செவ்வாய், 31 ஜனவரி, 2017

4. அனுபவங்களில் பாதை...

திசையறியா பாதையிலே

4. அனுபவங்களில் பாதை...


என்னுடைய அம்மா வழி தாத்தா ரொம்ப எளிமை. தன்னுடைய கடின உழைப்பால் தன்னுடைய பிள்ளைகளுடன் இணைந்து உழைத்து நல்ல நிலையில் உயர்ந்தவர். எனக்கு தெரிந்து அவர் மேல் சட்டை அணிந்து பார்த்தது இல்லை. எப்போதும் வேட்டியும், துண்டும் மட்டுமே அவரது உடையாக நான் பார்த்திருக்கிறேன். அதுபற்றிய காரணம் எனக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் அவரின் எளிமையான வாழ்க்கையை மறக்கமுடியவில்லை.

இவரைப்போல நம்மிடையே மிகவும் எளிமையான மனிதர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆத்மாக்கள்.

எளிமையின் சிகரமாக வாழ்ந்து மக்களுக்காவே வாழ்ந்து மறைந்து மக்கள் மனதில் எப்போதும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கர்மவீரர் போல என்றும் சொல்லலாம்.

மேலைநாட்டு உடையலங்காரமே தங்களை ஆண்டவர்கள் முன்னால் மதிப்பு ஏற்படுத்தி தரும் என்று நினைத்திருந்த சமயத்தில் நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடுத்த துணியில்லாது உழைப்பதைப்பார்த்த அந்த மானிதர் எனக்கு எதற்கு இந்த ஆடை அலங்காரம், போதுமே ஒரு இடைக்கச்சையும், மேலே ஒரு துண்டும் என்று தன்னுடைய ஆடைமுறையை மாற்றிய அந்த அரையாடை மனிதரின் செயல்களை கண்டு ஒரு ஏகாதிபத்தியமே அலறியது என்றால் அவர் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாத்மா அல்லாமல் யாரை சொல்லுவது?

ஆடைகள் ஒருவரின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தாலே போதும். ஆடம்பரம் என்ற பெயரில் உடுத்தும் ஆடை வகைகள் இன்றைக்கு போல் அன்றைக்கு இல்லை என்றாலும் தன்னை மக்களிடம் தாழ்த்தி அவர்களில் ஒருவனாய் மாறி போராட்டக்களத்தில் முன்னின்று செயல்பட்டதால் தான் அந்த மாமனிதரை இன்றும் போற்றுகிறோம்.

உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிகவும் அதிசயமானது. வாழவேண்டுமென்றால் எப்படியாவது நம்மை வாழவைத்துவிடும். இந்த உண்மையை அவரின் வாழ்க்கையே நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது.

"எனது சொந்த வாழ்வில் பின்பற்றாத ஒன்றை, மற்றவர்கள் செய்யும்படி, நான் சொன்னதே கிடையாது.. இதுதான், எனது பலமாகும்..!" என்று சொல்லியது மட்டுமில்லாமல் அந்த வார்த்தையின் படி வாழ்ந்து காட்டியவர்களில் ஒருவர். மகாத்மா காந்தி.

அதே போலவே நம்முடைய வாழ்க்கையிலும் “மன்னிசுடுங்க” என்று ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டிய சில பிரச்னையை ஆயிரம் வார்த்தைகள் சொல்லி நியாயப்படுத்த முயன்று தோற்றுப்போகிறோம். பலநேரங்களில் அதற்க்கு அடிப்படையாக இருக்கும் ஒரே காரணம் தன்னகந்தை (ஈகோ).

“மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிக்க தெரிந்தவன் மாமனிதன்” என்பது எளிமையாக தெரிந்தாலும் அதில் பொதிந்துருக்கும் அர்த்தம் ஆயிரம் உண்மைகளை நமக்கு சொல்லும்.

