வெள்ளி, 29 ஏப்ரல், 2016

18. நோக்கமும் செயலும்

வலைவீசும் எண்ணங்கள்

18. நோக்கமும் செயலும்

ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது மனதின் நோக்கத்தை சார்ந்தே இருக்கிறது. அதே நேரம் அந்த செயல்களின் மீதான மற்றவர்களின் பார்வை வெவ்வேறானவையாக இருக்கிறது. இப்படியான செயல்களும் நோக்கங்களும் பற்றி இந்தவாரம் வலை வீசுவோம்..

நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதற்கான நோக்கம் இந்த பரந்த பூமியை அதனுடைய இருப்பில் பாதுகாத்து சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கைகோர்த்து அன்புடன் இணைந்து வாழவேண்டும் என்ற நல்ல நோக்கமே.... இப்படி அன்புடன் கைக்கோர்க்கவே எல்லா மனிதர்களின் கை விரல்களுக்கிடையில் போதிய இடைவெளியை விட்டுப்  படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நாமோ இதைத்தவிர்த்து மற்ற எல்லா எதிர்மறையான காரியங்களுக்கும்  பயன்படுத்தி துன்பத்தில் மூழ்கி அழிவில் நடக்கிறோம்.

மனிதர்களாகிய நாம் தினந்தோறும் செய்யும் வேலைகளில் மூழ்கிவிடுகிறோம். நாட்களோ பறக்கின்றன,  ஆனால் இதயங்களின் முக்கியமான செயல்களில் ஒன்றை நாம் அனைவரும் மறந்து விடுகிறோம்.  அது நம்முடைய செயல்களின் நோக்கம்.  நம்முடைய ஒவ்வொரு செயலையும் ஆக்கவோ, சிதைக்கவோ நம்மாலேயே முடிகிறது. 

நமது செயல்களைப்பற்றி அறிவது ஏன் அத்தனை முக்கியம்? நமது செயல்கள் நமது நோக்கங்களின் வழியே நடப்பதால் நமது நோக்கங்களின் வெளிப்பாடாக நமது செயல்கள் அமைகிறது. அதுவே நாம் தினசரி செய்யக்கூடிய மிக எளிய செயல்களையும் ஒரு வழிபாடுகளாக ஆக்கக்கூடும். நாம் தினந்தோறும் தூங்கும்போது காணும் கனவில் செல்வந்தராக வாழ முடியும், ஆனால் அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் நமது நோக்கத்திற்கு ஏற்ப செயல்கள் இருக்க வேண்டும்.

நமது எண்ணத்தின் இருப்பிடம் என்ன? எண்ணம் என்பது இதயத்தின் நிலை, செயல்பாடு மற்றும் வர்ணணை.  பிறர் கேட்கிறார்கள் என்பதற்காக நமது மனதில் இல்லாத ஒன்றைச் நமது நோக்கமாக, செயலாக சொல்லலாம்உண்மையில் அதற்கு பொருள் எதுவும் இல்லை, காரணம், நாம் சொல்லியதற்கு பின்னால் எந்த நோக்கமும் இல்லை.

நம்முடைய தூய்மையான எண்ணமும், மேலும் ஒரு செயலை யாருக்காக செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி முழுமனதுடன் செய்யும் போது அந்த செயலானது நமது நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. ஒரு செயலின் பின்னல் உள்ள நோக்கம் தான் உந்து சக்தி. அந்த நோக்கம் இல்லாமல் நாம் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை. நோக்கத்தின் இடம் மனதும், இதயமும். 

என்றைக்குமே ஒரு மனிதர்கள் நமது செயல்களை எடைபோடுகின்றனர். ஆனால் கடவுளோ நமது நோக்கங்களை எடை போடுகிறார்.

ஒரு ராணுவ வீரர் போர்க்களத்தில் எதிரியை வெட்டிக்கொன்றால் அது வீரம். அதுவே தனது பக்கத்து வீட்டுக்காரனை வெட்டிக்கொன்றால் அது கொலை. செயல் என்னவோ ஒன்று தான், ஆனால் நோக்கம் மாறும்போது அந்த செயலின் அர்த்தம் மாறுகிறது.

நாம் இந்த அடிப்படையை புரிந்துகொண்டால் உறவுகளை பேணுவது எளிதாகும். மன்னிப்பது எளிதாகும். ஒருவரை பற்றிய அனைத்து விடயங்களையும் சரியான கண்ணோட்டத்துடன் அணுக எதுவாக இருக்கும். ஒருவரது செயலை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது அவரது செயலின் பின்னல் உள்ள அவர்களது நோக்கம் தெளிவாக புரியும். அவரின் நோக்கம் நல்லெண்ண அடிப்படையிலா இல்லை தீய எண்ணத்திலா என்பதை நாம் எளிதாக புரிந்துக்கொள்ள இயலும்.

