வெள்ளி, 29 ஜூலை, 2016

31. ஆணென்ன பெண்ணென்ன

வலைவீசும் எண்ணங்கள்

31. ஆணென்ன பெண்ணென்ன

இன்றைக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இந்த சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களா? ஆண்களா? என்பதே.! வெளிப்படையாகவே தெரியும் உண்மை பெண்கள் என்பது. இதை மறுக்கவும் முடியாது. பெண்களால் உருவாக்கப்பட்ட இந்த சமூகம் பின்னர் மெல்ல மெல்ல ஆண்களில் பிடியில் சிக்கி அவர்கள் சார்ந்து அவர்களின் தேவைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டது. அதுகாறும் தனித்து இயங்கிய பெண்கள் ஆண்களை சார்ந்து இயங்கவும், பின்னர் மெல்ல மெல்ல ஆண்களை அண்டி வாழும் அடிமை போலவும் மாற்றப்பட்டது.

முதலில் பெண்களை போற்றும் தெய்வம் என்று சொல்லி வீட்டில் பூட்டி வைத்த ஆண்களின் சமூகம் பின்னர் மெல்ல மெல்ல பெண்களை தங்களின் போகப்பொருளாக மாற்றி தங்களின் அடிமையாக, கைப்பாவையாக மாற்றியது.

அப்படி இருந்த சூழலிலும் பெண்கள் பொங்கி எழுந்ததும், ஆண்களை எதிர்த்து செயல்பட்டதும் பல சான்றுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. அழிக்கும் கடவுளாக காட்டப்பட்டுள்ள சிவன் தன்னில் பாதியை சக்திக்கு கொடுத்து சமத்துவம் பேசினாலும் அது எல்லா இடங்களிலும் நிலைநிற்கவில்லை.

இன்றைக்கு மிக அதிக அளவில் பேசப்படும் பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த உலகத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன.

எல்லா நிலைகளிலும் இந்த சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களை தவிர்த்து இந்த சமுதாயத்தை நம்மால் பார்க்க முடியாது. இந்த சமுதாயமும் இயங்க முடியாது. சுருங்க சொன்னால் அது சமுதாயம் என்றே சொல்ல முடியாது.

இன்றைய நிலையில் பெண்களுக்கான நீதி சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்று கேள்விகள் கேட்டால் பெண்களின் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்ட பலரால், பெண்களின் மீது மதிப்புக்கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக பல சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டியதும்,. வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்ஸிராணி தோன்றி ஆண்டதும் இந்த சமூகமே. ஆனாலும் பெண்களுக்கு இந்த சமூகத்தில் முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்றால் “ஆம்” என்று சொல்லிவிட முடியாது.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்'

என்று சொல்லும் காப்பியம் அதே பத்தினி தன்மையை ஆண்களுக்கு அவசியம் வேண்டும் என்று அடித்து சொல்லவில்லை என்பதும் ஒப்பு நோக்க வேண்டும். பெண்மையை போற்றும் இடத்தில் ஆண்களுக்கும் அந்த நீதியை வலியுறுத்தி சொல்லவில்லை.

பிறன்மனை நோக்கத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு..

என்பதிலும் எல்லா எல்லா ஆண்களும் என்று சொல்லாமல் நீ சான்றோனாய் இருந்தால் பிறன்மனை நோக்குவது சிறந்ததல்ல என்று சொல்லி விட்டுவிடுகிறார்.

கிடைத்துள்ள வரலாறுகளின் அடிப்படையில் பார்க்கையில் ஆதிகாலத்தில் ஆண் பெண் இருபாலரும் சமமாகவே கருதப்பட்டனர். இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல படையெடுப்புகள் பெண்களை பொத்திப்பாதுகாக்கும் முறையை கொள்வதாக சொல்லி மெல்ல மெல்ல பெண்களை அடிமைகள் ஆக்கி விட்டது.

ஆண்களால் அடக்கி வைக்கப்பட்ட இந்த பெண்கள் சமூகம் சென்ற நூற்றாண்டில் மெல்ல விடுதலை பெற்றி வெளியில் வர தொடங்கியது. அதே நேரத்தில் ஆண்களும் மெல்ல மெல்ல தங்களை மாற்றிக்கொண்டு பெண்களுக்கு தேவையான உதவிகளை மனமுவந்து செய்ய தொடங்கினார்கள்.

பெண்களில் ஒரு சாரார் இந்த விடுதலையை ஆண்களின் விட்டுக்கொடுத்தலை அடங்குதல் என்று எண்ணி சட்டம் அவர்களுக்கு கொடுத்த பாதுகாப்புகளை தவறான முறையில் பயன்படுத்தி ஆண்களை துன்புறுத்தும் போக்கு இன்றைக்கு அதிகரித்துள்ளது என்பதும் மறுக்க முடியாது.

