சனி, 29 நவம்பர், 2014

எப்படி நடக்க வேண்டும் ...? அறிவின் படியா .. மன சாட்சியின் படியா ... எது சிறந்தது .. ?


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.


அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் அடிகுழாய் ஒன்றும், அதன் அருகில் ஒரு சிறு வாளியில் தண்ணீரும் இருந்தன.


அந்த அடிகுழாயில் ஒரு அட்டை தொங்கிக் கொண்டிருந்தது ..!


அந்த அட்டையில், “இங்குள்ள சிறு வாளியில் உள்ள தண்ணீரை அந்த அடிகுழாய்க்குள் ஊற்றிவிட்டு அடித்தால் தண்ணீர் வரும். தாங்கள் தேவையான தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்” என்று எழுதப்பட்டிருந்தது.


அந்த அடிகுழாயோ மிகப் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் இந்தச் சிறு வாளியிலிருக்கும் தண்ணீரும் நாம் அருந்தாமல் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும். நாமும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணம் மேலோங்கியது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று `அறிவு` கூறியது. 


ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த அடிகுழாய் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போய்விடுமே... நாம் இதற்குக் காரணமாகி விடுவோம் என்று `மனசாட்சி` எச்சரித்தது.

அவன் மனசாட்சி முடிவுக்குப் பின் யோசிக்கவில்லை. அந்த அடிகுழாயில், சிறு வாளியிலிருந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீரைக் குடித்தான். அந்தச் சிறு வாளியிலும் தண்ணீரை நிரப்பி வைத்தான். இப்போது அவன் மனமும் நிறைந்திருந்தது.


இன்று கிடைக்கும் நன்மை அனைத்தையும் நாமே முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை இருக்கக் கூடாது மனசாட்சிப்படி நடக்கவேண்டுமென என்று இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.


நாம் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்ததை - கற்று உணர்ந்தவைகளை -அடுத்து வரும் தலைமுறையினரும் - பிறரும் - பயன்படுத்த விட்டுச் செல்ல வேண்டும்...!




வாரன் பப்பட்- Warren Buffet - வெற்றிகரமான மனிதரின் எளிய வாழ்க்கை

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!
1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே...

நன்றி: ஈகரை




வீடு

(சிறுகதை ! )