உதாரணமாக ஒரு நோக்கத்தையும், செயலையும் இங்கு பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீவன் கோவியின் ’90 :10 விதியில் சொல்லியபடி நமது வாழ்க்கையில் பெரும்பாலான நோக்கங்கள் நம் வாழ்வில் நடை பெறும் நிகழ்ச்சிகளாலும், செயல்களாலுமே தீர்மானிக்கப்படுகிறது.

இதில் நமது வாழ்வைப் பாதிக்கக் கூடிய நிகழ்ச்சிகளும், செயலும் பெரும்பாலும் 10 சதவீதம்தான், ஆனால்  நாம் அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் மீதமுள்ள 90 சதவீதம் நிர்ணயிக்கப் படுகிறது.

நம்மால் முடிந்துபோன நிகழ்வுகளை மாற்றமுடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் விவேகம் நாம் வாழும்  வாழ்க்கை என்றைக்கும் இனிமையாக இருக்கும். இல்லையெனில் கசப்பாக மாறிவிடும்.

உதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒருநாளில் நாம் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்குச் செல்லவேண்டி நாம் தயார் நிலையில் இருந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கின்றோம். தெரியாத்தனமாக மகள் அங்கு இருந்த காபிக்கோப்பையைத் தட்டிவிட்டுவிடுகிறாள். அது நம் சட்டையின்மீது கொட்டிவிடுகிறது. இந்த நிகழ்வு முடிந்துவிட்டது. மாற்ற முடியாது. கொட்டியது கொட்டியதுதான். ஆனால், அந்நிகழ்வை கையாளும் விதத்தில் நாம் செய்யும் செயல்கள் தான் நம்முடைய் அன்றைய நோக்கத்தையும் அதன் வெற்றியையும் நிர்ணயிக்கிறது.

இந்த முடிந்துபோன நிகழ்வின் மீதான நமது முதல் செயலாக நம் மகளைத் திட்டுகின்றோம். அவள் அழத்தொடங்குகிறாள். காபிக்கோப்பையை மேசையின் விளிம்பில் வைத்ததால்தான் கொட்டிவிட்டது என்று மனைவியின் மீது குற்றம் சாட்டுவோம். அங்கு நடக்கும் சொற்போரினால் நேரமாகிவிட கோபத்துடன் நம் அறைக்குச் சென்று அவசரமாக வேறு உடைமாற்றிக்கொண்டு வரும்போது மகளும் அழுதுகொண்டே சாப்பிட்டதால் கிளம்பத் தாமதமாகிவிட பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகின்றாள். ஆக இப்பொழுது மகளைப் பள்ளியில் விடும் வேலையும் விழுந்துவிட்டது.

தாமதமாகிவிட்டதே என்ற பதட்டத்தில் வேக விதியை மீற போக்குவரத்து காவலர் ரூ.500அபராதம் விதிக்கிறார். அதைக்க்ட்டிவிட்டு, மகளை அழைத்துச் சென்று அவள் பள்ளியில் விடும்போது திட்டியதால் கோபம் கொண்ட மகள் போய் வருகிறேன்என்றுகூடச் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறாள்.

அலுவலகத்திற்குத் தாமதமாக செல்ல பின்புதான் முக்கியமான கோப்புகள் அடங்கிய நமது கைப்பெட்டியை அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்கின்றோம். மீண்டும் மீண்டும் தொல்லைகள்.. வீட்டிற்கு மாலை திரும்பிப்போனால், மனைவியும் மகளும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அன்றைய நாள் மோசமான நாளாகிவிடுகிறது.
காரணம் நாம் முடிந்துவிட்ட நிகழ்வின் மீது செயல்படுத்திய செய்கை நம்முடைய நோக்கத்தையே சிதைத்து விட்டது.

சரி.. இப்படி பார்ப்போம். நிகழ்ந்த செயலை மாற்ற முடியாது. நம்முடைய சட்டையில் காபி கொட்டிவிட மகள் நாம் திட்டப்போகின்றோமோ என்ற பயத்தில் கண் கலங்குகிறாள். மெல்ல அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி போனால் போகட்டும். இனிமேல் கவனமாக இருக்கவேண்டும், சரியா?” என்று சொல்லிவிட்டு நம்முடைய அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு கைப்பெட்டியுடன் வருகிறோம்.