ஆண்கள் என்றைக்கும் குடும்பம், அதின் சந்தோசம், முனேற்றம் என்ற நோக்கில் உழைத்துகொண்டு இருக்கும் நிலையில் அதிகாரங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டு குடும்பம் நிர்வாகிக்கப்படுகிறது. குடும்பத்தில் பெண்களின் கருத்துக்கு பெருமளவு மதிப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் சமுதாயம் என்று வீட்டை விட்டு வெளியில் வரும்போது பெண்களுக்கான முழுமையான விடுதலை இன்னும் கிட்டவில்லை.

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்'

என்று பாரதி சொன்னாலும் அவர்களுக்கு தடைகளும், தடங்கல்களும் இன்னும் தீரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றல் பெண்களின் பல முன்னேற்றங்களுக்கு மதத்தின் அடிப்படைவாதத்தில் ஊறியும், பழமையில் இருந்து முழுமையாக விடுபட முடியாமலும், சடங்கு சம்பிரதாயம் என்ற பிடியிலும் மீள முடியாமல் இருக்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு பக்கம் பெண்ணடிமை என்று பேசும் பெண்கள் மறுப்பக்கம் குடும்பத்திற்குள் ஆண்களை அடிமைப்படுத்தி, அடக்கியாண்டு, கேவலப்படுத்தும் போக்கும் இன்றைக்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் சட்டம் கொடுக்கும் பலமும், குடும்பம் சிறக்கவும், சமுதாயத்தில் தன்னுடைய பெயர் சீரழியக்கூடாது என்ற எண்ணத்தில் விட்டுக்கொடுக்கும் ஆண்களின் பலவீனும் ஒரு காரணமாக இருக்கிறது.

உண்மையில் ஒரு குடும்பம் என்னும்போது அங்கு ஒருவரை ஒருவர் அடிமையாகும் எண்ணத்தில் தங்களுடைய ஆளுமையை செலுத்தும்போது அங்கே நிம்மதி என்பது இருக்காது, அதே நேரத்தில் அந்த குடும்பத்தின் வாரிசு அங்கு சிறந்ததை கற்கவும் முடியாது.

இந்த அடக்குதலும், அடங்குதலும் இல்லாமல் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நம் குடும்பம், நம் வாழ்வு, நம் மக்கள் என்று புரிந்து கொண்டு வாழ்கையில் குடும்பவாழ்வு என்பது என்றைக்கும் இனிமை தரும் பூந்தோட்டமே.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)



வார்த்தைகளின்றி வந்த
பாவையுன் பார்வை மொழியில்
எண்ணங்கள் முத்தமிட...
கைபடர்ந்த வேளையிலே..
மெய் மறந்து நின்றுவிட்டேன்..

தேன்குமிழாய் பொங்கிவிட்ட
தேகச்சிதறலில் மௌனத்தின் மௌனங்கள்
மெல்ல மெல்ல பேசிக்கொள்ள....
கொல்லுகின்ற எண்ணங்களின் மொழி தான் என்ன??

சத்தமின்றியும் பேசுகிறாய்!
முத்தமின்றி இதழ் கவிதை சொல்லுகிறாய்!
சொல்லுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்கள் காண்பதற்குள்
எல்லாமே கரைந்து போகிறது

உன் பார்வையின் வீச்சில்..
நித்திரைகள் குலைகின்ற இரவின் பிடினியிலே
மோகத்திரை பின்னால் நின்று
எட்டிப்பார்க்கும் பெண்ணிலவு நீ.

உயிர் துடிக்கும் வேளையிலே
உயிர் பறிக்கும் புன்னகையில்
என் எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)

நொறுங்கிப்போனது என் வார்த்தைகளின் சத்தம்..

புதன், 27 ஜூலை, 2016

ஆண்களின் அர்ப்பணிப்பு


ஓயாது கரைதேடும் அலையாகி..
பொருள்தேடி உழைக்கின்றான்...

உருகுகின்ற மெழுகாகி
ஒளி தரும் தீபமாகி..
பாசத்தின் கனி நெஞ்சை மறைத்து
முள்ளான பலாவெனவே நிற்கின்றான்..

சுட்டுவிடும் சூரியனாய் தோன்றினாலும்
உள்ளுக்குள் எரிவதை யார் அறிவார்....

வேதனையின் சுவடுகளை நெஞ்சில் தாங்கி..
இன்பத்தின் மழையினை பொழிந்துவிடும்
கல்நெஞ்ச கார்மேகம் அவனல்லவா...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக சுயம் மறைத்து
அவர் விருப்ப உருமாறும் பச்சோந்தி பாசக்காரன்...

கிளைபரப்பி தழைத்து செழிக்க...
தன் நிழலிலே ஒதுங்கி
தானே வேரென்பதை மறக்கும் நெஞ்சே..

தியாகம் என்று பார்ப்போர்கள் பாராட்ட..
என் மக்கள்.. என் கடமை...

புன்னகையில் கடந்து போதும் மாமனிதம்...

