வெள்ளி, 29 ஜனவரி, 2016

5. அலட்சியங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

5. அலட்சியங்கள்

அன்பு தோழமைகளுக்கு வணக்கம். வலைவீசும் எண்ணங்கள் தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

“ஒரு வார்த்தைகள் எவ்வளவு வலி தருமோ அதே அளவு வலியை சில அலட்சியங்கள் நமக்கு தருகின்றன.

படித்த வாசகம் ஒன்று இன்னும் நெஞ்சில் நின்று  யோசிக்க வைக்கிறது. “குழந்தைகளை அலட்சியம் செய்யாதீர். அது அவர்களை கொல்வதற்கு சமம். மேலோட்டமாய் பார்த்தல் அலட்சியம் எப்படி கொல்வதற்கு சமம் என்று தோன்றும். ஆனால் உங்கள் உள்மனதோடு கொஞ்சம் பேசி யோசனை செய்து பாருங்கள். ஒரு முக்கியமான நேரத்தில், முக்கியமான காரியத்தில் உங்களை யாராகிலும் அலட்சியம் செய்தால் அது உங்கள் மனதை என்ன  பாடுபடுத்துகிறது. பெரியவர்களாகிய நமக்கே இப்படி என்றால், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எப்படி அது மனதை வதைக்கும். குழந்தைகளுக்கு எல்லா நிகழ்வுமே முக்கியமானது தான். எல்லா அலட்சியமும் கொல்லுவது தான்.

குழந்தைகள் நீங்கள் சொன்ன பேச்சை அப்படியே கேட்க அவர்கள் பொம்மைகள் அல்லர். அவர்கள் சொன்ன பேச்சை கேட்பதில்லைஓர் இடத்தில் நிற்பதில்லைஇப்படி உங்கள் குழந்தைகளின் மீதான புலம்பல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. புரிந்து கொள்ளுங்கள்... துறுதுறுப்பும், சுறுசுறுப்பும்,  குறும்புத்தனங்களும் நிறைந்ததுதான் மழலைப் பருவம்.

இருந்தாலும் ஓர் எல்லை மீறி உங்கள் குழந்தை நீங்கள் சொல்லுவதை கேட்பதில்லையா? எந்த ஒரு விஷயத்திலும் முழு கவனம் செலுத்துவதில்லையா? எங்கும் ஓரிடம் இல்லாமல் எந்நேரமும் துறுதுறுவென அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? இந்த காரியத்தில் எப்போதும் குழந்தைதானேஎன்ற நினைவில் அலட்சியமாக விட்டு விடாதீர்கள். சில சமயங்களில் அது ADHD பிரச்னையாக கூட இருக்கலாம். கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

சரி அலட்சியம் என்றால் அப்படி என்ன பெரிய சங்கதியா? ஆம், அக்கறைக் காட்ட மறுப்பதின் மறுவடிவே அலட்சியம். நீங்கள் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்று உங்களைப்பற்றியே நீங்கள் அக்கறைப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களை நீங்களே அலட்சியமோ அல்லது உதாசீனமோ செய்கிறீர்கள் என்பது தானே...

அக்கறை உங்களை சுயவுணர்வுடனும், விழிப்புடனும் வைக்கிறது. சுற்றிலும் பார்த்து சூழலை கவனிக்க வைத்து முன்னேற்றத்தை முன்னிருத்தி வளர வேண்டும் என்ற ஆசையை மேம்படுத்துகிறது. இப்படியான எண்ணங்கள் நல்ல யோசனைகளையும், தேவைகளையும் தேடுகிறது. தகுதியை வளர்க்கிறது. திறமைகளையும், பலவீனங்களையும் பகுத்து ஆராய்கிறது.

நாம் பெற்ற தகுதிகளையும் ஆற்றல்களையும் வீணாக்காமல் சரியான முறையில் அவற்றை பிரயோகிக்க வழிகளை தருகிறது. வெற்றிகள் நம்மை லட்சியங்களின் வாசலில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அலட்சியம் செய்பவன் என்ன முட்டி மோதினாலும் எல்லா நிலைகளிலும் சிரமத்தையே சந்திக்கிறான்.  
நம்முடைய சில நிமிட அலட்சியம் பல மணித்துளிகளை விழுக்கி விடும். நம் வெளியூர் செல்லுகையில் இருக்கும் சில நிமிட அலட்சியம் நமது சேமிப்பை திருட்டுக்கொடுக்கிறது.

