வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பெண் மனம்.....



அன்பைத்தூவிட பூவாய் மலர்ந்திடும்..
கோபத்தைவீசிட தீயாய் எரித்திடும்..
ஆசையில் அணைத்திட மோகத்தில் தூய்திடும்..
பெண்ணின் மனமே மாயக்கண்ணாடி..

ஆழியின் ஆழமோ அறிதற்கு எளிது...
தூங்கும் எரிமலையோ துயரத்தின் வாசல்..
துடிக்கும் இதயமோ உயிரின் ஊஞ்சல்..
புரிந்தது கொஞ்சம் புரியாதது பெண் நெஞ்சம்..

அன்பென சொன்னால் பேரன்பு என்பாள்..
நட்பென சொன்னால் உயிரென நிற்பாள்..
காதல் என்றாலே கவிதையாய் உருகுவாள்..
தாய்மை மொழியில் மனதில் நெகிழ்வால்..

துரோகம் கண்டதும் கொதித்திடும் உதிரமாய்..
கர்வம் கொண்டதும் சொல்வதே மெய்யென..
ஆசைக்கொண்டதும் அகிலமே சிறிதென..
நேசம் தந்தும் எனக்கே எனக்கென..

அன்பில் அதிரடி தேனடி..நீ..
இப்பூவினில் விளங்காத புதிரடி நீ
வாயடி சொல்லடி வைப்பதில் பேயடி..நீ.
ஓரடி ஈரடி உன்மடி சொர்க்கமடி..

புரிந்தும் புரியாத இயற்கையின் ரகசியமாய்
கண்முன்னே நிற்பது பெண்ணின் மனமே..
புரிந்தவன் கொள்வது மௌனம்..
புரியாதவன் வாழ்வது போர்க்களம்..


அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

சில நேரங்களில் சில வெட்கங்கள்..! – 2



என் உயிரை குடிக்க வந்த துளியாய்
வீழ்ந்தாய் மழையே..
அவள் நெற்றியில் முத்தமிட்டு நாசி தழுவி
மெல்ல இதழணைக்க..
என்னை நோக்கிய அவள் வழிகளில் வழிந்த
வெட்கத்தை துடைத்து நீயும்
மேனியில் வழிந்தோடி மோகத்தை ஊற்றி சென்றாய்..
மோகத்தில் துடித்த மெல்லிடையாள் கை
வெட்கங்கொண்டு வழிகளை மூட..
நீயோ வெற்றிகொண்ட போதையில்
வீதிவழி குதித்தோட....
மேனி சிலிர்த்தவளோ வேரோடு என்னை
வீழ்த்தி என் வெட்கத்தையும் வெற்றிகொண்ட

கட்டில் கதை இனி எதற்கு....?

சில நேரங்களில் சில வெட்கங்கள்..!



என் வெட்கங்கள் என் வார்த்தைகள் போலவே
கூடப் பிறக்காதவை...
எனக்கும் உண்டு வெட்கங்கள்..
அறியாப்பருவத்தில் பெண்களுடன் பேசுவதே
வெட்கப்படும் செயலாய் வளர்ந்தவன்..
கொஞ்சம் வளர்ந்த பருவத்தில்
பொய்யாய் பல பொய்கள் சொல்லி விளையாடினாலும்
உண்மையாய் பொய்கள் பேச வெட்கப்பட்டேன்..
வாழ்க்கையை அறிந்த பருவத்தில்
பொய்களை உண்மையாய் பேசும் நிலை வந்தபோது
என் செயலை எண்ணி வெட்கப்பட்டேன்..
முதன் முதலில் கை நீட்டியொருவனுக்கு மறுக்காமல்
கையூட்டு தந்தபோது என் நிலையெண்ணி வெட்கப்பட்டேன்..
இன்றைக்கும் மாற்றமுடிய செயல்களை கண்டு
தலைகுனிந்து கடந்து செல்வதில்
என் வெட்கமும் கூடவே பயணிக்கிறது...
தோல்விகளுக்கு நான் என்றும் வெட்கப்பட்டதில்லை..
ஆனால் தோல்வியிலிருந்து எழாமல் இருப்பதில் வெட்கப்பட்டேன்..
இங்கோ வெட்கப்பட வேண்டிய
செயலுக்கு வெட்கப்படாத கூட்டமும்..
வீராப்பாய் செய்ய வேண்டியவற்றை
வெட்கத்தோடு கடந்து போவதும்
புது நியதியாய் மாறியதைக்கண்டு
வெட்கியே போகிறேன்....


- அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

என்னவள்

வெட்கிடு நீயும் ஓடிடு நீயும்
தேய்ந்திடும் வெண்ணிலவே..
இவள் தேய்வதும் இல்லை மறைவதும் இல்லை
தினம் ஒளிர்ந்திடும் சுடரொளியே..
உன் நார்த்தனமாடும் கரு விழியினில்
பூத்திடும் அன்பில் கரைந்திடுவேன்..
கைகள் அணைத்திடும் வேளையில்
தொட்டாச்சிணுங்கியாய் உன்னில் மயங்கிடுவேன்..
சித்திரை இரவினில் குளிர் நிலவென வருகையில்
நித்திரை தொலைத்தேனே..
பத்தரைமாற்றுத் தங்கமே உன்னெழில் பருவத்தில்

மலர்ந்திடும் குறுஞ்சியின் புன்னகையோ?

