சனி, 27 ஜூன், 2015

தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள்

செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, 
அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் 
கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், 
இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் 
சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த 
முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.


எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும் சம்பந்தமே 
இல்லாதவர்கள் சிலர், தங்கள் நாட்டில் தமிழ் மொழியின் 
பெருமைகளை பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்.இங்கு 
ஆங்கில அகர வரிசைப்படி அவர்களைப் பற்றிய குறிப்புகள் தருகிறேன் 
என்னால் முடிந்தவரை. இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களும் 
இருக்கலாம். உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்

1. ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் (1841–1897): தமிழ் மற்றும் தெலுங்கு 
மொழிகளுக்கான இலக்கணம் குறித்து நூல்களை வெளியிட்டவர்

2. பெஷ்சி(1680–1747): வீரமா முனிவர் எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் 
தமிழ் அறிஞர். ஒரு ஜெசூயிட் பாதிரியாராக இந்தியா வந்தவர் தமிழின் பால் 
தீராத காதல் கொண்டவராக மாறினார். தன் வாழ் நாள் முழுவதும் தமிழ் 
மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் காலத்தைக் கழித்தவர்.
 பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். கொடுந்தமிழ் இலக்கணம், 
பரமார்த்த குருவின் கதை, தமிழ்–இலத்தீன் அகராதி, செந்தமிழ் இலக்கணம் 
(இலத்தீனில் எழுதப்பட்டது), வாமன் சரித்திரம் (பாடநூல்), தொன்னூல் 
விளக்கம், சதுரகராதி என்னும் சொற்களஞ்சியம், வேத விளக்கம், 
வேதியர் ஒழுக்கம் ஆகிய நூல்கள் தமிழுக்கும் இவருக்கும் சிறப்பு சேர்த்தன. 

3. ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து 
ஆய்வு செய்தவர். இவரின் நூல்கள் பிற்காலத்தில் திராவிட மொழிகள் குறித்து 
ஆய்வு செய்தவர்களுக்கு ஒரு முதல் நூலாக இருந்தது. பெரும்பாலும்
 திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தன் மதப் பணியையும்,
 தமிழ்த் தொண்டையும் மேற்கொண்டவர்.

4. ஆலன் டேனியலு (1907–1994): இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். தன் 
வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். தொன்மவியல் 
மற்றும் இசையில் வல்லுநர். வேதம், இந்து தத்துவம் மற்றும் சைவ 
சித்தாந்தம் கற்றுணர்ந்து ஆய்வு மேற்கொண்டவர். காசியில் ஹிந்து 
பல்கலையில் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியங்கள் 
மீது தீராத பற்றுக் கொண்டவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி 
பெயர்த்தவர்

5.ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711–1791): சத்தியவேத புத்தகம் என 
பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இந்த அறிஞர். தமிழ் – ஆங்கில 
அகராதியினைத் தயாரித்து வெளியிட்டார்

6. ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர்.
 தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை 
நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் 
வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் 
என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.

7. ஹூப்பர்: ஆழ்வார் பாடல்களை அச்சில் வெளியிட்டவர்.

8. ஜென்சன் ஹெர்மன் (1842–): தமிழ்ப் பழமொழிகளால் ஈர்க்கப்பட்டு, அவை 
குறித்து நூல்களை வெளியிட்டவர். ஐரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் 
கொள்ள நூல்களை உருவாக்கியவர்.

9.எம்.ஏ. லேப்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொழி அறிஞர். தமிழ் மொழி 
சொற்கள் குறித்து பிரெஞ்ச் மொழியில் நூல்களை எழுதியவர்

10. ஜான் லேசரஸ்: தமிழ் இலக்கணம் குறித்தும், பழமொழிகள் குறித்தும் 
நூல்களை எழுதியவர்.

11. ஜான் முர்டாக் (1819–1904): தமிழில் வெளியான நூல்கள் குறித்து 
அடவுத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தவர். அதில் ஒவ்வொரு நூல் 
குறித்தும் சிறிய குறிப்புரையும் தந்துள்ளார். இவரின் நூல் பிற்காலத்தில் 
தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது.
 மத போதனையில் ஈடுபட்டதுடன், தமிழகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பு 
குறித்தும் இவர் ஆய்வு நடத்தி நூல்களை வெளியிட்டார். மஹாபாரதத்தைச் 
சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி நூலாகக் கொண்டு வந்தார்.

12.இராபர்ட் நோபில் (1577–1656): இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஜெஸூயிட் 
போதகர். இவரை அக தத்துவ போதகர் என அழைப்பார்கள். நானோ பதிகம்,
 ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும்
நூல்களை எழுதி வெளியிட்டவர். கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம்,
பூசை ஆகிய சொற்கள் இவரால் பிரபலமடைந்தன.

13. பீட்டர் பெர்சிவல்: தமிழ்ப் பழமொழிகளில் ஆர்வம் கொண்டவர். 
ஏறத்தாழ 5,000 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவ்வையாரின்
 நீதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். 
தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.

14.  4.ஜி.யு.போப் (1820–1908): தமிழக மக்கள் நன்கறிந்த வெளிநாட்டு தமிழ் 
அறிஞர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர். 
திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி
 பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் 
தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்டார்.

15.ரேணியஸ் சி.ட்டி.இ.(1790–1838): தமிழ் இலக்கணம் பால் ஆர்வம் கொண்டு,
 கற்றறிந்து நூல்களை வெளியிட்டார்.

16. ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரஸ் (1879– ): தமிழ் மதங்கள் குறிப்பாக 
சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதியவர்.

17. ஜூலியன் வின்சன் (1843–1926): தமிழ் இலக்கணத்தினை பிரெஞ்ச் மொழியில் 
எழுதியவர். சீவகசிந்தாமணி மற்றும் திருக்குறளின் ஒரு பகுதியை மொழி 
பெயர்த்து வெளியிட்டவர்.

18. விண்ஸ்லோ, மிரன் (1789–1864): இவரின் தமிழ் – ஆங்கிலம் அகராதி
 இன்றும் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. முதன் முதலில் 67,000 
சொற்களுடன் வெளியானது இந்த அகராதி. 1862 ஆம் ஆண்டு 
வெளியிடப்பட்டது.

19. பார்த்தலோமியோ சீகன் பால் (1683–1719): ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த
 மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை 
வெளியிட்டார். 17,000 சொற்களுடன் கவிதைச் சொற்கள் அடங்கிய 
நூல் ஒன்றையும் கொண்டு வந்தார்.


Read more: வெளிநாட்டவர் வளர்த்த தமிழ் -|- 007Sathish