புதன், 30 நவம்பர், 2016

பார்வையில் இரக்கம்



இரக்கம் உயிர்களின் கொடை..
எவ்வுயிரும் தன்னுயிரில்
இரக்கம் கொண்டே வாழ்கிறது
இரக்கம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்
ஏனோ..
என்னுடைய இரக்கம்
சந்தேகத்தோடு பார்க்கப்படுகிறது
என்ன பலன் எதிர்ப்பது
இந்த இரக்கம்...?
கேலிகளுக்கு பின்னே எழும்
வலிகளை துடைத்துக்கொண்டு
நடக்கிறேன்..
உலகம் எல்லாம் பேசும்
ஒன்றும் செய்து
உண்மை புரிந்தபோது
என் இரக்கத்தின் எல்லை
இன்னும் விரிந்தது..


சங்கர் நீதிமாணிக்கம்...

செவ்வாய், 29 நவம்பர், 2016

என் ராசாவே ஒன்ன நம்பி

என் ராசாவே ஒன்ன நம்பி
வோட்டுபோட்டு காத்திருந்தேன்..

வெள்ளைவேட்டி கட்டி வந்த
வெறுங்கைய வீசி வந்த..
கையெடுத்து கும்பிட்டு
உங்க வீட்டு பிள்ள நானு
தவறாம ஓட்டு போடுன்னு
கைகாலா பிடிச்சிகிட்டு
கெஞ்சி கேட்டுகிட்ட..

வருசம் அஞ்சு ஆச்சு
வந்த ரோடும் பள்ளமாச்சு..
எங்க வாழ்க்கையில முன்னேத்தம்
ஒன்ன தான் காணல...

நடந்து வந்திங்க அப்பு..
பெறவு வண்டியில வந்தீக..
இப்ப பறக்கிற வண்டி எல்லாம்
வரிசையா நிக்குது உங்க வீட்டு வாசலிலே..

இருந்த காள மாடும்
ஜல்லிக்கட்டு தட போட்டு
இல்லாம போயிடிச்சி எங்க வீட்டு வாசலிலே..

எதோ.. ராசாவே..ஒன்ன நம்பி
நானிருக்கேன்..
வோட்டுபோட்டு காத்திருக்கேன்..


சங்கர் நீதிமாணிக்கம் 

*ராசாவே உன்னை நம்பி*



கரிசக்காட்டு கண்மணியே...
காவக்காரன் பொன்மயிலே..
ஆடிப்பட்டத்திலே தேடி வெதச்சுவச்ச
பருத்தி பஞ்சாட்டம் வெடிச்சி நிக்கிறே
அத்தமக ராசாத்தி என்னுசுரு நீயாச்சு..

எசப்பாட்டு நா எடுத்து என்மனச சொல்லவந்தேன்
புதுப்பாட்டு நீ தொடுத்து பூமனசில் தேனெடுத்த..
என் ராசாவே உன்ன நம்பி குத்தவச்சு காத்திருக்கேன்
எடம் மாறி தடம் மாறி என்ன விட்டு போகாதே..

எட்டுவீட்டு கல்லுக்காரி காசுகாட்டி ஆசைகாட்ட
பள்ளப்பட்டி ஆட்டக்காரி ஆடயிலே என்ன சுருட்ட..
ஆசப்பட்டு அள்ளிக்கொள்ள எல்லாரும் துள்ளயிலே
பாசக்காரி உன்னைவிட்டு பாவி நெஞ்சம் போயிடுமா..
பதறாத பதறாத பண்ணவீட்டு மச்சிமேலே
உனக்காக காத்திருக்கேன்
ஒருத்தருக்கும் தெரியாம
ஓடிவந்து அணச்சுக்கடி...

