வியாழன், 31 டிசம்பர், 2015

திரும்பிப் பார்க்கிறேன்


முன்னோக்கிய பயணத்தில்
கொஞ்சம் திரும்பிப்பார்ப்பதும்
சுகமானதாய் தான் இருக்கிறது....
எத்தனை மேடுபள்ளங்களை தாண்டி..
எத்தனை வீழ்ச்சிகளையும் ஏற்றங்களையும் கண்டு...

உருண்டோடும் காலத்தோடு
ஓடிக்கடக்கும் நேரத்தில்
திரும்பிப்பார்த்தல் கொஞ்சம்
இளைப்பாறுதல் தான்....

ஏற்றத்தில் கொக்கரிக்காத
மனத்தால் தானே வீழ்ச்சியில்
கொஞ்சம் நிதானிக்க முடிகிறது..

என் வாழ்க்கையில் கடந்த தூரத்தில்
கொஞ்சம் விட்டுக்கொடுத்தலோடும்...
கொஞ்சம் அறியாமையாலும்...
கொஞ்சம் பயத்தோடும்...
நிறைந்த பாசத்தோடும்...
நெஞ்சில் நிம்மதியோடும்...
நான் கடந்துவந்தபோதும்...

இல்லக்கின் உச்சியினை
இன்னும் அடையாமல்
கும்பலில் ஒருவனாக
என்னை தொலைத்துவிட்டிருக்கிறேன்..

முடிந்துபோன ஓட்டத்தில்
எனது வீச்சு குறைவாகவே உள்ளது...
சிறிது சங்கடமே..
ஆனால்....தோல்வியில்லை...

பூஜ்ஜியத்தில் தொடங்கிய ஓட்டம்

ஒன்றிலாவது நிற்கிறதே...


செவ்வாய், 29 டிசம்பர், 2015

துள்ளாத மனமும் துள்ளும்...


சோர்ந்திருக்கும் வேளையிலே
சொர்க்கம் தரும்
மழலைமொழி கொஞ்சம்
காதில்விழ....
துள்ளாத மனமும் துள்ளும்...
நேத்திருந்து பூத்திருந்த
காதல்மலர்
கன்னியவள் கண்களிலே
பூத்துவிட...
துள்ளாத மனமும் துள்ளும்...
பசித்திருக்கும் வேளையிலே
ருசித்திருக்கும்
விருந்தொன்று பந்தியிலே
வந்திருக்க..
துள்ளாத மனமும் துள்ளும்...

சனி, 26 டிசம்பர், 2015

தனிமை

தனிமை இனிமை..
நிலவோடு கொஞ்சம் தனிமை..
பறவையோடு சேர்ந்த தனிமை..
கூடவே..
சில்லென்று வீசும் காற்று..
சலசலக்கும் ஆறு..
தலையாட்டும் மரங்கள்...
முன்னிரவை மூடும் இரவு..
ம்ம்.. தனிமை தான்...
நான் யாருமற்ற வெளியில்
தனித்தே இருக்கிறேன்...
ஏனோ..
எல்லாம் ரசிச்துக்கொண்டு..
என் தனிமையில் நான் தனியே..




மனைவி


இறைவன் கொடுத்த வரம் தான்
இதில் சொல்ல ஏதுமில்லை..

நாற்றாகி வளர்ந்து
செடியாகி ஊட்டம் தந்து
ஓருயிராய் கலந்து
உயிர்கவிதை வரைவது
அவளன்றி யாருளர் இம்மண்ணில்..

கண்ணுக்கு இமையாகி..
கருவுக்கு தாயாகி..
எண்ணத்தில் வளம் சேர்க்கும்
தெய்வத்தின் வரம் தான்..

அமுதூட்டும் தாய் அவள்தான்
அழகூட்டும் சேய் அவள்தான்
நம் மதிப்புகூட்டி ஆண்மகனாய்
வாழ வைப்பதும் அவள்தானே..

சொல்லச்சொல்ல நெகிழ்ந்திடும்..
செய்கையால் வாழ்ந்திடும்
தர்மத்தின் வழிவாழும்
தாய்மையின் மறுவுருவம்..

மகளாக, தோழியாக
சோதரியாய், உருவங்கொண்டு
வாழ்ந்தாலும் அவள் மனது
கொண்டவனின் நலம் தேடும்..

சொல்லொன்னா துயரதிடை
அன்போடு காத்துஎன்றும்
ஒருகூட்டுப்பறவையாக
பார்த்திருக்கும் தேவமகள்..

