வெள்ளி, 24 ஜூன், 2016

26. மீண்டும் வாழ்க்கை

வலைவீசும் எண்ணங்கள்

26. மீண்டும் வாழ்க்கை

முதன்முதலில் இந்த தொடரை ஆரம்பிக்கும்போது வாழ்க்கை என்ற தலைப்பில் தொடங்கினேன். வாழ்க்கை எளிதில் முடிவதில்லை. அது நம்மை பலவித சோதனைகளுக்கு ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.

ஏனோ மனம் ஒரு தடுமாற்றத்திலும், இனம் புரியாத பதட்டத்திலும், எப்படி..? சுற்றிலும் பல நல்ல உறவுகள் இருக்கையில் அன்பை புரிந்துகொள்ளது பிரிந்து போன ஒரு உறவுக்காக இப்படி ஒரு முடிவை அந்த தம்பி எடுத்தார் என்ற குழப்பமும் அவருடைய பதிவை படித்ததும் கேள்விகளாய் எழுந்தது..

இது நேற்றைக்கு  நாம் அனைவருக்கும் ஏற்பாட்டிருக்கும். அன்பரின் சிறிது நேர தடுமாற்ற மனநிலையில் எடுக்கப்பட்ட மிகத்தவறான மிகப்பெரிய முடிவு. அன்பர் நலமாக இருப்பதில் அனைத்து உள்ளங்களுக்கும் மகிழ்ச்சி.

உண்மையில் நம்முடைய மாசற்ற அன்பை மற்றவர் மீது வைக்கும்போது உள்ளம் அளவிட முடியாத மகிழ்ச்சியில் நிறையும். அதே நேரத்தில் அந்த நபர் நாம் கொடுக்கும் அன்புக்கு துளிகூட தகுதியில்லாதவர் என்று தெரியவரும்போது நம் மனம் என்ன பாடுபடும் என்பதையே அந்த கணநேர முடிவின் விளைவாய் நாம் அனைவரும் உணர வேண்டியதாக இருக்கிறது.

இதுபோன்ற நேரத்தில் மனதை ஆறுதல் படுத்த தனிமையை தவிர்த்து நல்ல நட்புக்களுடனோ, நம்மீது மிகுந்த அக்கறை கொண்ட உறவுகளுடனோ மனத்தின் பாரங்களை பகிர்ந்துகொள்ள துயரங்கள் நீக்கி தெளிவாக முடிவெடுக்க நல்வழி கிடைக்கும்.

வாழ்க்கையில் தற்கொலை என்பது பிரச்சனைகளின் முடிவு என்றால் இந்த உலகம் வெறும் எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும். எல்லா உயிரினங்களுக்கும் பிரச்னைகள் உண்டு. மனித இனம் தவிர எந்த உயிரினமும் இப்படியான முடிவை தேடுவதில்லை. எல்லாமே வாழ்க்கையின் பயணங்களில் வரும் அனைத்தையும் சமாளித்தே வாழ்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பலவிதமான போராட்டங்களுக்கு பின்னால் ஒளிந்து விளையாடி நமக்கு பூச்சாண்டி கட்டுகிறது.

உண்மையில் நாம் மிகவும் பலவீனமானவர்களா? பிரசனைகளை எதிர்கொண்டு வாழ வழியோ, தைரியமோ, தெம்போ இல்லாதவர்களா? கண்டிப்பாக மேற்சொன்ன எந்த காரணமும் இல்லை. நாம் கொண்ட ஆறாவது அறிவின் மூலம் கூடி வாழும் ஒரு சமுதாய விலங்காக இருக்கிறோம். இப்படி கூடி வாழும் வாழ்க்கையில் இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தே இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறோம். அத்தகைய வலிமையான மனம் நம்மிடம் இருக்கிறது.

இதில் எது நம்மை பலவீனப்படுத்துகிறது? “என்னடா... வாழ்க்கை “வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று எந்த சூழ்நிலை நம்மை சிந்திக்க வைக்கிறது? இந்த வாழ்க்கையில்

நம்முடன் யாரும் ஆயுதமேந்தி போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை சமாளிக்கும் திடம் நமது மனதிடம் இருக்கிறது. ஆனால் அந்த மனம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். அதுதான் உற்சாகம், அன்பு, அரவணைப்பு, காதல், நேசம், பாசம், கருணை என்று பலவிதங்களில் நாம் சொல்லும் தேறுதல்.

நாம் சோர்ந்திருக்கும் நேரத்தில் இப்படியான தேறுதல் தரும் ஒரு உறவோ, ஒரு வார்த்தையோ, சாய்ந்துகொள்ள ஒரு தோளோ, மடியோ, எதுவும் இல்லாமல் தனிமையில் நிற்பது போற்ற நிலையில் தான் நம்மிடம் இருக்கும் இந்த தைரியம் தொலைந்து போகிறது.

