வெள்ளி, 13 மே, 2016

20. அணுகுமுறைகள்

வலைவீசும் எண்ணங்கள்

20. அணுகுமுறைகள்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

என்ற வள்ளுவரின் குறளுக்கு “யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். என்று மு.வ. அவர்கள் அழகாக விளக்கம் தந்துள்ளார்.

ஆம் நண்பர்களே. பிறருடனான நமது அணுகுமுறைகள் இன்சொற்கள் நிறைந்து இனிமையாக இருக்கும்போது துன்பங்கள் நம்மை அணுகாது.

பிறருடனான அணுகுமுறைகள் கால நேரத்தை பொருத்து, அந்த நபரை பொருத்து மாறுபடும்.

இந்த வாரம் நமது அணுகுமுறைகள் பற்றி கொஞ்சம் வலைவீசி பார்ப்போம்.

வாழ்க்கையில் நமது அணுகுமுறைகள் என்றைக்கும் நேர்மறையாக இருக்கும்போது எல்லாமும் சிறப்பாகவே நடக்கும்.

ஒரு உண்மை  தெரியுமா நண்பர்களே.. எந்தச் சூழலிலும் நேர்மறை எண்ணங்களைத் கொண்டு செயல்படுபவர்கள் தங்களின் வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

எச்சரிக்கை என்ற பெயரால் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தவர்கள் கூட, நேர்மறை எண்ணங்கள் செயல்படுவதை சரியாக உணர்ந்து, நேர்மறை எண்ணங்களையே வளர்த்தெடுக்கும்போது அவர்களின் செயல்பாடுகளில் ஒரு  திருந்திய வேகம் தெரிகிறது.

நமது நேர்மறை எண்ணங்கள் நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டும் இருந்தால் போதாது. நமது ஆரோக்கியத்திற்குப் குறைவு நேருகிற போதும் நமது நலவாழ்வு குறித்த நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டால் நாம் குணமடையும் வேகம் அதிகரிக்கும்.

நம்மில் சிலர் ஒரு சாதாரண செயலை வெளிப்படுத்தக்கூட மிகவும் அதீத எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்துவார்கள். வாங்களேன்! ஒரு டீ சாப்பிடலாமா?” என்று கேட்டால்கூட, “அய்யய்யோ! டீயா? உவ்வே…. எனக்கு டீன்னு சொன்னாலே குமட்டும் சார்என்பார்கள். நான் டீ சாப்பிடறதில்லைஎன்று ஒரு வரியில் முடிய வேண்டிய விஷயம் இது.

இப்படியான தனிமனிதர் தொடங்கி, டீ போன்ற சின்ன விஷயம் வரை ஒருவர் வெளிப்படுத்தும் அதீத வெறுப்புணர்வு போன்ற வெளிப்பாடுகள் ஒருவருக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும் தீயஅதிர்வுகளையும் மிக வேகமாக நிலைப்படுத்தி வெகுவாக பலப்படுத்தும்.

வெகு எளிமையாக இது எனக்கு பிடிக்கும், இந்த செயல் எனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி நமது எண்ணங்களை சமநிலையிலேயே வைத்துக் கொள்ளும்படியான நமது அணுகுமுறை நல்ல பலனை தரும்.

நாம் நல்லவற்றையே தேடுகிறபோது நமக்கும் ஒரு புதிய சக்தி பிறக்கிறது. இந்த அணுகுமுறையால் நல்ல செயல்கள், காரியங்கள் நமது வாழ்க்கை நோக்கி ஈர்க்கிற சக்தி நம்மை வந்தடைகிறது.

நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கோ அல்லது  உறவினர் வீட்டுக்கோ போகிறீர்கள். அங்கு இருக்கும் சிறுகுழந்தையின் ஓவிய நோட்டு என்று ஒன்றை நீட்டுகிறார்கள். அங்கு வெளிப்படும் உங்கள் செயல் தான் அந்த வீட்டில் உள்ளவர்கள் மனதில் உங்களுக்கான மரியாதையை பெற்றுத்தரும்.

அந்த ஓவியங்களாய் அலட்சிய மனப்பான்மைகொண்டு பார்க்கும்போது தெரியும் உங்கள் முகபாவனையே அவர்களின் உள்ளத்தில் உங்களை பற்றிய எண்ணத்தை புரட்டிப்போட்டுவிடும்.

இதுபோன்ற செயல்களில் ஒரு பாராட்டும் மனப்பான்மையோடு உங்கள் அணுகுமுறை இருக்கட்டும். நம்மில் பலருக்கு ஒரு கோடு கூட சரியாக வரைய தெரியாத நிலையில் குழந்தையின் கிறுக்கல் எப்படி அலட்சியத்தை தரும்???

