வெள்ளி, 30 டிசம்பர், 2016

53. தொடரும்...

வலைவீசும் எண்ணங்கள்

53. தொடரும்...


மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும் உலகம் தொடரும்.. இது தானே உலகின் நியதி..

நாம் எல்லோர் வாழ்க்கையிலும் தான் எவ்வளவு எவ்வளவு மாற்றங்கள்.

இதோ....! இப்போது தான் தொடங்கியது போல இருக்கிறது 2016 ம் ஆண்டும். இதோ 53-வது வாரம்.. ஆண்டின் கடைசி வாரம். இந்த தொடரின் கடைசி அத்தியாயம்.

நானும் இப்படி ஒரு தொடர் எழுதுவேன் என்று நினைத்துப்பார்த்தது இல்லை. அன்பின் நண்பர்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கமும், உற்சாகமான பின்னூட்டமும் இந்த ஆண்டை நிறைவு செய்ய வைத்துள்ளது.

முற்றும் என்பது ஒரு கற்பனை புள்ளியே. இந்த நிலையில் வெற்றியின் முதல் படியானது ஒருவரின் ஆறுதலிலும் தட்டி கொடுத்தலிலுமே அமைக்க படுகிறது. 

உண்மையில் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள், இடையூறுகள், வேதனைகள், ஏற்றங்கள், இறக்கங்கள், நம்பிக்கைகள், துரோகங்கள், பாசம், வேடம் என்று மாறி மாறி நாம் சந்தித்து வந்தாலும் ஒவ்வொன்றிலும் வாழ்க்கை முடிந்துவிடாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் இருக்கும் வரை தொடரும்.

இந்த பூமி இருக்கும் வரை மானுடமும், உயிர்களின் வாழ்க்கையும் தொடரும். இந்த பரந்த அண்டவெளி இருக்கும்வரை பூமியும் தொடரும்..

மானுட வாழ்வின் முடிவு இந்த உலக வாழ்வு என்பது வெளிப்படையாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையும் இந்த புவியில் தொடர்கிறது..எப்படி.. ? ஒருவரின் சிறந்த செயல்கள், தன்னலமற்ற தொண்டுகள், தங்களை மக்களின் மனதில் நிலைநிறுத்தும் வகையில் என்று வெளிப்படையாக நம்மிடையே பலரும் இன்றும் முற்றுபெற்ற வாழ்க்கையிலும் சிறப்பு பெற்று நமது மனதில், எண்ணங்களில் தொடர்கிறார்கள்.

நாமும் எதாவது ஒரு வகையில் நம்முடைய பங்களிப்பினை இந்த சமுதாயத்திற்கு தரும்போது நம்முடைய வாழ்க்கையும் நமக்கு பிறகும் தொடரும். குறைந்த பட்சம் நமது குடும்பத்தில் சில தலைமுறைகளுக்காவது நாம் நிச்சயம் தொடருவோம். அதற்கு நமது செயல்கள் தான் அடிப்படையாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு திறமை நிச்சயம் இருக்கும். திறமை இல்லா உயிர்கள் எதுவும் இந்த பூமியில் நிலைப்பதில்லை. இருக்கும் திறமையை நாம் தெரிந்துகொள்வோம். அதுவரை நம்முடைய செயல்களில் நாம் அடக்கம் கொள்வோம். நமது திறமைகள் எதுவென்று தெரிந்தபின்பு வெற்றிகளை நாம் நமது வாழ்க்கையில் அடக்கம் கொள்வோம்.

பகல்வானில் பிரகாசிக்கும் சூரியானாக இருக்க நினைக்கையில் வாழ்க்கை நம்மை இருளில் தள்ளினால் நாம் அந்த இரவுவானில் நட்சத்திரமாக ஒளிர்வோர். இங்கே ஒருவாசலா இருக்கிறது வாழ்வதற்கு. ஏராளமாக அல்லவா இருக்கிறது. மனதின் நம்பிக்கை கதவு அடையாதவரை வாழ்க்கை என்றென்றும் தொடரும்..

நம்முடைய பயணத்தில் நிராகரிப்பு என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒன்றாகும். அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நமது மனதிற்கு பிடித்தமானவர்கள் நம்மை உதாசினமாக நினைத்து நிராகரிக்கும் போது மட்டுமே உணர்வுப்பூர்வமாக உணர முடியும். அந்த வலிகளாய் உணர்ந்தவன் என்ற முறையில் யாரையும் நிராகரிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

பலருக்கு என்னால் இது முடியுமா..? என்னால் இதை செய்யக் கூடுமா? என்று தாழ்வுமனப்பான்மை கொண்டிருப்பார். ஒருசிலருக்கு மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதிலே மாபெரும் இன்பம் இருக்கும்.

