலையிலும் வரலாம்
ஆர்கிமிடிஸ்க்கு தெளிந்தது போல..

சில கேள்விகளுக்கு விடைகள்
பல தவறான விடைகளுக்கு பின்பு
தெரியவரலாம்
எடிசனின் மின்விளக்கு போன்று..

கேள்விகளை ஏற்றுக்கொண்டு
விடைகளை தேடுங்கள்..

பிள்ளைகளின் எந்த ஒரு கேள்வியையும்
பாதியில் ஓடிக்காமல் வளர விடுங்கள்.
நல்ல விடையும் கிடைக்கும்...

சிறந்த எதிர்காலமும் வளரும்..

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வைர நெஞ்சம்-2

பாசங்கள் கோடி நம்மை 
சுற்றி இருந்தாலும் 
வேஷங்கள் கொண்ட உலகம்
நம்மை வதைக்கக்கூடும்
சோதனைகள் சூழ்த்து வரும்
வேதனைகள் வேக வைக்கும்
சொல்லீட்டி அம்புகளோ
சூழ்த்து நம்மை கொல்லவரும்..
துரோகமும் நிழல்போல
நம்முடனே நாளும் வரும்
சொல்லன்னா துயரங்களும்
சொல்லாமல் வந்துநிற்கும்
ஏமாற்றம் எதிரே வர
இல்லாமை இறுக வைக்க
தள்ளாமை நடையில் வரும்
தளர்ந்தே நம்மை போகச்செய்யும்
எல்லாவற்றையும் நம்மேல் போட்டு
புதைத்துக்கொண்டு
அழுத்தங்கொண்டு
வெப்பங்கொண்டு...
கனிந்துவரும் நாளுக்காய்
மூச்சடக்கி பேச்சடக்கி
மௌனமாய் காத்திருப்போம்
மனத்தின் திடத்தோடு
மாறாத புன்னைகையுடன்
பூமியின் மேலே நாம்
போராடி வெற்றிகண்டு
வாழ்த்து காட்டும்போது..
கரியென்று நம்மை நினைத்து
புதைத்து மிதித்து அழுத்தி
பூமியிலே போட்டவர்கள்
புரிந்துகொள்வர் அந்நாளில்...
நாம் நெஞ்சம்
ஜொலிக்கின்ற வைரமென்று
-சங்கர் நீதிமாணிக்கம்

மழை

மெல்லக்கடந்து சென்றது 
மேகம் 
உன் நினைவுகளை 
தூறலாய் என்மீது தூவிக்கொண்டே..

வர்க்கப்போராட்டம்

வானம் இருண்டது 
கருணையற்ற நெஞ்சமாய்...
மேகம் திரண்டது
போராடும் கூட்டமாய்
மின்னல் கீறியது
பசித்திருக்கும் வயிறுகளை
இடியாக ஒலித்தது
கூடிநின்றோர் போர் ஒலிகள்
மழை வருமோ பயனாளிக்க?
சூறைக்காற்று வருமோ
எல்லாம் களைத்துப் போட?
வர்க்கப்போராட்டம்
வானிலும்...

வைர நெஞ்சம்

கொள்கைப்பிடிப்போடு
கோணல் வழியின்றி
நேர்கொண்ட மனதோடு
வாழ்வார் நெஞ்சம் – வைரம்
அன்போடு அரவணைத்து
பண்போடு பாதுகாத்து
துயரங்களில் தளராது
துக்கங்களில் துவளாது
தோளோடு தாங்கும்
சதி/பதி நெஞ்சம் – வைரம்
திக்கற்றோர் துயர்நீக்கி
வக்கற்றோர் வறுமைபோக்கி
எத்திக்கும் இனிமை விதைக்கும்
மனிதருள் மாணிக்கத்தின்
நெஞ்சம் – வைரம்
சோராமல் உழுது மண்ணை
வளமாக்கி விதை தூவி
விளைததெல்லாம்
ஏமாளியாய் விற்றுவிட்டு
கோமாளியாய் ஏரெ(றெ)டுக்கும்
விவசாயி நெஞ்சம் –
வைரமன்றி கரியா என்ன?