வெள்ளி, 25 டிசம்பர், 2015

புரிதலின் வாழ்க்கை


வெள்ளைக்காகிதத்தில் ஒரு கறுப்புப் புள்ளியாய் தனது செய்கை ஆனது குறித்து மிகுந்த கலக்கத்தில் இருந்தால் வனஜா...
ஒரு சிறிய புரிதல் இல்லாத தருணத்தில் ஏற்பட்ட பிறழ்ச்சியில் நடந்த தவறுக்காக யாரை குறை சொல்லி வருந்துவது. போனது போகட்டும் என்று மன்னிக்கும் மனம் தானே எல்லா காயங்களுக்கும் மருந்திடுவது.
“எல்லாம் சரியாகிடும் அம்மு..நீ ஒன்னும் வருத்தப்படாத” என்றாம் அன்பு.
அன்பு தான் என்றும் அன்பானவனே.. வனஜா கொஞ்சம் அவசரம், ஆத்திரம், ஆதங்கம் கொண்டாலும் அடிப்படையில் அன்பே உருவானவள். இப்படி இருந்தாலும் இவர்கள் குடும்ப வாழ்வில் எந்த குறையும் இல்லை.
“ம்ம்ம்.. இருந்தாலும் அப்படி ஆகி இருக்கக்கூடாது பா... என்னவோ தெரியல.. கொஞ்சம் அவரசப்பட்டுடேன்.” “இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு” என்ற வனஜாவின் சொல்லுக்கு
“சரி விடு அம்மு” இது எல்லாம் எல்லோருக்கும் எதோ ஒரு கட்டத்தில் நடப்பது தானே” என்றன் வாழ்க்கையின் பாதையில் அசைந்தாடி செல்லும் பூங்காற்றாய்.
“ம்ம். என்ன இருந்தாலும் நா அவன பார்த்தாலும் சும்மா வந்திருக்கணும். அவன பார்த்து பேசி.. இப்ப உங்களுக்கும் சங்கடம்”ம்ம்ம்.. விதின்னு ஒன்னு இருக்கேன்னு அப்பப்ப இப்படி எதாவது ஒன்னு நடந்து காட்டிட்டு போகுது..” வனஜாவின் வார்த்தையில் இருந்த உண்மை அன்புக்கும் புரிந்தது...
“சரி விடும்மா..”
“நீ எதோ கூட கல்லூரியில படிச்ச பையன். ரொம்ப நல்ல நண்பன்னு சொன்ன. ஆனா அவன் மனச நாம தெரிஞ்சா இருக்க முடியும்” அன்புவின் வார்த்தை கொஞ்சம் தேற்றினாலும்..
வனஜா அவள் கல்லூரித் தோழன் விசுவை இன்று கணவனோடு கடைவீதி செல்லுமிடத்தில் எதேச்சையாக சந்திக்க..விசு சொன்ன செய்தி தான் இங்கே இவர்களுக்குள் பேசப்படும் பொருளாகிப் போனது.
விசுவும் அனிதாவும் வனஜாவுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அத்தருணத்தில் அனிதாவின் காதலை ஏற்கலாமா வேண்டாமா என்று விசு வனஜாவிடம் கேட்க.. அவளோ அனிதாவின் பணத்திமிரையும் , யாரையும் மதிக்காத உண்மை குணத்தையும் மறைத்து நடுத்தர குடும்பத்தின் விசுவிடம் உனக்கு ஏற்றவள் என்று சொல்லி அவர்களை காதலர்களாக மாற்றியதும் கல்லூரி காலத்திற்கு பின் தொடர்பற்ற நிலையில் விசு, அனிதா காதல் கைக்கூடி ஒரு குழப்பமான நாளில் அனிதா தன் வாழ்வை குழந்தையோடு முடித்துக்கொண்டதும், இன்று விசு சிறையில் இருந்து மீண்டு ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதும் குறிந்து நொந்து சொன்னது தான் இப்போது வனஜாவின் மனதை வருத்தும் காரணியாய்..
“விடு அம்மு.. ஒரு புரிதல் என்பது பணத்தின் அடிப்படையிலோ, கொண்டாட்டங்களின் கலப்புகளிலோ இல்லை. உண்மையான அன்பில் தான் உண்மையான காதலில் தான் இருக்கிறது”

வியாழன், 24 டிசம்பர், 2015

கல்வி....