அதுவும் ஆத்தகைய நிலையில் நமது காயங்களை கீறும் அம்புகள் நாம் நேசிபவராலேயே வீசப்படும்போது தோன்றும் கையறுநிலை எண்ணமே “சே..என்னடா வாழ்க்கை இது? என்ற விட்டோத்தியான மனநிலை. இந்த மனநிலையில் நாம் தனித்திருக்காமல் அந்த நிமிடங்களை கடந்து விட்டால் வாழ்க்கை நம் வசப்பட்டுவிடும். அந்த சூழலை நாம் தான் உருவாக்க வேண்டும்.

இந்த அற்புதமான மனிதபிறப்பு என்பது நாம் தேடிப்பெறுவது அல்ல... அதுவாக நமக்கு அமைந்தது. இந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களை நாம் பலநிலைகளில், பல விதங்களில் தினம் தினம் சந்திக்கிறோம், ஆனால் அவைகளில் பெரும்பாலானவை அற்பமானவையாக இருப்பதால் எளிதில் கடந்துவிடுகிறோம். நம்பிக்கையே நமது வாழ்வின் விடிவெள்ளியாய் இருப்பதால் அதைக்கொண்டு பலவற்றை கடக்கிறோம்.

உலகத்தில் ஏமாற்றுபவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக தங்களின் செயலுக்கு வெட்கப்படாமல் வாழும்போது, ஏமாறும் நாம் ஏன் குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்று கூனிக்குறுகி நமது வாழ்க்கையை தொலைக்க வேண்டும். அவர்களே வாழ்கையை வாழும்போது, நேர்மையுடன், அன்புடன், பண்புடன் இருக்கும் நமக்கு ஒரு வழி இல்லாமலா போய்விடும்.

மண் மூடாமல் விதைகள் என்றைக்கும் முளைப்பதில்லை. என்றைக்கும் பாரம் சுமக்காமல் மனதில் தெளிவு பிறப்பதில்லை. பாரங்கள் அழுத்த அழுத்தத்தான் கரியும் வைரமாகிறது.

உலகில் நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேடும் கடவுள், அன்பு, காமம், மகிழ்ச்சி, விளையாட்டு, பிரார்த்தனைகள் எல்லாமே நமக்கு வரும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அல்ல.. அந்த பிரச்னைகளை மனம் தாங்கும் வலிமையைப் பெறுவதற்காக மட்டுமே. என்றைக்குமே.. வரும் பிரச்சனைகளை மனம் தளராமல் வென்றெடுக்க வேண்டுமேயன்றி அந்த பிரச்சனைக்கு வாழ்க்கையை பலியாக்கக்கூடாது.

இந்த வாழ்க்கையில் நம்மை சுற்றியுள்ள உறவுகள் உடையும் நேரத்தில், உருகும் நேரத்தில், ஒளியும் நேரத்தில் நமது மனதின் மூலம் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக தீர்மானிப்பதில் தான் நமது வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. எவ்வளவு தான் மனத்துணிச்சலுடன் இந்த உலக வாழ்வை நீங்கும் முடிவு எடுத்தாலும் அது நிச்சயம் கோழைத்தனமான முடிவு மட்டுமே..இதில் போற்றுவதற்கு எதுவுமேயில்லை.

மனம் உடையும் நேரத்தில் கொஞ்சம் நட்புக்கள், கொஞ்சம் சேவைகள், கொஞ்சம் வாசிப்புகள், கொஞ்சம் எழுத்துக்கள், கொஞ்சம் பகிர்தல்கள் என்று அந்த கவலைகளை போட்டு மூடுங்கள். கொஞ்சநாளில் அங்கு ஒரு அழகிய பூச்செடி வளரும்.

சமீபத்தில் படித்த “ கோடி பேர் வாழும் பூமில் அவர்களுக்கென்று ஒரு மூலை இல்லாமலா போய் விடும். தன கிளைகளில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும் மரம் இடம்  வைத்திருக்கத்தானே செய்கிறது. பழுத்து விழுவதற்கும் தன்னை முறித்து வீழ்வதற்கும் எத்தனையெத்தனை வேறுபாடுகள்.

வாழ்வதற்கான கஷ்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ள கைக்கொள்ளும் தைரியத்தைவிட, மரித்துப்போக நொடிப்பொழுதில் எடுக்கும் தைரியம் பலமடங்கு கூடுதலானது... வாழ தேவையான தைரியத்தைவிட சற்றே கூடுதல் தைரியம் கொண்டு சாகத்துணிபவரின் விரல் பிடித்து தைரியத்தை இடம் மாற்றி வைக்க சொல்லமுடியாதா?.. அவர்கள் இல்லாமலே போவதை எப்படி அனுமதிப்பது? இப்படியிப்படி எண்ணற்ற மொழிகளில் மனதிற்குள் அழுத்தும் குற்றப்பத்திரிகைகள் சார்ந்த வாதங்களுக்கு பதிலற்றே போய் விடுகிறது.