ஆனால், தாழ்வுமனப்பான்மை என்பது பிறர் நம்மை குறைத்து பேசுவதில் இல்லை.நமக்கு நாமே அடிமனதில் குறைவாக எடை போட்டு வைத்து இருக்கிறோம் என்பதில் இருக்கிறது. அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால் இன்றே உடைத்தெறிவோம். நம்மால் முடியாது என்று பிறர் எப்படி சொல்லலாம்? நம்மால் முடியாதது என்ன இருக்கிறது?.

முடியும். எதுவும் முற்றுபெற்ற முழுமையானது அல்ல. எல்லாமே தொடர்கதைகள் தான். யாரையாவது நம்பும் போது தான் யாரோ ஒருவர் யாரையும் நம்பகூடாது என்ற அனுபவத்தையும் நமக்கு தருகிறார்கள். அதற்காக நம்பிக்கையை கைவிட்டுவிட முடியுமா? நாம் எச்சரிக்கை உணர்வை அல்லவா நம்மோடு கூட்டுசேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை அழகியல் நிறைந்தது. வாழ்க்கை இனிமைகள் நிறைந்தது. வாழ்க்கை ஒரு கண்ணாடி. நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதையே உங்களுக்கு காட்டும் மாயக்கண்ணாடி. நல்லது பார்க்க நல்லது காட்டும். தீயது பார்க்க தீயது காட்டும்.

வாழ்க்கையில் நமக்கு வரும் காயங்களை பலசமயங்களில் நம்முடைய அன்பானவர்களிடம் இருந்தே பெறுகிறோம். உண்மையில் அதை வெளியில் சொன்னால் நம்பவும் யாரும் தயாராக இருப்பதில்லை. அன்பின் இழைந்து வாழும் உங்களுக்கு அந்த அன்பால் காயமா? என்ற கேள்வியே நமக்கு எதிராக தொடுக்கப்படும்? இது தான் ஆம்.. அன்பானவர்களை விட நம்மை மிக அழகாக யாராலும் காயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் நம்முடைய உயிரானவர்களின் முழுமையான அன்பிற்கு ஏங்குவது கொடுமை.

எதுவாக இருந்தாலும் எல்லாம் தொடரும். தொடர் பயணத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
அந்த மகிழ்ச்சி வாசனை திரவியத்தைப் போன்றது. அதை நம்மீதே சிறு துளியாவது தெளிக்காமல் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சியின் மணத்தை கொடுக்க முடியாது. நாம் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்களையும் மகிழ வைப்போம்.

எதிர்வரும் புத்தாண்டில் ஒரேயடியாக எல்லாம் மாறிவிடப்போவது இல்லை. எல்லாமும் தொடரும், ஆனால் மாற்றங்களுக்கான முயற்சிகளை நாம் விடாமல் தொடருவோம்.

இன்றைக்கே தொடருவோம் உழைப்பை முதலீடு செய்ய.... அது விதையாகி உயிராகி வளர்ந்து விருட்சமாகி நமக்கு பலன் தரும். கொஞ்சம் பொறுப்போம். மனமார்ந்த செயலுக்கு நிச்சயமாக பலன் உண்டு.

வெளியிடங்களில் ஏதேனும் தவறுகள் பார்த்து திருத்த நினைக்கும் முன் அந்த தவறுகள் நம்மிடம் இருந்தால் நாம் முதலில் திருத்த்க்கொள்வோம்.

இனிய வணக்கங்கள். ஓராண்டாக என் பதிவுக்கு ஆக்கமும், ஊக்கமும், குட்டுதலும், தட்டிக்கொடுத்தாலும் தந்த அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கம்.

மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது தொடருவோம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


வியாழன், 29 டிசம்பர், 2016

மகிழ்கிறேன்..

மகிழ்கிறேன்..
துயரங்களை எல்லாம் தூர வைத்துவிட்டு
என் மனது தந்த மந்திர சாவியால்
நான் என்றென்றும் மகிழ்கிறேன்....

காலங்கள் விட்டுசென்ற வடுக்களோடு போட்டியிடும்
வேதனைகள் நெஞ்சில் நிறையவே...
வெளித்தள்ள இயலா குருதியாய்
என்னுள் அவை சுழலட்டும்..