ஆறறிவு மிருகத்தை சீராக்கி
ஐந்தறிவின் மேம்பட்ட மானுடமாய்
மண்ணின் மேல் உலவவிட்டது
கல்வி..

கோவில் படிகளிலும்
திண்ணை வெளிகளிலும்..
தேங்கி தவித்திட்ட
கல்வி..

படிக்காத மேதை க்ண்பட்டுத்
தமிழகத்தில் தழைதோங்கி
செழித்திட்ட மாண்புடைய
கல்வி..

எட்டாதோர்க்கும்
ஏழை பாழையென்று ஒதுக்கி
கிட்டாதோர்க்கும் கிடைத்திட்ட
கல்வி...

சமமென்று எல்லொரும்
சடுதியில் உணரவைத்து
சாதிகளுக்கு சவுக்கடி தந்து
கொஞ்சம் சந்தோசப்பட்ட
கல்வி..

கல்வி கடைச்சரக்கல்ல
காசுள்ளோர் மட்டும் பெறவென்ற கூற்றைப்
பொய்யாக்கி கூவி விற்கப்படுதின்று
கல்வி..

இன்று..
தாயில்லா "செல்வ"பிள்ளையாகி
பகட்டுகளின் கைசிக்கி
பரிதவிக்குது எளியோர்க்கும்

ஏற்றந்தந்த எம் கல்வி..

"complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம்

ஒரு கூட்டத்தில், ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது ஒருவர் கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".
அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".
அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

புதன், 23 டிசம்பர், 2015

புதுக்குறள்

முகம்பார்க்க தவறுவா ருண்டு தவறார்
நாளுமிந் தமுகநூல் புக...

முகமறியார் முழுஆகம மறியார் என்றும்
ஓங்கிவளர் முகநூநட் பென்பார்

கேட்டுங்கோடுக்காத உள்ளத்தை மாற்றி கேளாமல்
அள்ளித்தர வைத்தபெரு மழை 

ஆக்கமும் ஊக்கமும் கேடில்லை நோக்குங்கால்
உழையாதார் நாட்களே கேடு.

மோகனப் புன்னகையு மயக்கும் விழிகளுமே
ரதிபதி சன்னதி  வாசல்..

மழையோடும் ஆறுமண் மேடுஆக நீரோடு
போகுமே நீகட்டிய வீடு.

பொருளில்லா வாழ்வேது புகழ்விரும்ப மனமேது
இம்மண்ணில் வாழும் உயிர்க்கு.

அடுக்களையில் உதவிப்பின் னணைக்கையிலே இதழோற்றி
உயிர்கலப்பான் உள்ளத்தின் நாயகன்.

உடுக்கைக்களையா உள்ளத்தன் பால்லெற்றந் தறுமே
உண்மை காதல் பூவினிலே.

கேடென்று வீழ்கையிலே கேளாது கரம்தருமே
மேலான உயிர் நட்பு..


செவ்வாய், 22 டிசம்பர், 2015

தொலைந்து போனேன்



பொங்கிப் பாய்ந்தது 
பெருவெள்ளம்..

பிரவாகம் எடுத்தது
புதுவெள்ளம்...

அச்சமே அறியாதார்க்கு
அச்சத்தையும்..

பசியே அறியாதர்க்கு
பசியையும்..

அண்டை வீட்டாரையே அறியாதார்க்கு
அநேகரையும்...

யாரும் கேளாமல் தருவதற்கு
பரந்தமனதையும்..

கேட்டுப் பெறுவதற்கு எளிமையையும்..
அடையாளம் காட்டிச்சென்றது...

எங்கிருந்தது இவ்வளவு நாட்கள்..
உயிர்க்கு உயிர்க்காட்டும் பரிவு பிறந்து

மண்ணின் பொன்னின் பற்று..
நிலையாமை என்று புரிந்தது..

வெறும் மனிதர்களாய் ஓடியவர்கள்
மனிதநேய மலர்களாய்
ஓரிரவில் பூத்தனர்..

மழையாய் பெய்த நாளில்
மலர்ந்த மனிதத்தில்
நான் தொலைந்து போனேன்




ஞாயிறு, 20 டிசம்பர், 2015

காதல் வாழ்க்கை



யுகங்கள் கடந்து சுற்றும் பூமி பந்தாய்..
காலங்கள் கடந்தாலும் வாழும் 
காதல் தான் வாழ்க்கை..

நேசத்தின் பிணைப்பும்
பாசத்தின் பிணைப்பும்
ஒன்றிணைந்த தாம்பத்திய
புரிதலே இனிய வாழ்க்கை....