சில நேரங்களில் சில யோசனைகள் வெறும் யோசனைகளாக மட்டுமே இருத்தல் நல்லது. அதேபோல சில நேரங்களில் சில யோசனைகள் யோசனைகளாக மட்டுமில்லாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

செய்யக்கூடியதை செய்யாமல் இருப்பதும், செய்யாமல் விடவேண்டியதை கையில் எடுத்து அவதிப்படுவதும் சரியான அனுபவின்மையை மட்டுமே காட்டும்.

அன்றாட செயல்களில் இருந்தும், முன்னோர்களின் வாழ்க்கையில் இருந்தும் நாம் பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று தெளிவான பாதையில் நடைபோடுவோம்.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்



"கற்பென்பது. . . !"


என்னவென்று காலகாலமாய்
எழும் கேள்விகளும்
மனதிற்கு தோன்றும் வார்த்தையெல்லாம்
விடையாய் பகிரும் மானுடமும்..
தான்தோன்றித்தனமாக வியாக்கியானம்
தந்து சென்ற மூத்தோர்களும்..
கற்பென்பதை பெண்ணுடலோடு ஒட்டி வைத்து
மனதோடு வெட்டி வைத்த கதையை
யார் சொல்லுவர்..

மனத்துயரம் கொடுத்துவிட்டு மங்கையரை தவிக்கவிட்டு
தடம்புரண்டு சோரம்போகும் மணாளர்கள் இருக்கையிலே
உடலாலே தூய்மை காத்து
மனதாலே கெட்டுப்போகும் சங்கதிகள்
படுக்கையறை உள்ளேயும் தடையின்றி வந்திடுதே..
யாருக்கிங்கே உண்மையில்
இந்த கற்பு இருக்கிறது....?

கற்பென்பது உண்மை
கற்பென்பது நம்பிக்கை,
கற்பென்பது நேர்மை
கற்பென்பது கண்ணியம்
கற்பென்பது கடமை..
கற்பென்பது கட்டுப்பாடு...!

சொல்லிவிட முடியாமா?
மாந்தர்களே..
யார் இங்கே கற்போடு இருக்கிறார் என்று?
பொய் சொல்லும் வாய்தான்
முதலில் கற்பை இழக்கிறது..!

அனல் கக்கும் வார்த்தையிலே
சொல்லி சென்ற பாரதியும்
கற்பை பொதுவில் தான் வைத்தான்..
நாம் இன்னும் அதை
பெண்ணில் மட்டுமே வைக்கிறோம்..

நானும் சொல்லவில்லை
கற்பென்பது பெண்ணுக்கு மட்டும் என்று..

படுக்கையறை சீண்டலை
பாடலென்ற பெயரிலே வீட்டிற்குள் பார்க்கும்போது..
நானும் பொய்யுரைக்கவில்லை
நானும் கற்போடு தான் இருக்கிறேனென்று..


சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 30 ஜனவரி, 2017

விந்தையா நீ

நயனங்களில் நஞ்சை விதைத்த
நீயே மருந்துடன் வந்தாயே
கண்மயக்கும் வெண்மதியாகி சிந்தை நின்றாய்
பொன்சிலையா பெண்சிலையா மதிமயங்கி நின்றேன்
கண்மலரே கவிமலரே இதயம் பறித்த இன்னுயிரே
நரகத்தின் சொர்க்கம் நீ
பசிநேர அமிர்தம் நீ
விழிமலரின் வெள்ளியருவி நீ
கார்மேக கொடைமழை நீ
சொல்லாத வார்த்தையின் மௌனம் நீ
சுவையான வாழ்க்கையிலே சொல்லாத விளக்கம் நீ
நாடகங்களை அரங்கேற்றும் மேடைவாழ்வில்
நரகத்தை நகர்த்தும் விந்தையா நீ..!"


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அடக்குவது வீரமுமல்ல..

ஆங்காரக் குரல் எதற்கு
அடங்குவாயா அக்கிரமக்காரனே...
வீராப்பு என்னிடம் எதற்கு
உரியவனிடம் போய் காட்டு..

