செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பி12 வைட்டமின் பற்றிய தகவல்


 
கட்டுரையாக்கம்: திரு.  Neander Selvan

பி12 என்பது என்ன? எப்படி உருவாகிறது? ஏன் தாவர உணவுகளில் அது இல்லை? தாவர உணவுகளில் அது இல்லையெனில் ஆடு, மாடு முதலான சாகபக்ஷிணிகளுக்கு பி12 எப்படி கிடைக்கிறது? அதன் இறைச்சியை உண்டுதான் நாம் பி12 பெறுகிறோம் எனில் அவற்றுக்கு எப்படி அது புல்லை மட்டும் உண்பதால் கிடைக்கிறது?
பி12 என்பது நம் பெரும்குடலில் உள்ள பாக்டிரியாக்களால் தயாரிக்கபடுகிறது. ஆக நம் உடலிலேயே போதுமான அளவு பி12 தயார் ஆகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பி12 உற்பத்தி ஆகும் இடத்துக்கு சற்று மேலே பி12ல்லை கிரகிக்கும் ஐலியம் எனும் குடல் பகுதி உள்ளது. ஆக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனும் கதையாக நம் உடலில் உற்பத்தி ஆன ஒட்டுமொத்த பி12ம் அப்படியே கழிவில் வெளியேறுகிறது. இப்படி நம் உடலில் உற்பத்தி ஆகும் பி12 நம் உடலை சேர முடியாமல் போகிறது.
ஆக நாய், பன்றி முதலானவை அடிக்கடி மலம் தின்ன காரணம் இதுவே..பி12 பற்றாகுறை வருவது போலிருந்தால் அவை மலத்தை உண்டு அதை தீர்த்துக்கொள்ளும். இயற்கையில் சிம்பன்ஸி முதலான பல மிருகஙக்ள் இப்படி மலத்தை உண்ணும் வழக்கம் கொண்டவை.
ஆடு, மாடு முதலானவை புல்லிலேயே மலம், சிறுநீர் கழிந்து அதே புல்லை மேய்வதால் அவற்றுக்கும் பி12 கிடைக்கிறது. தவிரவும் புல்லை உண்கையில் அதில் உள்ள பூச்சி முட்டை, பூச்சி, ஈ, எறும்பு எல்லாமே அவற்றுக்கு உணவாகி பி12 கிடைக்கிறது
இத்தகைய பாக்டிரியா விளைவு காய்கறி/ பழத்தில் நடைபெறுவது இல்லை, உயிரினங்களின் பெரும்குடலிலேயே நடைபெறுகிறது என்பதால் தாவர உணவுகள் எதிலும் பி12 கிடையாது.
ஆனால் முன்பு நதிகளில் ஏராளமாக மனித, மிருக கழிவுகள் சேர்ந்தன. இப்படி கண்டாமினேட் ஆன நீரில் கழிவு இருப்பதால் சுத்தமற்ற இந்த நீர் மூலம் பி12 கிடைத்து வந்தது. இப்படி பி12 அசுத்தநீரில் கிடைத்ததால் பால் குடிக்ககூட வழியற்ற பல ஏழைநாட்டு குழந்தைகள் பி12 தட்டுபாட்டில் இருந்து காப்பாற்றபட்டார்கள். ஆனால் நீர்நிலைகள் பில்டர் செய்யபட்டு, காய்ச்சி வடிகட்டபட்டு குடிக்க துவங்கியபின் நீரில் இருந்த பி12 அகற்றபட்டுவிட்டது.
ஆக இன்று பால்/அசைவ/முட்டை உணவுகள் தவிர்த்து வேறு எந்த வழியிலும் பி12 நமக்கு கிடைக்க வழியில்லை.