சாலை விதியில் அலட்சியம் உயிருக்கு எமனாகிறது. மனசாட்சியின் அலட்சியம் நிர்வாக பொறுப்பில்லாத அரசாய் நம் தலையில் விடிகிறது. வெயில் நேர அலட்சியம் மழைக்காலத்தில் நம்மை குலைநடுக்க செய்கிறது. மூத்தோர்களின் அனுவபம் மீதான அலட்சியம் நமக்கு பாடம் நடத்தி அனுபவங்களை தேட வைக்கிறது. உறவுகள் மீதான அலட்சியம் மன நிம்மதியை கெடுக்கிறது.

ஒவ்வொரு அலட்சியங்களும் நம்மை பலவழிகளில் சீரழிக்கிறது. எதனால் இந்த அலட்சியம்? சோம்பலும், இருமாப்புமா? அசட்டு தைரியமா? இல்லை அதீத தன்னம்பிக்கையா? எல்லாம் நோக்குங்கால் அழிவைத் தருவதும், ஆக்கத்தை நிறுத்துவதும், இலட்சியத்தை அடைய விடாமல் தடுப்பதும் இந்த அலட்சியம் மட்டுமே..

எதிலும் அலட்சியம்... தானாக எது நடந்தாலும் சரி என்ற அலட்சியம்... முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருக்கும் அலட்சியம்.... எந்த வழி செல்கிறோம் என்றே அறியாதிருக்கும் அலட்சியம்..... தன்னுடைய வாழ்க்கைக்கு தானே பொறுப்பேற்காமல் இருக்கும் அலட்சியம்.
.
இப்படியான பல அலட்சியங்களின் மீதான விலையும் மிகவும் அதிகமாகவே இருக்கும். அலட்சியங்கள் என்றும் எதையும் சாதிப்பதில்லை. எந்த ஒரு காவியங்களையும், மனம் மயக்கும் இசைகளையும், உயிரோவியங்களையும், அல்லது புது கண்டுபிடிப்புகளையோ தருவதில்லை. இந்த அலட்சியங்கள் பெரும்பாலும் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலேயே சாத்தியமாகின்றன.

தனிநபரின் அலட்சியம் அவரையும் கெடுத்து வீட்டையும் கெடுக்கிறது. அரசின் அலட்சியம் நாட்டையும், சமுதாயத்தை கெடுக்கிறது. சமுதாயத்தின் அலட்சியம் எதிர்கால சந்ததிகளை கெடுக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை. “எதையும் அலட்சியம் செய்து வாழ்பவர்கள் ஒரு நிலையில் யாருமே லட்சியம் செய்யாத கீழ்நிலைக்குத் ஒருநாள் தள்ளப்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, அவர்கள் வாழ்ந்த சுவடு இல்லாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் நாம் காட்டும் அலட்சியத்திற்கு நாம் தரும் விலைகள் மிகமிக அதிகமாகவே இருக்கும்.

இந்த அலட்சியமும் சிலநேரங்களில், சில சமயங்களில் மட்டும் நமக்கு நேர்மறை பலனைக்கொடுக்கும். எங்கே? எப்போது? உங்களிடம் வீணாக வம்பு வளர்பவர்களுக்கு நீங்கள் பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருங்கள். மலையைப் பார்த்து குலைப்பதால் மலைக்கு என்ன வலி? மலை என்ன பதில் தரும்.. அமைதி மட்டுமே தானே அதற்கு பதிலா கிடைக்கும்? உங்கள் எதிராளியிடமும் சில நேரங்களில் இந்த அலட்சியத்தை பின்பற்றும்போது உங்களுக்கு நேர்மறை பலனையே தரும். கொஞ்ச நேரம் அவர்கள் கத்திவிட்டு அமைதியாய் போய்விடுவார்கள். ஒருவர் திருப்பிக்குரைக்கும் போதும், தப்பி ஓடும்போதும் தானே அந்த எதிராளிக்கு வீரியம் வருகிறது. நீங்கள் செய்யும் அலட்சியம் அவர்களின் வீரியம் குறைத்து அமைதி தரும்.

அலட்சியங்களை கைவிடுங்கள்.. லட்சியங்கள் நமக்கு கைகொடுக்கும்..