ஏய்த்து பிழைப்பதும்
ஏமாற்றி பிழைப்பதும்
பதுங்கி பாய்வதுமே உன்னிலையடா..
நான் உயர உயர பறப்பவன்..
உன்னில் தாழ்ந்தவனில்லை...

உரக்கக் கூவினால்
அடங்கிவிடுவதில்லை உண்மைகள்..
அடங்குவது பயமுமல்ல..
அடக்குவது வீரமுமல்ல..


சங்கர் நீதிமாணிக்கம்

Image may contain: bird

வியாழன், 26 ஜனவரி, 2017

" நான் பெற்ற சுதந்திரம் "



சுதந்திரம் என்பது சொல்லில் வருவதல்ல
அது செயலில் பெறுவது..
வட்டத்துக்குள் பொருந்தும் சதுரமாய்
சட்டத்துக்குள் நிற்பது சுதந்திரம்..
எடுக்கப்படுவதும் அல்ல
பறிக்கப்படுவதும் அல்ல
கொடுக்கப்படுவதும் அல்ல..
கொடுத்து பெறுவதும்
எடுத்துக்கொடுப்பதும்
இயல்பாய் இருத்தலே சுதந்திரம்..
நான் பெற்ற சுதந்திரம்
நம்பிக்கையில் கோர்த்த பட்டம்..
என் சுதந்திரத்தின் எல்லை
மற்றவர் மூக்கு நுனி தொடுவதல்ல..
மற்றவர் எல்லை மிதிக்காமல் இருப்பதே..
கட்டற்றதல்ல சுதந்திரம்..
எங்கும்
காட்டாற்றுக்கும் கரைகள் உண்டு..


சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 23 ஜனவரி, 2017

3. ஏனிந்த மாற்றங்கள்...

திசையறியா பாதையிலே

3. ஏனிந்த மாற்றங்கள்...


பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாள் அது. வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். காலையில் மாலையில் காலாரா நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடந்து போய் வருவோம்.

இதில் நானும் இன்னொரு நண்பனும் மட்டும் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து எங்களுக்கு தெரிந்த சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்து அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு திரும்பிவிடுவோம். ஒருவருக்கு பதினைந்து பைசா சைக்கிள் வாடகை பகிர்ந்துகொள்வோம்.

எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த நட்பு தொடக்கப்பள்ளி முதலே வந்த நட்பாகும். தொடக்கப்பள்ளில் அவன் வீடு பள்ளிக்கு எதிரிலேயே இருந்தது. இடைவேளை நேரங்களில் அவனுடைய வீட்டில் தான் பெரும்பாலும் நண்பர்கள் தண்ணீர் அருந்துவோம்.

பள்ளிப்பருவத்து விளையாட்டுகளில் நாங்கள் பலரும் இணைந்தே இருப்போம். ஆனால் சின்ன வயதுக்கு உரிய வளர்ச்சி மட்டுமே எங்கள் நட்பில் இருந்து, பெரிய அளவு நட்பில் இறுக்கமோ, புரிதலோ இருந்ததா என்பதை எனக்கு சொல்ல தெரியவில்லை.

இப்படியான ஒரு நாளின் மதிய வேளையில் உணவு இடைவேளையில் வீட்டுக்கு செல்ல நடக்க ஆரம்பித்த போது நண்பன் எதுவும் பேசாமல் வேக வேகமாக நடந்து சென்று தனியாகவே ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்து சென்றுவிட்டான். என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை. சரி அதோ அவரசம் போல என்று நானும் தனியாக வண்டி எடுத்துச்சென்று சாப்பிட்டு பள்ளி திரும்பினேன், ஆனால் இது அடுத்த நாளும் தொடரவே.... என் மனதில் இருந்த அந்த வயதின் இறுமாப்பா, ஆத்திராம தெரியவில்லை அவனை எதுவும் கேட்காமல் நானும் தனியாக செல்ல தொடங்கிவிட்டேன்.