ஊடல்களும் கூடல்களும்
வேதனைகளும் சோதனைகளும்
இன்பத்தை கூட்டியும்
உறவுகளை வலுவாக்கியும்
செல்லும் நிகழ்வு ஊக்கிகள்..

புரியவைத்தும் புரிந்துகொண்டும்
விட்டுத்தந்தும் பெற்றுக்கொண்டும்
வாழும் விழுமியமே வாழ்க்கை..

முளைக்கும் வேறுபாடு களையாமல்
எரிக்கும் வேதனைகள் பகிறாமல்
மனதைப்பூட்டி பிரிதல் தேட
வாழ்க்கை வியாபார ஒப்பந்தமல்ல..

வாழ்க்கை பெண்ணோடும் ஆணோடும்
முடிவதல்ல ..
குடும்பத்தால் தழைத்து நம்மை
என்றும் வாழவைப்பது..

மனைவிக்கு கணவன் உருகுவதும்
கணவனுக்கு மனைவி துணையாவதும்
இனிய வாழ்க்கை..

காதலாகி கசிந்துருகி செல்லும்
வாழ்க்கைப் பாதையில் துணையிழப்பு...
அந்தரத்தில் பறக்கும் பட்டத்தின்
நூலறுந்த நிலையாகும்..
பட்டம் பரிதவித்து இறங்குமிடம் தெரியாது..
நூலோ அமைதியாக தன் கூடடையும்..

பெண்மையெனும் பெருமருந்து நூலாக..
பெண்ணுக்கு கட்டுப்பட்ட பட்டமே ஆணாவான்..


வெள்ளி, 18 டிசம்பர், 2015

வா செல்லமே..


அன்பு வழியாகி
ஆசைமொழியாகி..
நேச சிறகடித்து
காதல் வானிலே பறக்க
வா செல்லமே..

விழியாலே தொடுத்த
நம் விளையாட்டு யுத்தத்தை
முடித்துக்கொள்வோம்..
வா செல்லமே..

விரல்பிடித்துக்கொஞ்சும்
உன் இடைப்பிடித்து பொன்மஞ்சம்
தஞ்சமடைவோம்..
வா செல்லமே..

இந்த கனவுகள் பொய்யன்று..
இந்த வார்த்தைகள் பொய்யன்று..
இந்த உலகம் பொய்யன்று..
என் உள்ளமும் பொய்யன்று..
வா செல்லமே..

இதழ் எழுதும் கவிதை வரிகளை
இமை மூடாது கொஞ்சம்
வாசிப்போம்..
வா செல்லமே..

வாழ்வு பெரிதன்று..
வாழ்தல் பெரிதன்று..
காதல் பெரியதென்று..
காலம் புரிந்துகொள்ளும்..
வா செல்லமே..

மரம்படர்ந்த கொடியாகி
மண்கலந்த நீராகி..
உயிர்சேர்ந்த காற்றாகி..
ஒன்று கலந்திடவே..
வா செல்லமே..

வானம் கறைந்துவிட..
கடலும் வற்றிவிட..
மலைகள் மடிந்துவிட..
காதல் நிலைத்திருக்கும்..
வா செல்லமே..


வியாழன், 17 டிசம்பர், 2015

மார்கழிப்பூக்கள்..



கோலத்தில் அலங்கரித்த
தெருவெங்கும் பூத்திருக்கும்
மார்கழிப்பூக்கள்..

தைபெண்ணின் தோழி இவள்.
மார்கழியா மங்கலப்பெண்..
சீர்தருவாள்.. சிந்தை இனிக்கும்
நல்லிசையும் நமக்குத் தருவாள்..

இவள் வசந்தகால வழிகாட்டி..
கார்த்திகைப்பெண் கை பற்றிய
ரௌத்திரம் கொண்ட மழைமணாளனை
வென்ற வெற்றி மங்கை..

குளிர்ப்போர்வை கொண்ட
பெண்தான்..
கோபங்கொள்ள மாட்டாள்..
காமனவன் கணைக்கொண்டு
மோகத்தின் தாபத்தை தீத்திடுவாள்..
தபசிகளை கொஞ்சமே சோதித்திடுவாள்..

பீடுடைப்பெண்ணே உன்னை
பீடை என்றுரைத்தை வாயில் மண்ணே..

உழவர்களின் வெள்ளாமை
ஊருக்கே பசி தீர்க்க..
பக்தியினால் பரவசங்கள்
பாரினிலே பரவிடுதே..