காதலின் தோல்வி

கண்கள் பார்க்க
காதல் பிறந்தது
நெஞ்சம் இனிக்க
நாளும் நகர்ந்தது 
சொல்லாத வார்த்தைகள்
காதில் ஒலித்தது
சொர்க்க பூமியாய்
காட்சி விரிந்தது ..
சொல்லென்று ஒரு
மனதும்
பொறுவென்று ஒரு
மனதும்..
சொல்லாமலே ஓடியது
காலமும்..
இன்று நீயொரு ஊரில்
உன் குடும்பத்தோடு
நானொரு ஊரில்
என் குடுப்ம்பத்தோடு
இந்த நாளும் மகிழ்ச்சியாய்
தான் இருக்கிறது..
இது காதலின் தோல்வியல்ல..
நம்மின் காதல்தோல்வி மட்டுமே..

காதல் நினைவுகள்

நினைவுகளை சுழற்றி அடிக்கும்
உன் பார்வையின்
இம்சையிலிருந்து தப்பிக்க முடியாமல்
தத்தளிக்கிறது மனது..
பாலைநிலத்தில் நடந்தாலும்
தெரியாத சோர்வு
உன்னை பார்க்காமல் இருக்கையில்
வீழ்த்துகிறது
உன் ஒற்றை வார்த்தை
எனக்கு உயிர் தரும்போது
உன் மௌனமோ
உயிரை மெல்ல உறுஞ்சுகிறது..
காலடித்தடம் இல்லாத நிலத்திலும்
உன் மனதின் தடம் பற்றி
நடக்க முடிகிறது
உன் நினைவுகள் இல்லா நிமிடங்களோ
ஆக்சிஜன் இல்லா கணமாய்
என்னைத் திணறடிக்கிறது...
காதல்
இனிமையா, இம்சையா? என
தெரியாத மூடனாக்கி
உன் நினைவுகள் என்னை மூழ்கடிக்கிறது...
கூட்டத்தின் நடுவில்
உன்னினைவுகளால் தனியாளாய்
நிற்கிறேன்..
உன் நினைவுகளே
என்னைத் தாலாட்டுகிறது
உன் நினைவுகளே
என் மூச்சையும் நிறுத்தி
வேடிக்கைக்காட்டுகிறது
-சங்கர் நீதிமாணிக்கம்

வாழ்ந்து பார்க்கவேண்டும்

வாழ்ந்து பார்க்கவேண்டும்
உலகை ரசித்துப்பார்க்க வேண்டும்..
பாரதியின் காணி நிலத்தினிலே
தோப்பமைத்து குடிசைக்கட்டி
அமைதியான குளுமையிலே
மேதினியில் காதலினியாளின்
கூட்டினிலே களித்து
மையலில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
இன்பங்களும், துன்பங்களும்
இணைத்து வந்தாலும்
என்றும் தளராத மனம்கொண்டு
இவுலகில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
காசில்லா உலகு படைத்து
கடனில்லா வாழ்க்கை பெற்று
எளிமையான உலகினிலே
இனிமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும்..
துரோகத்தின் கூட்டமில்லா
நட்புகளின் நேசத்தோடு
உறவுகள் சூழ நெஞ்சில்
சந்தோசம் பொங்கிடவே
அன்புடன் வாழ்ந்தது பார்க்க வேண்டும்..
விலையில்லா பொருள் தவிர்த்து
உழைப்பாலே எல்லாம் வாங்கி
பெருமையுடன் இன்பமாய்
எல்லோரும் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
குடிகெடுக்கும் குடியில்லா
அமைதியான தமிழகம் மலர்ந்திட
ஓர்நாள் அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும்..
-சங்கர் நீதிமாணிக்கம்