ஏ..எடுபட்ட பாவி மச்சான்..
ஒருத்தருக்கும் தெரியாம ஓடிவர
நா சொந்தங்கெட்ட சிறுக்கியில்ல
பட்டு துணி இருந்தா பாரு... இல்ல
பவிசான வெள்ளைவேட்டி சுத்திகட்டி நீயும்
பரிச தட்ட பலரோட எடுத்துவந்து
பேசி முடிச்சுடுபுடு..
மஞ்சத்தாலி கட்டிபுடு..
மாங்குருத்தா நா வாறேன்..
மல்லியப்பூ கட்டிலிலே
மன(ண)ம் போல வெளையாடு..


சங்கர் நீதிமாணிக்கம் 

திங்கள், 28 நவம்பர், 2016

கண்ணன் ஏமாந்தான்..



காதலன் அவன்..
பாரதின் அன்புக்காதலன் அவன்..
ரௌத்திரம் பழகச்சொன்ன பாரதி
சௌந்தரியலகரியில் தன்னை மறந்து
கண்ணுக்கு தந்தது காதல் அல்லவோ..

பார்த்தனுக்கு சாரதியாய் வந்தவன்..
பாரதிக்கு கண்ணமாவாகி காதல் சொன்னான்..

காதலனை கண்ணாக காத்திருந்தான்..
அவன் பாடல் வரிகளில் பூத்திருந்தான்..

வறுமை அவன் வயிற்றுக்கு தானே..    
கண்ணனில் உருகி நறுக்கிய வரிகளுக்கு இல்லையே..

கண்ணன் அந்த பாரதியை..
காத்து வந்தான்
கைகளில் ஏந்தி வந்தான்..
வார்த்தை தந்தான்..
வரிகளுக்கு வலிமை தந்தான்..

தேடிவந்து பாடிவந்து நாடிவந்து வணங்கி சென்ற
கலாபக்காதலனை கண்ணிமைக்கும் நேரத்தில்
கலபம் கையணைக்க அசந்துவிட்டான்..

ஏனோ..
கண்ணன் ஏமாந்தான்....

(கலபம் – யானை )


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 25 நவம்பர், 2016

48. வேடங்களே வாழ்க்கையா..?

வலைவீசும் எண்ணங்கள்

48. வேடங்களே வாழ்க்கையா..?


இன்றைக்கு எல்லாமே வெளிவேடம், எதுவுமே உண்மை இல்லை, எங்கும் நேர்மை இல்லை. எல்லாமே நடிப்பு என்று நமது மனம் நினைக்கிறது. இதில் உண்மையும் இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு நிலை வர யார் காரணம்?.. நாம் தானே.

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இயல்பு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது மனம் வெற்றியை தேடி அலைகயில் போடுவது தானே இந்த வெளிவேடங்கள்.

பிறர் எதிரில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வது போலவும், தனிமையில் துக்கத்தை மனதில் தாங்கி துயரத்தில் துடிப்பது என்ற நிலையில் தான் பெரும்பாலும் வாழ்கிறோம்.

இதற்கிடையில் நம்மில் பலரும் நேர்மையாய் இருப்பதாகவும், நேர்மையை வாழ்வதாகவும் போடும் வேடம் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாய் இன்றைய காலகட்டத்தில் அமைந்து விட்டது. எல்லா இடங்களிலும் அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் இன்றைக்கு நேர்மை என்பது போல உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் மன சுத்தியுடன் இருந்தாலும் வெளி வாழ்க்கையில் நம்மால் இன்றைய நிலையில் முழுமையான நேர்மையை கடைபிடிக்க இன்றைய சூழல்கள் நம்மை விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் நாம் இந்த போராட்டத்தில் வேடம் போட்டு வாழவே முடிகிறது.