என் பார்வைகள் மகிழ்ச்சியாய்..
என் உதடுகள் புன்னகையுடன்..
என் நட்புக்கள் உதிர்க்கும்
நேச குளிர்மலர்கள் வார்த்தைகள்
பனித்துளியாய் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு
என் வேதனையின் வெப்பங்களை
கழுவி விடுகிறது..

இல்லையே என்ற ஏக்கம் இல்லை..
இருந்தால் நலமோ?
கேள்வியும் இல்லை..
இல்லாதவர்களின் களிப்பும்
இருப்பவர்களின் தத்தளிப்பும்
என்னை தண்ணீரில் மிதக்கும் சமநிலை தக்கையாய்
சமநிலையில் உலகில் மிதக்க வைக்கிறது..

கோலம் முடிந்தபின்
எது ஆரம்பம்..
எது முடிவு....???
யாருக்கு தெரியும்..

சுற்றி சுற்றி வந்தாலும் சந்திக்கும்
புள்ளி தான் ஆரம்பம் எனக்கொள்வோம்..

நானும் சுற்றி சுற்றி வருகிறேன்..
ஏற்றம், தாழ்வு
அன்பென பாயும் ஏச்சுக்கள்
வேதனைகள்
அலட்சியங்கள்..
மனதை கிளரும் துக்கங்கள்..
குப்பையாய் சில நினைவுகள்
எல்லாம் கடந்து
மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும்
தொடங்கிய ஆரம்பப்புள்ளியில்
மீண்டும் மீண்டும் நின்று களிக்கிறேன்

மகிழ்வோடு ஆரம்பித்த இடந்தில்
மீண்டும் மகிழ்வோடு இளைப்பருகிறேன்..


அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

புதன், 28 டிசம்பர், 2016

பயம்



பயம் நல்லது...
பயப்படுவோம்..

தீமைக்கு பயப்படுவோம்
தீயவை அண்டாமலிருக்க
கடமை தவற பயப்படுவோம்..
நம் உரிமைகள் பெற..
கண்ணியம் மறக்க பயப்படுவோம்
நாம் கண்ணியமாக நடத்தப்பட..
நேர்வழி விலக பயப்படுவோம்.
நேரிய சீரிய சேவை பெற..
துரோகத்துக்கு பயப்படுவோம்
துரோகம் செய்யாமலிருக்க..

பயம் நல்லது...
பயப்படுவோம்..


சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 26 டிசம்பர், 2016

எப்படி இருந்தது 2016



எப்படி இருந்தது..
இருக்கும் இடத்தில் இருந்து பின்னோக்கி பார்க்க..
ஏற்றங்களும் இறக்கங்களும் விளையாட்டு காட்டிய
பரமபத விளையாட்டில் இருந்த இடத்திலேயே..
நான்...

அடர்ந்தமரக்காட்டில் தழுவியோடும் தென்றலாய் இனிமைகள்
எல்லாமே வரமாய் வந்த நட்புக்கள் தந்த கொடைகள்..
மனத்துயரங்களின் காயங்களுக்கு மருந்தாக..
எழுத்தில் பூத்த எண்ணங்களின் நந்தவனமாக..
நமது குழுவும்..நட்புக்கள் தந்த அங்கீகாரமும்..
தாழ்ந்துவிடாது என்னை தாங்கிக்கொண்டது
மறக்கமுடியமா?

வீழ்ச்சிகளை தொழிலிலும்
எப்போதும் போல நம்பிக்கை ஏமாற்றத்திலும் கண்டுகொண்டாலும்
நான் வீழ்வேனோ..
இன்னுயிர் தாழ்வேனோ?
வேள்விகளாய்
கடமைகள் நெஞ்சில் எஞ்சி நிற்க
தோல்விகளா..?
எனக்கு தடைபோடும்..

தூக்கமில்லா இரவென்று துயர் நெஞ்சை தொட்டதில்லை..
ஏக்கமில்லை என்று சொல்ல நான் புத்தனுமல்ல..
சோகங்களை எருவாக்கி சோதனைகள் புடம்போட
கருகாத வேர்கொண்ட மரமாக துளிர்க்கின்றேன்...

நாட்டையே உலுக்கிடும் பொருளாதாரம்
என்னை மட்டும் விட்டிடுமா?
வீழ்ச்சி தான் என்றாலும்..
மனமும் உடலும் வீழ்ந்துவிடவில்லை..