எவருக்கும் சாவதற்கான காரணங்களைவிட வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது. தேடிபார்ப்போமே...

வாழ்வோம்.. வாழ்க்கை அதுவாய் பழுத்து உதிரும் வரை

என்ற நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் வரிகளை இங்கு எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

வெள்ளி, 17 ஜூன், 2016

25. சுகமா? சுமையா?

வலைவீசும் எண்ணங்கள்

25. சுகமா? சுமையா?

வாழ்வின் உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது? உண்மையில் நமது வாழ்க்கை வெறும் சந்தோசங்கள் மட்டுமே நிரம்பியதா? இன்றைய வாழ்க்கை சூழலில் மனித வாழ்க்கை என்பது சுமைகள் நிறைந்த ஒரு பயணமாக இருக்கிறதா இல்லை சுகங்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததாக இருக்கிறதா? வாருங்கள் அப்படியே வாழ்க்கையில் பயணப்பட்டு வலைவீசி தேடிப்பார்ப்போம்.

இன்றைய உலக சூழல், வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில் மனித குலத்தை நிறுத்தியுள்ளது. கொஞ்சம் ஆசுவாச படுத்த நிற்கலாம் என்றால் பிறர் நம்மை கீழே தள்ளி மிதித்துக்கொண்டு ஓடும் நிலையில் சுற்றிலும் போட்டிகள் நிறைந்து இருக்கிறது. அது வியாபாரம் ஆகட்டும், விளையாட்டு ஆகட்டும், வேலைகள் ஆகட்டும், அரசியல் ஆகட்டும். கொஞ்சம் அசந்தால் போதும் நம்முடைய நிலை (position) (வேலையில், தொழிலில் நமது நிலை) நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது.

எத்தனை எத்தனை ஆண்டு போராட்டமாக இருந்தாலும் கொஞ்சம் அசந்தால் எல்லாம் பறிபோகும் அபாயத்தில் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. இந்த இறுக்கமான சமூக சூழலில் இன்பம், சந்தோசம், ஓய்வு எனபது இடையில் கிடைக்கும் சின்ன விருந்துகளாக நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. மூச்சுக்காற்றாய் இருக்கும் வாழ்க்கையின் சுமைகளை சுமந்து செல்லும் நமது பயணங்கள் எல்லாமே சந்தோசத்தின் எல்லையை நாம் தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையின் வேர்களை பற்றிக்கொண்டு முன்னேறுகிறது.

சூழ்நிலை கைதியாய் வாழ்க்கை இன்றைக்கு நம்மை சிறைபடுத்தி வைத்துள்ளது. எத்தனை எந்தனை வஞ்சனை, சூழ்ச்சி, வேலை அழுத்தம், எந்தனை கிடுக்கிப்பிடிகள். இத்தனை அழுத்தங்களையும் மனதில் தாங்கி நாம் வாழ்வதின் காரணம் வாழ்க்கை எனபது என்றைக்கும் சுகமான ஒரு பயணம் என்பதே. நாம் சுமக்கும் அனைத்து சுமைகளையும் நமது வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சந்தோஷ தருணங்களும் இறக்கி வைத்து விடுகிறது.

இன்றைக்கு வேலையின் பொருட்டு நிற்காமல் ஓடும் ஆண்களாக இருந்தாலும் ஒருபுறம். படிப்பு சுமை அழுத்தும் பிள்ளைகள் நிலையாகட்டும், கணவனை, பிள்ளையை கவனித்து அரைகுறையாக வயிற்றை நிரப்பி வேலைக்கு ஓடும் பெண்களாகட்டும் மாலையில் வீடு திரும்பியவுடன் வீட்டில் அனைவரும் ஒன்று கூடி பகிரும் மகிழ்ச்சியில் தான் வாழ்வின்  சூட்சுமம் ஒளிந்துகொண்டு நம்மை வாழ வைக்கிறது.

நாம் படித்து கடந்து வந்துள்ள வரலாறுகளில் “கஜினி தோற்றிருக்கிறார்; எடிசன் தோற்றிருக்கிறார்; பெர்னார்ட்ஷா பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார் ஆனால் அவர்கள் எல்லோரும் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி பெற்றதால் தான் அவர்களின் வரலாறுகளை படிக்கிறோம். சுமைகள் மட்டுமே வாழ்க்கை என்றால் தோல்விகள் மட்டுமே தொடர்கதைகள் அல்லவா.