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் – சங்கர் நீதிமாணிக்கம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

4. விட்டுக்கொடுத்தலும், அனுசரணையும்

வலைவீசும் எண்ணங்கள்

4. விட்டுக்கொடுத்தலும், அனுசரணையும்

அன்பு  தோழமைகளுக்கு வணக்கம். வலைவீசும் எண்ணங்கள் தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அன்றாட வேலைகளில் நாம் பலரையும் பலவிதங்களில் அனுசரித்து போவதினாலும், பல இடங்களில் பல காரியங்களில், பல நேரங்களில் விட்டுக்கொடுத்து போவதினாலும் பல்வேறு பிரச்சனைகளை பெரிதாக வளராவிடாமல் சிறிதாய் இருக்கையிலேயே தீர்த்துவிட முடிகிறது. விட்டுக்கொடுத்தலும், அனுசரனையும் நமது அடிப்படையான அகக்குணமாய் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?... எப்படி....?

நம்முடன் நட்பாய் இருக்கும் ஒருவரிடம் காணும் நமக்கு பிடிக்காத குணத்துக்காக நாம் அவரை சட்டென விலகிவிடுகிறோமா? இல்லையே.! அவர்களிடம் இருக்கும் பல நல்ல குணத்துக்காக அந்த பிடிக்காத ஒரு குணத்தை நாம் அனுசரித்து, ஒருசில காரியங்களுக்காக விட்டுக்கொடுத்தும் நட்பை தொடர்வதில்லையா?

வெளியிடங்களுக்கு தினந்தோறும் வேலை காரணமாக செல்கிறோம். அங்கெல்லாம் நாம் பல விதிகளையும் அனுசரித்து போவதில்லையா? நம்மை வெறுப்பேற்றும் பாவனையில் செல்லும் பலரின் செயல்களை அனுசரித்து, விட்டுக்கொடுத்து போவதில்லையா? ஒரு பொதுவாகனத்தில் பயணிக்கிறோம். யாரென்றே அறியாத, தெரியாத சகபயணிகளோடு நாம் அனுசரித்து பயணிப்பதில்லையா?  

அலுவலகத்தில் வேலை செய்கிறோம். சகபணியாளர்களோடு தினந்தோறும் நம்முடைய வேலைகளில் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நமது பணிகளை தொடர்கிறோமா? இல்லையா? அலுவலக வேலையாக வரும் பல வெளிநபர்களிடம் முகம் மலர, நட்புணர்வோடு அனுசரித்து பேச முடிகிறதல்லவா?

பல இடங்களில் பல தெரியாத நபர்களுடன், பல சம்பவங்களில், பல நாட்களில் நாம் பலவாறாக அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் முக்கியமாக அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும் வேண்டிய இடத்தில் இந்த குணத்தை நாம் மறந்துவிட்டு ஏன் அல்லல்படுகிறோம்?

நம்முடைய வாழ்வில் விட்டுக்கொடுக்கும் பழக்கத்தையும், அனுசரித்து போகும் குணத்தையும் பின்பற்றினால் எந்நாளும் வாழ்வில் இனிமையான நாள் தான். பைபிளில்  வரும் ஒரு கருத்து “உன்னோடே சண்டையிட்டு உன் ஆடையை ஒருவன் எடுத்துக் கொள்ளவிரும்பினால் அவனுக்கு உன் அங்கியையும் கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.  இந்த கருத்தை நம்மால் வெளியிடங்களில் எந்த அளவுக்கு பின்பற்றமுடியும் என்று தெரியவில்லை, ஆனால் எல்லோரும் நிச்சயமாக, கண்டிப்பாக இதை பிற்றக்கூடிய இடம் ஒன்று இருக்கிறது.

என்ன??? அந்த இடம் எது? எந்த இடத்தில் இந்த குணத்தை நாம் மறக்கிறோம், மறுக்கிறோம்? யோசிக்கிறீர்களா! தோழமைகளே..

நம் இல்லம் தான் அந்த இடம். ஒரு கணம் யோசித்து விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் போனால் காலமெல்லாம் இன்பமான, கனிவான வாழ்க்கை நமக்கு கிடைக்குமே? இன்பமயமாக இருக்க வேண்டிய நம் இல்லத்தில், வாழும் காலமுழுவதும் நம்மோடு இருக்கப்போகிற துணைகளிடம் ஏன் நம்மால் பெரும்பாலான நேரங்களில் விட்டுக்கொடுத்து, அனுசரித்து போக முடிவதில்லை? என்றாவது யாரவது கொஞ்சம் யோசித்தது உண்டா? நம்மில் பலரும் இந்த காரியத்தில் அலட்சியமாக இருக்க காரணம் என்ன? இதனால் குடும்பத்தில் அமைதியின்மையும், சில நேரங்களில் கணவன் மனைவி பிரிவும் ஏற்படுகிறதே?