வாழ்க்கையில் வெற்றி எனபது எப்போதும் நிரந்தரமில்லை அதே போல தோல்வி என்பது நிரந்தர முடிவும் இல்லை என்கிறார் மைக் டிட்கா (Mike Ditka). இந்த நிரந்தமில்லாத இரண்டுக்காகவும் தான் நாம் வேடம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதுபோல தான் இன்றைக்கு நாம் துன்பமே கூடாது என்ற மனநிலையில் வளர்ந்து அதற்காக இயல்பாக நாம் பெற்று மகிழவேண்டிய இன்பத்தையும் பலநேரங்களில் தவிர்த்துவிட்டு பயங்கொண்டு தள்ளி போய்விடுகிறோம்.

எப்படி இரவும் பகலும் போல நல்லதும் கெட்டதும் இயல்போ வாழ்க்கையில் இன்பத்தின் சுவையை நாம் முழுமனதுடன் சுவைக்க வேண்டும் என்றால் துன்பத்தை அனுபவித்தால் தான் முடியும். நிழலின் அருமை வெயிலில் மட்டுமே தெரியும். நிழலிலேயே இருந்தால் எப்படி தெரியும்?

நம்மடைய இன்றைய சந்ததிகள் தனிமையே இனிமை என்பது போல தவறான எண்ணத்தில் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். சொந்தங்கள் என்றாலே சிக்கல்கள் போலவும், செலவுகள் போலவும் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்பதுபோலவும் எண்ணிக்கொண்டு குழந்தைகளுக்கும் சொந்தங்களில் தேவை பற்றி புரிய வைக்காமல் வளர்ப்பதால் “தனிமை தான் நல்ல வாழ்க்கை” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. அவர்கள் வளர்ந்து பந்தங்களுக்குள் நுழையும்போது விட்டுக்கொடுத்தலும், அனுசரிப்பும் இல்லாமல் தனிமையை நாடி தங்களை சுருக்கிக்கொள்வதால் இயல்பான குடும்பவாழ்வும் இனிக்காமல் கசப்பில் வந்து பிரிந்துவிடுகிறது.

இப்படி வளரும் தலைமுறைகள் இழப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், ஏமாற்றங்களையும் தாங்கமுடியாமல் ஆறுதலுக்கும், துணைக்கும் சொந்தம் இல்லாமல் தனிமையில் தவிக்கிறது.

முந்தைய தலைமுறைகள் எப்படி இழப்புகளைகூட ஏற்றுக் கொண்டோம், தங்கிக்கொண்டோம் என்பதை எண்ணிப்பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ள முடியும்

நாம் போடும் இந்த வேடங்கள் நமக்கு எப்போதும் முழுமையான மகிழ்ச்சியை தராது. ஆம் மரியா மிட்செல் சொல்லுவது போல “மகிழ்ச்சிக்கு எந்த ஒரு முகப்பூச்சும் இல்லை”

எல்லா தவறுகளையும் நாம் தான் செய்கிறோம். நமது மனம் இந்த சமுதாயத்தில் போட்டு மகிழ விரும்பிய வேடத்தை போட முடியாத நிலையில் நமது குழந்தைகள் மீது திணித்து அவர்களையும் இயல்பாய் வளரவிடாமல் செய்து விடுகிறோம்.

நாம் என்னவாக மாற விரும்பினோமோ அதுவாக மாறவில்லை என்றாலும் நாமும் அந்த சின்ன ஏக்கத்தை தவிர மற்ற குறைகள் இல்லாமல் வாழ்கிறோம் என்பதை மறந்து நம் குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை மாற்றவிடாமல் நமது விருப்பங்களை அவர்கள் மீது கண்மூடித்தனமாக திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது இந்த வேடம் போடும் மனம் உணருவதே இல்லை.

பொங்கி எழும் வேகமிக்க நீரோட்டத்தின் மேல் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி குழந்தைஎன்கிறார் ஜேனஸ் கோர்ச்சாக்.