நம் மகள் வழக்கம் போல் உணவருந்திவிட்டு பள்ளிப்பேருந்தில் உற்சாகத்துடன் ஒரு பறக்கும்  முத்தம் தந்து ஏறுகிறாள். நாம் சந்தோஷமாகக் கிளம்புகின்றோம். சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து, இன்முகத்துடன் பணியாற்றுகிறோம். மாலை வீடு திரும்புகையில், மகளும் மனைவியும் அன்புடன் எதிர்கொள்ளுகிறார்கள். நாம் மகளைத்திட்டாமல், அன்பாகப் பேசியதால், அவர்கள் இருவருக்குமே நம் மீது மதிப்பும் பாசமும் அதிகரித்திருக்கிறது.

ஆக இந்த நிகழ்வுகளில் காபி கொட்டுவது என்பது ஒரு கற்பனை உதாரணம் மட்டுமே.. வாழ்வில் பல சமயங்களில் நாம் எதிர்பாராத, திருத்தமுடியாத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றின் மீதான நமது செயல்களே பல நிகழ்வுகளை  தீர்மானித்து நமக்கான  அன்றைய நோக்கத்திலும் பல விளைவுகளை தருகிறது. எவற்றையும் பொறுமையுடன் எதிர்கொண்டு நமது செயல்களை செய்தால் வெற்றி கிடைக்கிறது.

நம்மை சுற்றியுள்ள இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் நம்முடைய ஒவ்வொரு செயல்களை கொண்டே நம்மை எடை போடுகிறார்கள்.

நாம் வாழும் வாழ்க்கையில் நமது குறிக்கோளின் அடிப்படையில் பரம்பொருளால் நாம் தண்டிக்கப்பட்டாலும் சரி, கொண்டாடப்பட்டாலும் சரி..நம்மை சுற்றியுள்ளவர்கள் நமது செயல்களின் அடிப்படையிலேயே நம்மை தீர்மானிக்கிறார்கள்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

கோபம்

ஒரு நிமிடக்கோபம் தான்...
திருப்பிப்பார்த்தேன்...!!!!
தொலைந்துபோன வாழ்க்கை....????

துளிகள்

வருத்தங்களின் கண்ணீர் துளிகள்
வீழ்வதற்குள் மெல்ல வற்றி விட்டாலும்
மனஇன்பத்தின் புன்னகையில் 
வரும் ஆனந்தத்துளிகள் 
சிறு பூக்களாய் உதிர்ந்துவிடுவது
அழகு தானே..


புதன், 27 ஏப்ரல், 2016

அழிவு

மாபெரும் அழிவின் கரங்களின் 
பிடியில் சிக்கி சிதைகிறது 
ஆற்றின் மடி..
நீருறும் அன்னை மடியில்
கதறக்கதற வேரோடு பிடுங்கப்பட்டு
குருடாக்கப்படுகிறது ஊற்றின் கண்கள்


திங்கள், 25 ஏப்ரல், 2016

மெல்லத்திரும்பும் காற்று

மெல்லத்திரும்பும் காற்று
வந்து என் மேனி தீண்டாதோ..
கள்ளத்தனமாய் இல்லை
இங்கு கட்டுப்பாடும் இல்லை
எண்ணம் எல்லாம் தெளிவே..
நீ மெல்ல மெல்ல வந்து
என் மேனி தீண்டாயோ..

எரிக்கும் சூரியனே என்
தேகம் சுட்டது போதும்..
விட்டுவிடு உன் கோபத்தை..
கூடவே மெல்ல கட்டவிழ்த்து விடு
அந்த காற்றையும்..

வரும் காற்றே துணையாய்
கொஞ்சம் மழை கொண்டு வா..
என் தேகம் சிலிர்க்க கொஞ்சம்
நனைந்து  கொள்கிறேன்..

தாலாட்ட வரும்
மழைத்துளி எல்லாம்
இந்த பூமி அணைத்துக்கொள்ள
அதன் மேனியும் மோகத்தில்
மெல்ல மெல்ல உருகாதோ..

இளமை

மரங்கள் தோறும் ஆடி ஓடி
தூக்கணாங்குருவி குருவி போல
தொங்கி விளையாடும்
இன்பம் எங்கே..போச்சு?
சோர்ந்து போயி சொங்கி போல
மூலையில் முடங்கி இப்படி
முகம் பார்க்காம விளையாடும்
இதில் இன்பம் தொலைஞ்சு போச்சு..?
தாவி குதிச்சி மோதி மிதிச்சி
காயா பழமா விட்டு விளையாடும்
காலமும் போச்சு..
இருக்கும் நாலு மூலைக்கு
ஒருத்தராக உட்கார்ந்து
முகம் பார்த்து களித்து
விளையாடும் நாளும் காணாம போச்சு?
மீளாத தனிமையில்
இல்லாத உலகத்தில்
இன்பம் என்றே ஆச்சு..