நமது சுமைகளின் வலிகள் நம்மை எவ்வளவு அழுத்தினாலும், நாம் தோல்விகளால் துவளாது நமது பாதையில் பயணங்களை தொடர்த்து கொண்டு இருக்கையில் வெற்றி நம்மை தேடி வருகிறது. உண்மையில் “முதல் தடவை செய்வது முயற்சியல்ல, மூச்சுள்ள வரை செய்வதே முயற்சி' என்பதே வெற்றியின் ரகசியம். அந்த வெற்றியே நம்பிக்கையின் வேர். நம்பிக்கை சந்தோசத்தின் ஆரம்பம்.

நூற்றாண்டுகளுக்கு முன் கண்ட பூமி இன்றைக்கு இல்லை. 'பூமி வெப்பமாகி வருகிறது, கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இது எல்லாமே மனித தவறுகளே. நாம் வாழ்க்கை இனிக்க வேண்டுமானால் நமது வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல இயற்கையுடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்.

இன்றைய நமது சுமைகளுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் நாமே காரணம். ஆசைகளின் எல்லைகள் விரிய விரிய நமது சுதந்திரந்தின் எல்லை சுருங்கி வாழ்வின் இன்பங்கள் ஒளிந்துகொண்டு நம்மை தேட வைக்கிறது. பிறருடனான நமது எதிர்பார்ப்புகளையும், நமது ஆசைகளையும் சுருக்கிக்கொள்ளும் போது நமது சுதந்திரந்தின் எல்லைகோடு மகிழ்ச்சியை நமக்கு தாராளமாக தந்து விரிவடைகிறது.

நேசங்களை நாம் எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லோருக்கும் கொடுக்கும்போது பாசங்களும், இன்பங்களும், அன்பு நெஞ்சங்களும் நம்மை சூழ்ந்து நமக்கு சாமரம் வீசும்..

நமது மனதில் போட்டி, பொறாமை ஒதுக்கி அன்புடன் விட்டுக்கொடுத்து வாழும்போது வாழ்வில் நம்பிக்கை கூடி சந்தோசம் பூக்க ஆரம்பிக்கிறது. நாம் தற்புகழ்ச்சியை வெறுத்து,  பெரியவர்களுக்கு உண்டான மதிப்பு கொடுத்து,  'நான்' தொலைத்து “நாம் என்ற எண்ணத்தோடு குழுவாக இணைந்து செயலாற்றும்போது வெற்றிகள் நமக்கு “சந்தோசம் என்ற பூச்செண்டை வாசலில் வைத்து நமக்கு சேவகம் செய்யும்.

நாம் பெரும் வெற்றியில் கர்வம் கொள்ளாமல் நம்மிடம் தோற்பவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களை நம்முடன் இணைத்து பயணிக்க மனதை பண்படுத்த வேண்டும். அவர்கள் நம்மிடம் தோற்கவில்லை என்றால் நமக்கு ஏது வெற்றி? தோல்வி அடைந்தவரின் அவர்களின் போராட்டமும் உண்மையான உழைப்பு தானே. அதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியதும் அவசியம் தானே.

உண்மைகள் புரிந்துகொள்ளப்ப்படும்போது எல்லாமே இன்பமாக இருக்கும். பொய்கள் வென்றாலும் நிலைக்காது என்ற உண்மையை ஏற்று அமைதியாக நாம் வாழும் போது நமது மனதின் துக்கங்கள் தீர்ந்து வாழ்க்கை இனிதாகிறது.

நாம் வாழும் இந்த பூமியில் நமது வாழ்க்கை ஒரு பயணம் மட்டுமே... ஆனால் நாம் அனைவரும் ஒரு தேவையை மனதில் கொண்டு அதை தேடி நமது பயணத்தை தொடங்கி கடைசியில் வாழ்க்கையை ஒரு பந்தயகளமாக மாற்றி சோர்ந்துபோய் நிற்கிறோம்.

வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை நம்மை அழுத்தும்போது கடவுளை நிந்திக்கிறோம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.. எல்லா கிளைகளிலுமா பறவைகள் கூட்டமாக அமர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறது. இல்லையே.. “தாங்குகிற கிளைகளில் மட்டுமே பறவைகள் தங்குகிறது இந்த உண்மை நம் மனதில் பதிந்தால் நம்முடைய வேதனைகள், துக்கங்கள், சோதனைகள் எல்லாம் இன்பத்தின் வேர்களுக்கான உரங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

நம் வாழக்கை என்றைக்கும் சுகமாக இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் தடையின்றி கிடைக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை என்பது கனவில் நடப்பது இல்லை. சந்தோசங்களும் என்றைக்கும் கனவாய் போவதில்லை. நம்முடைய எண்ணங்களில் அடிப்படையிலேயே வாழ்வின் சுவைகளும், இன்பங்களும், களிப்புகளும் நமக்கு கிடைக்கிறது.