சனி, 18 ஏப்ரல், 2015

மகாபாரதம் - Mahabaratham

உக்கிரசேனர் என்பவர் மதுராவில் ஆட்சி செய்து வந்தார். அவரது மகன் கம்சன். கம்சனின் சகோதரி தேவகி. தேவகியின் எட்டாவது குழந்தையின் கையால் கம்சனின் மரணம் என்னும் அசரீரி வாக்கு கேட்டு தேவகியை அவள் கணவனுடன் சிறையில் அடைத்து வைத்தான் கம்சன் அவனையும் ஏமாற்றி ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்தான் கிருஷ்ணன்
ஒன்றைச் சொல்ல வரும்போது தொடர்புடைய கதைகளையும் தொட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது இந்த கம்சனுக்கு தன் இரு புதல்விகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தான் ஜராசந்தன். தன் புதல்விகளை விதவைகளாக ஆக்கிய கிருஷ்ணனிடம் ஜராசந்தனுக்கு கடும் பகை. பல முறை கிருஷ்ணனிடம் போரிட்டு வந்தவனைத் தவிர்க்க கிருஷ்ணன் மதுராவில் இருந்து துவாரகா என்னும் தீவில் இருந்து ஆட்சி செய்து வந்தான் கிருஷ்ணன். துவாரகை ஒரு தீவானதால் ஜராசந்தனால் கிருஷ்ணனை வெல்ல முடியவில்லை. இந்த ஜராசந்தனை தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்த கிருஷ்ணனால் ஏனோ சம்ஹாரம் செய்ய முடியவில்லை. அல்லது கதையை நகர்த்திச் செல்ல வியாசரின் உபாயமோ விளங்கவில்லை.
இந்த ஜராசந்தன் ஒரு பராக்கிரமசாலி. இவன் பிறந்த கதையே அலாதியானது.
ப்ருஹத்ரதா என்னும் அரசன் மகத நாட்டை ஆண்டு வந்தான் அவன் ஒரு சிறந்த சிவ பக்தன். அண்டை அரசுகளை அடக்கி பேரும் புகழுமாக இருந்தான் பெனாரசின் இரட்டை அரச குமாரிகளை மணந்து அரசு செய்து வந்தவனுக்கு வெகுநாட்கள்வரை புத்திர பாக்கியமில்லாதிருந்தது மனம் வெறுத்துக் கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான்.இவனது நிலைகண்டு இரங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை பாக்கியம்கிடைக்கும் என்றார். இரு பெண்டாட்டிக்காரன் பழத்தினை இரு சம பாகமாக்கித் தன் இரு மனைவியருக்கும் கொடூத்தான் இருவரும் கர்ப்பமுற்றனர், குழந்தைகளும் பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக் கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர். அரசன் கோபமுற்று அந்த இரு கூறுகளையும் கானகத்தில் வீசி எறிந்தான் கானகத்தில் ஜைரை என்னும் அரக்கி அந்த இருகூறுகளையும் உண்ணப் போகும் முன் ஒன்றாக்கினாள். என்ன ஆச்சரியம்,,,,,! இரு கூறுகளும் ஓருயிராகி சத்தமாக அழத் துவங்கிற்று. உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பாத அரக்கி அந்தக் குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றைக் கூறினாள்.அரசன் அக்குழந்தைக்கு ஜராசந்தன் ( ஜைரையால் சேர்க்கப்பட்டவன்) என்று பெயரிட்டு வளர்த்தான்.
ஜராசந்தனும் ஒரு சிவ பக்தன். அவனுக்கு ஒரே குறை. ஆண்வாரிசுஇல்லாத ஜராசந்தன் தன் இரு புதல்விகளைக் கம்சனுக்குத் திருமணம் செய்வித்தான் கம்சன் கிருஷ்ணனால்கொல்லப்பட ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் மேல் தீராத பகையும் அதன் விளைவாகப் பலமுறை போர் தொடுத்தலும் நிகழ்ந்தது. கதையின் முன் பாகத்திலேயே சொல்லப் பட்டது. துவாரகை மீது படை எடுத்துக் கிருஷ்ண்னைவெல்ல யாகம் செய்வதாயிருந்தான்., இதை அறிந்த கிருஷ்ணன் ஒரு