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

17. மனக்கவலை

வலைவீசும் எண்ணங்கள்

17. மனக்கவலை

கவலையில்லாதவன் என்று இவ்வுலகில் யாருமில்லை. ஒவ்வொருவருக்கு ஒரு கவலை மனதில் என்றைக்கும் இருந்துகொண்டே இருப்பது மனிதனின் இயல்பாகிவிட்டது. சிலர் கவலைகளை மனம்விட்டு பகிர்ந்து தங்களின் மனபாரங்க்ளை குறைந்துக்கொள்கின்றனர். பலர் அதை வெளிக்காட்ட முடியாமலும், வெளிக்காட்ட விருப்பப்படாமலும் உள்ளுக்குள் வைத்து மிகவும் கடினமான ஒரு வாழ்கையை வாழ்கின்றனர்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

என்ற பொய்யாமொழிப்புலவரின் மெய்யான வரிகளின் ஊடே மனகவலை பற்றி இந்தவாரம் வலைவீசுவோம்..

நம்மில் பலரும் தன்பிடியில் சிக்குண்டு பாம்பு இறந்துபோனது பற்றி அறியாது உடல் நலிவுற்றி பயத்தில் வந்த குரங்குக்குட்டியின் கதையை படித்திருப்போம். படிக்காதவர்களுக்காக அதை  கீழே பகிர்ந்துள்ளேன்..

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. 

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
அந்த கதையில் வரும் இந்த பாம்பு தான் மனது மனக்கவலை. நம்முடைய மனது அது உயிருடன் இருப்பதாக எண்ணியே மனக்கவலையில் வாடி வதங்கி தன்னுடைய இயல்பான வாழ்க்கையை வாழமுடியாமல் தவிக்கிறது.

இன்றைக்கு பற்பல அனுபவங்களை கொண்ட பெரியவர்களுக்கு ஈடாக சிறுகுழந்தைகளும் மனக்கவலையால் அவதிப்படுகின்றார்கள். இதுபற்றிய புரிதல் இல்லாமல் நாமும் அந்த குழந்தைகள் மீது நமது நிறைவேற ஆசைகளை திணித்து அவர்களின் மனக்கவலையை மேலும் மேலும் நம்மையறியாமலேயே கூட்டுகிறோம்.

இன்றைக்கு தன்னுடைய போக்கில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் பற்பல காரணம்கள் சொல்லி விளையாட்டுப்பள்ளி, பாலர் பள்ளி என்று ஒன்றரை வயதிலேயே வீட்டில் இருந்து சுமைகளோடு வெளியே அனுப்பிவிட்டு அதன் காரணமாக வரும் பொருளாதார சுமையை நாம் சுமத்து அந்த பொருளாதார சுமையை குறைக்க வேலை வேலை என்று ஓடி நம்முடைய சுமைகளையும், மனக்கவலைகளையும் கூடிக்கொண்டே மெல்ல மெல்ல சின்னஞ்சிறு குழந்தைகளையும் பயம்,  என்ற நீந்தி வெளிவரமுடியாத சாகரத்தில் தள்ளி விடுகிறோம்.

இப்படி வீட்டிலிருந்தே ஆரம்பிக்கும் இந்த கவலையானது எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக தோன்றுவதில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கும். ஆனால் ஏதாவதொறு வகையில் அவர்களும் இந்தப் பிரச்சனையில் ஆழ்த்தப்பட்டு விடுகின்றார்கள்.

உதாரணமாக இன்றைக்கு இருக்கும் நிகழ்வுகளான அதிகரித்து வரும் விவாகரத்து, தாய், தந்தை பிரிந்து வாழ்வது, கூட விளையாட, போட்டிபோட உடன்பிறப்புகள் இல்லாமல் தனிமையில் வளர்வது, பணத்தின் மூலம் தேவைகள் நிவர்த்தியானாலும் பாசம் கிடைக்காமல் வளர்வது, பெற்றோர்களின் புரிதல் இல்லாத அன்றாட சண்டை, மிகவும் பிடித்தமான குடும்ப நபரின் அகால மரணம்,  புதிய பள்ளிகூடத்தில் சேர்ந்து படிப்பது அதனால் பழகிய நண்பர்களை பிரிவது, தினமும் வீட்டுப் பாடம் செய்வது, பெற்றொரின் கருத்துக்கு ஒத்துப் போகமுடியாமல் தவிப்பது, என்று இன்னும் இதுப்போன்ற பலவிதமான மன அழுத்தத்தில் குழந்தைகள் சிக்கி சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள்.