பணமிருந்தால் எல்லாம் சாதிக்கலாம, பணமே சுகத்தின், இன்பத்தின் நுழைவுச்சீட்டு என்று ஒரு கூட்டம் இந்த உலகத்தில் கூப்பாடு போட்டு வாழ்கிறது.. பணம் தான் சுகம் என்பது வெறும் கானல் வரிகளே. அந்த பணத்தை அளவில்லாமல் வைத்திருப்பவனிடம் கேட்டால் நிம்மதி என்பது பணத்தால் கிடைக்காது என்பதை பல கதைகள் சொல்லி நமக்கு வகுப்பெடுப்பார்கள்.

முன்பே சொன்னது போல ஆசைகளை கட்டுக்குள் அடக்கி வாழ்வதில் தான் வாழ்வின் சுகம் ஒளிந்துள்ளது. இன்றைய சூழலை நாம் உற்றுப்பார்த்தால் நம்மை சுற்றிலும் ஆசையை தூண்டும் காரணிகளே நிறைந்துள்ளன. அந்த சூழலில் இருந்து விலகும்போது சந்தோசம் நம் தோளில் வந்து அமர்ந்து நலம் விசாரிக்கும். அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஞானிகள் சொல்லுவது போல நாமும் நமது குறிக்கோளை விரிவாக்கி வாழ முடியும். ஆனால் அந்த ஆசைகள் வெறும் பகட்டு சார்ந்ததாக இல்லாமல் உறவுகளின் மகிழ்ச்சி சார்ந்ததாக இருக்கும்போது சந்தோசம் இன்னும் கூடும் எனபது உண்மையல்லாவா?

நிலையாமை என்பது உலகின் நியதி. இந்த நிலையாத வாழ்வியல் பயணத்தில் நம்மால் ஆன சிறு சிறு உதவிகள் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களை சந்தோசப் படுவோம். அது பொருளாக கொடுத்து தான் என்பதல்ல. நமது சிறு செய்கையும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும். ஒரு நன்றியிலும், ஒரு புன்னகையிலும், ஒரு அன்பு வார்த்தையிலும் நாம் பிறருக்கு சந்தோசம் தர முடியும்.

இயக்குனர் திரு. பாக்கியராஜ் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் அடிக்கடி சொல்லுவது “சந்தோசத்தில் பெரிய சந்தோசம் மற்றவர்களுக்கு அந்த சந்தோசத்தை தந்து பார்க்கும்போது வரும் சந்தோசமே. நீங்களே ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன் இந்த சந்தோசத்தை..


“தாங்குகின்ற தகுதி இருக்கின்ற கிளைகளில் தான் பறவைகள் வந்து அமர்கிறது...... நாம் சந்தோசம் என்னும் கிளை பரப்பி வைப்போம். சந்தோசம் தேவைப்படுபவர்கள் வந்து அமரட்டும். நாமும் அதில் சந்தோசம் காண்போம்.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:


1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே தவறை
இன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது.

2.யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

3.நமக்கு பிடிக்காதவாரகவே
இருந்தாலும் அவரின்
சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்.

4.'என்ன வாழ்க்கைடா இது' என்று
நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று
எண்ணி
வாழுங்கள்..

5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது
தாழ்வு
மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான
அன்பு
என்பது அதுதான்..

7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்.
.
8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம்
சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக்
கொள்ள முடியுமா என்று..

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்
சிறு புன்னகை
உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்..

வியாழன், 16 ஜூன், 2016

முழுமையடையாத சிற்பமாய்

செதுக்க செதுக்க
இன்னும் முற்றுபெறாத
ஒழுங்கற்ற சிலை நான்....

தாய் தந்தை பாராட்டு உளிகள்
மனதில்
அன்பு பாசம் நேசம்
நம்பிக்கை நன்றி
வடிவத்தை என்னில் ஆழ செதுக்கியது...

வாழ்வின் தனிமையில்
நட்புக்கள் புரிதல் உளிகளால்
என் பாதையை மாற்றாது புதுபலத்துடன்
என்னை செதுக்கின..

என்னில்.....
காலத்தாலும் செதுக்க முடியவில்லை
கடந்து சென்ற சிற்பிகளாலும்
பதிக்க முடியவில்லை..
துரோகத்தின் வேர்களை..

என் மேல் விழுந்த
துரோக உளிகளின் அடிகள்
என்னில் ஆழப்பதியவிடாமல்
விலக்கி நின்றேன்..

நான் கடந்த
புத்தகங்களும்
படித்த நெறிகளும்
நம்பிக்கை வார்த்தைகளும்
உடனிருக்கும் அன்பின் பிறப்புகளும்
இன்றும் என்னை செதுக்குகிறது..