திங்கள், 25 ஜூலை, 2016

நவரத்தின மாலை


“எதிர்பார்க்கிறேன்”..
இந்த “பூந்தோட்டத்தில்” பூத்த மலர்களாம்
நட்பூக்களை சந்தித்து “மகிழ்ச்சி” கொள்ள..
சந்திக்கும் வேளையில்
வார்த்தைகள் தொலைந்து போனாலும்
உள்ளம் துள்ளுமே மகிழ்ச்சியில்..

“கவலை” என்று எண்ணி தனித்திருக்கும் வேளையிலே
மெல்ல “நான்” உணர்வுகளை பதியன் போட
ஆயிரம் அன்புடன் “எத்தனை” எத்தனை
அன்பான வார்த்தைகள்..

ஆறுதல் சொல்லி மெல்ல தட்டிக்கொடுத்து
இனிய நினைவுகளை மனதில் கிளறி
ஏக்கங்கள் போக்கும் “நீயே”..
எங்களை இணைத்திட இனிய மேடை..

“தமிழினும்” “இனிய” சுவையுண்டோ?
கேள்விக்கணைகளால் யாரும்
துளைக்க வேண்டியதில்லை....? உண்டு..
இங்கே நட்புக்களும், நட்பின் வாழ்த்துகளும்
திகட்டாத சுவைதானே..

காற்றில் தலையாட்டி இசைபாடும் மரமாய்
பாராட்டில், வாழ்த்தில், போற்றுதலில்
எல்லோரும் சுகித்திருப்பதை யாரும்
மறந்திடத்தான் முடியுமா?

மறுத்திடத்தான் முடியுமா?

வெள்ளி, 22 ஜூலை, 2016

சண்டையும் சமாதானமும்



முடிந்து போகும்
எல்லாவற்றிக்கும் இங்கே சண்டைகள்...
கடந்து போகும்
கண்ணிமைக்கும் காரணத்துக்கும் சண்டைகள்...
சிறு புன்னகையின் வீச்சில்,
சிறு மௌனத்தின் பார்வையில்
ஒரு சிநேகத்தின் அணைப்பில்
முடிந்து போகும் எல்லா சண்டையும்...
சமாதனம் என்பது பிறருக்காக என்னும்
மனநிலை விடுத்து நமக்காக என்று நினைத்து
வைக்கும் அடிகளில் நமக்கான நிம்மதி
பூக்க காத்திருக்கிறது..

அன்புக்கும் ஆசைக்கும் விட்டுக்கொடுக்க
ஏன் காதல் மனைவியுடன் சண்டை வரும்..??

அந்த யுத்ததில் காணும் சமாதானம் இனியது...
அதற்காக வேண்டும் ஊடல்..
ஊடலின் சமாதானம் என்னவென்று அறியதார் யார்??
அந்த சமாதானத்திற்கு விரும்பாதர் யார்...??
அந்த போர்க்களத்தின்
காயங்கள் எல்லமே சொல்லும்
யாரும் அறியாத இன்பக்கதைகள்..
அட.. அப்புறம் என்ன
சண்டையும் சமாதானமும் வாழ்க்கைச் சாகரதின்
இனிமை தானே..

வளருகிறோம் என்கையில் கூடவே
களையாக வளருவதும் பகைமை  தானே...
எங்கும் வளரும் இந்த பகைமையின் சண்டையில்
தொலைப்பது நமது வளர்ச்சிதானே...
ஒரு சமாதான கோட்டில் வளர்வது தானே
நாடுகளின் வளர்ச்சி..
இதில் நமக்கென்ன அயர்ச்சி..
ஒற்றுமையின் கொடி பிடித்து
ஒன்றாய் வளர்கையில்
வேற்றுமையின் வேர்கள் எல்லாம்
அடியோடு அல்லவா அறுக்கப்படுகிறது..
வாருங்கள் கைகொடுப்போம்..

சண்டைகள் முடித்து சமாதானத்திற்கு...

30. உங்கள் பார்வையில்

வலைவீசும் எண்ணங்கள்

30. உங்கள் பார்வையில்

நம்முடைய பார்வைகள் எப்போதும் ஒன்று போல இருப்பதில்லை. காரண காரியங்களுக்கு ஏற்ப செயல்களில், முடிவுகளில் நமது பார்வைகள் மாறுபடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளின் மீதான பார்வைகள் மாறுபட்டே இருக்கும்.

எப்படி நல்லவர்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதை கண்டு சொல்லுவார்களோ அதே போலவே குறை சொல்லுபவர்களுக்கு எவ்வளவு சிறந்ததாக ஒரு படைப்பு இருந்தாலும் ஏதாவது ஒரு குறையை அதில் கண்டுபிடித்து திருப்தி அடைவார்கள்..

இன்றைய நாளில் ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அதை கண்ணால் கண்டவர்களின் தகவல்களே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டதாக இருக்கும். காரணம் அந்த நிகழ்வின் நொடியில் இவர்களின் மனம் எந்த சிந்தனையில் இருந்ததோ அது சார்ந்து அவர்களின் கருது அந்த சம்பவம் மீது வெளிப்படும்..