குடும்பம் என்பது நம் உடமை என்ற அலட்சியமா? குடும்பத்தினர் நம் உறவு என்ற இறுமாப்பா? தான் என்ற அகங்காரமா(EGO)? எந்த காரணங்களை சொன்னாலும் அது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கமுடியும். வெளியிடங்களில் யார்யாருடனோ விட்டுக்கொடுத்து அனுசரணையாக போகமுடியும் என்னும்போது எப்படி நம்மால் நம் எழிலான வீட்டிலும் அனுசரணையோடு விட்டுக்கொடுத்து போகாமல் இருக்கமுடியும்? இது ஒரு குற்றச்சாட்டு அல்ல. ஒரு ஆதங்கம் மட்டுமே. புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டிய இல்லத்தில் சின்ன சின்ன அனுசரிப்புகளும், புரிதலோடு கூடிய விட்டுக்கொடுத்தலும் இல்லமால் நம் அழகான வாழ்க்கையை நரகமாக நம்மில் பலர் மாற்றுகிறோம்.

ஒரு திருமணம் மூலம் கணவன் மனைவி மட்டுமல்ல... இருவேறு மனம் கொண்ட குடும்பங்களும் இணைகின்றன. அப்படி இருக்கும்போது ஒருவருக்கொருவர் அனுசரித்து, சில விசயங்களில் விட்டுக்கொடுத்து அன்பால் இணையும்போது அந்ததிருமணம் மூலம் இணையும் தம்பதியரும் சரி, குடும்பமும் சரி என்றும் மகிழ்ந்திருக்கும். 

நமது வாழ்க்கையானது திருமணத்திற்கு முன்பும் சரி, பிறகும் சரி இன்பமாக அமைய வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை எப்படி இருக்கிறதோ, அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அதுதான் நம்முடைய மகிழ்ச்சியில் விரிசல்கள் விழாமல் காக்கும் நற்பண்பு. நமது வாழ்க்கை அன்பு, காதல் என்று மனம் சார்ந்தது தொடங்குகிறது. ஆரமபத்தில் பலவிசயங்களில் நாம் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து இன்பமாய் வாழும்போது ஏன் சிலகாலம் கழித்து இந்த அனுசரிப்பு இல்லாமல் மறைகிறது. முக்கிய காரணமாய் நான் எண்ணுவது எதிர்பார்ப்புகள் மட்டுமே.

வெளியிடங்களில் நாம் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் கொண்டு நம் செயல்களை தொடர்ந்து செய்வதில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில், வாழ்வு தொடங்கும் போதிலிருந்தே இருக்கும் எதிர்பார்ப்புகள் முதலில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட உடல் சார்ந்த ஈர்ப்பினால் அனுசரித்துப்போகிறது. நாட்கள் செல்லச்செல்ல உள்ளம் சார்ந்த, உடல் சார்ந்த ஈர்ப்புகள் குறையும்போது எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மெல்ல மெல்ல தலையெடுக்கிறது. இப்படி சிறு மனவேறுபாடுகள் தலையெடுக்கும்போதே அன்புடன் பேசி புரிதலோடு களையெடுக்கப்படவில்லை என்னும்போது இந்த அனுசரிப்பு குறைகிறது. அதுவே பின்னர் ஒருவர் மீது ஒருவருக்கு அலட்சியத்தை உருவாகிறது.

எப்படி இல்லம் இனிமைபெற இந்த குறைகளை நீக்குவது? எளிது.. நம் துணையின் சின்னசின்ன தவறுகளை ஏற்றுக் கொண்டு அதில் உள்ள குறைகளை போக்க அன்பாய் பேசி தீர்க்கவேண்டும். தவறுகள் செய்யாத மனிதர்கள் யார்தான் இருக்கிறார்கள்? குடும்பம் என்றால் அவ்வப்போது இதுபோன்ற சண்டைகள் வரும் போகும். நாம் தான் நல்ல புரிதலோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இதை தீர்க்க வேண்டும்.

இந்த  அனுசரணையும், விட்டுக்கொடுத்தாலும் எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் சரியா? குடும்பத்த்தில் எல்லோடும் நம் உறவினர்கள் என்ற முறையில் நம் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படாதவரையில் எவ்வளவு வேண்டுமானாலும் அனுசரித்து போகலாம். தப்பில்லை. ஆனால், வெளியிடங்களில்???

எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? நாம் குட்டக்குட்டக் குனிந்துகொண்டே இருந்தால் நம்மை ஏமாளியாக்கி நம்மையே அழித்துவிடுவார்கள். சரி அந்த எல்லை என்பது எதுவரை? அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த எல்லைவரை விட்டுக்கொடுத்து, அனுசரித்து போவது என்பது நமது கையில் தான் உள்ளது. ஒரு சின்ன ஆய்வு.

ஒரு தவளையை பிடித்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு பாத்திரத்தை சூடாக்குங்கள். தண்ணீரின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.  வெப்பம் ஏற ஏற தவளையும் அந்தந்த வெப்பநிலை உயருக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.  ஆனால், இதில் பரிதாபம் என்னவென்றால் எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால்... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

சரி. இப்போது எது அந்த தவளையை கொன்றது...? நம்மில் பலரும் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"

இதே நிலைதான் நம்மில் பலருக்கும். எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.  ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாம் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.  சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.  ஒன்று மட்டும் உண்மை "நம்முடைய அனுமதியில்லாமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது.

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது சுயநலம் நிறைந்த உலகத்தில். காண்பதையெல்லாம் தனக்குத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய மனிதனின் சுபாவமாகிவிட்டது. எங்கு நோக்கிலும் பதவி மோகங்களினாலும், சொத்துக்களின், பொருட்களின் மீதுள்ள பேராசையினாலும் சண்டை சச்சரவுகள் பெருகிப் பல உயிர்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தேவையற்ற இதுபோன்ற மோகங்கள் மீதான விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நாம் வளர்த்துக்கொண்டால் நம் குடும்பங்களில், ஏன் உலகிலேயே பல பிரச்சனைகள் இல்லாமலேயே போயிருக்கும்.

உண்மையில் இந்த உலகத்தில் நமக்கென்று எதுவுமே சொந்தமானதல்ல. நாம் கொஞ்சகாலம் இந்த பூமியில் வசிக்க வந்திருக்கும் விருந்தினர்களே. “நாம் எதைக்கொண்டு வந்தோம் கொண்டு செல்ல என்ற கீதையின் உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஒரு மனிதனுக்கும் அடுத்த மனிதனுக்கும் இடையில் பிரச்சனைகள் வரக் காரணமே இருக்காது.

ஒரு வாசகம் படித்தேன், “ ஆயிரம் சந்தர்ப்பம் கொடுத்தாவது ஒரு எதிரியை நண்பனாக்கலாம், ஆனால் ஒரு நண்பனை எதிரியாக்க ஒரு சந்தர்ப்பம் கூட தரக்கூடாது. இதையே இங்கு கொஞ்சம் மாற்றிப்போட்டால். “ஆயிரம் முறை விட்டுக்கொடுத்து, அனுசரித்து ஒரு எதிரியை நண்பனாக்கலாம், ஆனால் ஒரு நண்பனை எதிரியாக்க அப்படி ஒரு சந்தர்ப்பமே வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

விட்டுக்கொடுத்தலும், அனுசரித்தலும் நம்மால் செய்யமுடியும் ஒரு செயலே.. இதை நாம் நம்முடைய வீடுகளில் பின்பற்றும்போது வாழ்க்கை சுகமாகும்.

வாழ்க்கை ஒரு இனிதான பூந்தோட்டம். அந்த தோட்டத்தின் உரிமையாளரும் நாமே, தோட்டக்காரரும் நாமே, காவலரும் நாமே. அப்படி இருக்க அந்த தோட்டத்தை நாமே அலங்கோலப்படுத்தி நமது மனதையும் ஏன் காயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்முன்னே பல இனிமையான தருணங்கள் இருக்கின்றன. ஏன் நாம் அவற்றை எல்லாம் தவறவிட வேண்டும். கொஞ்சம் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும், நம் குடும்பத்துக்காகவும், ஏன் நமக்காகவும் கூடத்தான் விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் மகிழ்ச்சியாய் நம்முடைய  வாழ்க்கையை அமைத்துக்கொள்வோமே.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் – சங்கர் நீதிமாணிக்கம்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

3.உப்பாய் இருங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

3.உப்பாய் இருங்கள்

அன்பு  தோழமைகளுக்கு வணக்கம். மீண்டும் வலைவீசும் எண்ணங்கள்  மூலம் இனிதான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சந்திப்பதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் என் அன்பிற்கினிய உளம்கனிந்த பொங்கல்  திருநாள்  வாழ்த்துக்கள்.