மாமனார் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கும்போது காலை ஒன்பது மணி. ஆட்டோ சத்தம் கேட்டு அவன் மனைவிதான் வந்து கதவைத் திறந்தாள். பின்னாலேயே வந்தார் மாமனார். “அடடே...வா...வா...” அவருடைய வரவேற்புக்கு சிரிப்பையே பதிலாகத் தந்து விட்டு சூட்கேஸ்களை உள்ளே கொண்டு போய் வைத்தான். பின்பக்கம் போய் சிகரெட் நாற்றம் போக வாய் கொப்பளித்து விட்டு வந்து முன் அறையில் அமர்ந்தான்.
அவன் வருகை தந்த பூரிப்பை மறைக்க முடியாமல் அவன் மனைவி டீ போட உள்ளே விரைந்தாள். மாமனாரும் மாமியாரும் அவன் ஆசுவாசப் படுத்திக்கொண்டு உட்காரும் நேரத்துக்காக காத்திருந்தவர்கள் போல அமர்ந்திருந்தனர்.
“அப்பறம்... டிரெயின் கரெக்ட் டயத்துக்கு வந்துச்சா?”
“இல்ல மாமா... ஒரு மணி நேரம் லேட். கோயமுத்தூர் ஸ்டேஷன்ல நுழையும்போது மணி ஆறரை. ஆட்டோ புடிச்சு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வந்து நேரா உடுமலை பஸ்ஸப் புடிச்சேன். பளய பஸ் ஸ்டாண்டில எறங்குனப்போ மணி எட்டே முக்கால்... அங்கியே ஆட்டோ கெடச்சது...” உரையாடலை விரைவாக முடிக்க வேண்டும் போல இருந்தது அவன் பேச்சு.
“முந்தா நேத்து கௌம்புன `மங்களா'வா...? இல்லே, கேராளவுல வந்தியா...?” மாமனார் அவனுக்குத் தாய்மாமன்தான். அவன் சிறுவனாயிருந்த போதிருந்தே ஒருமையில் அழைக்கப்பட்ட பழக்கம். திருமணப் பேச்சு துவங்குவதற்கு முன்வரை அவனை ‘வாடா போடா’ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார். எனவே அவனுக்கு வித்தியாசமாகப் படவில்லை.
“மங்களாதான் மாமா... கேரளாதான் கோயமுத்தூர்ல நிக்கிறதில்லையே...” இன்னும் உடம்பு தடதடத்துக் கொண்டேயிருந்தது.
ஆண்டுக்கொருமுறைதான் என்றாலும் ரயில் பயணம் சொல்ல இயலாததாய்த்தான் இருக்கிறது. காலை பத்து மணிக்கு டில்லியில் ஏறினால் இரண்டாவது நாள் காலை ஆறுமணிக்கு கோயமுத்தூர். நாற்பத்து நான்கு மணி நேர ரயில் பயணம். இரண்டு முழுப்பகல்கள், இரண்டு முழு இரவுகள். வீடு சேர்ந்து ஒருநாள் ஆனபின்னும் உடம்பின் ஆட்டம் தீராது. மூன்று நாள் பயணம் போலத் தோன்றும்.
“ஏன் லெட்டரே போடலே...? எம்பொண்ணு தெனம் போஸ்ட்மேனுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தா... ஒரு நாலுவரி எழுதிப்போட நேரமில்லாமப் போச்சா... ?” மாமியார் - அத்தை தன் பங்குக்கு வாயைத் திறந்தார்.
``லெட்டர் போடக்கூடாதுன்னு ஒண்ணுமில்ல... இதா... இன்னிக்குப் பொறப்படலாம், நாளக்கிப் பொறப்படலாம்னு நாள் போயிருச்சு. சரி, லெட்டர் போடாமெத் திடீர்னு போய் நிக்கலாமேன்னு தோணுச்சு...” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“எத்தன நாள் லீவு...?” டீயை வைத்தவாறே கேட்டாள் மனைவி.
“என்ன... வளக்கம் போல பதினஞ்சு நாள்தா... அதுல ரெண்டு நாள் போச்சு அடுத்த வெள்ளிக் கௌம புறப்புடணும். மங்களாவுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுத்துட்டு வந்துட்டேன். ஞாயித்துக் கௌம போய்ச் சேந்தா, திங்கக் கௌம ஆபீசுக்குப் போக சரியா இருக்கும்.”
“ஏன்... இன்னும் ஒரு வார லீவு போட்டுட்டு வர்ரது...? வர்றதே வருசத்துக்கு ஒருக்கா... அதுல வேற கால்ல வென்னி ஊத்துனாப்பல பறக்கறது... இப்பிடி வர்ரதுக்கு வராமயே இருக்கலாம்...” மனைவி முகத்தைத் தூக்கினாள்.
“அட நீ ஒண்ணு... பத்து நாள்ள ஒலகத்தயே சுத்தி வந்துரலாம். இல்லாட்டித்தா என்ன...? ஊருக்கு வந்து ரெண்டு மாசமாச்சுல்ல... இன்னும் சீராடித் தீரலையாக்கும்...?”
“ஆமா...! இப்பத்தா கலியாணமாயி மறுவீடு வந்திருக்கோம் சீராடறதுக்கு...? உள்ளூர்ல இருந்தா சொந்தக்காரங்க ஊட்டு நல்லது கெட்டதுக்குப் போகணும். வரணும்... அதாம் போயாச்சே... சொந்தமும் வேண்டா, பந்தமும் வேணாம்னுட்டு... ஒங்களுக்கென்ன... வருவீங்க.... புர்ருனு போயிருவீங்க...! எம்பொண்ணு சீருக்கு வர்ல்லே... எங்கூட்டுப் புண்ணியார்ச்சனக்கி வர்ல்லே... எங்க தம்பி கல்யாணத்துக்கு வர்ல்லேன்னு ஒவ்வொருத்தருக்கும் நாந்தான பதில் சொல்ல வேண்டியிருக்கு...”
உரையாடலின் போக்கும் தன்மையும் திசை மாறுவதைக்கண்ட மாமனார் குறுக்கே வந்தார் “சரி சரி... எல்லா அப்பறம் பேசிக்கலாம். அவருக்கு சுடு தண்ணி போட்டுக்குடு... குளிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கட்டும்.” மாமனார் முற்றுப்புள்ளி வைத்தார்.
“தண்ணி காஞ்சிருக்கும்... இதா வெளாவிர்ரேன்...” மனைவி குளியலறைக்குப் போனாள். அவன் சூட்கேஸ்களை உள்ளே வைத்துவிட்டு லுங்கிக்கு மாறினான்; டவலையும் சோப்பையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு நடந்தான்.
“என்ன... எளச்சுட்டாப்பல இருக்கு...?” என்றார் எதிரில் வந்த அத்தை.
“என்னது... எளச்சுட்டனா...! நானா..? ரண்டு மாச ஓட்டல் சாப்பாட்டுல ஒரு சுத்து பெருத்துட்டேங்கறாங்க எல்லாரும்...” என்றான்.
“திங்கறது பூராவும் ஒடம்புல கொளுப்பாப் போய்ச் சேருது போல...” உரிமையோடு கிண்டலடித்தார் அத்தை. கொங்கு மண்ணுக்கே உரித்தான நையாண்டி. அவன் சிரித்துக் கொண்டே நகர்ந்தான.
குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டு வந்தவனுக்கு இட்லி தயாராக இருந்தது. வெள்ளை வெளேரென, பெரிய இட்லிகளிலிருந்து ஆவி கிளம்பியது. மாமாவும் அவனும் சாப்பிட உட்கார்ந்தனர்.
சட்னி வெண்மை கலந்த மஞ்சளாய் இருந்தது. தேங்காய்தான் காரணம். சாம்பார் பருப்பாக இருந்தது. நான்கு இட்டிலிகளை வைத்து சட்னி, சாம்பார் ஊற்றினாள் அவன் மனைவி.
“அப்பா... சட்னின்னா இதுல்ல சட்னி...”
“கிண்டல்தான் வேணாங்கறது...” வெட்டினாள் அவன் மனைவி.
“அட... கிண்டலில்ல, நெசமாத்தான் சொல்றேன்... அங்க எவங்கடையில தேங்காயப் போட்டு சட்னி அரக்கிறான்...? திருட்டுப் பயலுக... வெறும் பொட்டுக்கடலதான்... அதுவும் காலைல அரச்சதையே சாயங்காலம் வரைக்கும் வச்சிருக்கானுக... மத்தியானமானாலே அதுலருந்து ஒரு மாதிரியா வாடையடிக்கும். சாயங்காலமானா... கேக்கவே வேணா. அதச் சொன்னா என்னமோ உன்னய கிண்டல் பண்றேன்னு நெனக்கிற...”
“அந்த ஊசிப் போன சட்னியச் சாப்புட்டுத்தான் ஒரு சுத்துப் பெருத்துப்போயிட்டீங்களோ...?” அடுக்களையிலிருந்து மடக்கினார் அத்தை.
“ஹாஹாஹா... நானாரு...! அதுக்குத்தா இந்தத் தமிழ்க கடைக்கே மத்தியானமோ ராத்திரியோ போகவே மாட்டேன். அட, அப்பிடியே போனாலும் சாப்பாடு, இல்ல ரொட்டி... இப்பிடி சட்னி இல்லாத அயிட்டமா வாங்கிக்கிறது...”
“வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி ஏதாவது இருக்கா...?” அடுத்த விள்ளலை வாயில் போட்டுக்கொண்டே அவன் கேட்டான்.
