வெள்ளி, 30 அக்டோபர், 2015

எது நிம்மதி? எங்கே சந்தோஷம்?


குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர், 'சுவாமி! என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை!' என்றார். 

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார். 

"ஒரு ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம் தான் அந்த ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்!' என்றார், குரு.


பதிவு நன்றி: நட்புடன் நாகராஜ்

புதன், 28 அக்டோபர், 2015

உங்களின் மதிப்பு என்ன?


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொல்லிகள் ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் “


பதிவு நன்றி: Sundar Raman

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!


1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்
பதிவு நன்றி: Sundar Raman

திங்கள், 26 அக்டோபர், 2015

புரியாத புதிர்

ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.

இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்!

பொறுத்திரு......


ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது ஒரு மண் ஜாடி. அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது.
இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண்ஜாடியிடம் "எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?" என்று கேட்டான்.
"சிறுவனே நான் உடனே இந்த அழகிய உருவத்தைப் பெறவில்லை. நான் இந்தப் பூமியில் மண்ணாக, மனிதர்களின் நடைபாதையாக, விலங்குகளின் மேய்ச்சல் தரையாகக் கேட்பாரற்றுக் கிடந்தேன்.
ஒரு நாள் கலைஞன் ஒருவன் என்னை மண்வெட்டி கொண்டு வெட்டினான். ஆ! அப்போது நான் அடைந்த வேதனை... சகிக்க முடியாத ஒன்று. "பொறு...பொறு..." என்று ஆணையிட்டது இறைவனின் குரல். பொறுத்திருந்தேன். பின்னர் என்னைத் துவைத்துப் பிசைந்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து...அப்பப்பா... அப்போது நான் பட்ட இம்சை... கதறினேன்.
பொறு மண்ணே! மீண்டும் ஆணை ஆண்டவனிடமிருந்து.
பிசைந்த என்னைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றினான் அவன். எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வந்தது. சுற்றிச் சுற்றி இறுதியில் ஜாடியாக வடிவெடுத்தேன். ஆனாலும் நான் அனுபவித்த வேதனை... அதிகம்.
"பொறுத்திரு" இறைவனின் குரல்.
"பொறுத்திருந்தேன். பிறகு என்னைத் தீயிலிட்டுப் பொசுக்கினான். அப்போது வெந்து உறுதிப்பட்டேன். தாங்க முடியாத எரிச்சல். பொறுத்திருந்தே. அதன் பிறகு ஏதேதோ வண்ண ரசாயணங்கள் என் மேனியில் பூசப்பட்டது தகிப்பு... தாங்க முடியாத வேதனை...
"இன்னும் சற்று பொறுத்திரு..." கடவுளின் குரல்.
"தகதகப்பு. வண்ணப்பூச்சு. ஈர்க்க வைக்கும் கோலப்புதுமை. ஆஹா... இப்போது நான் அழகின் அற்புதம். காண்போரை லயிக்க வைக்கும் எழில் ஜாடியாக ஒப்பற்ற கலைப்பொருளாகக் காட்சியளிக்கிறேன்" என்று அதன் அழகின் ரகசியத்தையும் அதற்காக அது அடைந்த அவதிகளையும் அது காட்டிய பொறுமைகளையும் சொல்லி முடித்தது.
எந்தவொரு விசயத்திலும் பொறுமை தேவையாயிருக்கிறது. பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். நீங்களும் நல்ல பெயரையும் முன்னேற்றத்தையும் பெற பொறுமையை இன்றிலிருந்தே கடைப்பிடிக்கத் துவங்குங்கள்.

அலைமகள்

அலையாடை அணிந்து
கடலாடிக் கொண்டிருக்க..
கரைதழுவும் அலைக்கரங்கள்
உன்மேனி இடைத்தழுவ
ஒளிக்கரந்தால் கதிரவனும்
ஊடல்கொள்ள ஓடிவர
உல்லாச ஆடல் பெண்ணே
விட்டுவிடு இதயங்களை...

-சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நான்

யாரென்று தெரியாத ஒருவனாய்
நான்..

நான் முகம் காட்டும் கண்ணாடி..
உங்களின் செயல்களையே
பிரதிபலிக்கிறேன்..

நான் நிர்மலமான வானம்..
சூழ்நிலைகள் மாற என்னுள்ளும்
இடி, மின்னல் மேகமுண்டு..

நான் அமைதியான ஆழ்கடல்.
அதிசயங்களும், அதிரகசியமும்
தூங்கும் எரிமலையும் உண்டு..

நான் தெளிவான நீரோடை..
அன்போடு அள்ளிப்பருகலாம்
கலக்கினால் என்னுள்ளும் அழுக்குண்டு..

நான் வெற்றுத்தாள்..
நீங்கள் எழுதுவதையே
நீங்கள் படிப்பீர்கள்..

இன்னும்
யாரென்று தெரியாத ஒருவனாய்
நான்..