சொல்லமுடியா சோகம் கௌவிக்கொள்ள
வருடிவிடும் அன்பு உள்ளம் எல்லாம் வாரிப்போட்டு
அலையில்லா கடலை தேடும் அப்பாவியே.. போ..
எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு
பூத்திருக்கும் புன்னகையை நெஞ்சில் சூடி
வெற்றி தேடும் பயணத்தை தொடரடா....!!
என சொல்லும்போதே..

இரவு வானத்தில் பளபளக்கும் விண்மீன்கள்
என்னை வாரி அணைத்து
உருகியோடும் வெண்பனியாய் உயிர்த்துவிடுகிறது..

வருடத்தின் கடைசியில் ஆட்கொண்ட
சோர்வினால் ஏற்பட்ட சின்ன தடை..
இனி
உடைத்தெறிந்து பயணிப்பேன்..
எப்போதும் போல

துன்பங்கள் அடியில் தங்கிய தெளிந்த நீராய்
இன்ப பூக்கள் மிதக்கும் சோலைகளிடையே
துள்ளியோடும் ஆறாய்..
என் பயணம் தொடரும்..


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

52. எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

52. எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்கள்


வாழ்க்கையில் ஏமாற்றங்கள் வருவது இயல்பானது. ஏமாற்றங்களில் போது துவண்டுவிழாமல் மனத்துணிவுடன் நிமிர்ந்து நின்று வாழ்க்கையை எதிர்கொள்வதே ஒரு அழகு தான்.

நாம் எல்லோருக்கும் சில கனவுகள், பல எதிர்பார்ப்புகள், ஆசைகள் வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் கண்டிப்பாக இருக்கிறது.

இந்த கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நமது வாழ்வின் இலக்காக இல்லாமல் ஒரு ஆவலாக மட்டுமே இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் மனதில் பல இனிமைகளை நமக்கு தந்து வாழ்வில் உத்வேகமும் அளிக்கிறது

ஆனால், இப்படி ஒரு காலத்தில் வாழ்வை அழகாக்கிய சில எதிர்பார்ப்புகளே பின்வரும் காலங்களில் வாழ்க்கையை வெறுக்க வைக்கும் ஒரு காரணியாய் மாறிவிடுகிறது.

கனவுகள் எல்லாமே நினைவுகள் ஆவதில்லை, அப்படி எல்லா கனவுகளும் உண்மையாகத் தொடங்கினால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கும். எதிர்பாராத நிகழ்வில் நமக்கு கிடைக்கும் ஆச்சர்ய பரிசுகள் தரும் இன்பங்கள் வேறு எதிலும் கிடைப்பதில்லை.

எதிர்பார்ப்புகள் இல்லாமல் நிச்சயம் வாழ்க்கையின் செயல்பாடுகள் இல்லை, அதே நேரத்தில் வெறும் எதிர்பார்ப்புகளை மட்டுமே மனதில் கொண்டு வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி வெறும் எதிர்பார்ப்பில் மட்டுமே நமது வாழ்க்கையை நகர்த்தினால் ஏமாற்றங்கள் நம்மை சிதைத்து வாழ்க்கையை சின்னாபின்னமாகி விடும்.

குறைந்த எதிர்பார்ப்புகள் கொண்ட வாழ்க்கை எப்போதும் இனிமைதான். எதிர்பார்ப்புகள் கூடக்கூட தான் ஏமாற்றங்களின் எல்லைகள் விரிகிறது. ஏமாற்றங்கள் கூடும் போது வாழ்வின் மீதான பிடிப்பு குறைந்து வெறுப்பு கூடுகிறது.

சில நேரங்களில் இந்த எதிர்ப்பார்ப்புகள் கூடுவதன் மூலம் நம்முடைய பொருளையும் நாம் இழந்துவிடக்கூடும். இப்படி இருப்பதை "இழக்கும்" போதே தான் தாம் இழந்த எல்லாவற்றையும் அல்லாமல் இல்லாததையும் பெற வேண்டுமென்ற "வெறி" பிறக்கிறது..!

வாழ்க்கை சுவாரசியங்கள் நிறைந்த நாடகம், விளையாட்டு, போர்களம் என ஒவ்வொருவரின் பார்வையை பொருத்தும் வாழ்க்கையின் இலக்கணம் மாறுகிறது. உண்மையில் வாழ்க்கை என்பது கடந்துபோகும் நொடியிலெல்லாம் வாழ்வது மட்டும் அல்ல, கடக்கமுடியாத நொடியிலெல்லாம் வீழாமலும் இருப்பதே... இது தானே சுவாரசியமும் கூட.