அந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்புகளில், வேறு வேறு பாடப்பிரிவுகளில் மேல்நிலை கல்வி வரை படித்தாலும் ஏனோ எனக்கு அவனிடம், “நீ ஏன் அப்படி நடந்துகொண்டாய்?” என்ன காரணம் என்று கேட்கவும் தோன்றவில்லை, பேசவும் இல்லை. ஆனால் அந்த ஊரை விட்டு சென்னை வரும் வரை பல இடங்களில் எதேசையாக நேருக்கு நேர் சந்தித்தா பல சந்தர்ப்பங்களிலும் அவனிடம் எந்த காரணமும் கேட்காமலே அந்த பிரிவு தொடர்ந்தது.

“ஏனிந்த மாற்றம்” அவன் மனதில் வந்தது. எந்த சண்டையும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக விலகிச்சென்றான்? இதுவரை என் மனதில் மறக்கமுடியாத, விடை தெரியாத கேள்வியாய்...!! தொக்கி நிற்கிறது.

பலநேரங்களில் நாமில் பலரும் என்னைப்போலவே அந்தந்த வயதிற்குரிய சில குணங்களால் இப்படி பட்ட பல சம்பவங்களை கடந்து வந்திருக்கலாம். சொல்லமுடியாத காரணம் எதுவும் இருக்கப்போவதில்லை என்பது என்னுடைய திண்ணமான நம்பிக்கை, ஆனால் என் இப்படி நடந்தது?

மனம் விட்டு பேசாததா?

பொதுவாகவே குடும்ப வாழ்க்கையில் நம்மில் பலரும் நமது துணைகளுடன் பகிரமுடியாத, பகிர விரும்பாத பல விடயங்களை நம்முடைய நண்பர்களிடம் மனம் விட்டு பகிர்ந்து மனதின் பாரத்தை குறைப்பதோ அல்லது ஒரு நல்ல தீர்வு காண்பதோ நடக்கிறது.

ஆனால் ஒரு நட்பில் இப்படி மனதின் எண்ணங்களை பகிராத நிலையில் எந்தவிதமான காரண காரியங்கள் இல்லாமல் பிரிவு நிகழ்வது இன்றைக்கும் தொடர்கிறது.

நட்பை பராமரிப்பதும் ஒரு பெரிய கலை தான். அதை சரிவர கையாளத்தெரியவில்லை என்றால் நட்பில் பெரிய இடைவெளி விழுந்து அதுவே நிரந்தர பிரிவாக மாறிவிடுகிறது.

நட்பிலோ உறவிலோ பெரிய அளவு புரிதல் இல்லை என்றாலும் ஒரு நட்போ, உறவோ தொடர்ந்து நிலைத்து வளர இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை அவ்வப்போது இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்றால் எந்த ஒரு நட்போ, உறவோ வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும்.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்



"இமையென நீயே "




இறக்கை விரிக்கும்
இமைகளின் கதவுகளால்
கண் சிறையிலென்னை
அடைத்துவிடு
உன்னை விட்டு விலகமுடியவில்லை

தூசிகளை துடைத்தெரிய
சாமரம் வீசும் அந்த இமைகள்
மெல்ல என்னையும் அணைத்துக்கொள்ளட்டும்..

விழிகளில் வழியும் ஆனந்த அருவியாய்
இருக்கவே விரும்புகிறேன்
உள்ளிருந்து உறுத்தும் துரும்பாயல்ல

மூடும் இமைக்குள்ளும் நானே
பார்க்கும் விழியிலும் நானே
பரவசம் தருமா...!
அந்த
இமைச்சிறை கதவுகள்...?


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

கோபுர தரிசனம்

உள்ளே செல்ல அனுமதி இல்லை
என் காலடியில் கோபுரம்
நிழலாய்..