பார்த்தவர்களே  இப்படி சொல்லும்போது ஊடகங்களின் பார்வை எப்படி இருக்கும்? அவர்களின் பார்வையில் அந்த சம்பவத்தின் தாக்கம் அன்றைக்கு ஊடகங்களின் ஒட்டுமொத்த பார்வையில் பொருட்டு மாறும்.

நம்மையே எடுத்துக்கொள்ளுவோமே.. நாம் ஒரு கடைவீதிக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பார்வையில் அந்த கடைவிதியில் சட்டென்று தெரிவது அல்லது நான் தேடுவது என் தொழில் சார்ந்த நிறுவனமாகவே இருக்கும். ஏதாவது ஒரு இடத்திற்கு வழி சொல்வதாக இருந்தாலும் என்னுடைய தொழில் சார்ந்து மருத்துவமனை அல்லது மருந்துக்கடை இப்படி தான் அடையாளப்படுத்துவேன். இது மனிதரின் இயல்பு.

இப்படி ஒரு சம்பவமும், செயலும் ஒரு மனிதரின் தொழில் சார்ந்து, அந்த நேரத்திய மனம் சார்ந்து, தனிமனித குணம் சார்ந்து மாறுபடுகிறது.

இந்த பார்வை மாறுபாடுகளே மனிதனின் சுயம் சார்ந்த பிரச்சனைகளிலும் வெளிப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு கதை இந்த உதாரணத்தை சிறப்பாக விளக்கும்.

ஒருவன் கடவுளை வேண்டி தவமிருக்க அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என் வாழ்க்கையின் மதிப்பு என்ன என்ற கேள்வியை கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான்.

அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

இது தான் பார்வையின் மாறுபாடுகள். எப்படி ஒரு விலைமதிக்கமுடியாத கல் ஒவ்வொருவரின் பார்வையிலும் மதிப்பிடப் படுகிறதோ அதே நிலையில் தான் நமது செயல்களும், எண்ணங்களும், பிரச்சனைகளும் இங்கே அணுகப்படுகிறது.

இன்னொரு பிரபலமான எடுத்துக்காட்டு எல்லோரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

“நமக்கு வரும் பிரச்சனையின் வீரியம் என்பது .அந்த பிரச்சனையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. ஒரு சிறு கல்லை நமது கண்ணின் வெகு அருகாமையில் கொண்டுவந்து பார்த்தல் அது இந்த உலகத்தையே நும்முடைய பார்வையில் இருந்து மறைத்து விடும்.

மெல்ல மெல்ல அதை பின்னால் கொண்டு செல்ல எல்லாமே தெளயாக தெரியும், அந்த கல்லும் எவ்வளவு சிறியது என்று புரியும். அந்த கல்லை ஒரு ஓரமாக வைத்து விட்டால் அது இருக்குமிடமே மறந்து விடும்..

வாழ்க்கையில் நமக்கு வரும் பிரச்சனைகளும் இதேபோல தான் நாம் பிரச்சனையை எவ்வளவுக்கெவ்வளவு அருகில் வைத்து மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறோமோ அதற்கு ஏற்ப அதன் வீரியம் நம்மை பூதாகரமாக வாட்டும்.

கொஞ்சம் தூர தள்ளி வைத்து அந்த பிரச்சனையை அணுகினால் பல கோணங்களில் அந்த பிரச்சனை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கும். அதை தீர்க்கும் வழிகளும் புலப்படும்.

நமது மனதில் ஆயிரம் எண்ண அலைகள் அடித்துக்கொண்டு இருந்தாலும் மனம் அமைதி கொண்டு அதை பார்க்கும்போது அந்த அலைகள் மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்து விடுகிறது.

எல்லாமே மாறிவிடும் இந்த உலகத்தில் உருவாகும் பிரச்சனைகள் மட்டும் எம்மாத்திரம்.? தெளிவில்லாத மனதில் இருக்கும் குழப்பம் என்றைக்கும் தீராது.

ஆக எந்த ஒரு செயலையும், பிரச்சனையையும் ஒரே பார்வையில் அணுகாமல் பல கோணத்தில் சிந்தித்து அணுகும்போது தான் அதன் சாதக, பாதகங்கள், தீர்வுகள், வழிகள் எல்லாம் தெளிவாக மனதில் தோன்றும்.

எந்த ஒரு சம்பவமோ, பிரச்சனையோ நாம் அணுகும் விதத்தில் தான் அதன் எல்லைகள் விடிவதும், சுருங்குவதும் நடக்கும்.

நீங்கள் ஒருவருடன் பிரச்சனை வளர்க்க விரும்பினால் உங்கள் வார்த்தைகளில் பலம் கூட்டுங்கள். இல்லை, பிரச்சனை வேண்டாம். அமைதியாக முடிப்போம் என்றால் உங்கள் வார்த்தைகளில் அமைதி கூடட்டும். ஒருவரின் வார்த்தைகளின் வீரியமே எதிராளியை தூண்டுவதும், அமைதியாக்குவதுமான வேலையை செய்கிறது.