சனி, 26 ஆகஸ்ட், 2017

நினைவுகள் நிஜமாகுமோ


நினைவெல்லாம் நீயாக பூத்திருக்கையில்
நிஜத்துக்கென்ன அவரசம்
சொல்ல முடியுமா...?

காலம் தரும் இனிமைகளில் நீ என்
இதயத்தில் உற்சாக ஊற்றாய்..

கனவில் உன்னை நினைக்கையில்
சிந்தனையை தூண்டி விடும் மலர்க்கரமாய்..

வாழ்வில் தொலைந்தது எல்லாம்
இங்கு வந்தபின்பு கிடைத்ததோ?

இல்லை என்று சொல்ல மனமேது..

கருத்துக்களை அள்ளித்தெளிக்க
குவிந்த பாராட்டுகளா?

அன்பை பகிர்ந்தளிக்க
நெஞ்சக்கூடு சேர்ந்த சொந்தங்களா?

துள்ளிவரும் செந்தமிழின் வார்த்தைகளில்
தெறிக்கும் இன்ப தேனாய் வரும் சுவையில்
கண்ட மயக்கத்தையா?

விவாத தீபம் ஏற்றி வைத்து
இடையில் வெடிக்கும் எரிமலையாய்
சீரும் கடலலையாய்.
பொங்கும் புதுப்புனலாய்
அரங்கேறும் வார்த்தைகளை அணிதிரட்டி
பொன்னான முடிவு தரும்
வாங்க பேசலாம்...

இதோ இனித்த நினைவுகள் எல்லாம்
கைகளில் தவழும் “வாங்க பேசலாம்”
மாத இதழாய்..

இதழில் புன்னகையூற
விரைந்து வந்திடுமே....”நிஜமாய்”....!!!


-சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கனவே

அன்பான தாலாட்டில் சேயாக்கி பார்க்கிறாய்..
அமுதம் வழங்கும் வேளையில் தாயாகி நிற்கிறாய்..
வேதனை நேரத்தில் தோழமையாய் வழிகாட்டுகிராய்..
விம்மியழும் வினாடிகளில் மெல்ல தோளணைத்து
தலைகோதும் விரலாமே விழிநீரையும் ஏந்துகிறாய்..
இன்ப வார்த்தைகளில் மௌனிக்க வைக்கிறாய்..
ஆசை அணைப்பில் உள்ளம் பொங்கவைக்கிராய்..
மோகப் பார்வையில் முழுதும் கொள்ளையிடுகிராய்..
முத்தம் கொடுக்கையில் மொத்தமாய் கொல்லுகிறாய்...
காதல் விளையாட்டில் எல்லா கட்டுக்களையும் உடைக்கிறாய்..
எல்லாமே

கண்விழித்து பார்த்தபோது கனவாகி போனதேனோ...?

சனி, 19 ஆகஸ்ட், 2017

தூங்காத இரவுகளில்

தூங்காத இரவுகளில் தொல்லை கொடுக்கும்
உன் நினைவுகளின் பிடியில் இருந்து
என்னை விடுவித்து விடு..
நீங்காத பொழுதுகள் போய்
இன்று
நினைவு சிறையில் இருந்து
தினம் தினம் என்னை வதைக்கிறாய்..
விழிகள் திறக்கும் போதெல்லாம்
எங்கும் உன் உருவமே..
உன் வேடிக்கை சீண்டல்கள் எனக்கு
வெக்கத்தை பரிசளிக்கையில்
நீயோ..
அருவமாக இருந்து என் வேதனையை
ரசிக்கிறாய்..
தூரங்களை தொலைத்து மனதோடு நீ
இருந்தாலும் வாட்டிடும் வேதனை

உனது முகத்திலும்....?

தூக்கம்..



வெட்கமில்லா வேடிக்கை ஏன்..?
இரவு நேரம்..

இமைகள் தழுவிக்கொள்ளும்..

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஆதலினால் காதல் செய்வீர்




மேகத்தில் மிதக்க ஓர் பாதை தரும்..
மென்மையாய் மனசு மாறும்...
இருப்பதற்கும் இல்லாததற்கும் இடையில்
ஒரு இன்ப சொர்க்கமாய் துடிக்கவிடும்..
கால்கள் பரவா நடையில் பூமியில் மிதக்கும்
உணர்வுகள் கனவுகளில் மிதக்கும்...
காணும் நட்சத்திரங்கள் பலகோடி என்றாலும்
ரசிக்கும் நிலவு ஒன்று போலவே..
கடக்கும் முகங்கள் கோடி என்றாலும்
எல்லா முகமும் காதலின் முகமாய் ஒளிரும்..
துன்பங்கள் கணங்களில் காணாது ஒளியும்..
கோபத்தின் பார்வைகள் தொலைத்து போக..
கருணை மலரை பூக்க வைக்கும்..
சொல்லும் எல்லாம் உணரும் சிலவே..
சொல்ல முடியாதது தானே பலவும் காதலில்..
இனிமை.. இனிமை.. இனிமை..
இது தவிர்த்து என்ன இருக்கிறது காதலில்...
கற்பனை சிறகுகள் ஒருபுறமெனிலும்..
காதல் தருமே மனதில் ஒரு
வீரத்தின் கிரீடம்..
வீட்டிலும் வெளியிலும் முளைத்திடும்
தடைகளை வெட்டியெறியும் வீரமும் விவேகமும்..
சிந்தனையும் வேகமும்..
எல்லாம் தந்து பெறுவது ஒன்று மட்டுமே..
அது உன்னையும்.. உன் உயிரையும்..
ஆதலினால் காதல் செய்வீர் <3 .