உலகம் ஒரு வட்ட சுற்றில் சுற்றுவது போலவே வாழ்க்கையும் ஒரு சுற்றில் தான் இருக்கிறது. நம்மை கடந்து போய் சுத்தமாக மறந்து போனவர்களுக்கு கூட நம்முடைய நினைவானது ஒருநாள் வரும். அன்றைக்கு அவர்களுக்கு நம்முடைய தேவை என்பது முக்கியமானதாக இருக்கும்.

இந்த சுற்றில் ஒருவரின் மனதில் முக்கியமில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட நாம் ஒருநாள் அந்த நபருக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய நபராக மாறுகிறோம். இதே நிலையில் நாம் மறந்தவர்கள் கூட நமக்கு ஒருநாள் அவசியமானவராக இருக்கக்கூடும்.

என்றைக்குமே நாம் ஒரு பொருளின் மீது அன்பை வைப்பதை விட நம் கண்ணுக்கு முன்னால் உலவிக்கொண்டிருக்கும் நபரின் மீது உண்மையான அன்பை வைப்போம். கனவுலகில், கற்பனை உலகில், கண்ணில் காணாத மெய்நிகர் உலகில் என்றும் நம்மால் காண முடியாத உலகில் உள்ளவர்களிடம் இன்றைக்கு அன்பு செலுத்தி ஒரு கற்பனை வாழ்க்கையில் திளைக்கிறோம்.

இதயத்துக்குள் வைக்கும் அன்பு வாழ்க்கையில் அமைதியும், இன்பமும் தந்து பரந்த வானம் போல விரிந்து இருக்கிறது. மூளையில் வைக்கும் அன்பு கணக்குகள் போட்டு என்ன பிரதிபலன் என்று நினைத்து குறுகிய வழிப்பயணமாக மாறிவிடுகிறது.

எல்லையில்லா எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பே உலகில் சிறந்தது. இதை பெறுபவர்கள் சிறந்தவர்கள் என்றால் கொடுப்பவர் மிகவும் சிறந்தவர்கள். சிலருக்கு அன்பை பரிமாறுவதும் ஒரு பண்டமாற்று போலவே தோன்றுகிறது. அது தான் உறவுகளில், நட்புகளில், குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு தோற்றப்புள்ளியாய் மாறுகிறது.

சொல்லுபவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒன்றாக இருக்கட்டும். உங்களுக்கு எந்த ஏமாற்றங்களும் என்றைக்கும் இருக்காது.

இதயத்தில் மூலம் அன்பு கொண்ட பிணைப்பு என்றைக்கும் மாறுவதும் இல்லை மறைவதும் இல்லை மருங்குவதும் இல்லை. அன்புகொண்டவர்களை இதயத்தில் வைப்போம்... மூளை(லை)யில் அல்ல.

அதே நேரத்தில் நமது அன்பை கொண்டே நம்மை பலவீனப்படுத்தும் நபர்களிடம் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்போம். அன்பு விற்பனைக்கும், ஏமாற்றங்களுக்கும் அல்ல. அன்பு அன்பினால் ஆளுமை செய்ய மட்டுமே.

சில நேரங்களில் எதிர்ப்பாப்புகள் நம்மை, “இது முடியாது, இது  நடக்காது, அது தப்பு, இது தப்புன்னு ஆயிரம் கட்டுக்கோப்புக்குள் இருக்கும் பல காரியங்களில் அந்த கட்டுக்களை மீறி நம்மை நடக்க வைத்து திட்டமிட்டு அந்த ஒவ்வொரு கட்டுக்களையும் உடைத்தெறிய நம்மை தூண்டுகிறது...

இந்த எதிர்ப்பார்ப்புகளே பலநேரங்களில் நம் அன்பானவர்களின் மனதை புரிந்துக்கொள்ளாமல் அவர்களை மனம் நோக செய்து ஒரு நிலையில் அவர்களை தொலைத்துவிட வைக்கிறது. பின்னர் உண்மைகள் நமக்கு புரியும் நிலையில் அவர்களின் நினைவுகளை மட்டும் பத்திரமாக நமது மனதில் வைத்திருந்து மருகுவதால் யாருக்கு என்ன பயன்??

நா.பார்த்தசாரதி அவர்கள் சொல்லுவது போல “அடுத்தவன் தோள் மீது ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?” இது தான் அன்பின் பெயரை சொல்லி எதிர்பார்ப்புகள் கூட்டி அவர்கள் மீது ஏமாற்றங்களை திணிக்கும் மற்றவர்களின் செயல் ஆகும்.

