வியாழன், 4 ஜனவரி, 2018

வாய்ப்புகள்

ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி, அவரிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார்... "இளைஞனே நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன்" , என்று சொல்ல... அவனும் ஒத்துக் கொண்டான். காளைகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு காளை வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த காளை சீறியபடி பாய்ந்து வந்தது.அதைப் பார்த்த இளைஞன், வாலைப் பிடிக்கத் தயங்கி அடுத்த காளையைப் பார்க்கலாம் என்று விட்டு விட்டான்..

சிறிது நேரத்தில் அதை விட பெரிய காளை வெளியே ஓடி வந்தது.பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு, இதுவும் வேண்டாம், மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த காளை அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த காளையைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது..அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான காளைஎலும்பும் தோலுமாய், பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது. இந்த காளையை விடக்கூடாது.இதைத்தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான். காளை அருகில் வந்ததும், ஒரு தாவு தாவு காளையின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான்.

ஆம்....அந்த காளைக்கு வாலே இல்லை !!

நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது, பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்).. அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது..

ஆகவே நண்பர்களே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...

#படித்ததும்_ரசித்ததும்

புதன், 3 ஜனவரி, 2018

*குட்டி கதை - அமைதி*


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. *இந்த ஓவியத்தை வரைந்தது யார்?*
சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?. மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!
சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.
*சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி

#படித்ததும்_ரசித்ததும்

சுறு சுறுப்பாக ஓடிக் கொன்டே இரு!!!!


குட்டி கதை
***************
பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகெடுத்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகிவிடும்.
அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.
மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !
இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !
ஆயினும், அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !
யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.
*வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கை சுவைக்க தேமேயென்று கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !
*சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்!

#படித்து_ரசித்தது

செவ்வாய், 2 ஜனவரி, 2018

கடவுள்..

கடவுள்..

ஏகாந்த பெருவெளியில் இருப்பதாய்
உன்னை தேடுது மனசு..
உள்ளத்தில் உள்ளதை புரியாமல் வைக்கிறது
அறியாமை வேர்..
கள்ளமில்லா குழந்தை புன்னகையில்
உணர்வது பேருண்மை..
ஏழையின் சிரிப்பினில் ஒருவர்
கண்டார் உன்னை..
எங்கும் நிறைந்திருக்கும் காற்றாய்..
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியாய்..
எங்கும் நிறைந்திருக்கும் ஒலியாய்..
எங்கும் நிறைந்திருக்கும் திருவாய்..
மெய்யாய் நிறைந்திருப்பதால்
மெய்யின் கண் தன்னையே காண்பதில்லையோ?
எதோ எப்படியோ..
இருப்பதாய் இருந்தால் இருந்துவிடு..
இருந்தால் நலமே என்பதும் மகிழ்வே..
சுயநலக்காரர் கூட்டுக்குள்
சுதந்திரம் மறந்த கிளியாய்
சதிராட வேண்டாமே..


#சங்கர்_நீதிமாணிக்கம்

சிவப்பு

வீதி எல்லாம்
வெள்ளையடித்து துடைத்து
மழை வெள்ளம்
கழுவி சுத்தம் செய்ததாய்
பளிச்சென
விளக்கொளியில் மின்ன
சமத்துவம் இல்லா வெளியில்
தனித்து நிற்கும் வெறுமையாய்
ஏக்கம் தீரா மனதின்
ஏகாந்த சின்னமாய்
சிவப்பில் நனைந்த குடை..


திங்கள், 1 ஜனவரி, 2018

தமிழே..

தமிழே..

எந்தன் மொழியாம் தமிழால் நான்
சிறகில்லாமல் வானில் பறக்கிறேன்
அதன் சொல்லும் பொருளும்
வேராய் இருக்கிறது பல மொழிகளுக்கு...
குறைவில்லை எம்தமிழில் பழமொழிகளுக்கும்..
சின்ன குழந்தையாய் பிடித்துக்கொள்ளும்..
கொஞ்சும் குமரியாய் பற்றிக்கொள்ளும்..
தாயாய் இருந்து தாலாட்டும்..
தினமும் என்னை சீராட்டும்..
செந்தமிழே என் செல்லத்தமிழே
வெல்லமென இனிக்கும் நறுஞ்சுவையே..
நாவூறும் உன்னை நினைக்கையிலே..
பாவாகும் உன்னை சுவைக்கையிலே..
எம்மொழியே
என்றும் இளைமை குன்றா மூத்தவளே..
உன்னை படித்தவர்க்கு செருக்குண்டு
எனில்..
உன்னில் பிறந்தோருக்கு??


#சங்கர்_நீதிமாணிக்கம்

வருக வருக புத்தாண்டே...

வருக வருக புத்தாண்டே...
*************************************

வண்ணங்கள் படைப்பாயென
      நம்பிக்கை கொண்டோம்..
            வருக வருக புத்தாண்டே..

இனிமை தருவாயென
      உள்ளத்தில் இன்பம் கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

புதுமை படைப்பாயென
      அதியாவல் கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

துன்பம் துடைப்பாயென
      துவளா மனம் கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

வளம்பல வாரித்தருவாயென
      வழிநின்று எதிர்க்கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

மாற்றங்கள் வருமெனவே
      உறுதி கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

ஏற்றங்கள் இனிதானென
      எதிர்பார்ப்பு கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

இல்லாமை எல்லாம் நீங்கி
      எல்லோரும் எல்லாம் பெற
            வருக வருக புத்தாண்டே..

எள்ளாமை ஏமாற்றம்
      இல்லாமல் நலம் வாழ
            வருக வருக புத்தாண்டே..


நல்லோர்கள் நலம்வாழ
      பொல்லர்கள் மனம் மாற
            வருக வருக புத்தாண்டே..

அன்போடு பாசம் கலந்து
      நட்போடு நேசம் கொண்டோம்
            வருக வருக புத்தாண்டே..

#சங்கர்_நீதிமாணிக்கம்