ஒரு சிலருக்கு, ஒரு சில நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களின் யோசிக்காத, அவரச செயலின் மூலம் பெரிதாக வெடிக்கிறது. உண்மையில் அந்த பிரச்சனையை பார்த்தால் ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் போயிருக்கக்கூடியதாக இருந்திருக்கும், என்ன நம்முடைய அணுகுமுறையில் ஒரு சின்ன மாற்றம் இருந்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால் சிலருடைய ஒற்றை சொல்லின் கர்வம், பதவின் வேகம், பிறரின் மேல் ஒன்றுமே தெரியாமல் நாம் கொள்ளும் பிறழ்பட்ட அபிப்பிராயம் இவைகள் தான் என்றைக்கும் சின்ன பிரச்சனைகளையும் பெரிதாகுகிறது.

இங்கு முகநூளில் நமக்கு அறிமுகமே இல்லாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் நம்முடைய பதிவில் சமயங்களில் கீழ்த்தராமான கருத்தீடு செய்துவிட்டு போய்விடுவார்கள். அந்த நேரத்தில் நமது அணுகுமுறையாக யாரென்றே தெரியாத, அந்த நபரின் மீது கொள்ளும் வன்மம் காரணமாக திருப்பி நாமும் அந்த பாணியில் பதில் தாக்குதல் தொடுப்பது.

இது உண்மையில் நம்முடைய மனதை மிகுந்த அழுத்தத்திற்கு ஆட்படுத்துகிறது. உண்மையில் அந்த நேரத்தில் நாம் அந்த நபரின் வார்த்தைகளை மனதில் ஏந்தி நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம்.

அடுத்த அணுகுமுறை அந்த கருத்தீடை அழித்து அந்த நபர் மீண்டும் நம்மை அணுகாதவாறு தடை செய்து அமைதியாக நமது வேலையை தொடர்வது.

இந்த இரண்டில் உங்கள் பார்வையில் எது சரியென்று படுகிறது அதை செய்யலாம். சிலருக்கு இந்த பிரச்சனையில் வேற்று பார்வைகளும் இருக்கலாம்.

ஒரு காலி கோப்பையை நம்முடைய கரத்தில் ஏந்தி கரத்தை நீட்டிக்கொண்டு நிற்கும் போது நமக்கு எதுவும் தெரிவதில்லை. அதுவே சில நிமிடங்கள் நீடிக்க கைகளில் வழிகள் எடுக்க ஆரம்பிக்கும். அதையும் தாங்கிக்கொண்டு இன்னும் சில நிமிடங்கள் நின்றால் கைகள் மெல்ல மெல்ல மரத்துப்போன நிலைக்கு ஆளாகும். இத்தனைக்கும் அது வெற்றுக்கொப்பை தான். அதன் நிறையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அதை தாங்கிப்பிடித்திருக்கும் நமக்கு தான் எல்லா வலிகளும், வேதனைகளும். பதிலாக கோப்பையை கீழே விட்டுவிட்டால்? சுலபம். எந்த வலிகளும், வேதனைகளும் நமக்கு இல்லை.

ஆக இப்படியான மாற்றுப்பார்வைகள் மூலம் நம்மால் பல பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும். ஆனால் வறட்டு பிடிவாதம் கொண்டு பார்வைகளை மாற்றாமல் அல்லல் படுவதே இங்கு பெரும்பாலும் நடக்கிறது.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வ்ளைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

புதன், 20 ஜூலை, 2016

பாதி கோப்பை

எல்லோர் மனங்களையும் போல..
பாதி நிறைந்திருக்கிறது கோப்பை..
நிறையாத வெற்றிடத்தை பற்றி கவலை கொள்ளாமல்
நிறைந்திருக்கும் பாதியை பார்க்கையில்
வாழ்க்கையின் உண்மை பிடிபடுகிறது..
என்றைக்கும் முழுமையானதல்ல வாழ்க்கை..
எங்கும் எல்லாநேரமும் எல்லோரிடமும்
குறைகள் நிறையாமலே இருக்கும்..
வெற்றுக்கோப்பையை விட
பாதி நிறைந்தது சிறந்தது தானே..
மாய உண்டியலை நிரப்ப முடியாத கருமி போலவே
இந்த வாழ்க்கையின் தேடலில்
வாழ்க்கையின் முழுமையை தேடித்தேடி
முடிவில் நிறையாமலே முடித்துக்கொள்வதை விட

பாதி நிறைந்திருப்பதில் நிறைவு கொள்வோமே..

வெள்ளி, 15 ஜூலை, 2016

புயலில் சாயாத வேர்கள்.

..