*******

இருப்பவனின் பணத்தைவிட
இல்லாதவனின் பாசம்
கோபுர தரிசனம்...
 *****
இரந்தவனிடம் இல்லையென்று
கோபுரம் பார்த்தவனின் முகத்தில்
பறவையின் எச்சம்

*****
அறத்தோடு மறத்தமிழன் போராட்டம்
அண்ணாந்துபார்க்கிறது உலகு
கோபுர தரிசனமாய்..


சங்கர் நீதிமாணிக்கம்

வியாழன், 19 ஜனவரி, 2017

** ஆணின் நாணம்**



நாணம்
உள்ளத்தின் உணர்ச்சி..
பெண்களுக்கு மட்டுமா நாணம் சொந்தம்
அது ஆண்களுக்கும் உண்டல்லவா...!
ஆண்களின் நாணம்
மேகத்தின் பின்னல் நின்று
மறைந்திருந்து பார்க்கும் நிலவுபோல
சிறு புன்னகையின் பின்னால் ஒளிந்துகொண்டு
மெல்ல எட்டிப்பார்க்கும்..


சங்கர் நீதிமாணிக்கம்

புதன், 18 ஜனவரி, 2017

அகமிழந்தோமா.! சுயமிழந்தோமா.!



ஏனென்று கேட்ட கேள்வியிலே
பிறந்த பதிலில் வாழ்கிறோம்..

கேள்விகள் பிறக்கவும்
சிந்தனை தெளியவும்
வழிகள் காணவும்
என
எல்லாம் சிந்தனையின் குழந்தைகள்...

நம் மேல் கொண்ட
நம்பிக்கை
வாழ்க்கையை
எதிர்கொண்டு வாழ்கிறது..

பிறன்மேல் கொள்ளும் நம்பிக்கை
யோசிப்பை சமயங்களில் முடக்கிப்போட
மனதையும் முடமாக்கியதோ...?

மனிதனாய் வாழ நம்பிக்கை கொண்டோம்..
தரணியில் பூத்திட வேர்கொண்டோம்..
பண்பாட்டின் பெருமை நம்மை
தூங்கி நிறுத்த..

இன்று
பண்பாட்டின் அழிவை
நாமும் நடத்துகிறோம்..
பிறராலும் நடத்தப்படுகிறது..

சுரணை கெட்டோம்..
பெருமை என்று நினைத்தோம்..
பெயரும் மறந்தோம்.
ஊரும் மறந்தோம்..

பெயரின் இருக்கிறது
இனத்தின் அடையாளம்..
பண்பாட்டில் இருக்கிறது
இனத்தின் வாழ்க்கை..

அடையாளம் தொலைத்துக்கொண்டு
வாழ்க்கைக்கு போராடுகிறோம்..
அகமிழந்தும்..
சுயமிழந்தும்..
யாரென்று வாழ்வது இந்த பூமியில்...?

அடிமையாய் வாழ்ந்து தான்
அகமிழந்தோமா.!
சுயமிழந்தோமா.!

மீட்டெடுப்போம்..
மீண்டெழுவோம்..
மீட்சிபெறுவோம்..


சங்கர் நீதிமாணிக்கம்

எனது கிராமம்



தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளடங்கிய ஒரு சிறிய கிராமம் நான் பிறந்து வளர்ந்த மலைப்பாளையம். கிழக்குபுறம் கருங்குழி ஏரி தெற்கில் மதுராந்தகம் ஏரி, மேற்கில் மலை, வடக்கில் பரந்துவிரிந்திருக்கும் கிராமம். கிராமத்துக்குள் நுழையவே கருங்குழி, மதுராந்தகம் ஏரியின் இணைப்பு கால்வாயை சிறிய பாலத்தை கடந்து தான் வர வேண்டும்.

கிராமத்தை சுற்றியிலும் வயல்வெளிகள். பெரும்பாலும் ஏரிப்பாசனப்பரப்பு என்பதால் ஆடி மாதம் முதல் பங்குனி வரை விளைசல் இருக்கும்.

பல்வேறு பிரிவு மக்கள் வாழ்ந்தாலும் என்றைக்கும் ஒற்றுமையாகவே என்றைக்கும் வாழ்ந்துவருகிறார்கள். கிராமத்தில் இருக்கும் தீண்டாமை போன்றவை அங்கு கிடையாது.