உவகை..



உயிர்களில் மனிதனின் சிறப்பு..
பூக்களின் மொழி..
வசந்தத்தின் வாசல்படி..

ஏன் மௌனம் நட்பே...
உன் உதட்டின் உவகை..
ஊக்கத்தின் வாயில்.

எதற்கு வருத்தம்..
கவலைகள் இல்லா மனிதனில்லை..
கவலைகள் இல்லா நாட்களுமில்லை

உன்னால் ஒரு நகைச்சுவைக்கு
மீண்டும் மீண்டும் முடிவதில்லை..
பின் ஏன்..
ஒரே துக்கத்திற்கு
மீண்டும் மீண்டும் கண்ணீர்..

உவகை கொள்..
நம்பிக்கையோடு உவகை கொள்..
பூக்கட்டும் உதட்டில் உவகை..
உவகை கொள்..உள்ளம் தெளிவுறும்..
உவகை கொள்..உள்ளம் வேகமடையும்..
உவகை கொள்..உள்ளம் உற்சாகமடையும்..
உவகை கொள்..உனக்கே உனக்குப் பிடிக்கும்..


புதன், 16 டிசம்பர், 2015

அயல்நாட்டு வேலை..


கடலைத்தேடி ஒரு நதியின்
பயணமாய்...
பூவைத்தேடி ஒரு வண்டின்
பயணமாய்..
அக்கரைப்பச்சையிலே.
எல்லாம் பெறலாமென்று
இக்கரையின் வாழ்வை
இருப்பில் வைத்துவிட்டு
பறந்து செல்லும் பயணம்..
அக்கறை குடும்பத்தில் கொண்டு
சக்கரை பாசத்தை மனதிலே
ஏந்திக்கொண்டு..
கிடைக்காத இன்பத்திற்கு ஏங்காமல்
வரப்போகும் சொர்க்கத்தின் வாழ்விற்கு
இந்த பயணம் அச்சாரம்..
பாலையின் வெப்பம் உடல் தகிக்க
பாசத்தின் அழைகுரலோ
உள்ளத்தில் பனியாய் உருகிக்
குளிரும்..
நடுங்கவைக்கும் மேல்நாட்டுக் குளிரில்
உறவுகளின் கண்ணீரே..
உறைந்துப்போகாமல்
உயிர்ப்போடு வைத்திருக்கும்...
பொருளில்லாது உலகத்தில் கிடைக்காது
வெற்றி..
பொருள்தேடி உலகெலாம் அலைந்தே
தேடுமே வெற்றியின் வெறி..
காசுக்காக கடலேறி வந்தோம்..
நேசத்திற்காக நெஞ்சு வெடித்து நிற்கிறோம்..
போகட்டும்...
கடனாளியாக கடல்தாண்டி வந்தோம்..
சிறு கூட்டுக்குள் அடைந்து
பணத்தையும் இயற்றினோம்..
வெறுமையானா நாட்கள் தான்
வெளிநாடு வாழ்க்கை...
தாய்மண்ணை தொடுகையிலே வ்ரும்
உற்சாகத்தின் முன்னே...

செவ்வாய், 15 டிசம்பர், 2015

துக்கத்தை தெளித்த துளிகள்



கடலில் கலந்துவிட்டது
மழைநீரோடு பல்லாண்டுகால உழைப்பு...
கரைதெரியா நடுக்கடலிலும்
திசைகாட்ட ஒளியுண்டு..
கரையும் தெரியாது
திசையும் தெரியாது..
கண்ணீரில் மிதக்கும்
உள்ளங்களுக்கு கைகொடுப்பார் யார்?
கையேந்தும் நிலையை கணநேரத்தில்
தந்துவிட்டு ஒன்றுமறியாதுபோல்
ஒடுங்கி ஓடுகிறது...
சாக்கடையாய் வாழ்ந்த ஆறுகள்..

திங்கள், 14 டிசம்பர், 2015

தங்கை


அண்ணா... என்ற
ஒற்றை உயிர்ப்பு வார்த்தையில்
உள்ளத்தை உருக்கி..
தாயுமாகி தோழியுமாய்..
விரட்டி, கேலிசெய்து
விவாதம் செய்கையிலே
அக்காவாகி..
அன்பில் கரைத்து
என்றும் ஆள்பவள் அல்லவா
தங்கைகள்...