உபாயம் கண்டான் யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்ய வேண்டுமானால் எல்லா அரசர்களும் அவன் தலைமையை ஏற்கவேண்டும் . பராக்கிரமசாலியான ஜராசந்தன் ஏற்க மாட்டான். ஆகவே யாகம் துவங்கும் முன்னே அவனை ஒழித்து விட வேண்டும் ஜராசந்தன் சிவ பூஜையில் இருந்து வெளிவந்தால் யாரும் கேட்டதை இல்லை என்று சொல்லாத வள்ளல். அர்ச்சுனன் பீமன் கிருஷ்ணன் மூவரும் அந்தண வேடம் தரித்து பூஜையில் இருந்து வெளிவந்த ஜராசந்தனைப் துவந்த யுத்தத்துக்கு (மல்யுத்தத்துக்கு) வருமாறு அழைத்து மூவரில் யாருடன் வேண்டுமானாலும் போரிடலாம் என்றனர். உடல் பலத்தில் சிறந்தவனாய்த் தோற்ற மளித்த பீமனுடம் ஜராசந்தன் பொருதத் தயார் என்றான் இரு மலைகள் மோதுவது போல் இருவரும் பல நாட்கள் இடைவிடாது யுத்தம் செய்தனர்.
பீமன் ஜராசந்தனை வீழ்த்தி அவன் உடலை இரு கூறுகளாக்கி எறிந்தான். ஆனால் ஜைரை கண்டதே இங்கும் நடந்தது. இரு கூறுகளும் ஒட்டிக் கொண்டு மீண்டும் ஜராசந்தனாகி யுத்தம் தொடர்ந்தது. செய்வதறியாது திகைத்த பீமன் கிருஷ்ணனை நோக்க அவன் உடலின் இருகூறுகளை திசை மாற்றி வலப் பாதி இடது புறமும் இடப்பாதி வலப்புறமும் வருமாறு எறிய ஒரு குச்சியை ஒடித்து சைகை காட்டினான் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட பீமன் அவ்வாறே செய்தான் திசை மாறிய இரு கூறுகளும் மீண்டும் ஒன்றாகச் சேர முடியாமல் ஜராசந்தன் மாண்டான்.
அவனால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் மீட்கப் பட்டனர்.
இந்தக் கதை எழுப்பும் சில கேள்விகளும் பொதுவாகக் கூறப்படும் பதில்களும் அவதாரக் கடவுள் கிருஷ்ணனால் வெல்ல முடியாதவனா ஜராசந்தன்.? ஜராசந்தனைப் பற்றிய கதைகளுள் அவன் தீயவன் என்றோ துர்க்குணம் படைத்தவன் என்றோ கூறப்பட்டதாகத் தெரியவில்லை.அந்தக் கால அரசர்களுக்குள் இருந்தகுணங்கள்தான் ஜராசந்தனிடமும் இருந்தது.
அவதாரக் கடவுள் கிருஷ்ணன் கையால் கொல்லப் பட்டால் ஜராசந்தன் முக்தி அடைந்து விடுவான். அது நேராமல் தடுக்க கிருஷ்ணனின் உபாயம்தான் இந்த பீம ஜராசந்த மல்யுத்தம்.
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்து அதன் விளைவால் போர் நடந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே விரும்பினான். ஆனால் பீமனையும் அர்ச்சுனனையும் உசுப்பி விட்டு நேர் வழியில் செல்லாமல் பீமனுடன் மல்யுத்தம் செய்வித்து அவனை ஒழித்துக்கட்ட கிருஷ்ணனின் லீலை இது என்று பக்தர்கள் கூறுவார்கள்.
ஜராசந்தன் பீமன் துரியோதனன் கீசகன் பகாசுரன் அனைவருக்கும் நட்சத்திரம் ஒன்றே என்று கூறப் படுகிறது இதில் யாராவது ஒருவர் கையால் ஒருவர் மரணம் நேரிட்டால் அவர் கையாலேயே மற்றவரின் மரணமும் சம்பவிக்கும் என்பதால் பீமன் கையால் மற்ற நால்வருக்கும் மரணம் என்பது விதி என்றும் கதை உண்டு. ஜராசந்தனின் மனைவிக்கு கிருஷ்ணன் ஜராசந்தனைத்தன் கையால் கொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தாகவும் ஒரு கதை உண்டு.கதைகளைப் படிக்கும் போது பல துணைக்கதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஜராசந்தனைக் கொல்ல இரு கூறுகளும் திசை மாற்றிப் போட்டால் மீண்டும் சேராது என்பது கிருஷ்ணனுக்கு எப்படித் தெரியும்? அவர் எல்லாம் அறிந்த ஆண்டவன் அவதாரமல்லவா?