நம்முடைய குழந்தைகள் மென்மையானவர்கள். அந்த மென்மையான குழந்தைகளின் இறகுகள் மீது நம் மகிழ்ச்சிகளை, ஆசைகளை, கனவுகளை ஏற்றி கிழித்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பெற்றோரின் எதிர்பார்ப்பின் சுமை தாங்காமல் பெரும் குழப்பத்திற்கு ஆளாகும். அந்த நிலையில் நமது குழந்தை சற்றே பின் தங்கும் போது அதிர்ச்சியடைந்து, அவர்களின் வளர்ச்சியின் மீது குறை கூற ஆரம்பிக்கின்றோம், ஏனோ நமது குறைகளை சுத்தமாக மறந்தே விடுகிறோம்.

அதுமட்டும் இல்லாமல் மென்மனம் கொண்ட பிஞ்சுகளை பிற குழந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு அவர்களின் இறகினை துடிக்கத்துடிக்க பிய்த்து எறிகின்றோம்.

The bad news: nothing is permanent. The good news: nothing is permanent. - Lolly Daskal என்பது போல மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் கொண்டு இனிதாக வாழ முயற்சிக்கலாமே.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

கொடியில் மலர்ந்த பூவாக..

இலையுதிர் காலத்து
பொன்மணி சருகுகள் இடையே
உதிர்ந்து கிடக்கிறாய்..
கண்டறியா அண்டவெளி மறைபொருளாய்
ஆனந்தத்தின் வழியறியா ஆற்றாமையில்
மெல்ல வழிகிறது
குருதியுன் கண்களில்..
மெல்ல அணைத்து உன் நெற்றியில்
முத்தமிடும் என் நினைவுகள்
சில்லுகளாய் நொறுங்கி விழுகையில்
தவித்துகிடக்கிறேன் நான்..
நீயோ...
புன்னகைப்பூக்காரி என்பதை
மறவாமல் எனக்குணர்த்தி வீழ்ந்துகிடக்கிறாய்
கொடியில் மலர்ந்த பூவாக..


சங்கர் நீதிமாணிக்கம்

புதன், 23 நவம்பர், 2016

வளர் இளம் பெண்கள்




தேவதை போல அவதரித்தாள்
அழகு பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாள்..
நெஞ்சிற்கினியவளாய் கொஞ்சி நின்றாள்..
எல்லோர்  வீட்டுக்கும் மகளே
செல்வமகள்....
தந்தையின் அன்பு கொஞ்சும்
செல்ல மகள்...

பூக்காத பருவம் மட்டும்
பறப்பதை தான் ரசித்த உள்ளம்
அழகு ரோஜாவாய் மலர்ந்தபின்னே
முள்ளாகி வேலியிட்டது..

கட்டுக்கள் இல்லாத பட்டாம்பூச்சிக்கு
சிறகுடைந்த கதையாய் போனது..

வளரிளம் பெண்ணாய் அவள்
வளர்ந்து நிற்கையிலே மனம்
வட்டமிடும் கழுகாய் சுற்றிவர
செய்யுது இந்த சமூகத்தின் அவலம்..

நம்பிக்கை கொண்டேன் தேவதையே..
நீ ரோஜாவாய் சிரி...
உன் அழகு வானில் சிறகடித்து பற...

எல்லைகள் இல்லா உலகில்
உன் எல்லைகள் எதுவென்று அறி..
மூத்தோர் வார்த்தைகள் கேள்..
உண்மைகள் மனதில் கொள்..

புரிந்தே பின்னே
நீ தடையில்லாமல் பறப்பதே
நின் சுதந்திரம்..


சங்கர் நீதிமாணிக்கம்...