பூமியுடன் பிரியாத தாகம் கொண்ட வேர்கள்..
எந்த புயலையும் கண்டு அஞ்சுவதில்லை..
தலையசைந்து தலையசைந்து காற்றில் ஆடினாலும்
என்றைக்கும் விட்டுவிடுவதில்லை தன் நேசத்தின் பிடியை..
பாசத்தின் வேரில் வாழும் உள்ளங்களின் உணர்வுகள்
போராட களங்களில் தலைகீழாகி பிரிவதில்லை..
சுழலும் சூறாவளியானாலும்
சுடும் வெப்பக்காற்றின் சலனமாலும்..
வேர்கொண்ட நம்பிக்கைப்பிடிப்பு வீழாது நிற்கும்..
காற்றின் கரம் மெல்ல தழுவி மோக தென்றல் வீசி
வேர் கிளப்ப நினைத்தாலும் முயற்சியில் தோல்வி கண்டு
தோற்றே ஓடிவிடும்..

நம்பிக்கை... அது புயலில் சாயாத வேர்கள்.. 

29. காதில்லா சமூகம்

வலைவீசும் எண்ணங்கள்

29. காதில்லா சமூகம்


அன்றைக்கு ஏனோ பவித்திரனுக்கு ஒருவித மனப்பதற்றமாகவே இருந்தது. எல்லா செயல்களையும் தனக்காக அல்லாமல் வேறு யாருக்காகவோ செய்வதாக ஒரு எண்ணம் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அதிகரித்து ஒரு குழப்பமான சூழ்நிலையில் அமர வைத்திருந்தது.

இந்த இடத்தில் பவித்திரனுக்கு பதில் உங்களையும் கூட பொருத்திப்பார்க்கலாம். பெரும்பாலும் நமது செயல்களில் பலவும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்லுவார்களோ, மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்று மற்றவர்களை சார்ந்தே மாற்றி அமைத்து நாம் நாமாக வாழாமல் இருக்கிறோம்.

பவித்திரனுக்கு கோட்டு , சூட்டு, ஷூ என்று மேலைநாட்டு உடைகளில் சுத்தமாகவே விருப்பம் இல்லை. ஆனாலும் அலுவல் சார்ந்த ஒரு கூட்டத்தில் எல்லோரும் இப்படியான ஒரு உடை அணிந்து வரும்போது நாம் மட்டும் வேறு உடையில் போய் நின்றால் ஏதாவது நினைப்பார்களோ, நம்மை தவறாக எண்ணுவார்களோ என்ற தன் மன நிலைப்பாட்டின் படி இந்த உடை அணிந்து அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அரங்கமாக இருந்தாலும் ஒருவித அசவுக்கியாமாக உணர்ந்தார். அவருடைய எண்ணத்தில் இது சம்பந்தமாக ஒரு விவாதமே ஓடிக்கொண்டு இருந்தது.

எல்லோரும் செய்கிறார்கள் என்று மற்றவர்களைப்பார்த்து அவர்கள் போல இருக்க வேண்டும் என்ற பெருமைக்கு ஆசைப்பட்டு இப்போது அதுவே ஒரு போலி வாழ்க்கையாக மாறிவிட்டது பற்றி அவரின் மனது சிந்தனையில் இருந்தது.

அப்போது தான் கூட்டத்தின் முக்கிய அழைப்பாளர் திரு. சொல்வேந்தன் நம்முடைய பாரம்பரியமான உடையில் கம்பீரமாக மேடையில் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்தார். அரங்கமே விதவிதமான அந்நிய பண்பாட்டு உடையில் மின்னுகையில் அவர் அரங்கத்தில் தனித்து மின்னினார்.

பவித்திரனுக்கோ ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், ஒருவித ஏக்கமாகவும் இருந்தது. உண்மையில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள யாருக்கும் எந்த உடை கட்டுப்படும் விதிக்கப்படவில்லை. ஆனாலும் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் ஆட்பட்ட மனித உள்ளங்கள் தங்களின் பதவியின் பவிசை வெளிபடுத்த இங்கு நிலவும் கால நிலைக்கு ஒவ்வாத உடையில் குழுமியிருந்தனர்.

கூட்டம் முடிந்ததும் மெல்ல திரு. சொல்வேந்தனை அணுகி தயக்கத்துடன் தன்னுடைய எண்ணத்தையும் ஆதங்கத்தையும் பவித்திரன் அவருடன் பகிர்ந்து கொள்ள, வாருங்கள் அப்படி அமர்ந்து பேசலாம் என்று தனியிடம் அழைத்துச்சென்று வசதியாக இருக்கையில் அமர்ந்து பவித்திரனை பார்த்து..

“இந்த சூழலில் உங்களில் யாராவது என்னைப்போல உடையணிந்து இங்கு கலந்துகொண்டு இருந்தால் நீங்கள் அவரை ஏதும் கேலியே? கிண்டலோ அல்லது ஏன் இந்த உடை என்றாவது கேட்டு இருப்பீர்களா?.. இல்லை இப்படித்தான் உடை அணிந்து வந்திருக்க வேண்டும் என்று ஏதும் பாடம் எடுத்திருப்பீர்களா?” என்றார்.