இந்த உலகுக்கு நீங்கள் உப்பாய் இருங்கள். என்னடா இது எடுத்ததும் உப்பாய் இருக்கசொல்லுறேன்னு நினைக்கிறீங்களா? நீங்க நினைக்கற மாதிரி உப்பு ஒன்னும் சாதாரணமானது இல்லைங்க. பிரிட்டிஷ் ஆட்சியையே ஆட்டம் காண வச்சது தெரியும்மில்ல?

உப்பை நாம் சுய மரியாதையின் குறியீடாகவும், சுரணையின் குறியீடாகக் கண்டும் பழகியும் வந்திருக்கிறோம் என்பதை நன்கு அறிவோம். இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றியுள்ள தன்மான உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் மகாத்மா காந்தியின் மேதைமை. அதைக்கொண்டு தானே அவர் வெள்ளையர் ஆட்சியை உப்பு சத்தியாகிரகம் மூலம் ரொம்பவே அசைத்துப் பார்த்தார்.

சரிங்க. அதுக்கு இப்ப என்னன்னு கேட்கறீங்களா? நாமும் உப்பின் குணத்தை நாமில் கொண்டு இருப்போம் நண்பர்களே... உப்பின் குணம் தான் என்ன? அது எங்கு சென்று சேருகிறதோ அந்த இடத்தில் எளிதாகக் கலந்து தன்னுடைய சுவை தருகிறது. உப்பானது தான் இருக்கும் இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் தன்னுடைய இருப்பை நேரிடையாக வெளிக்காட்டவில்லை என்றாலும், தன்னுடைய சுவை மூலம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இதில் நாம் எப்படி அதன் குணத்தை கொண்டிருப்பது. வாருங்கள் கொஞ்சம் பார்ப்போம்.

நீங்கள் ஒரு கூட்டத்தில் சென்றால் உப்பைப் போல அந்த கூட்டத்தில் கரைந்து விடுங்கள். தயக்கத்தில் எப்போதும் ஒதுங்கி நின்று உங்களின் வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள். கும்பலில் கலந்தால் நம்மை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது? உங்கள் சிறந்த குணத்தினாலும், சிறந்த பண்பினாலும், உங்களின் சிறந்த அறிவினாலும், உங்களின் சிறந்த திறமையினாலும், உங்களின் தனித்தன்மை கொண்ட செயலினாலும், உங்களின் கல்வியினாலும், உங்களின் சிறந்த நகைச்சுவை உணர்வினாலும், என் உங்களில் அறிவார்ந்த மௌனத்தாலும், இப்படி எப்படி வேண்டுமானாலும் உங்களை அங்கு வெளிப்படுத்தலாம். உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை தவறவிட்டுவிடாது அதைப் பயன்படுத்தி உங்களை இந்த உப்பைப் போல சுவையாக வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்கள் நன்றாகச் செதுக்கி உங்கள் குணத்தை சீர்படுத்திக்கொண்டு, நீங்கள் இருந்தால் ஒரு நிகழ்வு சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனதில் நிலைநிறுத்துங்கள். நீங்கள் அங்கு  இல்லாதபட்சத்தில் “ ஆஹா.. அவர் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் சுவை பெற்றிருக்கும் என மற்றவர் நினைக்கும் வகையில் நீங்கள் ஒரு தவிக்க முடியாதவராக உங்களை  பண் படுத்திகொள்ளுங்கள். எப்படி உணவில் பலவகைப் பொருட்கள் பலவிதங்களில் கலந்து கண்ணைக் கவர்ந்தாலும் உப்பின்றி சுவை இல்லாது போகுமோ அதேபோல உங்களை நீங்கள் மற்றவர்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் நீங்கள் உங்களின் இருப்பை தலைவராய் இருந்து தான் காட்டவேண்டும் என்பதில்லை, ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாய் இருந்தாலும் இந்த உப்பைப்போல சுவைதரும் ஒருவராக மாற்றிக்கொள்ளலாம். உப்பு எப்படி நீரில் கலந்தால் நீரின் வடிவை பெறுகிறது, எப்படி உணவில் கலந்தால் சுவையாக மாறுகிறதோ, எப்படி ஒரு கிருமிநாசினியாய் இருக்கிறதோ அதுபோல நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு இந்த பூமியில் சிறப்படையுங்கள்.