சிலரிடம் நம்பிக்கையின் உளிகளை தந்து
செதுக்க அனுமதித்தபோது
அவர்கள்  என் நெஞ்சை துரோகத்தின் உளிகளால்
சிதைக்கும் முயற்சியில்
என் மன்னிப்பின் உளிகளை கொடுத்து
கடந்து போக சொன்னேன்..

என்னை முழுசிற்பமாகும் முயற்சியில்
எந்த உளிகளாலும்
என் அன்பின் நம்பிக்கையை
உண்மையின் பார்வையை
சிதைக்க முடியவில்லை....

ஆம்... 
அவைகள் ஆதியிலேயே
மிக அற்புதமானவர்களால்
மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..

இருந்தாலும்.......
இன்னும் முழுமையடையாத சிற்பமாய்
நான்...
முழுமையாக்கும் சிற்பிக்காய் நான்...



புதன், 15 ஜூன், 2016

சாதிக்கும் லட்சிய பெண்ணடி நீ..

சாதிக்கும் லட்சிய பெண்ணடி நீ..

வாய்ப்பூட்டு சமுதாயத்திலும் நீ
மௌன சாட்சியாய் குடும்பத்தின் ஒற்றுமைக்கென
வாழ்ந்து வளம் சேர்த்தாய்..

உன்னை கட்டுக்குள் வைத்து
அடிமையாய் நடத்திய சமூகத்தின்
கட்டுக்களை பொறுமை ஆயுதத்தால்
மெல்ல மெல்ல அறுத்தெரிந்தாய்...

நூற்றண்டு கனவுகளை கண்களில் தேக்கி
தடைகளை தாண்டி தொடங்கிய உன் பயணம்
இன்னும் முற்று பெறாமல்...

முள்ளின் பாதைகளையும்
தீயின் வார்த்தைகளையும்
அமிலத்தின் மழைகளையும்
வென்று உன் பயணத்தை தொடரும்
நீ லட்சிய பெண்ணே..

ஒப்பீட்டு அளவில் உன் விடுதலையாய்
இன்றைய முன்னேற்றங்கள் என்று சொன்னாலும்
கண்ணுக்குத்தெரியாத பிணைகள்
இன்னும் கூட்டுக்குள் அடைக்க முயற்சிக்கிறது....

சாதனைகள் பலவற்றில் சிகரம் தொட்டுவிட்டாய்..
அந்த சாதனைப் பயணங்கள்
வாழ்த்து சொல்லுதடி
நீ லட்சியப் பெண்ணென்று..

உன் சாதனைகள் எல்லாம்
அன்பெனும் இழையில் எல்லோரையும்
அணைத்தே செல்லட்டும்.....

உன் தொடரும் முன்னேற்றப்பயணம்
காட்டாற்று வெள்ளத்தின் வேகமாய் இல்லாமல்
மெல்ல அணைத்து புன்னகைக்கும் வசந்தகாலத்தின்
இனிமையாய் தொடரட்டும்..

திங்கள், 13 ஜூன், 2016

நேசம்

பேதங்களை துடைக்கும்
பிரியங்கள்
அன்பின் பற்றுகையில்
நம்பிக்கையின் நேர்மையில்
பூக்கிறது..

தவிப்பு

கடமை அழைக்கையிலே 
கால் கட்டி நிற்கிறது பாசம்..
கடமைக்கு கால் கொடுப்பதா?
பாசத்திற்கு பணிந்திருப்பதா?
கனத்த மனதோடு
கடமை பெரியதென
பாசத்தை தவிக்கவிட்டு
புறப்படுகிறார் இவர்...
புரியாத உள்ளங்கள் 
ஒரு "உச்" என்ற ஒலியோடு
கடக்கிறது மனிதத்தை..

சனி, 11 ஜூன், 2016

ஏக்கம்

வறுமையின் பிடியில் நின்று
வாடிடும் கண்களே..
வாழ்க்கையின் ஓட்டத்தில் அணைபோட
வறுமை சுவர் வலியது இல்லை..
மனதின் எண்ணத்தில் கூர் தீட்டி
உழைப்பினில் குலையாத உறுதி கூட்டி
வறுமைக்கு மயங்கிடாமல்
வீறுகொண்டு நடைபோடு..
பாலையிலும் பூக்கும் சோலைகள் உண்டு..
முட்கள் நிறைந்தாலும் பாதைகள் நமக்குண்டு..
பாடங்கள் படிக்க உனக்கும் இடமுண்டு..
பாதைகள் வகுக்க உனக்கும் திறமுண்டு..
எட்டா கனவுகள் அல்ல
நீ ஏங்கி நிற்கும் வசதிகள் ...
ஒட்டிப்பிறந்த நகமும் சதையுமல்ல

நீ கொண்டிருக்கும் வறுமையும் ஏக்கமும்..