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கல்வி மதிப்பெண் எடுக்க மட்டும்தானா?


டிச்சவன் பாடம் நடத்துறான், படிக்காதவன் கல்லூரி நடத்துறான் என்று ஆதங்கத்தோடு சொல்லும் நாம், நமது கல்வி முறையில் இருக்கும் குறைபாட்டை கவனிக்க தவறிவிட்டு, பல திறமைசாலிகளை உருவாக்க முடியாமல் பின்தங்கியுள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை கொடுத்த இறைவன் அதை வெளிப்படுத்துவதற்கான திறனை கொடுக்கவில்லை. அதற்காகத்தான் ஆசிரியர்களை கொடுத்திருக்கிறான். அவர்களால் மட்டுமே ஒவ்வொரு குழந்தைகளின் திறமைகளை வெளியில் கொண்டு வரமுடியும்.

நமது நாட்டில் கல்வி முறையை நினைத்தால் மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. ஏதோ ஒரு குறை இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்று சொன்னால் இந்தியாவில் ஒரு மாணவனின் திறமை அவன் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சிறு வயதிலேயே டாக்டராக, விஞ்ஞானியாக, இஞ்சினியராக, தொழில் அதிபராக விரும்பியவன், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவன் நினைத்த நிலையே அடைகிறானா.? என்றால் கண்டிப்பாக இல்லை. 100-க்கு 90 சதவீதம் பேர் தங்களின் உண்மையான துறையில் காலூன்ற முடியாமல், வேறொரு துறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
  
சரி, அதிக மதிப்பெண் எடுத்த அனைவரும் திறமையின் அடிப்படையில் மதிப்பெண் எடுத்தார்களா? இல்லை மனப்பாடம் செய்து எடுத்தார்களா? என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு மனப்பாடத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து ஒப்பித்தால் அவன் சிறந்த மாணவனாக கருதப்படுகிறான்.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மாணவ பருவத்திலேயே எந்த மாணவனுக்கு எந்த துறையில் ஈடுபாடு இருக்கிறது என்று ஆராய்ந்து, அதே துறையிலேயே ஊக்குவித்தால், அந்த பருவத்திலிருந்தே அவன் அனைத்தையும் கற்று பள்ளி, கல்லுரியில் இருந்து வெளியேறும் தருணத்தில் அந்த குறிப்பிட்ட துறையில் வல்லுனராக வருவான். அதன் மூலம் அவனது வாழ்க்கை எளிதாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். +2 முடித்த பின் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், எத்தனை மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள்.
90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் என்ஜினீயராகவும், 95 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் டாக்டராகவும் முடியும் என்றால் உண்மையிலேயே சில நுட்பங்களை தெரிந்திருக்கும் ஒரு திறமையான மாணவன் மதிப்பெண் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், அவன் புறக்கணிக்கப்படுகின்றான். மெக்கானிக் படிக்காத எத்தனை பேர், என்ஜினீயரிங் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள். அப்படியானால், இந்த கல்விமுறையில் திறமையானவனை இனம் கண்டு, அவனுக்கு ஊக்கம் அளிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
சிறுவயதிலேயே ‘கலெக்டராக போறேன், டாக்டராக போறேன்’ என்று கூறிய எத்தனை சிறுவர்கள் இன்று விரும்பியவாறு இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை அதுதான் என்று தெரிந்தும் அதற்கான திறமைகளை வளர்க்க அவர்களால் ஏன் முடியவில்லை. காரணம் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கல்லூரியில் சேரும் வரை கிடைப்பதில்லை.
இன்றைய சூழ்நிலையில் மதிப்பெண் எடுப்பதற்கு மட்டும் திறமையை வளர்த்துகொண்டால் போதும் என்ற நிலை. படிக்காத மேதை என்று கர்மவீரர் ‘காமராஜர்’ அவர்களை கூறும் நாம், அது போல நிர்வாக திறமை உள்ளவர்களை அடையாளம் காணத்தவறிவிட்டோம். பள்ளியில் படிக்கும்போதே இவர்களுடைய திறமைகளுக்கு முக்கியத்துவம் தர யாருமில்லை. அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், இல்லை என்றால் பணம் இருக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு நாம் எப்படி தீர்வு காண்பது என்பதே மிகப்பெரிய கேள்வி.