இப்படி மனக்குழப்பத்தில், கவலையில், அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகள்:
எந்த காரணமும் இல்லாமல் அழுது அழுது அடம்பிடிப்பாது,  தூங்கும் பொழுது படுக்கையில் சிறுநீர்க் கழிப்பார்கள். கட்டைவிரலை சூப்புவது, நகம் கடிப்பது.
இல்லாத உடல் உபாதைகளை கூறி பெற்றோரின் கவனத்தை பெற முயல்வது. பள்ளிகூடம் செல்ல மறுப்பது, பொய் பேசுவது, மாணவர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவது, சக மாணவர்களிடம் சண்டை வர காரணமாயிருப்பது, என்று பலவழிகளில் தங்களின் அழுத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படி மனக்கவலை அதிகரிக்க அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தல்  சிதைந்து போன உறவு முறைகள், கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானது, நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, யாரும் இல்லையோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, குடிபழக்கம் என பல காரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த கவலைகள் தீர இருக்கும் வழிகள் என்று  பார்த்தால் மற்றவர்களுடனான உறவுமுறைகளை நல்லமுறையில் பேணுவது, தேவையில்லா மன விரிசல்களை உடனுக்குடன் பேசி தீர்த்து உறவுகளுக்குள் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வது, அன்பை பணத்தின் வழியாக மட்டும் அல்லாமல்  தன்னுடைய பாசமான சின்ன சின்ன செய்கையால், கூடிய மட்டும் அருகாமையில் இருந்து கனிவுடன் உறவுகளை பேணுவது, குழந்தைகளுக்கு, வளரிளம்பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் நட்புடன் பேசி எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி, பகிர்ந்து, கோபப்படாமல்  அன்புடன் அவர்களை கையாண்டு பிள்ளைகளின் பிரச்சனைகளை தீர்த்துவைத்து என  பலவழிகளில் நாமும் மனக்கவலையை பெருக்காமல், பிள்ளைகளையும் மனக்கவலையில் ஆழ்த்தாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மிகச்சமீபத்தில் அண்ணன் திரு. Rajam Rajaraman அவர்களின் பதிவில் படித்த செய்தி இது. நண்பர் ஒருவர் குடல் புண்ணால் (அல்சரில்) இறந்ததாகவும், அவருக்கு மன உளைச்சலும் நிறைய இருந்தது எனவும் தெரிய வந்தது
.
மனக்குழப்பத்தில் எழும் மன உளைச்சல் அவருடைய நோயை அதிகப்படுத்தி இருக்குமோ என நட்புகள் சிலர் ஐயுற்றிருகிறார்கள்.  ஐயமே இல்லை. மன உளைச்சல் குடல்  (அல்சரை) மிக அதிகப் படுத்தும். கூடுமானவரை மன உளைச்சல் இல்லாமலும், மன உளைச்சல் பிறர்க்கு கொடுக்காமல் இருத்தலும் நலம்.
மன உளைச்சல் ஏற்படும் போது, மனதினை, நமக்குப் பிடித்த விஷயங்கள் பக்கம் திசை திருப்பிக் கொள்ள முயலவேண்டும். இல்லை, நாம் மன உளைச்சல் உள்ளவர்களை அன்பாக, அனுசரணையாகப் பேசி திசை திருப்ப வேண்டும்.
நல்ல இசை, மனதிற்குப் பிடித்த கோவில், நகைச்சுவை காட்சிகள் பார்த்து மனதினை இலேசாக்கிக் கொள்ளலாம்.

அதற்கும் மேல நமது மனக்குறைகளை தீர்க்க இருப்பவன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.. அவரவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சன்னிதி நாடி

"எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நானிருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே'

என்கிற பட்டினத்தாரைப் போல மனது மனக்குறைகளை முறையிட்டு முடிந்த மட்டும் மனக்கவலையில் ஆழாமல் அமைதியான வாழ்க்கை வாழ்வோமாக..


இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

** முள் **



கடந்துபோன இனிய நாட்களின்
நினைவுகள் முள்ளில் மலர்ந்த
ரோஜாவாய்  மெல்ல பூக்கிறது..