செவ்வாய், 22 நவம்பர், 2016

சில நேரங்களில் சில மனம்


சிறு துளிபட்டாலும்
அலையெழுப்பி சிலிர்த்துவிடும்
பெரும் நீர்பரப்பின் மெல்லினமாய்..
கண்விழித்து எழும் முன்னே
உலகை சுற்றிவந்து
கண்ணாம்பூச்சி  காட்டுவதும்.....
விகாரங்களுக்கு வெளிப்பூச்சு கொண்டு
வேடிக்கை காட்டுவதும்....
பிறன் இன்னலிலே இனிமை காண்பதும்
தன் சோகத்திலே துணை தேடுவதும்
சுற்றி சுற்றி வந்தாலும் திருப்தியில்லை என்றே
தீராத தேடலை எல்லோருக்கும் சுமத்துவதும்..
நல்லார்க்கு உள்ள சாட்சியாய்..
அல்லார்க்கு இல்லா சாட்சியாய்..
எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றாய்..
கல்லாகி சமயங்களில் கடுமை காட்டி..
கனியாகி சமயங்களில் உருகி வழிவதும்..
பெருங்கருணை அவன் முன்னே மருகுவதும்..
தன்கருணை வேண்டுவோருக்கு இறுகுவதும்..
என்னென்ன மாயம் செய்யும்..
ஏதோதோ வித்தை செய்யும்..
இந்த மனமென்னும்
மகுடி பாம்பு....


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 18 நவம்பர், 2016

47. வெளிப்படுத்தலாமே..?

வலைவீசும் எண்ணங்கள்

47. வெளிப்படுத்தலாமே..?


இப்படி ஒரு தலைப்பை பார்த்ததும் எதை வெளிப்படுத்துவது என்ற கேள்வி உடனே மனதில் தொக்கி நிற்கும்.? ஆம்.. எதை வெளிப்படுத்துவது?

யோசித்துப்பார்த்தால் எவ்வளவோ மனதில் இருக்கும். சிலதை எளிதாக வெளிபடுத்த முடியும். சிலதை சூழ்நிலைகள் பார்த்து வெளிப்படுத்த முடியும். சிலவற்றை வெளிபடுத்த முடியாத சிக்கல் மிகுந்த தனிமனித செயல்களாக இருக்கும்.

எல்லோருக்கும் என்று வெளியில் சொல்லமுடியாத தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கும். ஆனால் அதையும் யாரவது மனதிற்கு மிகவும் நெருங்கியவர் அல்லது நாம் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு நபரிடம் பகிர்ந்திருப்போம். அதையும் தாண்டிய சில இரகசியங்கள் வெளிப்படுத்தாமலே ஒருவரின் மனதோடு இருந்து மறைந்து போவதும் உண்டு.

இவையெல்லாம் சரி தான். நாம் எதை வெளிப்படுத்துவது?

முதலாவதாக நாம் சிலர் மேல் அளவிடற்கரிய அன்பும், பாசமும் கொண்டிருப்போம், ஆனால் அதை உரியவரிடம் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்து வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருப்போம். 

இது தான் பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய பலவீனம். தமக்கு நெருங்கியவர்கள் மீதுள்ள நேசத்தை அவர்கள் உயிரோடிருக்கும்போதே வெளிப்படுத்த தயங்குவதுதான். நேசமும், பாசமும் வெளிப்படுத்தும் போதுதான் முழு மகிழ்ச்சியையும் நமக்கு தரும். நெஞ்சுக்குள்ளே எல்லா பாசத்தையும் மறைத்து வைத்து யாருக்கு என்ன பலன்.

நாம் பல படங்களில் பார்த்து இருப்போம். அன்னையோ, தந்தையோ தங்கள் பிள்ளைகளிடம் நேரிடையாக பேசும்போது மிக கடுமையாக இருப்பது போல பேச்சுக்கள், செயல்கள் இருக்கும், ஆனால் அவர்கள் கண்களில் இருந்து விலகிய பிறகு அப்படியே மருகி பாசத்தில் உருகுவார்கள். யார் மூலமாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வார்கள்.

இதனால் என்ன பயன்? உண்மையான அன்பு இருக்கும்போது யாருக்கும் புரிபடாமல் பாசத்தை பகிர்ந்து மகிழ்ந்து குழவி களித்து வாழமுடியாமல் எதற்கு போலி வேடம்.