“இத பார்ரா...! காலைல எதுக்கு வம்புன்னு சட்னி அரச்சு, சாம்பாரும் வச்சுக்குடுத்தா வெங்காயச் சட்னி வேணுங்குதோ தொரக்கி... ரயில்ல காஞ்சு போன வயித்துக்கு ரண்டு இட்லி போயிருச்சில்ல...! கொளுப்பு சேந்துருச்சு...” பேசிக் கொண்டே போன மகளை முறைத்து அடக்கினார் மாமா - “தா... என்ன பேச்சுப் பேசற...? இப்ப ஒனக்குத்தா கொளுப்பு... இருந்தா இருக்குன்னு சொல்லு, இல்லன்னா இல்லன்னு சொல்லு. அத விட்டுட்டு லொள்ளு பேசறியே...” மகளைக் கடிந்தார்.
“அட... விடுங்க மாமா... ஏதோ தமாசுக்குப் பேசுச்சு... நா எதுக்குச் சொன்னேன்னா... ஒவ்வொரு வாட்டி ஊருக்கு வர்றப்பியும் பழனிக்குப் போயிட்டு வரணும்னு நெனக்கிறது...”
அவன் முடிப்பதற்குன் மனைவி குறுக்கிட்டாள் - “எதுக்கு...? சண்முக நதிக்குப் போய், வர்றவங்களுக்கு மொட்டையடிக்கவா...?”
“ஒன்னக் கட்டிக்கிட்டதுக்கு நானல்ல மொட்டை போட்டுக்கணும்...!” மனைவிக்கு பதிலடி கொடுத்துவிட்டு மாமாவிடம் திரும்பினான். “பஸ் ஸ்டாண்டுலருந்து ரெயில்வே டேசன் போற ரோட்டுல... என்ன தியேட்டர் அது... சாமியா... சந்தானகிருஷ்ணாவா... அதுக்கு எதுத்தாப்புல.......”
“அதுக்கு எதுத்தாப்புல `பலவகைச் சட்னியுடன் சூடான இட்லி கிடைக்கும்'னு போர்டு போட்ட ஒரு சின்ன ஓட்டல் இருக்கும். எத்தன சட்னிங்கற...? தேங்காச் சட்னி, சாம்பாரோட, வெங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, இட்லிப்பொடி, மொளகாப் பொடி எல்லாம் வைப்பான். பஞ்சாட்டம் இட்லி... அட... அட... இதத்தான சொல்லுவீங்க..? இதக் கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு... நானுந்தா எத்தன நாளாச் சொல்றேன்... ஒரு நாளாவது கூட்டிட்டுத்தா போங்களே பாக்கலாம்னு...” அவன் பேசி முடிக்கும் முன் பொரிந்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
“ஒன்னயா... கூட்டிட்டுப் போறதா...! அதுக்குப் பயந்துட்டுதான போகாம இருக்கேன்.”
“ஆமா... நான் வந்து ஒரு ஆயிர ரூவாய்க்கு சாப்புட்டுருவேம் பாரு...”
இருவரின் வேடிக்கைப் பேச்சையும் ரசித்தவாறே இட்டிலிகளை விழுங்கிக் கொண்டிருந்த மாமா குறுக்கிட்டார் - “சரி... சரி... போலாம். ஏம்மா...! கொஞ்ச நேரம் படுத்து எந்திருச்சுட்டு சாயங்காலமா ஒங்கக்கா ஊட்டுக்கு ரெண்டு பேருமாப் போயிட்டு வந்துருங்க... ஊட்டுப் புண்ணியார்ச்சனைக்கு வரலைங்கறதுல ஒங்கக்காவுக்கு ரொம்ப வருத்தம். எதாவது வாங்கிட்டு வந்தியா...?”
“உம்... ஒரு எக்சாஸ்ட் பேன் வாங்கிட்டு வந்திருக்கேன்...”
*
அக்காவும் மைத்துனரும் யூனியன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள். மைத்துனரின் அப்பா டெய்லராக இருந்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய வீடு அது. அந்தத் தெருவில் லைன் வீடு என்று கேட்டால் யாரும் சொல்லி விடுவார்கள். எட்டு வீடுகள். ஒரே மாதிரி எட்டு ஓட்டு வீடுகள்.
முன்பக்கம் காம்பவுண்டும் நான்கு அடி அகல கேட்டும். உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் ஒரு தென்னை மரம். வலது பக்கம் முனிசிபாலிடி பைப். தண்ணீர் பிடிப்பதற்காக - தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக - வெட்டப்பட்ட ஒரு குழி. தரையிலிருந்து ஒரு அடி கீழே, நீட்டிக் கொண்டிருக்கும் குழாய். வால்வு இல்லை. பித்தளைத் தவலையை வைத்து எடுக்கும் அளவுக்கு அகலமான, ஆழமான குழி. உள்ளே இறங்கி தண்ணீர் பிடிக்க ஒரு படி. இந்த அற்புதமான யோசனையை முதல்முதலாகச் செயல்படுத்திய ஆள் யாராக இருக்கும் என்று ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் யோசனை வரும்.
குழியை அடுத்து கொஞ்சம் இடைவெளி. இங்கேதான் எட்டு வீட்டுக் குழந்தைகளும் பம்பரம், கோலி, பாண்டி எல்லாம் விளையாட வேண்டும். அடுத்து வரிசையாக எட்டு வீடுகள். தெருவைப் பார்க்காமல் காம்பவுண்ட் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்ட வாசல்களுடன் எட்டு ஓட்டு வீடுகள். முன்பக்கம் எட்டுக்குப் பத்து சைஸில் ஒரு ரூம். அதையொட்டி பத்துக்குப் பத்து சைஸில் இன்னொரு ரூம். அடுத்து ஆறுக்குப் பத்து சைஸில் ஒரு சமையலறை. வாசலுக்கு மட்டுமே கதவு. மற்றதெல்லாம் தடுப்புச் சுவர்போல ஏற்பாடு. அவரவர் வசதிக்கேற்ப முன் அறைக்கு ஸ்கிரீன் போட்டிருப்பார்கள். ஒரே மாதிரியான எட்டு வீடுகளையும் கடந்தால் பொதுவாக நான்கு குளியலறைகள், நான்கு கக்கூசுகள்.
முதல் இரண்டு வீடுகளைத் தவிர ஆறும் வாடகைக்கு விடப்பட்டவை. முதல் வீட்டை அக்காவீட்டார் புழங்கி வந்தனர். இரண்டாவது வீடு பெரும்பாலும் மூடப்பட்டேயிருக்கும். இரவில் மட்டும் அக்காவின் மாமனார் மாமியார் அங்கே படுக்கச் செல்வார்கள். யாராவது உறவினர் வந்தால் பயன்படுத்துவார்கள்.
இருவரும் அக்கா வீட்டுக்குப் போனபோது வீட்டில் அக்கா மட்டுமே இருந்தாள். மைத்துனர் ஆபீஸில் இருந்து வந்திருக்கவில்லை வாசலில் மொபெட் இருக்கவில்லை.
“வா...வா...வா... எப்ப வந்தே...?” கதவைத் திறந்த அக்கா வரவேற்றாள்.
“காலைலதான் வந்தேங்கா... எங்க மச்சானக் காணம்...? பொண்ணக் காணம்...?”
“அவரு இன்னம் ஆபீஸ்லேர்ந்து வர்ல. பொண்ணு ட்யூசனுக்குப் போயிருக்கா. ஆறு மணிக்கு வந்துருவா. எப்பிடியிருக்கு வீடு...?”
முகத்தில் மலர்ச்சியா? பெருமிதமா?
வீடு மாறிப் போயிருந்தது. முதலிரண்டு வீடுகளின் இடத்தை புதிய கான்கிரீட் வீடு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் ஓட்டுவீடுகள் தெரியாது. தெருவைப் பார்த்த கதவு. குழந்தைகள் விளையாடுமிடத்தை விழுங்கி விட்ட வாசல்.
நுழைந்ததும் முதலில் இருந்த ஹாலில் புதிய சேர்களும் சோபாக்களும் இருந்தன. அந்த ஹாலிலிருந்தே மாடிக்குப்படிகள் போயின. உள்ளே டைனிங் டேபிளும் சேர்களும் கண்ணில் பட்டன. தரை மொசைக் போடப்பட்டிருந்தது. “எங்க மாமியார் மாமனாரக் காணம்...?”
“அவங்க மதுரக்கி பொண்ணு ஊட்டுக்குப் போயிருக்காங்க. ஒரு வாரமாகும் வர. வா, உள்ள வந்து பாரு...”
டைனிங் ஹாலையொட்டி சமையலறை. கிரேனைட் போடப்பட்ட சமையல் மேடை. மிக்ஸி வைக்க, கிரைண்டர் வைக்க ஸ்டாண்ட். மூலையில் கேஸ் சிலிண்டர் ஒரு பூதம் போல் ஒளிந்திருந்தது. மேலே வென்டிலேஷனுக்கு ஓட்டை இருந்தது. பக்கத்தில் மூடிய பவர் பாயின்ட் ஒன்று தெரிந்தது. எக்சாஸ்ட் ஃபேனுக்கு என்று புரிந்தது.
டைனிங் ஹாலின் மற்றொரு பக்கம் கதவு வைத்த அறை. கட்டில்கள் போடப்பட்டிருந்தன. வார்ட்ரோப் ஒன்றும் ஸ்டாண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தன.
“இது மாமியார், மாமனாருக்கு. மேல படியேற வேண்டியதில்ல பாரு...”
“உங்க ரூம் எங்க...? மேலயா...”
“வா. மேல போலாம்.”
சுழன்று போயின படிக்கட்டுகள். படிகள் உயரமாக இருந்தன. மாடியில் தெருவைப் பார்த்தவாறு ஒரு சிட் அவுட். கீழே இருந்தது போலவே ஒரு ஹால். அதன் ஒரு மூலையில் டி.வி. இன்னும் கண்ணாடி போடப்படாத ஷோ கேஸ், அலங்காரப் பொம்மைகள். புதிய பேன். மடக்கு நாற்காலிகள்.
ஹாலை அடுத்து அதன் இரண்டு பக்கமும் நடை. ஒரு பக்க அறையில் இரட்டைக்கட்டில், காத்ரேஜ் டேபிள், சேர், டேபிள்மீது புத்தகங்கள். அந்த ரூமிலும் வார்ட்ரோப், ஒரு ஸ்டாண்ட். மற்றொரு பக்கம் பாத்ரூம், டாய்லெட், அதையொட்டி ஒரு சின்ன அறை. அங்கும் ஒரு கட்டில், சேர், டேபிள், புத்தகங்கள். பாடப்புத்தகங்கள்.
“இது பொண்ணோட ரூமா...?”
“ஆமா... எப்பிடியிருக்கு...?”
“பர்ஸ்ட் கிளாஸ்... நல்லா சுத்தமா வச்சிருக்கா...” என்றான் இவன். படியிறங்கிக் கீழே வந்தார்கள். அப்போதுதான் நுழைந்தார் மைத்துனர். “அடடே... வாங்க... வாங்க... வாங்க... எப்ப வந்தீங்க...?”
“வாங்க வாங்க கடந்தான்... காலைல வந்தேன்... எப்பிடியிருக்கீங்க...?”
“புண்ணியார்ச்சனக்கி வருவீங்க வருவீங்கன்னு பாத்துட்டேயிருந்தோம். நீங்க வராதது ஒண்ணுதா கொற... மத்தபடி எல்லாரும் வந்திருந்தாங்க...”
“லீவு கெடக்கிலீங்க... என்ன பண்றது...? எல்லா நல்லா நடந்துச்சுல்ல... அதா வேணும்...”
“ஆண்டவம் புண்ணியத்துல நல்லா முடிஞ்சுது. சரி... எப்பிடியிருக்கு வீடு...”
“நா என்னங்க சொல்ல... ஒங்களுக்குத் தெரியாததா... ஒண்ணொண்னையும் யோசனை பண்ணிச் செஞ்சிருக்கீங்கன்னு பாத்தவுடனே தெரியுதே... இந்த மாடிப்படிதான்... ஏன் இவ்வளவு உயரமா வச்சிட்டீங்க...?”
மைத்துனர் விவரிக்க ஆரம்பித்தார். முதலில் ‘ட’ வடிவத்தில் படிகள் அமைத்தது, அதனால் நிறைய இடம்பிடித்தது, மாடியில் சிட் அவுட் இல்லாமல் போனது, ஆகவே படிகளை இடித்து சுழல் வடிவத்தில் அமைத்தது, கூடுதலாக எட்டாயிரம் ரூபாய் செலவானது... இவன் உம் கொட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஏன் இன்னும் டிஸ்டம்பர் பூசலே...?” ஏதாவது கேட்க வேண்டுமே.
“அது... நீங்கதா சொன்னீங்களே - வாங்க வாங்க கடந்தான்னு... எஸ்டிமேட் போட்டது ஒண்ணரை. கடசீல பாத்தா ஒண்ணு எளுபதாயிருச்சு. பி.எப். லோன் போடக் கூடாதுன்னு நெனச்சிட்டிருந்தேன்... கடசீல போட வேண்டியதாயிருச்சு... அதனால டிஸ்டம்பர் வேலய நிறுத்திட்டேன். இன்னும் ரெண்டு மாசத்துல பளைய கடன் ஒண்ணு திரும்பி வரும். அதுல பெயின்டே அடிச்சுரலாம்னு இருக்கே... நீங்க என்ன சொல்றீங்க...? டிஸ்டெம்பர் அடிக்கலாமா? பெயின்ட் அடிக்கலாமா...?”
‘சிக்கலில் மாட்டிக் கொண்டேனா?’ என்று நினைத்துக் கொண்டான்.
“அதுல பாருங்க... பெயின்ட் அஞ்சு வருச வரைக்கு வரும்கிறாங்க. ஆனா டிஸ்டம்பர் ரெண்டு வருசந்தா வருமாம். ஆனா... காஸ்ட் பாத்திங்கன்னா டிஸ்டம்பர் அடிக்க ஆகறதப் போல அஞ்சு மடங்கு ஆகும் பெயின்ட் அடிக்க. என்னயக் கேட்டா டிஸ்டம்பர்தான் பெட்டர்னு நெனக்கிறேன்...” அவனுக்குத் தெரியும் அவர் பெயின்ட்தான் அடிக்கப் போகிறார் என்று.
அக்கா பிஸ்கட்டும் டீயைக் கொண்டு வந்து வைத்துவிட்டு சேர்ந்து கொண்டார். எதிர்பார்க்காமலேயே பேச்சு மறுபடியும் ‘வீட்டில்’ போய் நின்றது.
பழைய வீடு இடிக்கப்பட்டது, அஸ்திவாரம் நான்கடிக்குப் போடப்பட்டது, செங்கல் வாங்கி அடுக்கிய மாலையிலையே பலத்த மழை பெய்து செங்கற்களை நன்றாக நனைத்து விட்டது, அதனால் கட்டிடம் உறுதியாக உதவியது, மழையின் காரணமாக சிமெண்ட் மூட்டைகளை இறக்க முடியாமல் வேன் ஒருநாள் முழுக்க தெருவிலேயே நின்றிருந்தது, வீட்டு வேலை துவக்க நினைத்தபோது சொல்லி வைத்ததுபோல் மழை நின்று போனது, தண்ணீருக்குப் பிரச்சினையே இல்லாமல் போனது, மரம் வாங்கப் போன இடத்தில் ஆசாரி கமிஷன் அடிக்கப் பார்த்தது, பழக்கமான கடைக்காரர் ஆசாரியின் குட்டை உடைத்து விட்டது, வேறு ஆசாரி வைத்து கதவுகள் செய்தது, ஜன்னலுக்கு இரும்பு கிரில் டிசைனை அக்காவே வரைந்தது, அந்த டிசைன் இன்று நகரமெங்கும் விரும்பிச் செய்யப்படுவதாக ஆகிவிட்டது, கான்கிரீட் கூரைக்கு குடும்பமே மாறி மாறித் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டது, ஷோகேஸ் கண்ணாடிகளின் மீது இரும்புச் சட்டி விழுந்து அத்தனையும் நொறுங்கி விட்டது, அதனால் இன்னும் கண்ணாடிகள் மாட்டப்படாமல் இருப்பது, மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் என ஒவ்வொருவருக்கும் புண்ணியார்ச்சனையின் போது வேட்டி சேலை வைத்து ஐநூறு ரூபாயும் கொடுத்தது, விருந்துக்கே முந்நூறு பேருக்கு மேல் வந்திருந்தது.... அவன் எல்லாவற்றையும் உம் கொட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அக்காவின் பெண் வந்து விடுவாள். வாசலையே பார்த்தவாறிருந்தான்.
வந்தவள் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து மடியில் அமர்ந்து கொண்டாள். “உம்... மொதல்ல முகத்தக் களுவீட்டு வா” என்ற அக்காவின் கட்டளைக்குப் பணிந்து உள்ளே போனாள். வந்தவளுக்கு ஹார்லிக்ஸ் தயாராக இருந்தது. அவளும் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குடித்ததும் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருள்களை நீட்டினான். தாங்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டு ஹோம் ஒர்க் எழுத மாடிக்குப் போய்விட்டாள்.
*
வீட்டுக்குத் திரும்பும் போது அவன் மௌனமாக நடந்தான்.
“என்ன யோசன..? நம்ம எப்ப ஊடு கட்டுவோம்னா...?”
“ஊஹூம்...” அவன் தலையாட்டினான். “...நா எப்பவும் வீடு கட்ட மாட்டேன்... ஒனக்கு ஞாபகமிருக்கா...! முன்னயெல்லாம் அக்கா ஊட்டுக்குப் போனா... நேரா உள்ள போய் உக்காந்திருப்போம். சமயத்துல உள்ள போய் டப்பாவத் தொறந்து வேணுங்கறத எடுப்போம். நா ஏதாவது குறும்பாப் பேசுனா அக்கா `நறுக்'குனு குட்டும். பொண்ணு என்னப்பாத்ததும் உப்பு மூட்டை ஏறும்... இப்ப...! ஏதோ அன்னியமாட்டம் டிராயிங் ரூம்ல ஒக்காந்துட்டு வரணும்...''
“ஆமா... ஒங்களுக்கென்ன தெரியும்...? இங்க எல்லா எவ்வளவு முன்னேறிட்டாங்க... நீங்கதா இன்னும் பளய காலத்துல இருக்கீங்க... எப்பப் பாரு! ‘அப்ப எப்பிடியிருந்தது தெரியுமா... இப்பிடியிருந்தது தெரியுமா’ன்னு பளய கதைய உடுறது...” - மனைவி சொன்னாள்.
அவன் மௌனமாக நடந்தான். ‘அப்படியா... எனக்குத்தான் தெரியாது போயிற்றா... நான் பின்தங்கி விட்டேனா..?’
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, மௌனமாக நடப்பதைத் தவிர.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

அன்பு

இந்த நூற்றாண்டின் மிகத்தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளில் ஒன்று அன்பு.
அன்பாக இருப்பது அத்தனை கடினமான ஒன்றா என்ன ?
அன்பு என்றதுமே அதை செயல்ரீதியிலான ஒன்றாக குழப்பிக்கொள்வதால்தான் பிரச்சனையே.
உணர்வுரீதியில் யோசித்தால் அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே.
ஒரு டிராபிக் கான்ஸ்டபிள்மீது அன்புகாட்ட அவரிடம் சென்று கைகுலுக்கிவிட்டுத்தான் வரவேண்டுமா என்ன ?
நம் வாகனத்தால் அந்த இடத்தில் டிராபிக் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் அது அவருக்கான அன்பில்லையா ?
ஒரு பூவிற்கும் சிறுமியிடமோ பார்வையற்ற ஊதுபத்தி விற்கும் முதியவரிடமோ பத்துரூபாய்க்கு ஏதேனும் வாங்கிக்கொன்டால் அது அன்பின் பட்டியலில் சேராதா என்ன.
சாலையில் பயணிக்கும்போது சந்திலிருந்து சிரமத்துடன் சைக்கிள் மிதித்துவரும் ஒரு பெரியவர் கடந்து செல்லும்வரை சற்று பொறுமையாக இருக்கலாம்.
பாரம் நிரம்பிய கைவண்டி இழுத்துவரும் ஒரு தொழிலாளிக்கு கூட சென்று வண்டியிழுக்கத் தேவையில்லை.
அவர் செல்லும் வரை நாம் காத்திருக்கலாம்.
எதிரில் வரும் யாரென்றே தெரியாத ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காக மனதுக்குள் ஒரு நொடி சுகப்பிரசவமாகி தாயும் சேயும் நன்றாயிருக்கட்டும் என்று பிராத்திக்கலாம்.
முடிந்தவரை பஸ் கன்டக்டரிடம் சில்லறையாகத் தரலாம்.
பின்னால் வந்து விடாமல் ஹாரனடிக்கும் வண்டிக்கு பாவம் என்ன அவசரமோ என்று கொஞ்சம் வழிவிடலாம்.
மழையில் சாலையோரம் நடந்துசெல்பவருக்கு லிப்ட் கொடுக்காவிட்டாலும்கூட, தேங்கியிருக்கும் மழைநீர் அவர்மீது பட்டிவிடாதபடி சற்று மெதுவாகச் செல்லலாம்.
வீட்டுக்கு வரும் பிளம்பர் எலக்ட்ரீஷியன் தோட்டக்கார்களுக்கு பணிக்கு நடுவே ஒரு கோப்பைத் தேநீர் தரலாம்.
சாலையில் படுவேகத்தில் பைக்கில் செல்லும் இளைஞனின் வயதைப் புரிந்துகொண்டு சபிக்காமல் நல்லபடி வீடுபோய்ச்சேரட்டும் என்று வேண்டிக்கொள்ளலாம்.
கொஞ்சமாநஞ்சமா ஏகப்பட்ட வழிகளுண்டு. இவற்றையெல்லாம் அன்பென்று சொல்லமுடியாதா என்ன.

புதன், 19 நவம்பர், 2014

ஸ்போக்கன் இங்கிலீஷ்

எழுதியது: திரு. ஷாஜஹான்


திங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக 
வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல 
கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும். அப்பத்தாளும் ஒரு 
கல்யாணமும்,மா. நடராசன் சிறுகதைகள். பிப்ரவரியில் கோவை 
சென்றபோது விஜயாவில் வாங்கியது. வழக்கம்போல பஸ் 
வரும்வரை நின்றுகொண்டே ஸ்கிரிப்டை மீண்டும் ஒருமுறை 
மேலோட்டமாகப் பார்த்து திருத்தும் வேலையில் மூழ்கியிருந்தேன். 
நான்குபக்கங்கள் பார்த்து முடித்து ஐந்தாவது பக்கம் திருப்பும்போது
திடீரென்று காலில் செருப்புகளின் ஊடாக ஏதோ குத்தியது. 
அனிச்சையாக கண்கள் காலை நோக்கி,உடனே இடதுபக்கமும் திரும்பின. 
பார்வையிழந்த ஒரு பெண் தன் மடக்குக் குச்சியை தட்டியவாறே 
வந்திருக்கிறாள். குறுக்கே நின்றிருந்த என் கால் செருப்புக்குள் அது 
நுழைந்து விட்டது. தடங்கலில் திகைத்த பெண் சட்டென இடது கையை 
காற்றில் துளாவினாள். அவள் கையைப்பற்றி அமைதியடைச்செய்து 
வழிவிலகி அவளுக்கு வழிவிட்ட அந்தக் கணத்தில்தான் தோன்றியது
அவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று. அடுத்த கணமே 
நினைவும் வந்துவிட்டது. என்னைக் 
கடந்து கொண்டிருந்த அவளைப்பார்த்து சுனோ... ஏக் மினிட் ருகோ... ” 
(ஏம்மா... ஒரு நிமிஷம் நில்லு) என்றேன். அவள் கண்களைச் 
சுருக்கியவாறே குரல்வந்த திசை நோக்கி உத்தேசமாகத் திரும்பினாள். 
கைசே ஹோ...?” (எப்படி இருக்கே...)
ஹா.... டீக்.... ஆப் கோ....” (ஆங். நல்லா இருக்கேன்... நீங்க) என்ற
வார்த்தை பாதியில் நின்றுவிட்டது. அவளும் நினைவுபடுத்திக்கொள்ள
முனைகிறாள் என்று புரிந்தது. இதற்கு மேலும் இந்தி இங்கே 
தேவையில்லை. ] 
என்னம்மா இங்கிலீஷ் பேசக் கத்துகிட்டியா...?” என்றேன்.
சட்டெனப் புரிந்து கொண்டாள். சார்... நீங்களா....” கையை நீட்டினாள். 
நான் அவள் கையைப் பிடிக்க,கையைப்பிடித்து தடவிப்பார்த்தாள்... 
நான் நல்லா இருக்கேன் சார். சார்.... உங்க பேரு ஷாஜஹான்தானே....
ஆமாம். பரவாயில்லையேகரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே...
அவள் பெயர் நினைவில் இல்லாதது குறித்து வெட்கமும்எங்கே 
என் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறிவிடுவாளோ 
என்ற அச்சமும் ஒருங்கே எழுந்து அடங்கின. அவள் என் கைகளை 
இறுகப்பிடித்துக்கொண்டாள்.
எத்தனை வருசமாச்சு சார் உங்களை சந்திச்சு...
பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தவர்களுக்கு வேடிக்கைப்பொருள் 
ஆவது புரிந்தது. அவள் கையைப்பற்றி நடத்திச்சென்று ஓரமாக 
நின்றுகொண்டேன். எப்படி இருக்கீங்க சார்...?”
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேம்மா.... சட்டுனு 
 கண்டுபிடிச்சுட்டியே...
என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா சார்....
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுக்கு எளிமையான 
கேள்வி எனக்கு மிகவும் சிக்கலான கேள்வி. குரலை வைத்து
ஸ்பரிசத்தை வைத்து கண்டுபிடிக்கக் கூடியவளிடம் இப்படி 
ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது. தாமதமாகக் கிடைத்த ஞானம்.
அது சரி... ஏன் அங்கேயே பஸ் ஏறாம இங்கே வரைக்கும் நடந்து 
வந்திருக்கே...?”  அவள் படிக்கும் பார்வையற்றோர் பள்ளி சுமார் அரை
 கிமீ தூரத்தில் இருந்தது. பரபரப்பாக வாகனங்கள் விரையும் சாலையைக்
 கடந்துதான் இங்கே வர வேண்டும்.
கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருந்ததுஅதுக்குதான் வந்தேன்
 சார். இங்கேயும் அதே பஸ்தானே வரும். ஆமா நீங்க எங்கே போறீங்க 
சார்...? ”
நான் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போறதுக்காக நின்னுகிட்டு 
இருக்கேன். உன் பஸ் வரட்டும்அப்புறம் போயிக்கலாம்.
நான போயிக்குவேன் சார். உங்க பஸ் வந்தா நீங்க போங்க. 
அதுவரைக்கும் பேசிட்டிருப்போம்.
சரி. ஆமாஇங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டியா...? ”
எ லிட்டில்...” சிரிப்போடு சொன்ன அவள் கண்கள் என் 
நெற்றியையும் அதற்கு மேலான கூரையையும் பார்த்தவாறு 
அலைந்தன. பார்வை இழந்தவர்களின் கண்கள் பெரும்பாலும் 
உள்ளொடுங்கி இருப்பது ஏன் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்து 
அடங்கியது.
சரிஉன் பிரண்ட் எங்கே... அவனும் கத்துகிட்டானா...?”
“”ஓ... அந்த பத்மாஷைக் (திருட்டுப்பயலைக்) கேக்கறீங்களா... 
ரெண்டு பேருமே அப்பப்போ இங்கிலீஷ்ல பேசிக்குவோம். 
அப்ப என்கூட இங்கிலீஸ்ல பேசு பாக்கலாம். ஹவ் ஈஸ் லைஃப்...
சும்மா இருங்க சார்.... எனக்கு கூச்சமா இருக்கு.....” இவர்களும் 
கூச்சம் வரும்போது தலை குனிந்து கொள்வார்கள் என்பது அப்போதுதான்
 புரிந்தது எனக்கு.
* * *
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அது. அதுவும் ஒரு கோடை 
காலம். வழக்கம்போல மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் 
போய்விட்டிருந்தார்கள். வேலைகளுக்கு இடையே சிறு 
மாற்றத்துக்காக நண்பரின் போட்டோஸ்டாட் கடையில் சற்றுநேரம்
 அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். சட் சட் என்று தரையைத் 
தட்டியவாறே வந்தார்கள் இரண்டு பேர். இந்தப் பெண்ணும் அவளுடன்
 ஒரு பையனும். இவள் நன்றாக கொழுக் மொழுக் என்று இருந்தாள். 
பையன் என்னைப்போல மெலிதாக இருந்தான். அவள தோள்மீது 
கையைப்போட்டு பின்னே நின்றிருந்தான். என்ன வேண்டும் என்று 
அவர்களிடம் கேட்டார் கடைக்காரர் ராஜன். குரல் வரும் திசையை 
உத்தேசமாகக் கணிக்க முடியாத அவள் 120 கோணத்தில் தலையைத்
 திருப்பிப் பார்த்தவாறே பதிலளித்தாள்.
இங்க ஏதோ இங்கிலீஷ் சொல்லிக்குடுக்கிற இன்ஸ்டிடியூட் 
இருக்காமா... அதைத் தேடித்தான் வந்தோம்.
இங்கியா... இது பிரின்டிங் பிரஸ்... போட்டோகாபி கடை. 
இங்கேன்னா இந்தக் கடை இல்லை. இந்தப் பக்கம்தான்னு சொன்னாங்க.
இங்க அப்படி எதுவும் இல்லியே...
அப்போதுதான எனக்கு அவர்கள்மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. 
நான் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களை உட்காரவைத்துவிட்டு
 பக்கத்தில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.
ஆமாஎதுக்கு தேடறீங்க...? ”
எங்களுக்கு இங்கிலீஷ் கத்துக்கணும். பேசக் கத்துக்கணும்.
ஏம்மாஇங்கே இங்கிலீஷ் ஸ்கூல்னு வச்சிருக்கவங்களுக்கே 
இங்கிலீஷ் பேச வராது. நீ அவங்ககிட்டே கத்துக்கப் போறியா...?”
படிக்க எல்லாம் தெரியும் சார். பேசத்தான் கத்துக்கணும்.
இல்லம்மா... இங்கே கடை வச்சிருக்கவங்க எல்லாம் ஃபிராடுங்க. 
ஒரு மண்ணும் தெரியாது. இவங்ககிட்டே பணத்தைக்கொடுத்து 
வீணாக்கணுமா....? ”
வேற என்ன செய்யறது சார்...
பிரிட்டிஷ் கவுன்சில் போய் படிக்கலாமே... அவங்க ஸ்போக்கன் 
இங்கிலீஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அங்கே உங்களுக்கு ஏதாவது 
ஸ்பெஷல் வகுப்பு இருக்கான்னு விசாரிக்கலாம்.
அது எங்கே இருக்கு சார்....?” சட்டென முகங்களில் பிரகாசம் தென்பட்டது.
கனாட் பிளேஸ்.
மலர்ந்த முகம் அப்படியே வாடியது. அய்யோ... அவ்வளவு தூரமெல்லாம் 
முடியாது சார்.
எங்கிருந்து வர்றீங்க ரெண்டு பேரும்...? ”
நான் பிதம்புரா. இவன் நாங்க்லாய்.
பிதம்புரா குறைந்தது 25 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது. இரண்டு 
பஸ்கள் மாறினால்தான் இவர்களுடைய பள்ளிக்கு வர முடியும். 
நாங்க்லாய் அதற்கும் அப்பால். இன்னும் இரண்டு பஸ்களோ 
ரிக்சாவோ பிடித்தால்தான் போய்ச்சேர முடியும்.
என்னிடம் வேலை செய்து வந்த மைதிலியின் வீடு பிதம்புராவை 
அடுத்து இருந்தது. அவர் வீட்டுக்குப் போவதென்றால் ஒருநாள் முழுக்கப் 
போய்விடும் என்பதால் மிக அரிதாகவே செல்வேன். 
இவர்களோ இவ்வளவு தொலைவிலிருந்துதினமும் பஸ்மாறி பயணித்து 
பள்ளிக்கு வருகிறார்கள் என்பதே மலைப்பாக இருந்தது. இரண்டு 
பேரின்மீதும் ஏதோவொரு மரியாதை ஏற்பட்டது. 
என் வீட்டுக்கு இரண்டு கட்டிடங்கள் அடுத்து ஒரு வளாகத்தில் 
ஆங்கிலப்பள்ளி என்ற பலகையைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் 
பக்கத்தில் மற்றொன்றும் இருந்தது. ஆனால் அதன் பெயர்ப் பலகையே 
கோளாறாக இருந்தது. 
சரிம்மாஎனக்குத் தெரிஞ்சு இங்கே ரெண்டு இன்ஸ்டிடியூட் இருக்கு. 
ஒண்ணு ரொம்ப மோசமா இருக்கும்னு தோணுது. இன்னொண்ணு 
பத்தி எனக்குத் தெரியாது. ஆனா பேசிப் பார்க்கலாம்.
மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டது அவளுக்கு.
எங்கே சார்.... வழி சொல்லுங்க.
நேராப் போயி வலதுபக்கம் திரும்புங்க. ரெண்டாவது 
கட்டடம். பேஸ்மென்ட்ல இருக்கு.சொல்லும்போதே 
சொல்வதன் அபத்தம் புரிந்தது. சரிவாங்கநான் கூட்டிட்டுப் போய் 
காட்டறேன்.
நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.
அவள் என் தோளின்மீதும்பையன் அவள் 
தோளின்மீதும் கை வைத்துக்கொள்ளரயில்விளையாட்டுப் போல 
நாங்கள்  நடந்தோம். 
ஏம்மா... நல்லா விவரமா கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. 
அவசரப்பட்டு அட்வான்ஸ் ஏதும் குடுத்துடாதீங்க. சரியா...?”
சரி சார். 
பேஸ்மென்ட்டில் இருந்த ஆங்கிலப்பள்ளியை அடைந்தோம். 
எழுதுவதற்கான பலகை பொருத்திய பிளாஸ்டிக் நாற்காலிகள் 
நிறைந்த ஒரு அறை. அதற்கு ஒரு தடுப்பு. அதுதான் அலுவலகம்.
அங்கே இருந்த ஓர் இளைஞனிடம் அவர்களை அறிமுகப்படுத்தி 
வைத்தேன். இருவரையும் எதிரே இருந்த குஷன் பெஞ்சில் 
அமர்த்திவிட்டு, “சரிம்மாநீங்க பேசுங்க. நான் வரட்டுமா...” என்று 
புறப்பட்டேன்.
சார் சார்... அஞ்சு நிமிசம் நீங்களும் இருங்க சார்” என்றாள்.
தட்ட முடியவில்லை. நானும் அமர்ந்து கொண்டேன்.
அதற்குப்பிறகு அவள் நடத்திய குறுக்கு விசாரணை விவரமெல்லாம் 
சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் போகும். அண்மையில் ஐஏஎஸ் 
படிக்க வந்த மெத்தப்படித்த ஒரு பெண் கேனத்தனமாக 
முப்பதாயிரம் ரூபாயை ஒரு இன்ஸ்டிடியூட்டில் முதல்நாளே 
மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஒரு பைசாவுக்கும்கூட பயன்பெறாமல் 
போனது நினைவு வந்தது. அவளுடன் ஒப்பிடும்போது இவள் 
எவ்வளவோ மேல். அரைமணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.
வாரத்துக்கு எத்தனை வகுப்புகள்எவ்வளவு நேரம்பேட்ச் துவங்கி 
விட்டது என்றால் எப்படி எங்களை அதன் அளவுக்கு 
தேற்றுவீர்கள்என்னென்ன சொல்லித்தருவீர்கள்எங்களுக்கென 
தனி கவனம் செலுத்த முடியுமாகட்டணம் என்னகட்டணத்தில் 
எங்களுக்கெல்லாம் ஏன் சலுகை தரக்கூடாது....
ஆரம்பத்தில் வழக்கமான பந்தா காட்டிய பையன் திணறிப்போய் 
விட்டான். கடைசியில், “சார் வந்தபின் அவரிடம் பேசுங்கள். அவர் 
நாளை காலை வருவார்” என்று நழுவினான்.
ஆங்கிலப் பள்ளி குறித்து நான் சொன்னது சரிதான் என்று அவளுக்குப் 
புரிந்து விட்டது.
இருவரும் எழுந்தார்கள்நானும் எழுந்தேன்.
சாரி சார்... உங்களை ரொம்ப லேட் ஆக்கிட்டோம்” என்றாள்.
அதனால் என்ன பரவாயில்லை... சரிஉங்களை பஸ் ஸ்டாண்ட்ல 
விட்டுடறேன்.
இல்லை சார்வழி சொல்லுங்க நாங்க போயிக்குவோம்” என்றார்கள்.
இவ்வளவு தூரம் வந்தும் பிரயோசனம் இல்லாமப் 
போச்சேங்கறதுதான் கஷ்டமா இருக்கு” என்றான் பையன்.
கேட்கவே சங்கடமாக இருந்தது எனக்கு. ஏதாவது செய்ய வேண்டும் 
என்று தோன்றியது. ஏம்மா... நான் வேணும்னா பிரிட்டிஷ் கவுன்சில்ல 
கேட்டு ஏதாச்சும் சிடி இருக்கான்னு விசாரிக்கட்டுமா...
சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் பொறி தட்டியது.
ஓராண்டுக்கு முன்னால் எனக்கு ஒரு ஆர்டர் கிடைத்திருந்தது. 
ஸ்போக்கன் இங்கிலீஷ் குறுந்தகடு தயாரிக்கும் ஆர்டர் அது. 
Let Us Speak English என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை தயாரித்திருந்த 
நண்பர் ஒருவர்அதில் உள்ள உரையாடல்கள் அனைத்தையும் குரல்வளம் 
உள்ள நபர்களைப்பயன்படுத்தி பதிவு செய்து சிடி தயாரிக்கும் ஆர்டரை 
எனக்குக் கொடுத்தார். வானொலி நாடகம்சீரியல்கள் போன்ற பல 
வேலைகளில் பல ரிகார்டிங் ஸ்டுடியோக்களுடனும்பலமொழிக் 
கலைஞர்களுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததே காரணம். உழைத்த 
உழைப்புக்குப் பலனாக பணமும் கிடைத்ததுபதிவுகளின் தரமும் 
நன்றாகவே இருந்தது. அவருக்கு மாஸ்டர் சிடி தயாரித்துக் கொடுத்தபின்
அதன் பிரதி ஒன்றை நானும் வைத்துக்கொண்டேன். 
ஏம்மா... உங்க வீட்ல சிடி பிளேயர் இருக்கா...?”
ஓ இருக்கே சார்....
சரி. என்கிட்டே ஒரு சிடி இருக்கு. இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் 
புத்தகத்தோட இலவச இணைப்பா தயாரிச்சது. புத்தகம் என்கிட்டே 
இல்லை. இருந்தாலும் உங்களுக்குத் தேவையில்லை. இதை திரும்பத் 
திரும்ப கேட்டீங்கன்னா ஓரளவுக்கு உச்சரிப்பும் ஏற்ற இறக்கமும் 
கத்துக்கலாம். சிம்பிள் இங்கிலீஷ்தான். வேணும்னா சொல்லுங்கதர்றேன்.
இரண்டு பேரின் முகங்களிலும் தென்பட்ட மகிழ்ச்சியை இங்கே விவரிக்க 
முடியாது.
மீண்டும் ரயில் விளையாட்டு நடையோடு என் வீடு வந்தோம். 
இருவரையும் உட்கார வைத்துவிட்டு பல நூறு சிடிக்களில் 
தேடத்துவங்கினேன். காத்திருந்த அவர்களுக்கு வீட்டில் இருந்த 
முறுக்கும் பிஸ்கட்டும் தட்டுகளில் போட்டு இருவர் கையிலும் 
கொடுத்தேன். சாப்பிடுங்க. அதுக்குள்ள சிடி தேடி எடுக்கிறேன். அப்புறம் 
அதை காபி போடணும். அப்போ உங்களுக்கு காபியும் போட்டுத் தர்றேன்.
பிஸ்கட்டும் வாரத்தைகளும் அவர்களுடைய களைப்பைப் போக்குவதாக 
இருந்திருக்க வேண்டும். இருவரும் சிரித்துப் பேசிக்கொள்ள 
ஆரம்பித்தார்கள். 
சிடி கிடைத்துவிட்டது. கம்ப்யூட்டரில் பிரதி எடுக்க ஏற்பாடு 
செய்துவிட்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். 
பார்வையிழந்தவர்களை தூரத்திலிருந்து பார்ப்பதற்கும் பக்கத்தில் 
பார்க்கவும் வேறுபாடுகள் நிறையவே தெரிந்தது. 
தலையை முட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் 
இரண்டுபேரும். காதலர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது.
இருக்காது என்றும் தோன்றியது.
திடீரென செல்போன் மணி அடித்தது. அந்தப் பையன் தன் சட்டைப் 
பைக்குள் கைவிட்டு போனை எடுத்தான். விரல்களால் நெருடி 
பட்டனை அழுத்தி பேச ஆரம்பித்தான். 
அவள் அவன் தலையின் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் 
ஒரு நிமிடத்தில் பேசி முடித்தான். அவள் அவனுடைய 
சட்டையைப்பிடித்து இழுத்து அடித்தாள்உலுக்கினாள். பத்மாஷ்... 
(திருட்டுப்பயலே) போன் வாங்கியிருக்கேஎன்கிட்டே சொல்லவே 
இல்லேல்ல.. 
சொல்றேன் சொல்றேன் பொறு பொறு...” அவன் நெளிந்தான். 
அதான் சொல்றேன்னு சொல்றான்லவிடும்மா அவனை பாவம்” என்றேன்.
பாருங்க சார்... எத்தனை வருசமா பிரண்டா இருக்கான். போன் 
வாங்கினதை சொல்லணுமா இல்லியா... இவன்லாம் பிரண்டா சார்....?”
இருவரின் நட்புரிமைச் சண்டையைக் காண எனக்கு மகிழ்ச்சியாக 
இருந்தது. ஏதோ எழுபது எண்பது வயதுக் கிழவன் போலவும்
சண்டை போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப் பார்ப்பது போலவும் 
இருந்தது எனக்கு.
சரிசரிசொல்லுவான்... சொல்லுப்பா ஏன் அவளுக்கு சொல்லலை...?”
சார்நேத்திக்குதான் வாங்கித்தந்தாங்க. வரும்போது நான் வேற பஸ்
இவ வேற பஸ். ஸ்கூல்ல இதெல்லாம் பாக்கவே மாட்டோம். 
இன்னிக்கு பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் மிஸ் கால் குடுத்து 
சஸ்பென்சா சொல்லலாம்னு இருந்தேன். அவ்வளவுதான் சார்... 
இதுக்குப்போயி பத்மாஷ்ங்கறா சார்...
ஆமா சொல்லுவேன். நீ பத்மாஷ்பத்மாஷ்பத்மாஷ்...
மீண்டும் மூன்றுமுறை முதுகில் குத்தியபின் கோபம் தணிந்து 
அமைதியானாள் அவள். நான் தேநீர் தயாரிக்கப் போன நேரத்தில் 
அவன் அவளுக்கு மிஸ் கால் கொடுக்கஅவள் அந்த எண்ணை 
சேமித்துக்கொண்டாள். அவர்கள் எப்படி பெயர்களை சேமிக்கிறார்கள் 
என்று பார்க்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தது முடியவில்லை. 
கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நாகரிகம் இல்லை என்று 
கேட்காமல் விட்டுவிட்டேன்.
இரண்டு சிடிக்களையும் தரமான இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் 
போட்டு இருவருக்கும் கொடுத்தேன். தேநீ்ர் குடித்தபின் பஸ் 
ஏற்றிவிட்டேன். ஏற்றிவிட்ட பிறகுதான் நினைவு வந்தது
போன் நம்பர்கள் வாங்கி வைத்திருக்கலாமே என்று.