பொங்கல் என்றால் போகி அன்றே கும்மாளம் தொடங்கி விடும். போகி அன்று வீட்டில் இருக்கும் குப்பைகளை கொளுத்திவிட்ட பிறகு இளவட்டங்கள் சேர்ந்து கையில் பழைய சைக்கிள் டயர் எடுத்துக்கொண்டு மலை, ஆறு என்று சுற்றிவிட்டு காலையில் விடிந்த பிறகு வீடு வந்து சேருவோம். இன்பமாக திரிந்த நாட்கள் அது.

பொங்கல் முதல் நாள் எல்லா வீடுகளிலும் கொண்டாடினாலும் சிறுவர்கள் இளைஞர்களுக்கான கொண்டாட்டம் என்பது மாட்டுப்பொங்கல் அன்று தான். அன்று காலையில் நண்பரின் வீட்டுக்கு சென்று அவர்கள் வீட்டில் இருக்கும் மாடுகளை கால்வாயில் குளிப்பாட்டி பின்னர் மாட்டுவண்டியை ஏரியில் கழுவி அப்புறம் நிழலில் எடுத்து நிறுத்தி நானும் நண்பரும் இணைத்து வண்டிக்கு வண்ணம் தீட்டுவோம்.

மதியம் மேல் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாலையில் மாட்டுவண்டியில் பூட்டி குழந்தைகளை ஏற்றி ஒரு சுற்று சுற்றி வர இனிமையாய் முடியும் அன்றைய பொழுது.

மறுநாள் நண்பர்களுடன் ஊர்சுற்ற ஆரம்பித்தால் வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். செம கலாட்டா தான். அது எல்லாம் ஒரு கனாக்காலம். தந்தையின் மறைவுக்கு வாழ்க்கை இழுத்த திசையில் செல்லும் பயணத்தில் கிராமத்துடனான தொடர்பு முற்றிலும் அறுந்துபோனது. ஆனாலும் மனதில் அந்த கிராமத்து வாசனை இன்னும் மறையவில்லை.


சங்கர் நீதிமாணிக்கம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

2. இப்படியும் சிலர்...

திசையறியா பாதையிலே

2. இப்படியும் சிலர்...


இது நடந்தது நான் இணைந்து நடத்திவந்த முதியோர் இல்லத்தில்.

ஒரு நாள் காவல்துறை மூலம் மூதாட்டி ஒருவர் எங்கள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் எவ்வளவோ விசாரித்தும் தன்னுடைய பெயர் தவிர வேறு எந்த தகவலும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

அவரை காவல்துறையிடம் அடையாளம் காட்டியது அந்த மூதாட்டியின் உறவினர் என்பது பின்னர் தெரிந்து கொண்டு அவரை அணுகி அந்த மூதாட்டி பற்றி விவரம் கேட்டோம். முதலில் தனக்கு எதுவும் தெரியாது சாதித்த அவர், “நாங்கள் காவல்துறையில் தகவல் தெரிவித்து விடுகிறோம்” என்று சொன்ன பிறகு அந்த மூதாட்டி பற்றிய தகவல்களை சொல்ல ஆரம்பித்தார்.

மூதாட்டிக்கு பிள்ளைகள் சென்னையின் பிரதான பகுதியில் வீடு இருப்பதாகவும் பராமரிப்பது யார் என்ற போட்டியில் இந்த மூதாட்டி இப்படி வெளியில் வந்துவிட்டார் என்பதையும் சொல்லி அவர்கள் முகவரி தந்தார்.

பின்னர்   அந்த முகவரியில் சென்று பார்த்தபோது நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் சிறப்பாகவே வாழ்ந்துகொண்டிருந்தனர். மூதாட்டி பற்றி சொன்னபோது இல்லை எங்களால் பராமரிக்க முடியாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

எங்கள் இல்லத்தில் உறவுகள் யாரும் இல்லாதவர்களை இலவசமாக பராமரித்தலும் இப்படி உறவர்களோடு இருப்பவர்களை அவர்களிடம் சேர்த்து விடுவோம். முடியாத பட்சத்தில் அவர்களிடம் மாத பராமரிப்பு கட்டணம் வசூலிப்போம். பின்னர் அவர்கள் மாதம் பணம் கட்ட சம்மதித்து உரிய நடைமுறைகளுக்கு பிறகு அவரை இல்லத்தில் பராமரித்து வந்தோம்.