நினைத்து பாருங்கள்...? இந்த நிமிடம் நமக்கு நிரந்தரமா? யாராலும் அறுதியிட்டுக்கூற முடியுமா?

உண்மையில் யாருக்கும் இந்த நிமிடம் நிரந்தரமில்லை..!! ஆனாலும் நாம் திட்டமிடுகிறோம் அடுத்த ஜென்மம் வரை என்ன செய்யப்போகிறோம் என்று!! பலன் உண்டா? இல்லையே.

இதனால் தான் நம்முடைய பாசத்தையும், நேசத்தையும் உரியவரிடம் காலம் வரட்டும் என்று காத்திருக்காமல் அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டும்.

இந்த வெளிப்படுதல் என்பது சிலர் நினைப்பது போல பரிசுப்பொருட்களும், விலைமதிப்பற்ற நகைகள், ஆடைகள், வெளியிடங்களுக்கு செல்லும் இன்ப சுற்றுலா போல அதிக செலவு மிக்கதாக அல்ல. ஒரு அன்பான அணைப்பும், நேசமான தலை கோதலும், அமைதியான வார்த்தையும் போதுமே. முடிந்தால் உள்ளூரில் எங்காவது போய் வரலாமே?

சில உறவுகளில் நம்மால் என்ன நினைத்தாலும் மனமுவந்து ஐக்கியம் ஆகா முடியாமல் தவிப்போம். அதற்கு என்று எந்த காரணமும் நம்மிடம் இருக்காது. அதே போலவே சில உறவுகள் எந்த காரணமும் இல்லாமல் யாரிடமும் அதிகம் ஒட்டாமல் ஒரு தனிமை வாழ்க்கயை விரும்புவார்கள்.

அவர்களுக்கு நம்மால் ஆனா சிறந்த உதவி என்பது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான். அவர்களுக்கே ஒரு புரிதல் வரும்போது அங்கே உறவுகள் மீண்டும் பூக்கும்.

மேலும் பலநேரங்களில் நமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தெரிந்தபோதும் விலக முடியாத உறவு போல வாழ்க்கையை சுமையாக்குவது வேறில்லை.

இது போன்ற உறவுகளுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். குறிப்பாக கணவன் மனைவி உறவில் கூட பலவித நிர்பந்தங்கள் அல்லது குழந்தைகள் மேல் உள்ள பாசம் காரணமாக ஒரு இழையில் தொங்குவது போல சிலருக்கு வாழ்க்கை அமைவதுண்டு.

குடும்ப உறவுக்குள் பேசி தீர்க்க முடியாத எதுவும் இல்லை என்று சொல்லுவது உண்மை தான். ஆனால் இன்றைய வர்த்தக அடிப்படை உலகில் அதையும் தாண்டி சிலர் எதிர்பார்க்கும் போது அந்த உறவுகள் சுமையாகவே இருக்கிறது.

மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத எந்த ஒரு உணர்வுக்கும் உந்த உலகத்தில் மதிப்பே இல்லை. அது கோபமாக இருந்தாலும் நீங்கள் வெளிபடையாக மற்றவர்களுக்கு உணர்த்தும் போது தான் அந்த உணர்ச்சியின் உண்மை தாக்கம் மற்றவர்களுக்கு தெரியும்.

இந்த வாழ்க்கையில் நம்மின் மீது வெளிப்படுத்தப்பட்ட துரோகம்,அவமானம் என்ற பல உணர்வுகளை நாம் கடந்து வந்திருக்கலாம், ஆனால் இவை எல்லாவற்றிக்கும் பின்பும் நாம் பின்னர் வாழ்ந்து காட்டுவது தான் நம் மீது வெளிப்படுத்தப்பட்ட அந்த உணர்ச்சிகளுக்கு மிகச்சிறந்த பழிவாங்கலாக இருக்கும்.