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பாரதீ

பாரதீ

வேள்வித்தீ வளர்க்கும்
குடியில் வந்து மனதில்
ஞானத்தீயோடு
எங்கள் வாழ்வின் நிலையை மாற்ற
உள்ளத் தீயை
வளர்த்த முண்டாசுக் கவியே...!

"காலா! உனைநான்சிறு புல்லென
மதிக்கின்றேன்: என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கின்றேன்"
என்று சொல்லியே
காலனை வென்றிட்ட பாரதீ
இன்றும் வாழ்கின்றாய்.
வாழிய நீயே...

"அசைவறு மதிகேட்டு"
சங்கத்தமிழுக்கு வாழ்வளித்தாய்..

கேளீர் கேளீர் என்றே கூவியழைத்து
எங்கள் சினத்தை வென்றிட சொல்லி
மேதினியில்
மரணமில்லா வாழ்விற்கு
வழி சொன்ன பாரதீ...
நீயே
ரௌத்திரம் பழகச்சொல்லி
நீசரின் அக்கிரமத்தை அழிக்கச்சொன்னீர்..

அகத்தே கறுத்து
புறத்தே வெளுத்த
உலகரை திருத்த வழிபல
கண்ட அமரகவியே...

"நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்"
என்று நீ பாடிய வரிகள்
எங்கள் மனதில் படிந்துள்ளதடா பாரதீ

நீயும் ஊனுடம்பு விட்டு என்றுமழியா
புகழுடம்புடன் நூற்றாண்டு கடந்தும்
இந்த வானகவையகம் உள்ளமட்டும்
வாழும் வரம் பெற்றாயாடா...

சாத்திரங்கள் சொல்லும் பொய்களை
சடுதியில் நம்பா நாயகனே...!

"மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப்-பல
கள்ளமதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?...."

என்றே கோபத்தை உமிழ்ந்து நீயும்

"ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனில் கேளீரோ?" வென
சுத்தஅறிவே சிவமென
மெய்யுண்ர்ந்தவர் நீரல்லவோ...

கடவுளின் கற்பனைக்கொண்டே வரும்
பற்பல சண்டைகள் அறிந்த நீயோ..

"தெய்வம் பலபல சொல்லிப்-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்"
என்று ஓங்கியுரைத்தாய் நீயும்..

கேளார் இந்த கேடுகெட்ட மானுடர்
இன்றும் தெய்வத்தின் பேரில் சண்டை
எங்கும் சாத்திர மூட்டை கொண்டே
சடுதியில் மண்டை உடைகின்றார்..
வாராய் நீயும் மீண்டும் இந்த
மானுடர் தேறிட
மனம் மாறிட.. வளம் கண்டிட..

"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பந் தோன்றுதடா நந்தலாலா.."
எண்று தேவனைக்கண்டிட பாரதீ..

"மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டுகள், மரங்கள்"
என்று எவ்வுயிரும் பேதமின்றி
இன்புற்று வாழ வேண்டுவது
உந்தன் உத்தம உள்ளமடா...

"தெள்ளுற்ற தீந்தமிழின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக்கண்டார்"
என்றே நம் கன்னித்தமிழுக்கு சிறப்புத்தந்தாய்..

ஞானரதத்தில் உலாவந்து
இங்குவாழும் மக்களின் மூடமனத்தினை
திறக்கச்செய்தாய்...

"நாலுகுலங்கள் அமைத்தான்-அதை
நாசமுறப்புரிந்தனர் மூடமனிதர்"
என்றே சாதியதிற்கு தீ வைத்த
சரித்திர நாயகனே...

"எல்லோரும் ஓர் நிறை
 எல்லோரும் ஓர் விலை
 எல்லோரும் ஓர் நிலை"
என்றே சமத்துவம் விதைத்தாய்..

"காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்"
என்று குயில் பாட்டில் கூவி நீயும்
காதலுக்கு புதுவரிகள் சொன்னாய்...

வாழ்ந்திட்ட காலத்தில் வறுமையக்னி
உன் வீட்டு அடுப்பினில் ஆட
நீயோ... அந்த அக்கினி குஞ்சை கொண்டு
காட்டிடை வைத்தே..
வெந்து தனிந்ததுகாடு
என்று எக்காலமிட்டே களிப்புற்றீர்..

உன்னினைவுகள் என்றும் எங்களின்
நெஞ்சினில் நீங்கா..
நீ பாடிய வரிகளும் என்றும் அழியாது
இந்தவுலகு வாழும் காலமட்டும்..

வாழிய வாழிய வாழியவே..