காதலுக்கு கடிதம்

என் உள்ளத்தை கொள்ளைகொண்ட
வெள்ளிநிலவே – நீ
என்னை நோக்குங்கால் 
சிறகடிக்கம் வண்ணத்துப்பூச்சியைப் போல்
கண்கள் துடிப்பது ஏனோ?
வெள்ளைமனம் கொண்ட
என் இதய ராணியே...
நான் பெரும் பாக்கியம் பெற்றவனாவேன்...
உன்னை சந்திக்கவும்...
உன் அன்பை பெறுவதற்கும்...
உன் காதலை அடைவதற்கும்..
நான் அதிர்ஷ்டத்தை நம்பாதிருந்தேன்..
அதிர்ஷ்டதேவதையே..
நீயே என்னை வந்து
சேர்ந்த பிறகு நம்பாமலிருக்க முடியுமா...?
அன்பானவளே...
உன் அன்பு எனக்கு
கடுங்கோடையில் கிடைத்த
குளிர் தெள்ளிளநீர் போல
மிகவும் தேவையாகவும்
நினைத்திட இனிமையுமாய் உள்ளது..
பூவனத்து பூக்களில் தலைவியே..
நீ நினைத்து நின்றபோது
நான் தயங்கி நின்றிருந்தேன்..
நீ தேடி வந்தபோது
நான் மயங்கி மகிழ்ந்திருந்தேன்..
இதோ இரவுகள்
கடந்துகொண்டே இருக்கிறது..
ஆனால்
உன் இனிய நினைவுகள்
என்றும் நீங்காமல்..
என்றும் அன்புடன்..

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பணம்

உயிர்களுக்குள் உயர்வென்று
ஏக்கழுத்தம் கொண்டவரே...!

செல்வத்தை கொண்டிங்கு
எடை போடும் மானுடமே..
அன்பெதற்கு, பண்பெதற்கு
பந்த பாசமெதற்கு..

பாழும் உலகினிலே
உறவுகள் சீர்கெட்டது
பணத்தால் தானே...!

பணத்தாலே எடைபோட
பண்பாடுக்கல்வி என்ன?

அன்பாலே இறங்காதோர்
ஆயுளுக்கும் வாழ்ந்தென்ன?

ஒற்றை வார்த்தையிலே
உயிர்குடிக்கும் விடம் வைத்து
எட்டிப்போகையிலே
ஏகதாள பேச்சுமென்ன?

பணம் தானே உயர்வென்று
இருப்போருடன்
வாழ்வதே பிணவாழ்க்கை..

அறியீரோ...!
பணம் தானே பிணம் போகும்
பள்ளம்வரை...

--சங்கர் நீதிமாணிக்கம்

(சொல்குறிப்பு: ஏக்கழுத்தம் – இறுமாப்பு)

மனம்

எல்லா கோப்பைகளும்
காலியானது
சுவாரசியங்களை
நிரப்பக்கூடியதாய்....!
இனிய நினைவுகளை
ஊற்ற
இன்பத்தில் தளும்புகிறது
சோகங்களை நிரப்ப
ஆழ்ந்த
அமைதி கொள்கிறது
சுவாரசியங்களையும்
சுகங்களையும் கூடவே..
அன்பை அளவிலாமலும்
காமத்தை இதழோடும்
மரியாதையை மனதோடும்
எவ்வளவு ஊற்றினாலும்
சில கோப்பைகள்
நிரம்பாமல்..
துயரங்களின் கண்ணீர்த்துளிகளையும்
தாங்கிக்கொள்கிறது...
மனதும் கோப்பையும் ஒன்றுதான்
ஏற்றுக்கொள்ள இடமுண்டு
கொட்டிவிட வழியுண்டு....
-சங்கர் நீதிமாணிக்கம்