ஒரு சிலர் சொல்லுவார்கள் “அனைவரையும் வெறுத்து ஒதுக்குங்கள்! யார் மீதும் அன்பு செலுத்தாதீர்கள். தன்னலமாய் இருங்கள். நிம்மதியான வாழ்விற்கு அதுவே சிறந்த வழி!” இப்படி தன்னலமாய் வாழ்தலில் என்ன இருக்கிறது?

ஓரறிவு கொண்ட மரமே தன்னலம் இல்லாமல் மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்து மடிகையில், ஐந்தறிவுள்ள விலங்குகளே மனித குலத்திற்கு தேவையான உதவிகள் செய்து நன்றியுடன் இருக்கையில்.. ஆறறிவு கொண்ட மனிதன் தன்னலம் கொண்டவனாக இருப்பது சரியா? அப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?

இப்படி தன்னலமாக சிந்திப்பதே எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றங்களில் விளைவுகள் மட்டுமே. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ தேவையற்ற, சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை கூட்டிக்கொள்ளாமல் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ்வதே சிறந்த வழி.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


வெள்ளி, 16 டிசம்பர், 2016

வார்தா

வருடிவிட்ட தென்றாலாய் பார்த்த
கண்களுக்கு
சுழன்றடித்த சூறாவளி பேராச்சர்யமே..
சுற்றிச்சுற்றி வந்து
முடக்கிப்போட்ட நாளில் தான்
யாரும் பார்க்காத
இயற்கையை கற்றுணர்ந்தனர்...

அமைதியான நாளில் வந்த
ஆழிப்பேரலையும்..
ஆர்ப்பாட்டமாக வந்த “வர்தா”வும்
நினைவு ஏடுகளில் நீங்கா பக்கமாயின..

பேய்ப்பிடித்தாடும் பெண்ணாகி
தலை சுற்றியாடியது மரங்கள்..
வீழ்த்த முடியாது என்று இருமார்ந்த
தலையாட்டி மரங்கள்
வேர்வீழ தடம்புரண்டன..

பளிச்சிடும் வண்ணவிளக்குகள் காணாமல்
மீண்டும் ஒரு இருண்டநாள் வாழ்க்கை
எல்லோருக்கும்..

புதிய அனுபவம் தான்..
நள்ளிரவு கடந்தாலும் அயராத கூட்டம்
நாழிப்பொழுதில் கூட்டில் சுருட்டிக்கொண்டது..

செயலிழந்த அலைபேசிகள் வெறும்
நெகிழிபொம்மையாய் சிலநாட்கள்..

இந்த நாளும் கடந்துபோனது..
இதோ..
இயல்புக்கு திரும்பினர் மனிதர்கள்
அதே சுயநலத்தோடு...


சங்கர் நீதிமாணிக்கம்

51. விவேகானந்தரும் வாழ்க்கை தத்துவமும்

வலைவீசும் எண்ணங்கள்

51. விவேகானந்தரும் வாழ்க்கை தத்துவமும்
  
வாழ்க்கையில் கனவுகள் காணாத யாரும் இல்லை. நமது வாழ்க்கை நம் எண்ணப்படி இருந்தால் எப்படி இருக்கும்? நாம் நினைக்கும் எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று பல கனவுகள் காணும் ஒரு சராசரி மனித மனம் கொண்டவர்கள் தான் நாம் எல்லோரும்.

“கனவுகளே! ஓ...கனவுகளே! கனவுகள் தொடரட்டும்.. கனவின் மாயஜாலம் தான் இந்த வாழ்க்கைக்குக் காரணம்; பரிகாரமும் அதுவே. கனவு, கனவு, கனவு மட்டுமே... கனவாலேயே கனவை ஒழி!” என்று கனவுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு இணைப்பை தருகிறார் சுவாமி விவேகானந்தர்.

சோம்பிக்கிடப்பது அல்ல வாழ்க்கை. வாழ்க்கையில் சிறு சிறு தடங்கல்கள் எப்போது வேண்டுமானாலும் இடைபட்டு நம் வாழ்வில் நம்மை இடித்து தடைபோடும். இந்த தடைகளுக்கு நாம் சிறிது தயங்கி நின்றாலும் நம்முடைய கடமையில் தவறும் நிலை வரும்.