உப்பானது ஒரு சிறந்த மின்கடத்தியும் கூட என்பது நாம் நன்கு அறிந்தது தான். சுத்தமான காய்ச்சிய நீர் கடத்தாது, ஆனால் உப்பு கலந்த நீர் சிறப்பாக மின்சாரம் கடத்தும். நாமும் இந்த உப்பை போல மற்றவர்களிடையே சிறப்பான, சரியான நடுநிலையாளராக, நல்ல உறவைப் பேணுபவராகவும், நல்ல உறவை மற்றவர்களுக்குள் வளர்பவராகவும் இருக்கலாமே?

விகடன் குழுமத்தின் ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் வார்த்தைகள் இது : ‘‘பத்திரிகை ஆசிரியரா இருக்குறதுக்கு முதல் தகுதி என்ன தெரியுமா? சாம்பார்ல உப்பு மாதிரி இருக்கணும். சாம்பாரோட எந்தத் துளியை எடுத்து ருசிச்சாலும் அதுல உப்பு இருக்கணும். ஆனா, கண்ணுக்குத் தெரியக் கூடாது. பூசணிக்கா துண்டு மாதிரி தனியா நீட்டிண்டு தெரியணும்னு அவசியம் கிடையாது. ஒரு ஆசிரியர் தன்னையே பிரதானப்படுத்திக்கிறது - அந்தப் பத்திரிகைக்கு எந்த வகையிலும் நல்லது கிடையாது!’’. இந்த கருத்தையே நாம் கொஞ்சம் மாற்றிக்கொள்வோம். நாம் சிறந்தவராக இருக்க உணவில் கலக்கும் உப்பாய் இருப்போம்.

இதுபற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது”. ஆம் நண்பர்களே நாம் நம்முடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை, சிறந்த திறமைகளை இழக்காதவரைக்கும் நாம் இந்த மண்ணில் போற்றப்படுவோம். எப்படி உப்பானது தன்னுடைய சுவை குன்றி சாரமற்றுப் போனால் மீண்டும் அதன் சுவை கொண்டுவருவது அரிதோ, அது போலவே நாம் நம்முடைய மாட்சிமையை இழந்தால் இந்த உலகத்தில் ஒதுக்கப்படுவோம்.

உப்பானது எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாய் வைக்கப் படுகிறதோ அந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது. ஆனால் அதில் சிறிதளவு தூசி கிடந்தாலும் உடனடியாக அதை குப்பையில் கொட்டி விடுவார்கள். சமையல் அறையில், சாப்பாட்டு மேசையில் என எல்லா இடத்திலும் மேன்மையான நிலையில் இருந்த உப்பு, தன்னிடத்தில் சிறிய தூசியை அனுமதிக்கும் பொழுது குப்பை தொட்டிக்கு செல்கின்றது, நாமும் நம்முடைய சிறந்த குணங்களை நம்மில் பாதுகாத்து அந்த உப்பைப்போல சிறப்புற்றிருப்போம்.

நம்மில் எல்லோரும் அறிந்த பழமொழி உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பானது நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக இயங்கும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய நம் உடம்பில் நீர் அதிகமாக வெளியேற அதை சமன்படுத்த தாகமெடுத்து நாம் அதிகப்படியான தண்ணீர் அருந்தவேண்டிய சூழல் உருவாகிறது. இந்த இடத்தில் உப்பு தவறுக்கு உதாரணமாக அல்லவா இருக்கிறது. நாம் உப்பின் குணத்தை கொண்டிருக்க தவறு செய்யலாமா? தவறு செய்பவர்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு உதாரணமாக அல்லவா இருக்க முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

நம்மில் பலர் உணராதிருக்கலாம். உப்பானது எதற்காக திருஷ்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தப்படுகிறது? எதற்காக நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தை உண்டாக்கினார்கள்? சில கோயில்களில் உப்பு வாங்கிக் கொட்டுவது எதற்காக? ‘பாவத்தைப் போக்குறோம்என்று சொல்லி கடலில் குளிப்பது?, கடல் நீரை தலையில அள்ளித் தெளிப்பது?, கடலோரத்தில் ஈமக்கிரியைகள் செய்வது?, கடற்கரைக்குச் சென்றால் கடலில் கால் நனைப்பது? இதற்கெல்லாம் காரணம் என்ன? யாரவது யோசித்தீர்களா? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கை என்று பலர் புறம் தள்ளிடுவார்கள். உண்மையில் அதற்குள் அறிவியல் இருக்கிறது. அந்த அறிவியல் ORA SCIENCE என்று சொல்வார்கள்.