இதை அறிந்து அதுவரை குடும்பம் பற்றி எதையும் வாய்திறந்து பேச மறுத்த அந்த மூதாட்டி, “ஏன் என் பிள்ளைகளிடம் பணம் வாங்குகிறீர்கள்? அவர்களே மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்” என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார். மனதுக்குள் குடும்பப்பாசம் இருந்தாலும் யாரோடும் ஓட்ட முடியாத நிலையில் விட்டுக்கொடுக்கவும் முடியாமல் இருமனதாய் தனிமையில் தவிக்கிறது அவரின் இறுதிக்காலங்கள்.

இது ஒரு முதியோரின் கதை என்றால் ஒன்னொரு பாட்டி. வீட்டில் இருந்து வழிதவறி சில கிலோமீட்டர் தூரம் எப்படியோ வந்துவிட்ட அவரை காவல்துறை உரியவர்கள் யார் என்று கண்டுபிடிக்க்கும் வரை பராமரிக்க கேட்டுக்கொண்டார்கள்.

ரொம்ப எளிய மனுஷி அந்த பாட்டி. இல்லத்தில் இருக்கும்போது என்னிடம் மிக சகஜமாக பழகி நலம் விசாரித்து அன்பாய் நடந்துகொண்டார். யாராவது இல்லத்துக்கு வந்தால் சமையல் செய்யும் பெண்மணியை அழைத்து “டீ கொடுமா.. சாப்பிட ஏதாவது அவங்களுக்கு கொடுமா” என்று தன்னுடைய வீட்டுக்கு வந்தவர் போல அருமையான உபசரிப்பு.

அவரிடம் மெல்ல பேசிய போது அவரின் மகன் பெயர், சொந்த ஊரான தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரையும், மகன் ஆசிரியராக இருப்பதாகவும்” சொல்லத்தெரிந்ததே தவிர வேறு தகவல் சொல்ல தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து காவல்துறை மூலம் தகவல் தெரிந்து திரண்டு  அவரின் மகன்களும், பேரன்களும், சொந்தங்களும். அப்பாப்பா.. எவ்வளவு நெகிழ்வு எல்லோருக்கும்.

தன்னுடைய மனிதர்களை கண்டவுடன் சமையல் செய்பவரை கூப்பிட்டு சீக்கரம் எல்லோருக்கும் காபி போட்டு தர சொல்லி உத்தரவு வேறு போடுகிறார். அங்கு ஒரு நெகிழ்ச்சியான உறவின் சங்கமத்தை பார்க்க கண்கள் பணித்தது.

ஒருபுறம் சுயநலம் கொண்ட மனிதர்களும், மறுபுறம் மனிதநேயமும் அன்பும் கொண்ட மனிதர்களும் நம்மை சற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

அன்பை நெஞ்சில் கொண்டவர்கள் ஒரு அனாதை போல வாழ இந்த உலகம் விட்டுவிடுவதில்லை. அவர்களை சுற்றி எப்போதும் அன்பை பகிரும் கூட்டம் மகிழ்வுடன் காத்திருக்கும்.

அன்பு எல்லா இடத்திலும் கொட்டிக்கிடக்கிறது. தேவையானவர்களுக்கு எப்போதும் நிறைவோடு கிடைக்கும்..

ஒதுங்கிக்கொள்கிரவர்கள் எதோ ஒரு மூலையில் வாழ்ந்துபோகலம். ஆனால் உலகத்தில் அவர்களுக்கான உண்மையான இன்பங்களை தொலைத்து பொய்யான வாழ்க்கையில் அவர்களின் முடிவு இருக்கிறது.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்