சொல்லவியலா மனத்துயரங்கள், மனஅழுத்தங்கள், வேதனைகள் என்னை அழுத்தியபோது சுதாகரிக்காமல் கொண்ட தடுமாற்றம் தான் பல வரமாக  தவறமால் எழுதி பதிவிட்டு வந்த “வலைவீசும் எண்ணங்கள்” தொடர் சென்றவாரம் தடைபட காரணமாக இருந்துவிட்டது.

“இது தான் வாழ்க்கை – வேலை, வேலை.. ஓயாத வேலை.. அதைத்தவிர நாம் வேறு என்ன தான் செய்துவிடுவோம்? செய்து கொண்டே போ...! எதோ ஒன்று வரும்.. எதோ ஒரு பாதை திறக்கும்” என்ற விவேகானந்தரின் வார்த்தைகள் தான் கீதையின் வழியில் நின்று எனக்கு இன்று உத்வேகம் அளித்துள்ளது.

“இதயபூர்வமாக காரியங்கள் செய்பவனுக்கு இறைவன் உதவி புரிகிறான். உன்னால் இயன்றவரையில் நற்செயல்களை செய்” என்ற அவரின் வரிகள் நமக்கு சோர்வுறும் வேளையில் புதிய உற்சாகம் தரும்.

சோர்வுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதுதான் நமது பயணத்தில் பெருந்தடை. அதை எதிர் கொண்டு வெற்றிக்கொண்டால் நிச்சயம் புதிய பாதை திறக்கும்.

“எழுந்திருங்கள்.. விழித்திருங்கள்.. கருதியது கைக்கூடும் வரை சலியாது உழையுங்கள்” -  இதுதான் விவேகானந்தர் வாழ்க்கையில் சலிப்படைந்து இனி என்ன இருக்கிறது? என்ன செய்வது? என்று தடுமாறும் மனிதருக்காக சொல்லி சென்றது. அந்த மனிதர் நாமாக கூட இருக்கலாம்.

வாழ்க்கை என்பது என்ன? அது ஆசைகள், ஏமாற்றங்கள், தவறுகளும், கனவும், துன்பங்களும், களிப்பும், உழைப்பும் நிறைந்தது.

“நான் பிறந்ததற்காக மகிழ்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டதற்காக மகிழ்கிறேன். பெரிய தவறுகளை செய்ததற்காக மகிழ்கிறேன். அமைதியில் புகுவதற்காக மகிழ்கிறேன்” என்பதை புரிதலுடன் நம்முடைய மனம் ஏற்கையில் தவறுகள் படிப்பினை தந்து அனுபவங்கள் சேர்ந்து நம்மை அமைதியான பண்பட்ட மனமுள்ளவனாக இந்த வாழ்க்கை மாற்றுகிறது.

“வைரச்சுரங்கமாகிய நான், நன்மை மற்றும் தீமையாகிய கூழங்கற்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். தீமையே வா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நன்மையே நீயும் வா! உனக்கும் மங்களம் உண்டாகட்டும். என் காதுகளுக்கு அருகில் பிரபஞ்சமே தலைகீழாக வீழ்ந்தாலும் அதனால் எனக்கென்ன? அறிவு கடந்த அமைதியே நான். அறிவு நமக்கு நன்மையையோ தீமையையோ மட்டும்தான் கொடுக்கிறது. நான் அதற்கும் அப்பால் உள்ளேன். நானே அமைதி” என்கிறார் அந்த வீரத்துறவி. ஆம் எதையும் ஏற்றுக்கொண்டு அது போகும் போக்கில் அறிவு கொண்டு நாம் பயணித்து செல்கையில் எது நம்மை என்ன செய்துவிடும்?

இன்றைக்கு எல்லா காரியங்களிலும் நம்மை தடுமாற வைப்பது பணம் என்ற உருவில் இருக்கும் செல்வமே..

“உனது செல்வம் கடவுளுடையது, நீ அதற்குப் பாதுகாப்பாளன் மட்டுமே என்று கொள். பணத்தில் பற்றுக்கொள்ளாதே” என்ற விவேகானந்தர் வார்த்தைகள் இந்த விடயத்தில் நமக்கு பெரும் தருமாற்றம் தரும் ஒன்றாகவே இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் தேவைக்கு மேலாக நம்மை ஆட்டி வைப்பது பகட்டும் படாடோபமும். இதில் இருந்து மீளமுடியாத நிலை தான் நாம் கொள்ளும் பலவித துன்பங்களுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது.

இது புரிந்தும் சேற்றில் சிக்கி சுழலும் வண்டி சக்கரமாக நமது வாழ்க்கை இங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறது.