சில நேரங்களில் நாம் எல்லாவற்றையும் மெளனமாக கடந்து விடுவதில் கிடைக்கின்ற  நிம்மதியைப்போல பேரமைதி வேறெதுவுமில்லை. இப்படி கடந்துபோவது பல பிரச்சினைகள் எழுவதை முற்றிலும் தடுக்கும். ஆனால் எல்லாவற்றையும் சுயநலத்தோடு கடந்துபோவதும் தவறு. நம் சொந்த காரியங்கள் தவிர்த்து பொதுவெளியில் சமூக அக்கறையுடன் காரியங்களை நாம் அணுகினால் நமக்கு ஏற்படும் சில இழப்புகளை விட இந்த சமூகம் சிறக்கும் என்ற நோக்கம் நமக்கு இருக்க வேண்டும்.

Don't give up what you want most, for what you want now. - Zig Ziglar என்பது போல தற்போதைக்கு நெருக்கும் தேவையின் மன அழுத்தத்தில் உங்கள் மனம் நீண்ட காலமாக என்ன விரும்பியதோ அதை விட்டுவிட வேண்டாம்.

வாழ்க்கையில் துன்பங்களும், வேதனைகளும், சோதனைகளும் வருவது என்பது தவிக்க முடியாத ஒன்று. ஆனால் சங்கடங்கள் வரும்போது தடுமாறாமல் இருப்பதும், சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாமல் இருப்பதும் தான் உண்மையான மனவுறுதி.

கவிஞர் ஆத்மார்த்தி அவர்கள் ஒரு பதிவில் சொல்லியிருப்பது போல, “இந்த வாழ்க்கையில் தனி மனது சொந்தம் கொண்டாட விழைகிற எல்லாமுமே அபத்தங்களாகவும் அற்பங்களாகவும் தான் பிறரால் பார்க்கப்படும். கலை என்பது கூட்டத்தின் கண் காது மனது இத்யாதிகளுக்கானவை அல்ல. ஒவ்வொரு பூவாய்க் கோர்த்த மாலை”.

நாம் வெளிப்படுத்த நினைக்கும் உணர்வுகளில் பொறாமையை முடிந்த மட்டும் தவிர்ப்பது சாலச்சிறந்தது. இன்றைய சூழலில் நம்மிடையே இருப்பவர்களில் பலர் “ஒருவரது நற்செயலை பாராட்ட மனதில்லாமல் கடந்து போவதை விட, காரணம் தேடி தேடி தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு கொண்ட பொறாமை நிறைந்தவர்கள்” தான் அதிகம்.

வாழ்க்கையில் வரும் எவ்வளவோ இழப்புகளைகூட ஏற்றுக் கொள்ள முடிகிறது, ஏனோ சில ஏமாற்றங்கள் மட்டும் இன்னும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது..!

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்



அன்புள்ள மான்விழியே..



உன் விழி தாமரையில் பூத்திருக்கும்
என் மௌனத்தின் புன்னகை
உன் மெல்லிய இதழ் விரிப்பில்
உதிர்ந்து விழும் என் வலிகள்..


நீ கனவுகளில் எழுதி சென்ற
இதழ் கவிதைகளில் சுவைகள்
நீர் காணா வயலென வெடித்துக்கிடந்த
உள்ளத்து வேதனையில் உயிர் நீராய் ஓடியது..

உன் விழிகளில் ஒளியாய்
உருகிப் பெருகி வழியும்
காதலெனும் பெருங்கருணை
என் எல்லாவற்றும் வடிகாலாய்..

நீ புன்னகையோடு அருகில் இருக்க
நான் எதையும் யோசிப்பதில்லை.
நீ விலகி இருக்கும் நேரமோ
எனக்கு சுவாசமில்லை.


சங்கர் நீதிமாணிக்கம்