இதே போலவே ரசிக்கும் இசை, ஓவியம், கவிதை, சிற்பம் போன்றவைகளை கடவுளின் ரகசிய மொழிகள் என்ற எண்ணத்தோடு அழகியல் உணர்வுடன், ஒரு அற்புதமான செயலை பார்ப்பது போன்ற ஈடுபாட்டோடு நாம் நோக்கும்போது, உங்கள் மனதிருக்கும் ஏதோவொரு கேள்விக்கான பதில், அந்தப் பிஞ்சு விரல் வரைந்த ஓவியத்தில் இருக்கும். உங்கள் உண்மையான அக்கறை அவர்கள் மனதிலும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கை நமக்கு பல அற்புதமான வழிகளை வைத்திருக்கிறது. அந்த வழிகளை அகல திறப்படும், மூடிவிடுவதும் ஒருவரது செயலிலும், அவரது அணுகுமுறையில் மட்டுமே உள்ளது. எப்படி ஒருவரை தட்டிக்கொடுத்து பாராட்டும் பொழுது நமது மனதும் மகிழ்ந்து எதிராளியின் மனதும் குளிர்ந்து ஒரு சுமூக உறவை, நல்ல சூழலை அங்கு ஏற்படுத்துமோ அதே போலவே நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

நமது உள்மனதிற்கு நாம் பிறப்பிக்கும் கட்டளைகளில், தொடர்ந்து நல்ல எண்ணங்களையே விதைத்து நேரான அணுகுமுறையை தக்க வைத்துக்கொள்ள சிறந்த வழி எதுவென்றால் நம்முடைய செயல்கள் தோல்வியில் முடியுமோ என்கிற தயக்கம் ஏற்படும்போதெல்லாம், “எல்லாம் நலமாய் முடியும்என்று உறுதிமொழியை உங்கள் மனதிற்கு திரும்பத் திரும்ப வழங்குங்கள். இதன்மூலம் நேர்மறை எண்ணங்கள் வலுப்படுவதோடு, வெளிச்சூழல் பதட்டமாக இருக்கும்போதுகூட, நீங்கள் பதறாமல் நிதானமாகக் காரியமாற்ற முடியும்.

கோபம் என்பது நம்மை கொல்லும் ஆயுதம். கோபத்துடன் அணுகும் எந்த செயலும் வெற்றி தராது. கோபத்தில் போகும் நிதானம் எல்லாவற்றையும் சர்வ நாசமாக்கும். இந்தக் கோபம், சக மனிதர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தும்.

மனம் விரிந்தவராய், மகிழ்ச்சியானவராய், மற்றவர்களைப் பாராட்டுகிறவராய் நம்மை உருவாக்கிக் கொண்டு நமது அணுகுமுறைகள் அமையும்போது நேர்மறை எண்ணங்கள் நிலைக்கும். நமது கனவுகள் நிச்சயம் பலிக்கும்.

சின்ன குழந்தைகளுடன் நமது அணுகுமுறை என்றைக்கும் நேர்மறையானதாக இருக்க வேண்டும். எதிர்மறை அணுகுமுறை அவர்களிடம் பலன் தருவதாய் கண்ணுக்கு தெரிந்தாலும், பின்புலத்தில் நமக்கு எதிரான எண்ணங்களை வளர்த்துவரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து வேறு ஒரு சூழலுக்கு மாறும் கட்டாயம் ஏற்படும்போது நாம் நமது அணுகுமுறைகளை மாற்றி இப்போது மாறியிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மனதை தயார் படுத்து அதில் நம்மை பொருத்திக்கொள்ள வேண்டும். என்னால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதன்மூலம், அதன் விளைவிலிருந்து நம்மால் ஒரு காலத்திலும் தப்பிக்க முடியாது என்பது திண்ணம்.

ஒரு தொழிலில் நன்கு அனுபவப்பட்ட சிறந்த தொழில் முனைவோரும், நம்மிடையே நன்கு அறியப்பட்ட மிகப்பெரிய புள்ளிகளும் கூட சில நேரங்களில் தோற்றுப் போவதற்கு காரணம் என்ன? அவர்களின் அணுகுமுறை. ஆம் அணுகுமுறை ஒன்றே அவர்களிடையே பொதுவான காரணமாக இருக்கிறது: அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் திறனற்றவர்களாகவோ அல்லது அப்படியான எண்ணம் இல்லாதவர்களாகவோ இருப்பதுதான். பொதுவாக ஒரு வெற்றியைப் பார்த்தால் அதிலேயே தங்கிவிடும் மன நிலை பலரிடமும் இருக்கிறது. அது தவறு. மாறாக புதிய போட்டியாளர்கள் அல்லது மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நமது அணுகுமுறைகளை மாற்றி நாமும் மாறத் தயாராக இருக்க வேண்டும். 

“ஒரு நல்ல யோசனையைக் காட்டிலும் சிறந்தது புதுப்பித்தல். அது ஒரு அவசியமான பயிற்சி, ஒரு மிகச்சிறந்த அணுகுமுறை என்கிறார் ஜோஸ் லிங்க்னெர். இவர்  “புதுப்பித்தலுக்கான பாதை: சீர்குலைவைப் புறந்தள்ளி மாற்றத்தைத் துரிதப்படுத்துவது எப்படி” (The Road to Reinvention: How to Drive Disruption and Accelerate Transformation) என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

எப்படி நமது இனிமையான அணுகுமுறைகள் நமக்கு பல அற்புதமான நண்பர்களை, உறவுகளை, தொழில்முறை தோழமைகளை நமக்கு உருவாக்கி தருகிறதோ, எப்படி நாம் கோபமில்லாமல் ஒரு செயலை அணுகும்போது அந்த செயல் நல்ல பலனை தருகிறதோ, எப்படி மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறி நம்மை இங்கு நிலைநிறுத்தி வாழ்கிறோமோ..அது  தான் நமது அணுகுமுறையின் வெற்றியாக நம்மை தொடர்ந்து இயங்கச்செய்கிறது.


இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

கருத்துகள் இல்லை: