ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பிறந்த ஊர்



ஏனோ தெரியவில்லை
துள்ளி விளையாடிய இடந்தான்
மூலை முடுக்கெல்லாம்
அத்துப்படி தான்
இருந்தாலும் தெரியவில்லை
மனதங்கே ஒட்டவிலை !
பிழைப்பிற்காக வேரோடு
வந்ததாலா?
உற்றதுணை, கற்றதுணை
எல்லாம் இருந்தாலும்
இரத்ததுணை இல்லாமல்
போனதாலா?
பிறந்து வளர்ந்த இடம்
நாற்றுக்கேது சொந்தம் ?
பிழைக்க பெயர்ந்த பின்பு
மண்ணுக்கு என்ன பந்தம்!!

அந்த நாட்கள்



திரும்ப வருமா அந்த 
இனிய நாட்கள் !
கவலைகள் ஏதுமின்றி
காற்றைப் போல
சுற்றித்திரிந்த அந்த
கனவு நாட்கள் !
விலைவாசி ஏறினாலும்
குறையாது விளையாட்டு !
வயிற்றுக்கே இல்லையாயினும்
வறுமை தெரியாது !
கட்டில் எதற்கு
கட்டாந்தரை தொட்டில் இருக்க !
எண்ணச் சிதைவில்லை
ஏமாற்றத் தேவையில்லை !
வண்ணமாய் உடுத்தினோம்
உண்ணாமல் சுகங்கண்டோம் !
வாழ்க்கை வாழ்வதற்கே என்று 
வாழ்ந்து தீர்த்து விட்டோம் !
இறந்து போன நாட்களின்
கனவுகளாய் மாறின எல்லாமே !
இளஞ்சூரியன் உச்சிக்கு வந்து
சுட்டது போலானது எல்லாம் !
அந்தக்காலம் இறந்து போனது
மிஞ்சியது நிழலான நினைவுகளே !
நிகழ்காலத்தை விட இறந்தகாலம்
இனிமையானது தான் !
ஏனென்றால் அது திரும்பி
வராதது என்பதாலோ !
திரும்ப வருமா அந்த 
இனிய நாட்கள் !


என் வரிகள்



உள்ளத்தில் சோகம்
உதட்டில் புன்னகை
இதுதான் மனித வாழ்க்கை
ஏன் மனிதா !
ஏனிந்த ஆட்டம்
எண்ணக்கூடிய நாட்களே 
உன் வாழ்க்கை......
நீ செய்தது என்ன?
நெஞ்சில் வஞ்சத்தோடு 
கண்ணில் குரோதத்தோடு
எல்லாம் உனது என்ற
எண்ணத்தோடு
நீ ஆடும் ஆட்டம் எதற்கு?
புதைத்தால் புல் முளைக்க 
மறையும் உன் நினைவு!
எரித்தால் சாம்பல் ஆகி
கறையும் உன் கனவு!
இருக்கும் காலத்தில்
நீ விட்டுக்கொடு.....
நீ இறந்த பின்னே
உலகம் உனக்கு கொடுக்கும் 
நற்புகழை!

சனி, 3 செப்டம்பர், 2011

அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் ஒரு பாடல்


ஆவீன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியால் மெய்நோக அடிமை சாக
மாவீரம் காயுமென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துகொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத் 
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துயர அனுபவமாம் - கற்பனை தான் !

1. பசு கன்றீன்றது 
2. அடை மழை பெய்தது 
3. வீடு இடிந்து விழுந்தது
4. மனைவிக்கு நோய்
5.வேலைக்காரன் செத்தானாம்
6. வயல் ஈரம் காயும் முன் விதைக்க ஓடினான்
7. வழியில் கடன்காரன் மடக்கினானாம் 
8. எதிரே சாவு செய்தி வந்ததாம் 
9. அப்போது எதிர்பாராது விருந்தாளிகள் வந்தார்களாம்
10.அவனையே சர்ப்பம் தீண்டி விட்டதாம்
11.அதிகாரிகள் நிலவரிக்கு வந்தார்களாம்
12.அப்போது குருக்கள் தட்சணை கொடு என்றாராம்


பாவம் எவ்வளவு துயரம் ஒருவனுக்கு. என்ன செய்வான். சிரிப்பதை தவிர

- அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் படித்தது.
நன்றியுடன் நீ. சங்கர்


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

திருக்குறளின் பெருமைகள்


உலகத்திருமறையை உவகையுடன் படிப்பவர்க்கு
  உணர்வதனைதுமே நீதியே !
உள்ளதில் உண்மைகள் மலர்வதற்கு
உரிய பெட்டகமே திருக்குறளே !