மலர்பாதைகளில் அல்லாமல்
முட்காட்டின் வழியே
பயணங்கள் அமைந்தாலும்
இதமும் பதமுமான வார்த்தைகள்
வலிகளை மறந்து வசந்தத்தை
சுவாசிக்க வைகிறது..

நொடிகளாய் மெல்லக்கடக்கும்
காலச்சக்கரத்தில் எழும்
மாற்றங்களும் கணிக்க முடியாததல்ல..

எதிர்பார்ப்புகள் நிராசையாக..
ஏமாற்றங்கள் ஏக்கத்தை தூண்ட
கோபங்கள் குணத்தை கொல்லுகிறது..

தேனான வார்த்தைகள் எல்லாமே
அமிலத்தில் தோய்த்து முட்களோடு
பிறர்மீது முலாம் பூசப்படுகிறது..

முட்களாய் குத்தம்
ஒவ்வொரு வார்த்தையும்
உயிரின் உணர்சிகளை
கொல்லாமல் அறுக்கிறது..

இனிய வார்த்தைக்காய் காத்திருந்த மனது
இன்று மௌனத்திற்காய் தவமிருக்கிறது..

திட்டமிடா போர்முனையில்
பாய்ந்துவரும் ஈட்டிகள் போல
எதிர்பாரா நேரத்து வார்த்தை சிதறல்கள்
எரியும் கொள்ளியாய்
நெஞ்சை துளைக்கிறது..

அன்பின் ஆயுதங்கள்
போலிகளின் முன்னே கூர்மழுங்கி
குப்பையில் குவிந்து விடுகிறது..

கொட்டிவிடும் வார்த்தைகளை
அள்ளி அழிக்க முடிவதில்லை
சொல்லிவிட்ட  வார்த்தைகளை
இங்கு சுமப்பது காய நெஞ்சமே..

ஆறாத வார்த்தை காயம்
தீராது வாழ்வு மட்டும்..

போராட்டங்களை துரும்பென தாண்டினாலும்
நெருஞ்சி முள்ளாய் சிதறும்
வார்த்தைகள் முன்னே
கேடயமின்றி சிதறிப்போகிறோம்..

காலங்கள் மாறிவிடும்
எல்லாமும் மாறிவிடும்..
முட்களாய் சுட்ட வார்த்தைகளின்
தீக்காயங்கள் இந்த மண்ணோடு மண்ணாய்
தேகம் அழியுமட்டும் இருந்து மெல்ல
அரித்துக்கொண்டே இருக்கும்..

வியாழன், 21 ஏப்ரல், 2016

உயிர்த்துணை

'எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் நீதானே..!
மனதிலிருந்து சொல்ல
உயிராய் ஒரு துணைக்கிடைத்தால்
வாழ்வு இனிமையிலும் இனிமை..

நிகழ்வுகள் எல்லோருக்கும் சாதகமில்லை...
இழந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..
மலர்ந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..

சொல்லமுடியா துயரங்களை
தூக்கிக்கொண்டு நடைபோடும் உள்ளங்கள்..
சுமந்திடும் பாரத்தில் கடத்தமுடியா வாழ்க்கை..

நீ தான் என்னுயிர் என்று சொல்ல முடியவில்லை..
நீ தான் என்றைக்கும் எனக்கு வேண்டும்
நினைக்க முடிவதில்லை..
நீ இல்லா வாழ்வு நிழலில்லா பாலைவனம்
உரக்க கூவ முடிவதில்லை..

நிஜங்களில் சாயல்கள் நினைவுகளை விழுங்கிவிடுகிறது..
ஜென்ம ஜென்மமான பந்தம் என்று செப்பிடும் வாய்கள்
நீ இல்லா உலகே நிம்மதி என்றும் சொல்லும் சிலநேரம்..

ஊடல்கள் இல்லா வாழ்வில் இனியன இல்லை..
வெறும் சாடலின் வாழ்வில் இனிமையே இல்லை..

அதற்கு இது சரி..
இதைவிட அது சரி..
கடந்து கொண்டே போகும் காற்றானது எண்ணம்..

விலகிடும் நாட்கள் இனிமை என்றால்
வாழ்த்திடும் நாட்கள் வலிகள் தானே..


'எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் நீதானே..!
என்றுரைக்க எல்லோருக்கும் ஆசைதான்..
இயல்பினில் உண்மை இனிக்கவில்லையே..