“அனைத்தையும் ஒரு வேள்வியாக, இறைவனுக்கு அர்ப்பனமாகச்செய்.. உலகில் வாழு, ஆனால் அதில் ஒட்டிக்கொள்ளதே. தாமரையின் வேர் சேற்றில் உள்ளது, அதன் இலையோ எப்போதும் தூய்மையாக இருக்கிறது. பிறர் உனக்கு என்ன செய்தாலும் சரி, உன் அன்பு எல்லோர் மீதும் பரவட்டும்” என்று அதற்கும் ஒரு வழி சொல்லி சென்றுள்ளார் நம் வாழ்வியலை புரிந்துகொண்ட ஞானதுறவி.

சேறு சகதி என்று இருக்கும் இந்த உலகவாழ்வில் தாமரை இலை போல தூயதாக நமது மனதை கொண்டு வாழ்வியல் நன்மைகளை பெற முயற்சிக்கலாம்.

நமது நாட்டில் இல்லாத தத்துவ தேடல்களோ, அறிவுச்செல்வமோ, ஒழுக்கமான வாழ்வியல் முறையோ எங்கேயும் காண முடியாது, ஆனால் இன்றைக்கு அந்த நிலை ஒரு பரிதாப சூழலை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. “பொருள் தேடுவதில் நமக்குள்ள வேகத்தால் அந்த அறிவுத்திறனை இழந்து வருகிறோம்” என்ற உண்மையை உலகுக்கு அன்றே சொல்லி சென்றவர் நமது நரேந்திரன். இன்றைக்கு அது இன்னும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

நாம் பந்தத்தில் பிணைந்து வாழும்போது சமயங்களில் மற்றவரை அடிமையை போல நடத்த முயற்சிக்கிறோம் அல்லது அந்த எண்ணம் தானாக மேலோங்குகிறது. ஆனால் “சுதந்திரமும் மேலான அன்பும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் – அப்போது இரண்டுமே பந்தமாகத்து” என்ற தெளிவான வாழ்வியலை நமக்கு போதிக்கிறார் விவேகானந்தர்.

“ஆசை என்னும் மதுவை அருந்தி, உலகம் பித்துப்பிடித்துப்போய் இருக்கிறது. இரவும் பகலும் சேர்ந்து வருவதில்லை, அதுபோலவே ஆசையும் இறைவனும் சேர்ந்திருக்க முடியாது” என்பது போல ஆசையை நாம் விடும்போது நமக்கு அமைதி வருகிறது. அமைதி தான் இறைவன்உறையும் இடமாகிறது.

இனி கடந்துபோனது அப்படியே போகட்டும். “நடந்ததை எண்ணி வருந்தாதே. கடந்ததை எண்ணி கலங்காதே. நீ செய்த நல்ல செயல்களை நினைவில் வைத்துக்கொள்ளாதே. சுதந்திரனாக இரு/ பலவீனானாக, பயந்தவனாக, முட்டாளாக இருப்பவன் ஆன்மாவை அடைய முடியாது” என்பது தான் விவேகானந்தரின் எளிய உண்மை.

“நாம் துயருறுவதற்கு நாம், நாமே தான் காரணம். வேறு யாரும் அல்ல. நாமே விளைவுகள். நாமே காரணம்” இந்த நிலையில் நாம் கோழையாக இருப்பதால் எதையும் வெற்றிட முடியாது. உண்மையில் “கோழைத்தனத்தை விட பெரிய பாவம் எதுவுமில்லை. கோழைகளுக்கு கதிமோட்சமே கிடையாது. அது உறுதி” என்கிறார் வீரத்துறவி. கதிமோட்சம் கூட நினைக்க வேண்டாம். ஒரு கோழையாக இந்த உலகில் இன்றைய நிலையில் எளிதில் வாழ முடியுமா? எண்ணிப்பார்ப்போம்.

ஆகவே விவேகானந்தரின் போதனைகளை எப்போதும் மனதில் வைப்போம். “முற்றிலும் ஒழுக்க வழியில் நில்! தைரியமாக இரு! இதயம்முழுமையான தூய்மையுடன் திகழட்டும்! முழுமையாக நீதி வழியில் செல்! உயிரே போனாலும் தைரியத்தைக் கைவிடாதே! மதக்கொள்கைகளைப் பற்றி எல்லாம் மூளையை குழப்பிக்கொள்ளாதே!.

இதுவே வாழ்க்கையை வென்று எளிதாய் வாழும் வழியாகும்.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்