சொல்வேந்தனின் எதிர்பாராத இந்த கேள்விக்கு சற்று தடுமாறினாலும், “நிச்சயம் இல்லை..காரணம் இங்கு கலந்துகொண்டவர்களில் பாதி பேர் யாரென்றே எனக்கு தெரியாது? பலர் எங்களின் மற்ற கிளை அலுவலக சிப்பந்திகளும், வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆவார்கள். அதுவும் இல்லாமல் எனக்கு இருக்கும் வேலை பளுவில் அப்படியான ஒரு கேள்வியை கேட்கவும் நேரமில்லை” என்று பவித்திரன் பதிலளித்தார்.

சொல்வேந்தன் மெல்ல பவித்திரனை நோக்கி மெல்லிய புன்னகையித்து “இதுதான் உண்மை உலகின் நிலை”.. ஓடிக்கொண்டிருக்கும் வேலை சூழலில் யாரும் யாரையும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. ஆனாலும் யாராவது நம்மை “ஏன் இப்படி” என்று கேட்டுவிடுவார்களோ என்ற கற்பனை கேள்வியை மனதில் கொண்டு பின்னர் மனதில் ஒரு கற்பனை மனிதரை உருவாக்கி அந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு மெல்ல அடிமையாகி தங்களின் சுயம் சார்ந்த செயல்களை செய்ய முடியாமல் வாழ்கிறார்கள்” என்று விளக்கினார்.

உடனே பவித்திரன்.. அப்படி சொல்ல முடியாது.. என்னை மிக நெருக்கமாக அறிந்தவர்கள் நான் ஏதாவது மற்றவர்கள் செய்யும் செயலை விட மாறுப்பட்டு சில செயல்களை செய்யும் போது சமயங்களில் கேலிப் பார்வையும், கேலி பேச்சுக்களும் என்னை நோக்கி வீசினார்கள் என்று சில யதார்த்த சம்பவங்களை சொன்னார்.

மெல்ல புன்னகைந்த சொல்வேந்தன். “அப்படி பேசிய யாராவது ஒருவர் உங்களின் மிகவும் இக்கட்டான, உதவி தேவைப்படும் நேரத்தில் அதை அறிந்தும் தாங்களாவே வந்து “ஏதும் உதவி தேவையா?” என்று கேட்டு இருக்கிறார்களா” என பவித்திரனிடம் மறுகேள்வி வைக்க..

“சமயங்களில் நான் வாய்விட்டு கேட்டும் காதில் விழாது மாதிரியும், அப்படியே கவனித்து கேட்டாலும் இல்லை என்று நேரிடையாகவும், மறைமுகமாகவும் மறுதலித்தவர்களே அதிகம்” என்று தனது உண்மை அனுபவத்தை பவித்திரன் சொன்னார்.

ஆம்.. “இதுதான் உண்மை உலகின் நிலை” என்று மீண்டும் அழுத்தி சொன்ன சொல்வேந்தன், “இந்த உலகம் தன் கண் கொண்டு மற்றவர்களின் துன்பங்களை ரசிக்கும், வாயால் மற்றவர்களை குறை கூறும், கேலியும் பேசும், புறமும் சொல்லும்.. புரளி பேசுபவர்களுக்கு தங்கள் காதுகளை கொடுத்து ரசித்து கேட்கும்.. ஆனால் அவர்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதன் காதுகள் செவிடாகிவிடும்.. கண்கள் குருடாகிவிடும், வாய் ஊமையாகிவிடும்.”

இப்படியான இந்த உலகத்தின் மாந்தர்களுக்காக தான் நாம் நமது இயல்புகளை மறைத்து ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு போலியான கௌரவத்தை சுமந்து திரிந்துகொண்டு இருக்கிறோம்.  

நாம் அனுதினும் பார்க்கும் எத்தனையோ சம்பவங்கள் மீது போகிற போக்கில் நமது கருத்துக்களை துப்பிவிட்டு செல்லுகிறோம்.. ஆனால் என்றைக்குமே உண்மையான மனதுடன் உதவி செய்ய முற்படுவதில்லை. அதற்கு ஆயிரம் காரணத்தை கையில் தயாராக வைத்திருகிறோம்...

உண்மையில் நாம் நமது எண்ணங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு உண்மையாக நடக்க வேண்டும். பிறரின் எண்ணத்துக்கு எதற்கு அடிமையாக வாழ வேண்டும். நீங்கள் ஒரு பொது இடம் செல்லும்போது உங்களுக்கு பிடித்திருந்தால் குழந்தையை போல விளையாட ஆசைபட்டால் விளையாடுங்கள். அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். அதை விடுத்து மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று உங்கள் ஆசையை மறைந்து வாழ வேண்டாம்.