புதன், 20 ஏப்ரல், 2016

கடலாடும் நினைவு

தெரித்த திரைக்கடலில் கண்டிட்ட 
தெளிவான நிலவுப் பெண்ணே !!!
என் காதல் கனியமுதே
காவியத்தின் நாயகியே..
உன் நினைவுகளின் சில்லுகளில்
சிக்கிச்சிதரும் போதெல்லாம்
என் காயங்களின் வலிகள்
காற்றில் கரையுதடி..

ஊமைக்குயிலாய் உன் வார்த்தை
என் நெஞ்சத்தில் ஒலிக்கையிலே 
தெளியாமல் போனேனே உன்னை 
நான் காணாததாலே!!!!

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

** நாணல் **



நேர்கொண்ட நெஞ்சம் போச்சு..
வளையாத மனதும் போச்சு..
எல்லார் வாழ்க்கையும் நாணலாய் ஆச்சு...

நேர்மைகள் விலைபேசும் நாட்டில்
நாணலாய் மக்கள்..

திசைகள் தோறும் நாணல் மனிதர்கள்..
பேச்சுக்களில் வளைப்பார்கள்..
பேச்சுக்களில் வளைவார்கள்..
ஈனமென நினைத்தாலும் - அதில்
நாமும் ஒரு  நாணலாய்..

கூனிக்குறுகிடும் நடையிலே
சுயங்கள் தொலைத்து
சாக்கடையோர நாணலாய்
தலை குனிந்து
நிஜங்கள் தொலைகின்றன..

முறிந்தாலும் நேர்மையில் நிமிர்ந்திடும்
விழுதுகள் தாங்கும் ஆலமாய்
நிற்பது யார்???

நாணலாய் வளைகின்ற நெஞ்சுகள்
எங்கும் சுயநலக்கூட்டை ஏந்தி
கோடியிலே ஒன்றாய் கரைகிறது..

அலை கவரும் மணலாய்
மெல்ல அரிக்கப்படும் மானுடம்..
என்றும் நாணல் மனதினால்
மாற்றம் வந்திடுமோ?

நாணலாய் எங்கும் வளைவது
தவறில்லை என்றால்..
இங்கு தவறுக்கு தலைவணங்கி
வீழ்ந்திடும் மனித நாணல்கள்..

வேதனை சின்னமே..


திங்கள், 18 ஏப்ரல், 2016

இயலாமை

பசிக்கு அழுகுதோ..
பாசத்திற்கு அழுகுதோ..
யாருமற்ற தனிமையின்
இயலாமையில் அழுகுதோ..
துன்பத்தின் வீரியத்தை
கண்ணீர் வரிகளால் வரைந்திடும் நேரமோ.
பார்க்கையில்..
பார"தீ"யின்
ஜெகத்தினை அழித்திடும்
கோபம் நியாயம் தான்..

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

16.பக்குவம்

வலைவீசும் எண்ணங்கள்

16.பக்குவம்

நாம் அனைவரும் வாழ்வின் பல கட்டங்களை தாண்டியே பயணப்படுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் அப்படி கிடைக்கும் அனுபவங்கள் நம்மை பலவிதங்களில் பக்குவப்படுத்துகிறது..இந்த பக்குவம் என்பது என்ன? எப்படி வருகிறது?.இந்த வாரம்  வலைவீசுவோம்.

உண்மையில் மனிதர்கள் என்றைக்கும் ஒரே இரவில் முழுமையான மனிதர்களாக மாறிவிடுவதில்லை. என்ன.. காளிதாசன்  என்ற  மகாகவி ஒரேநாளில் மாற்றம் பெற்றாரா?.. இல்லை.. அவரும் வாழ்வில் பலபடிகளில் அவமானங்களை சந்தித்து மெல்ல மெல்ல பக்குவப்பட்டத்தின் வெளிப்பாடே அவர் ஞானம் பெற்றதின்  சாராம்சம்.

எப்படி நம்முடைய பசிக்கு எப்படி நாம் எடுக்கும் ஒவ்வொரு கவளமும் நம்மை பசியில் இருகுந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு ஒரு குறிப்பிட்ட கவளத்தில் அதாவது பத்தாவது கவளத்தில் பசி உணர்வு அடங்குவதாக கொண்டால் அதுவே ஞானம் பெற்ற நிலைக்கு உதாராணமாக கொள்ளலாம். ஆனால் அந்த பசி உணர்வு அடங்கும் நிலையை அடைய நாம் ஒன்பது கவளம் உணவு எடுக்கிறாம். ஒவ்வொரு கவளமும் பசியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கிறது. இது  தான் பக்குவம் பெரும் படிகளாக கொள்ளலாம்.