-சங்கர்  நீதிமாணிக்கம்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சிநேகிதனே...



சொல்ல சொல்ல இனிக்கும் சுவைக்கும்
சிநேகிதர்களோடான பழையநினைவுகள்..
ஓடித்திரிந்த பருவமாய் இருந்தாலும்..
பக்குவப்பட்ட வயதின் பருவமாய் இருந்தாலும்
நட்புக்களின் கூட்டில் செய்த எல்லாமே
சுகந்தரும் இனிமைகள்..
வேலை, திருமணம் என்று
திசைகள் மாறினாலும் மனதில்
நீங்காது இருப்பது இந்த இனிமைகளே..
காலங்கள் தீர்க்காத பல வலிகளை
தீர்ப்பதில் முன்னிற்பது நட்பின் நினைவுகளும்
நட்பின் ஆதரவும் தான்..
இன்றைக்கும் நட்புக்கள்
நம்பிக்கையின் வேர்களாய்
சுற்றிலும் விரவிக்கிடக்கிறார்கள்..
சிறுவயது தோழமையோ..
பள்ளிக்கால பாதி நட்போ..
கல்லூரிக்கால கலக்கல் நட்பு..
வேலைக்கால பாச நட்போ..
நட்புகள்
என்றும் எப்பொழுதும் என்றைக்கும்
தூயவையே.


-சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சொல்லம்பு

உயிராய் தான் நினைக்கிறேன்..
ஏனோ புரிதலை தொலைத்து நீயும்
அர்த்தமில்லா மௌனத்திற்கும்
கோப முலாம் பூசி
மெல்ல மெல்ல நெஞ்சை நிமுண்டுகிராய்..

உனக்கு மட்டும் எங்கே கிடைகிறது..
வார்த்தைகளில் சொருகிய
குத்தீட்டிகளும், கொலை வாள்களும்..

உந்தன் மௌன யுத்தம்
மெலிய கீறலை
பெரும் விரிசலாக்கி வேதனை கூட்டுகிறது..

வரம்பில்லா வார்த்தைகள்
வரப்பில்லா நிலத்தின் ஓடையாய்
மனதை அரிக்கிறது..

பளபளக்கும் நட்சத்திரங்களை மறுத்து
மறைந்து விட்ட நிலவுக்காய்
உன் வேதனைகளை மற்றவர் மேல் வீசுகிறாய்..

என் நம்பிக்கைகளை
குயவனின் காலடி மண்ணாய்
கொட்டிவிட்டாய்..
நானோ புது உருவம் கொண்டு வரும்போது
போட்டு உடைக்கிறாய்..

சோதனைகள் மனதை புடம் போடலாம்..
நீ  தரும் வேதனைகளோ
அடிவேரையே வெட்டிக் சாய்க்கிறது..

மனதின் பாரங்களை குறைக்கும்
வார்த்தைகளை தேடும்போதுதான்
பாய்ந்து வந்து இதயத்தை துளைக்கிறது

வார்த்தை கணைகள்..

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

நட்பூ

நட்பென்பது யாதெனின்
புரிதலின் நம்பிக்கை என்பேன்..
நம்பிக்கையின் ஆணிவேர் அது..
நம்பிய நட்பாயின் சந்தேகம் இல்லாது போகக்கடவது.
துரோகம் நட்பின் அழுகிய வேர்..
வெட்டி எறியுங்கள்..
குலம் ஏது கோத்திரம் ஏது..
தேடிப்பார்த்து வருவதா நட்பு..
சிறு புன்னகையிலும் பூக்கும்
சில மோதலிலும் பூக்கும்..
நட்பு இறுகிவிட்டால்
அங்கே நயவஞ்சக நரிகளுக்கு
நாட்டமை கிடையாது
நட்பு நம்பும்..
நட்பு ஓடிவரும்..
நட்பு கைகொடுக்கும்..
நட்பு நேசம் தரும்
நட்பு கூடவே பயணிக்கும்
நட்பு உயிரோடு கலந்து விடும்
நட்பு அவசியமெனின்
உயிரையும் கொடுக்கும்
உயிரையும் எடுக்கும்..
உறவு இல்லாத உயிர்கள் இருக்கலாம்...

ஆனால் நட்பு இல்லாத உயிர்கள்?