வெறுமனே படித்து, மனப்பாடம் செய்து எடுக்கும் மதிப்பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை, உண்மையான திறமையான மாணவனுக்கு கிடைப்பதில்லை. குறைவான மதிப்பெண் எடுப்பவன் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன் அல்ல, மனப்பாடம் செய்ய திறமை இல்லாதவன் அவ்வளவுதான்.
ஆனால், அவனுக்கு வேறொரு திறமை இருக்குமே. அதை ஏன் ஆசிரியர்கள் எவரும் வெளியே கொண்டு வர முயற்சிப்பதில்லை. மதிப்பெண் மட்டுமே ஒருவனின் திறமையை தீர்மானிக்கிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே அவர்களுடைய திறமைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் தங்களிடம் இருக்கும் திறமையை கூட வெளியை கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பைரோஸ் கான்
 (கூத்தாநல்லூர்) 


புதன், 15 ஏப்ரல், 2015

செவ்வக வாழ்க்கை

பரந்த வனம் தின்ற
பசிப்பேய் செவ்வகங்கள்
வெட்டியெடுத்த தோட்டங்கள்
கட்டியெடுத்த வாழ்விடங்கள்
தெருக்கள் கிழிக்கும் நகரங்கள்
வானுயர் குடியிருப்புகள்
வெளிச்ச சாளரங்கள்

வீட்டறைச் செவ்வகங்கள்
பாதுகாப்பின் பெயர் சொல்லி
எழுப்பும் சுவர் சிறைகளில்
மிஞ்சும் துளைகளாய்
கதவுச் செவ்வகங்கள்

ஏதோ ஓர் கட்டில் செவ்வகத்தின்
உணர்ச்சி உச்சத்தில்
உதித்துக் கொண்டே இருக்கின்றன
புதிதான வாழ்க்கைகள்

காகிதச் செவ்வகங்கள்
பணமாய் பத்திரமாய்
படிப்புச் சான்றிதழாய்
மடித்து வைத்திருக்கின்றன
மனித மதிப்பை

விரிந்த உலகம்
கட்டில்லா உணர்ச்சிகள்
கற்பனை எல்லைகள்
இறவா இலக்கியங்கள்
உணரத் தேவையாய்
ஏதோ ஒரு செவ்வகம்
புத்தகமாய் சினிமாவாய்

தொலைக்காட்சி
கணினி
கைபேசித் திரை
சுருங்கிக் கொண்டே செல்லும்
நமக்கான ஒரு செவ்வகத்தை
உற்றுப் பார்த்தபடி
உருகிக் கரைகிறது
காலம்

காத்திருக்கும் செவ்வகங்கள்
கடைசிக் குழியும்
மாலையிட்ட புகைப்படமும்




- ஷான்