மற்றவர்கள் உங்களுக்காக ஒருபோதும் உங்களின் சுமைகளை சுமக்க போவது இல்லை. உங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அவர்களின் எல்லா அங்கங்களும் ஊனமாகியது போல ஒதுங்கி செல்லுவார்கள்” என்ற சிறிய விளக்கத்தில் பவித்திரன் புரிந்தது போல தலையாட்டினார்.

“என்றைக்குமே நமது அண்டை வீட்டாருடன் ஒப்பிட்டு நமது தகுதிக்கு மீறியோ இல்லை நம்முடைய தேவைக்கு அவசியமே இல்லாமலோ வாங்கிக்குவிக்கும் பொருளும் சரி.. மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் பற்றி அறியாமல் நமது எதிர்கால நிலை பற்றியும் உணராமல் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை கடைசியில் மன குழப்பத்திற்கும், வாழ்க்கை சிக்கலுக்கும் இடையில் ஊசலாட வைந்துவிடும்” என்று முடித்தார் சொல்வேந்தன்.

நீங்கள் நீங்களாக வாழ முற்படுங்கள். கற்பனையில் பிறரை உருவகப்படுத்தி அவர்களுக்காக உங்களை மாற்றி வாழுவதை விடுங்கள்..

எப்படி இன்றைய கூட்டத்தில் நான் நானாக கம்பீரமாக வந்தேனோ அதே போல ஒரு தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையில் இருங்கள்.

உலகத்தின் பார்வை செல்லும் இடம் எல்லாம் நீங்களும் பயணப்பட வேண்டாம். உலகம் பேசும் எல்லா பேச்சுக்கும் உங்கள் செவிகளை திருப்ப வேண்டாம். அர்த்தமில்லா பார்வைக்கும், தேவையில்லா கேள்விகளுக்கும் உங்கள் வார்த்தைகளை வீணாக்க வேண்டாம்.

இன்றைக்கு உங்களை பார்த்து கேலி பேசி உங்களை உசுப்பி விடும் உலகம் பின்னாளில் உங்களின் துன்பங்கண்டு மனதில் குதூகலித்து உங்களை கண்டதும் செவிடாகவும், ஊமையாகவும், குருடாகவும் கடந்து செல்லும்..

நமது செயல்கள் என்பது நமக்கானது. அந்த நோக்கில் இந்த உலகம் நமக்கானது என்று வாழ்க்கையை அணுகுவோம். நம்முடைய செயல்கள் மற்றவர்களுக்காக அல்ல நமக்கானது என்பதை மனதில் வையுங்கள். நீங்கள் விளையாட நினைத்தால் விளையாடுங்கள்.. தெருவில் விற்கும குச்சிஐஸ் ருசிக்க நினைத்தால் சிறுபிள்ளையாகி ருசியுங்கள். பாட நினைத்தால் பாடுங்கள். ஒரு குழுவின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆட நினைத்தால் ஆடுங்கள்.

இது தான் உங்களின் மனம் விரும்பும் செயல் என்னும்போது மற்றவர்களுக்காக தள்ளி வைக்காமல் உடனே செயல்படுத்தி மகிழுங்கள். அடுத்த சந்திப்பில் நீங்கள் நீங்களாகவே வாருங்கள். உங்களுக்கான புதிய மகிழ்ச்சி என்றைக்கும் நிறைந்திருக்கும் என்று கூறி விடை பெற்றார் சொல்வேந்தன்.

புதிய கண்ணோட்டத்தில் உலகை பார்க்க எல்லாமே புதியதாகவும், இன்பமாகவும் பவித்திரனுக்கு தோன்றியது.

கட்டுப்பாடுகள், கேள்விகள், வரைமுறைகள் தேவையில்லாத இடத்தில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் அருகில் இருக்கும் இந்த சமூகத்தை சார்ந்த அனைவரும் காதில்லாதவர்கள். உங்களின் பிரசனைகளை அவர்கள் கேட்கப்போவதில்லை. அப்படி இருக்க அவர்களின் எண்ணத்திற்கு உங்களை அடிமையாக்கி விட வேண்டாம். நாலு பேர் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணத்தில் வாழ வேண்டாம். அந்த நாலு பேருக்கும் உங்களைப்போலவே பலவிதமான பிரச்னைகள். உண்மையில் உங்களைப்பற்றி பேசவும், நினைக்கவும், கேட்கவும் அவர்களுக்கு நேரமில்லை.


“இந்த உலகம் தன் கண் கொண்டு மற்றவர்களின் துன்பங்களை ரசிக்கும், வாயால் மற்றவர்களை குறை கூறும், கேலியும் பேசும், புறமும் சொல்லும்.. புரளி பேசுபவர்களுக்கு தங்கள் காதுகளை கொடுத்து ரசித்து கேட்கும்.. ஆனால் அவர்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதன் காதுகள் செவிடாகிவிடும்.. கண்கள் குருடாகிவிடும், வாய் ஊமையாகிவிடும்.”

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.