உடன்பிறந்தசகோதரிக்கு


தாயாகி சேயாகி அன்பூட்டும் தங்கச்சியம்மா..
உன் புன்னகை மொழியில் தினம் பூக்கிறேன்..
இல்லாத சொந்தத்தை உண்டாக்கி தந்தாய்..
நெஞ்சத்தின் வெற்றிடத்தை நிறைவாக்கி கொண்டாய்..
உன் வார்த்தையின் வருடல்கள் எனக்கு சாமரம் வீசுகிறது
உள்ளத்தில் உயரிடத்தில் வைத்த உனக்கு
யாதும் செய்திடா நிலையில்.சூழல்..
தெரியும்.. என்றும் எதிர்பார்க்க மாட்டாய்..
ஏனோ மனதில் ஒரு ஏக்கம்..
காலங்கள் மாறும்..
நிலைமையில் மாற்றம் வரும்
உன் துயரங்கள் தீர்ந்துவிடும்..
வாழ்த்துக்களை அள்ளி வீசி...
வாழ்த்தும் அன்புள்ளம் என்றும் நலமே..
எல்லாம் மாறிவிடும் நம்பிக்கை தீராது..
எல்லாம் நல்லதாகும் பொற்காலம் வந்துவிடும்..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
தூரங்கள் இன்றைக்கு தூரங்கள் அல்ல..
துயரங்கள் என்றைக்கும் துயரங்கள் அல்ல..
இனிமை பூத்துவிடும்..
உன்னை காணும் நாளில்
கண்களும் பணித்துவிடும்..

வெள்ளி, 10 ஜூன், 2016

24. தேடல்கள்?

வலைவீசும் எண்ணங்கள்

24. தேடல்கள்?

தேடல்.. ஒருவருக்கு தேவை என்னவோ..? ஒருவருக்கு எது கடினமான செயலாக இருக்கிறதோ..? அவரின் தேடல் அந்த தேவையை நோக்கியும், செயலை எளிதாக்கும் வழியை நோக்கியுமே இருக்கிறது. வாங்களேன் நாமும்  கொஞ்சம் வலைவீசி தேடுவோம்..

தேடல்கள் என்பது என்றைக்கும் ஒரு இலக்கை நோக்கியே அமைகிறது. இலக்கு இல்ல பயணம் எங்கு செல்லும்? அது தேடலா என்றால் இல்லை என்றே அனைவரிடமும் பதில் வரும்.

ஒருவர் தன்னுடைய தேடலில் முனைப்புடன் இருக்க, அவரின் குறிக்கோளை நிச்சயம் அடைவார் அல்லது தேடலின் விடைக்கான சூட்சுமத்தை புர்ந்துகொண்டு அதை பகிர்ந்து கொள்ள.. அதே தேடல் கொண்டவர் அந்த சூட்சுமத்தின் வழி சென்று தேடலை கண்டடைகிறார்கள்..

நாம் இன்றைக்கு அனுபவிக்கும் பல கண்டுபிடிப்புகளும், படைப்புகளும் ஒரு சிலரின் அல்லது பலரின் தேடலின் பலன்களே..

தேகத்தில் நோயும், மாற்றங்களும் உணரும் மனிதன் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும், நோயிலிருந்து தப்பிக்கவும் தேடிய தேடலின் முடிவே மருத்துவ அறிவியல் என்றும் உயிர் காக்கும் வழி.

மனதில் நினைக்கும் செயலை வென்றெடுக்க முற்படும் மனிதனின் தேடல்கள் மிகவும் சுவாரசியமானது. சமயங்களில் அவன் தேடுவது ஒன்றாக  இருக்க கண்டடைவது வேறொன்றாய் இருக்கும்.

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்க தன்னுடைய தேடலை தொடங்கிய கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்க கண்டம்.

1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்கு பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் அந்நேரம் கண்டுபிடித்தது செயற்கை பிசின் அல்ல! தற்செயலாக நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கை உருவாக்கி விட்டார். இவரின் இந்த மாபெரும் கண்டுபிடிப்பால் இன்று எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் காணமுடிகிறது.

அரசன் கொடுத்த கிரீடத்தில் கலப்படம் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற தேடலின் சிந்தனையில் இருந்த ஆர்க்கிமிடிஸ் அதற்க்கான வழி அறிந்ததும் கொண்ட உற்சாக கதையை நாம் அறிவோம்.

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற நமது தமிழ் பழமொழிப் படி திசையறியா நாடுகளை எல்லாம் கண்டறிந்து கடல் தாண்டி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி பொருள் தேடி நாட்டை செழிக்க வாய்த்த தமிழ் மரபினரின் தேடல் அதிசுவாரசியமானது.

உலகில் நமது தேடல்கள் தான் நமது திசைகளையும் தீர்மானிக்கிறது. இன்பத்தின் தேடல் கலைகளையும், கலைகளின் மீதான தேடல் ஆழ்ந்த நுட்பங்களையும், நுட்பங்களின் மீதான மோகமும், கடும் தேடலும் நவீனங்களை நமக்கு தந்திருக்கிறது.