நம்மால் வறண்ட நிலத்திலும் பயிர் செய்ய முடியும். ஆனால் ஒரேநாளில் அது நடக்கக்கூடியது இல்லை. நீர் இருப்பு அறிந்து கிணறு தோண்டி மண்ணை உழுது பக்குவப்படுத்தி பின்னரே பயிர் செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன? அடைந்த பின் காணும் நிலை என்ன? பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.

ஒன்று

குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்கென்று சத்தம் உண்டாகிறது.
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.

இரண்டு….

ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும். சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.
இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும், முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும். கடைசியாகத் தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் `உஸ் உஸ்என்ற சத்தம்தான் கேட்கும்.

மூன்று

தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும்.
ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.

நான்கு

புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம் அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான்.  அந்த மொழியில் விற்பன்னனோ, தன் தாய் மொழியில் பேசும்போது, அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.

ஐந்து

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத்தெரியாத `என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.

ஆறு

சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் `பட்பட்என்ற சத்தம் உண்டாகும். அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும். முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.

பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் ராமகிருஷ்ண பரமஹம்சர் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.

ஒருவன் பக்குவம் அடைவதற்கு முன்பு இருக்கும் தகுதியின்மைக்கு மூன்று காரணிகள் அடிப்படையாக இருக்கிறேது. அவை தகவலின்மை, புரிதலின்மை மற்றும் அனுபவமின்மை.

முதலில் தகவலின்மை என்ற தன்னுடைய நிலையை அறிந்து தகவல்களை பெற தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் நல்ல புரிதலை பெற வேண்டும். கடைசியில் அபப்டி கிடைத்த புரிதலின் மூலம் அனுபவங்களாய் பெற்று பக்குவ நிலைக்கு தாயாராகி தன்னுடைய அறிவின் இலக்கு நோக்கிய பயணத்தை  தொடர வேண்டும்.

எல்லா நிலைகளிலும் இப்படியான நிலைகளை, பக்குவ படிகளை கடந்தே ஒருவரால் சிறந்த மனிதராக உருவாக முடிகிறது.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் சொல்லியிருக்கும் தகவலை இங்கே அப்படியே பகிர்கிறேன்..

“உள்ளம் உடலுக்குத் தாவி
, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை. தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது. அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது. ஆரம்பத்தில் `இதுதான் சரிஎன்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறுஎன நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள். முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து. இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு. சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு. அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள். மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

`மனப்பக்குவம்என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை. அந்த நிலையில் எதையுமே `இல்லைஎன்று மறுக்கின்ற எண்ணம் வராது. `இருக்கக்கூடும்என்றே சொல்லத் தோன்றும்.

இப்படி பக்குவப்படும் நிலையில் நாம் ஒருசிலரின் உள்வாங்கும் திறனை, மனநிலையை அடிப்படையாக கொண்டு பக்குவப்படும் வேகத்தை விரைவு படுத்தலாம். ஆனால் பக்குவப்படுத்தும் செயலில் காலம் என்ற காரணியை யாராலும் தவிக்க முடியாது. ஏனெனில் நாம் காலத்தின் ஊடே பயணப்பட்டே ஆகவேண்டும்.

ஆக பக்குவமடைதல் என்பது என்றைக்கும் ஒரு படிப்படியான நிகழ்வு ஆகும். அதில் மாற்றம் இல்லை. ஒரு வேலை ஒரே நாளில் சிறந்த மனிதனாக மாறிவிட்டார் என்று தோன்றினால் அந்த மாற்றத்தை அடையும் நிலைக்கு அவருடைய மனது பலபடிகளில் பட்டை தீட்டி பக்குவ நிலை அடைந்திருக்கும். எப்படி திரைப்படங்களில் வில்லனாக இருப்பவர் கடைசியில் கதாநாயகன் பேசும் பேச்சுக்கு உண்டனே திருந்தி நல்லவனாக மாறுவது போல காட்டப்பட்டாலும், படம் முழுக்க பல படிகளில் பல கதாப்பாத்திரங்கள் மூலம் அவனின் மனம் பக்குவமடைய வைக்கப்படுகிறதோ அதுபோலவே இந்த நிகழ்வுகளும்.

எப்படி கல்லூரியில் படிக்கும்போது, இளையோர்க்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது புரிகிறது. இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. இந்த படிப்படியான அனுபவங்களே ஒருவரை பக்குவப்படுத்தும் நிலைகளாகும்.

மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி;

 முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!

பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது. ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும். இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை. பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.


இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.