நாம் அனைவரும் அறிந்தது தான் நேர்மறை எண்ணங்கள் (பாசிட்டிவ் எனர்ஜி), மற்றும் எதிர்மறை எண்ணங்கள் (நெகட்டிவ் எனர்ஜி). இவை இரண்டும் மனிதனின் குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. உங்களில் பெரும்பாலோனோர்க்கு தெரியாதது உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் தன்மை கொண்ட ஒரு பொருள். ஆம், அதனால் தான் நம் முன்னோர்கள் மேலே சொன்னவாறு உப்பு சார்ந்த செயல்களை மறைமுகமாக நம்மை செய்யத் தூண்டினார்கள். நீங்களும் மற்றவர்களின் எதிர்மறை சக்தியை நீக்கும் சிறந்த மனிதராக, அவர்களுக்கு உதவும் நல்ல மனிதராக இருங்கள். நீங்கள் உங்களை சார்ந்தவர்களுக்கு தேவையுள்ள, பயனுள்ள உப்பை போல இருங்கள்.


உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. நம் ஆன்மீக வாழ்விலும் உப்பானது முதற்படியாக உள்ளது. உப்பானது ஒரு நீண்ட பயணத்தை கடலிலிருந்து பூமினோக்கி பிரிந்து வருவது போல பாவங்களில் இருந்தும், தீமைகளில் இருந்தும், எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் நாமும் பிரிந்து நம்மை துய்மை படுத்தப்பட்ட உப்பைப் போல மாற்றிக்கொள்வோம். பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துசெல்லப்பட்டு கடலிலே உப்புதன்மையை நிறைப்பதை போல, ஆன்மீக வாழ்விலும் இறைவனிடைருந்து வந்த நாம் பாவ உலகில் இருந்து மீண்டு, மீண்டும் நமது தூய உருவை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு போலவே நமது ஆன்மீக வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

ஹோமர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் உப்பு தெய்வீகமானதுஎன்றும், தத்துவ ஞானியான பிளேட்டோ கடவுளுக்கு பிரியமானதுஎன்றும் கூறுவதை நாம் புறந்தள்ள இயலாது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது நம்முடைய மனதையும், வாழ்வை சிறப்பாகும்.

ஒன்றைப் புரிந்துக்கொள்ளுங்கள், உப்பு எப்போது முழுமை அடைகின்றதோ அப்போதே அது தன்னை இழக்க தயாராகின்றது. அது பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன்என்ற சொல்லாடல் ஒருவர் தான் பெற்ற நன்மையை நினைவுகூறும் வார்த்தைகளன்றி வேறென்ன?

உலகம் முழுவதும் உப்பு பல நிறங்களில் காணக்கிடைத்து மனிதனை ஒத்த அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது உப்பு எந்த நிறமாக இருந்தால் என்ன, அது தனது சுவை கொடுக்கும் தன்மையை இழக்கப்போவது இல்லை. நண்பர்களே நாமும் எந்த தேச வரைபடங்களில் பிரிந்து இருந்தாலும் அனைவரும் ஒருவரே என்ற உண்மையை மனதில் கொள்ளுவோம்.

விவேகானந்தர் சொல்லுகிறார், “ வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை”. நாம் வலிமை பெறுவோம். எவ்வளவு தான் துகளாக நசுக்கினாலும், நீரில் கரைத்தாலும் குணம் மாறாத உப்பைப்போல நாம் வலிமை பெறுவோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்என்ற வீரத்துறவியின் வார்த்தைகளை நம் மனதில் கொண்டு நம்மை கொஞ்சம் வலிமையோடு செதுக்கிக்கொள்வோம்.

உப்பை சம்பளமாக ரோம போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருக்கும்போது அதன் சிறப்பு புலப்படுகிறது: இன்றும் நாம் காண்பது, எல்லா கடைகளுக்கு முன்பதாக ஆதரவற்று இருக்கும் ஒரே பொருள் உப்பு தான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருக்கிறது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதுதான் இல்லையா?


நாம் விலையேறப்பெற்றவர்கள்; எனினும் நாம் எளிமையாய், அன்பை கண்ணீராலும், கடமையை வியர்வையாலும், தியாகத்தை இரத்தத்தாலும் அந்த உப்பின் சுவையுடன் கலந்து அளிப்பதால் நாம் இந்த உலகில் உப்பாய் இருக்கிறோம்.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் சங்கர் நீதிமாணிக்கம்