--சங்கர் நீதிமாணிக்கம்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்


இது வாசிங்டன் டி சி யில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் நினைவிடம்.இந்த சிலை முழுவதும் வெண் கருங்கல்லால் ஆனது.30 அடி உயரமுள்ள இந்த சிலையை வடிவமைத்தவர் பெயர் லேய் ஈக்சின்.வெஸ்ட் பொட்டமாக் பூங்கா எனப்படும் இடத்தில் அமைந்துள்ள,,இந்த நினைவிடத்திற்கு அருகில் தான் லிங்கன் நினைவிடமும்,,ஜெபர்சன் நினைவிடமும் உள்ளது.
1929 ம் ஆண்டு,,ஜனவரி 15 ம் தேதி,அமெரிக்காவின், அட்லாண்டா வில் பிறந்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
இவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்றால்,,சீனியர் யார்??! இவரின் அப்பா தான்.நம் ஊரில் தாத்தாவின் பெயரை,,பேரனுக்கு வைப்பது போல,,மார்ட்டின் லூதர் கிங் ன் அப்பா,,தன் பெயரான மார்ட்டின் லூதர் கிங் என்பதையே தன் மகனுக்கும் வைத்தார்.குழப்பம் வராமல் இருக்க,,மகனை மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் என்கிறோம்.கிறிஸ்தவ பாதிரியாரான,,லூதர் கிங் சீனியர்,,தனக்கு பிடித்த பாதிரியாரின் பெயர்,,மார்ட்டின் லூதர் கிங் என்பதால், அதையே தன் மகனுக்கு வைத்ததாக கூறப் படுகிறது.
கருப்பின மக்களின் விடிவெள்ளி என்றும்,,கருப்பினர்களின் காந்தி என்றும் போற்றப்படும் மார்ட்டின் லூதர் கிங்,,முன்னெடுத்த முதல் போராட்டம் ரோசா பார்க்ஸ் பிரச்சனை.(ஒரு முறை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியம் தலைமையில், பொதிகை தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் பேசிய போது,,அவர் மூலமாகவே,முதன் முதலாக ரோசா பார்க்ஸ் குறித்து அறிந்தேன்.)
1955 ம் ஆண்டு,டிசம்பர் 1 ம் தேதி,அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில்,,ரோசா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது,, ஒரு வெள்ளை யர் அவரை எழ சொன்னார்.ஆப்ரிக்கா,ரயிலில் காந்தி க்கு நடந்ததே,,அதே தான் இங்கும்....கருப்பின துவேசம் அதிகமிருந்த காலம் அது,,கருப்பர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலம் அது....ரோசா பார்க்ஸ் ,,இருக்கையிலிருந்து எழ மறுத்தார்.நான் பயணச்சீட்டு வாங்கி இருக்கிறேன் , நான் ஏன் என் இருக்கையை விட்டுத் தர வேண்டும் என கேட்டார்.ஒரு கருப்பின பெண் எதிர்த்து பேசியதை,,வெள்ளையர்களால் தாங்க முடியவில்லை. ரோசா பார்க் கைது செய்ய பட்டதோடு,,14 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
ரோசா பார்க்ஸ் கைது செய்யப் பட்டதை தொடர்ந்து,,அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்காமெரி யில்,,கருப்பர்கள் பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற அந்த போராட்டம் எத்தனை நாட்கள் நடந்தது தெரியுமா.... மிக சரியாக 381 நாட்கள்.எந்த பேருந்தில் ரோசா பார்க்ஸ் க்கு அநீதி இழைக்கப் பட்டதோ,,அந்த பேருந்தை 381 நாட்கள்,40,000 கருப்பர்கள் புறக்கணித்தார்கள்.அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே. அந்த போராட்டத்தின் விளைவாக,, 1956, நவம்பர் 13, ம் தேதி,, ரோசா பார்க்ஸ் செய்தது சரி தான் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மிக சிறந்த பேச்சாளர்.லிங்கன் நினைவிடத்தில் நின்ற படி,,பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்,,i have a dream ( எனக்கு ஒரு கனவு இருக்கிறது) என்னும் தலைப்பில் இவர் பேசிய பேச்சு உலகப் பிரசித்தம்.அந்த பேச்சின் பல வரிகள்,,இந்த நினைவிடத்தில் பொறிக்கப் பட்டுள்ளன.புகைப் படத்தில்,, மரங்களின் அருகே,,பளிங்கு சுவரில்,,அந்த வாசகங்களைப்,, பார்க்கலாம்.
தன் பேச்சாலும்,,தொடர் போராட்டங்களாலும் கருப்பின மக்களின்,,துன்பங்கள் முழுமையாய் நீங்க பாடுபட்ட ,லூதர் கிங்,கிற்கு,,1964 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசை பெற்ற பின் அவர் பேசிய பேச்சு,,எல்லோராலும் பாராட்டப்பட்டது.
லூதர் கிங் காந்தியவாதி. காந்தியின் அகிம்சையையே தன் வழியாகக் கொண்டவர்.
கருப்பின மக்களுக்காக போராடியதற்காக,,பலமுறை கைது செய்யப்பட்டவர்,பிரம்பாலும்,,இரும்பாலும் ஆன தடிகளால்,,உடல் முழுக்க விழுப்புண் பெற்றார்.அத்தனையும்,, கருப்பின மக்களின் விடுதலைக்காக, தாங்கிக் கொண்டவர்.
1968, ஏப்ரல் 4 ம் தேதி,, டென்னசி என்ற இடத்தில்,, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிய போது,,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை,,ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவன் சுட்டுக் கொன்றான்.(அதற்காக ஜேம்ஸ் ஏர்ல் ரே க்கு 99 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது)
இறப்பதற்கு முந்தைய நிமிடம் வரை,,கடைநிலை மக்களுக்காக குரல் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.கருப்பின மக்களின் விடுதலையில்,,லூதர் கிங்,,ரோசா பார்க்ஸ் இருவரின் பங்கும் அளப்பரியது.
அன்றைக்கு ரோசா பார்க்ஸ்,,என் உரிமையை விட்டுத் தர முடியாது என,,மன உறுதியுடன் எழ மறுத்ததால் தான்,,இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்று கருப்பின மக்கள்,, அவரை,,சிவில் உரிமைகளின் தாய் என போற்றினர்.
I have a dream என்னும் தலைப்பில்,, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பேசிய போது சொன்னார்" என் குழந்தைகள், தோல் நிறத்தால் அல்லாமல்,,குணங்களால் மதிக்கப் படக் கூடிய தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது."
அவர் கனவு பலித்து விட்டது. எந்த அமெரிக்கா,, ஒரு கருப்பருக்கு பேருந்து இருக்கையை கூட தர மறுத்ததோ, அதே அமெரிக்கா வின்,,அதிபர் நாற்காலியை இன்று ஒரு கருப்பர் தான் அலங்கரிக்கிறார்.மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த அட்லாண்டா மாகாணத்திற்கு ,,நான் சென்ற போது,Helena அக்கா சொன்னார்,,"அமெரிக்கா ல யாரையாவது நீக்ரோ னு சொன்னா போச்சு,,ஜெயில் தான் " என.இதற்கு தானே,,லூதர் கிங் அத்தனை பாடு பட்டார்.