* * *

என்னம்மாநான் குடுத்த சிடி ஏதாவது உபயோகமா இருந்துச்சா...?”
என்ன சார் இப்படிக் கேக்கறீங்க... அதுல உள்ள எல்லாமே எங்க 
ரெண்டு பேருக்கும் இப்ப மனப்பாடம். நல்லா தயார் பண்ணிருக்காங்க.
அப்பிடியா...
ஆமா சார்கடையிலரயில்வே ஸ்டேஷன்லலாட்ஜிலசொந்தக்காரங்க 
வீட்டுலடீச்சர்கிட்டே... இப்படி ஒவ்வொரு இடத்திலும் 
எப்படிப் பேசணும்னு நல்லா சொல்லியிருக்கு. இங்கிலீசும் ஈசியா 
புரியறா மாதிரி இருக்கு. அதைக் கேட்டுக்கேட்டு நாங்க 
ஸ்கூல்ல தமாசா இங்கிலீஷ்ல பேசுவோம்.
எங்களைப் பாத்து மத்தவங்களும் தத்தக்கா பித்தக்கான்னு பேச 
ஆரம்பிச்சாங்க. அதனால எங்க மாஸ்டரும் இங்கிலீஷ்ல 
அப்பப்போ சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சாருஅப்புறம் 
மேடமும் ஒரு ஆர்டர் போட்டாங்க,எதையெல்லாம் இங்கிலீஷ்ல 
சொல்லிக்குடுக்க முடியுமோ அதுக்கெல்லாம் இந்தியில 
சொல்லக்கூடாதுன்னு... ரொம்ப தாங்க்ஸ் சார்.
சரி உன் பிரண்ட் எப்படி இருக்கான்?”
நல்லா இருக்கான் சார். இன்னிக்கும் என்கூட வான்னேன். அவன் 
ரொம்ப டயர்டா இருக்கு நான் போறேன்னு போயிட்டான். 
அப்புறம் சார்நாங்க ரெண்டுபேரும் பஸ்சுல போகும்போது பக்கம் 
பக்கமா உக்கார இடம் கிடைச்சா அந்த சிடியில இருக்கிற இரண்டு பேர் 
மாதிரி பேசிப்பாப்போம்....
கேட்பதற்குத் திருப்தியாக இருந்தது. அவளுக்கான பஸ் 
வந்துகொண்டிருந்தது.
சரி பஸ் வந்துருச்சு... வா வா...” கைபிடித்து நடத்திச்சென்று 
அவளை ஏற்றிவிட்டு என் பஸ்சுக்காகக் காத்திருக்கும்போதுதான் 
தோன்றியதுஇன்றைக்கும் போன் நம்பரை வாங்காமல் விட்டு விட்டேன் 
என்று. எனக்கான பஸ்சில் ஏறி நடராசனின் புத்தகத்தைத் திருப்பினேன். 
கோவைத் தமிழுக்காகவே வாங்கிய புத்தகம். ஒரு 
பக்கம்கூட மேலே போக முடியவில்லைஎழுத்துகளைத் தடவிப் 
பார்த்தேன். சொரசொரப்பும்கூட தட்டுப்படவில்லை. புத்தகத்தை 
மூடிவிட்டு வெளியே பார்க்கத் துவங்கினேன்.