எவ்வளவோ தேடல்கள் இருந்தாலும் இன்றைக்கு நம் அனைவரின் தேடலின் புள்ளியும் முதலில் ஆரம்பிப்பது பொருள் தேடலிலும் பின்னர் பொருளை போதுமான அளவு சேர்த்ததும் அந்த தேடல் நிம்மதியை நாடியும் திசை மாறுகிறது.

இந்த நிம்மதியை நோக்கிய தேடலின் விடை தான் கடவுளை அடைய செய்கிறது. கடவுள் எல்லோர் மனதின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஆழமாக இருக்கும்போது மனிதன் தன் பாரங்களை இறைவனின் மீது இறக்கி வைத்து நிம்மதியை அடைகிறான்.

பண்டைய மக்களின் தேடலில் கிடைத்த அளப்பரிய சாத்திரங்கள் தான் இன்றைக்கு நமது தேசத்தின் மிகப்பெரிய பண்பாடு சொத்து. காலத்தால் அழியாத திருக்குறளும், அளப்பறியா கருத்துக்களை கொண்ட வேதங்களும் உலகில் எந்த நாட்டில் இருக்கிறது?

ஆதியில் மனிதன் தன் பயத்தை தீர்க்க தேடிய தேடலின் முடிவாக இயற்கையை படைத்தல், காத்தல், அழித்தல் என்று பாகுபடுத்தி அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிட பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுளின் தோற்றம் நிகழ்ந்தது.

இந்த முத்தொழில் தான் கிருஸ்துவ வேதத்தில் படைத்தல், காத்தல் போன்றவற்றுக்கு பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஜீவனாகவும், அழித்தலுக்கு சாத்தானகவும் உருவகம் தரப்பட்டுள்ளது.

இந்திய வேதத்தில் மும்மூர்த்திகளுக்கு மேலான பரம்பொருள் ஒன்றும் இருபதாக கருத்துக்கள் உண்டு.

இதை விளக்க ஒரு கதை உள்ளது... மும்மூர்த்திகள் அவர்களுக்குள் பெருமைப்பட்டு பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு சிறுவன் தோன்றி ‘உங்கள் தொழில் என்ன? என்று மூவரிடமும் கேட்க அவர்கள் தங்களின் பிரதாபங்களை சொல்லுகிறார்கள்..

அந்த சிறுவனோ பற்குச்சி அளவு கொண்ட துரும்பை தன் கையில் வைத்திருக்கிறான். அதை காட்டி பிரம்மாவிடம் இதுபோல ஒன்றை படைத்துத்தாருங்கள் என்று கேட்க.. பலமான முயற்சிக்கு பின்னாலும் முடியவில்லை.

பின் விஷ்ணுவிடம் வரும் சிறுவன் கைநீட்டி துரும்பை பார்க்க அது மெல்ல கரைய தொடங்கும்போது “இப்போது இதை காப்பாற்றுங்கள் என்று சொல்ல..விஷ்ணுவின் முயற்சி தோல்வியில் முடிய துரும்பு மொத்தமும் கரைந்து காணமல் போகிறது.

மீண்டும் துரும்பை உருவாக்கி சிவனிடம் காட்டி, இதை அழியுங்கள் என்று சொல்ல எவ்வளவு பிரயத்தனம் செய்தும் துரும்பில் சிறு பகுதியையும் அழிக்க முடியவில்லை.

பின்னர் பிரம்மாவிடம் திரும்பியா சிறுவன்,என்னை என்னை படித்தீர்களா? என்ற கேள்வியை கேட்க... பலமாக யோசனை செய்து பலவற்றை ஒப்பிட்டுப்பார்த்தும் இந்த சிறுவனை படைத்த ஞாபகமே அவரின் சிந்தையில் வரவில்லை.

சிறுவனோ திடீரெண்டு மறைந்து போனான். பின்னரே மும்மூர்த்திகளும் தங்கள் மாயையில் இருந்து விடுபட்டு தாங்களுக்கும் மேலே ஒரு பெரும் சக்தி இருப்பதை அறிந்தனர்

இந்த கதை பரமஹம்ச யோகானந்தர் எழுதிய “மனிதனின் நிரந்தர தேடல் என்ற நூலில் உள்ளது.

மனிதன் எதை எதையோ தேடினாலும் அவனின் நிரந்தர தேடல் ஆன்மாவை அடக்குவரும், ஆன்மாவை உணருவதும், ஆன்மாவை அமைதி படித்டுவதும் ஆகும். அதற்குரிய வழியே கடவுள் நம்பிக்கை, வழிபாடு, தானதர்மங்கள் என்று பல வழிகள்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.