தினம் தினம் திரித்து கூறுவோரும்
திருக்குறளை படித்தாரானால் - நீதியின்
திசைநோக்கி நிச்சயம் நடந்திடுவர்
திரித்தது தவறென திருந்தியும் வாழ்ந்திடுவர் !

அன்னை தந்தை கடவுளென
அனைவர்க்கும் கூருகிறார் ஆதியிலே !
அறம்பொருளே இன்பமென
அனைத்தையும் கூருகிறார் மீதியிலே !

கூறியுள்ள குறலனைத்தும் குன்றாத
குணக்குன்றாய் கூறுவதும் நீதிகளே !
குணத்தில் உயர்ந்தோரை குலதில் சிறந்தோரை
கோமகனாய் காட்டுகிறார் சாதியிலே !

தனித்திருந்தால் தவசியென்றும்
விழித்திருந்தால் வீரனென்றும்
பசித்திருந்தால் பண்பாளனென்றும்
பலநீதி கூறுகிறார் திருமறையில் !

இனிய சொல்லை எடுத்தாண்டு
வலிய சொல்லை வழக்கொழித்து
புதிய சொல்லை உலகளித்து
புதுவுலகம் காணுகிறார் பொதுமறையில் !

தீமையில்லா வாய்மை வேண்டும்
தீதுயில்லா செய்கை வேண்டும்
வன்மையில்ல வாழ்க்கை வேண்டும்
வறியவர்க்கு வழங்க வேண்டும் !

அடக்கத்துடன் வாழ வேண்டும்
ஆன்றோறை ஒழுக வேண்டும்
ஒழுக்கத்தினால் மேன்மை வேண்டும்
உள்ளத்தில் உயர்வு வேண்டும் !

நன்றி மறவாமல் வாழவேண்டும்
நன்றல்லதை அன்றே மறக்க வேண்டும்
நல்ல நூல்களையே படிக்க வேண்டும்
நல்லறமே இல்லறத்தில் சிறக்க வேண்டும் !

முறைசெய்து காப்பாற்றும் மன்னன் வேண்டும்
முறையற்ற மாக்களை களைய வேண்டும்
முறையானவழியில் முந்த வேண்டும்
முன்னோர் வாக்கினை காக்க வேண்டும் !

மனைதக்க மனைவி அமைய வேண்டும்
மகனுக்கு தந்தை வழிகாட்ட வேண்டும்
தந்தைக்கு தவமகனாய் அமையவேண்டும்
தன்மானம் உள்ளவனாய் வாழ வேண்டும் !

பொய்யாமையற்று வாழ வேண்டும்
புகழ்பெறவே பிறவி அமையவேண்டும்
புழுக்கமில்ல மனம் இருக்க வேண்டும்
புள்ளறிவாளர் நட்பை விளக்க வேண்டும் !

உலகத்தோடு உவந்து வாழ வேண்டும்
உண்மையுடன் உபதேசம் செய்யவேண்டும்
உழவர்க்கே முன்னுரிமை வழங்க வேண்டும்
ஊருக்கு பழுமரமாய் உதவ வேண்டும் !

இல்லிக்கும் மல்லிக்கும் சொல்லிற்கும்
அரசர்க்கும் அமைச்சர்க்கும்
அனைவர்க்கும் அடுக்கடுக்காய் நீதிகளை
அழகுபட கூறுகிறார் திருக்குறளில் !

உலகப் பொதுமறையென
உண்மையான நீதிகளை
ஒவ்வொரு குறளிலும் எடுத்துக்கூறி
ஒளிவிளக்காய் அமைந்துள்ளது திருக்குறளே !



மேலே கூறியுள்ள வரிகள் நான் எழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கியமன்றத்தில் நான் பேசுவதற்காக எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த ஆசிரியர் திரு. நாராயணன் அவர்கள் தன்னுடைய நண்பரும் என் வகுப்பு தோழன் கோபிநாதனின்  தந்தை திரு. பாண்டுரங்கன் என்பவரிடம் சொல்லி எழுதி தந்தது. வருடம் 1986-1987. இவ்வளவு காலம் பாதுகாத்து இப்பொழுது வலைதளத்தில் ஏற்றியுள்ளேன்.                              நன்றியுடன் நீ.சங்கர்