கடவுளைத் தேடி

கடவுள் அனுப்பி வைத்தாரா?
ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.
‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.
‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.
கேட்டவர்கள் சிரித்தார்கள்.
‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’
‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’
கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.
புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’
‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’
‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’
மக்கள் யோசித்தார்கள்.
‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’
‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’
இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’
‘‘எது பொய் என்கிறாய்?’’
‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’
‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’
‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’
நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

சனி, 17 அக்டோபர், 2015

புனித நதி..


அந்த நதி
ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது..

வினாடிகளையும்
மணித்துளிகளையும்
நாட்களையும்
காலத்தையும் கடந்து
நிற்காது ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது...

புராணக்கதைகளையும்,
நூற்றாண்டு வரலாறுகளையும்
தன்னில் சுமந்து
ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது...

அதன் மேனி சுமக்காத அழுக்கா?
பொங்கி அழிக்காத கரையோர வாழ்விடமா?
வளப்படுத்தாத பரப்புகளா?
வாழ்வளிக்காத உயிர்களா?

புனிதம் என்று போற்றுவோரும் உண்டு..
சாக்கடை என்று தூற்றுவோரும் உண்டு..

அது பார்த்துவிட்டது..
ஆர்ப்பாட்டமான அகோரிகளையும்..
அமைதியான சாதுக்களையும்...

கடவுளர்களும் தொழுதுள்ளனர்..
கடைகோடி மனிதர்களும்
கால் நனைத்துள்ளனர்..

புத்துயிர்களும் தினம் நீராடுகின்றன..
உயிரற்ற உடல்களும் தினம் மிதக்கின்றன..

எது எவ்வாறாயினும்
எது எப்படியாயினும்  
அது என்றும் மாறாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது..

ஆம்..
கங்கை என்றும்
கங்கையாகவே.....

சங்கர் நீதிமாணிக்கம்

வாழ்க்கைப் பாடம்

வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,

ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே.. அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே... ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா?

உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை... எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக் காட்டறேன்ன்னு சவால் விட்டான்.

கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார்.

அன்னேலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப்பட்டுச்சு. மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை.

கடவுளைக் கூப்பிட்டு.. பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு சொன்னான். கடவுளும் சரி..அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார்.

விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான்.

கடவுள் அமைதியாகச் சொன்னார்... இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப்படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது பயிர் தன் வேர்களை நன்றாக பரவ விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்க்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி, நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்...

ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்... சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது.


இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால் அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது... ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்...

வெள்ளி, 16 அக்டோபர், 2015

உலகம் எல்லாம் உனதே

விட்டுவிடு..

துக்கங்களை எல்லாம்
வழிந்த கண்ணீரோடு..

தொலைத்துவிடு எல்லா
சோகங்களையும்
வெளிவிடும் மூச்சோடு..

புதிய பிறவியாய் உன்னை
உணர்வாய்..

மனதின் நம்பிக்கை ஒரு
புதியபாதை தரும்..

கம்பளிப்பூச்சியாய் இன்னும்
உலகில் நெளியாமல்...
புது உற்சாக கூட்டை
அணிந்துகொள்..

கொஞ்சம் தனித்திரு..
நெஞ்சம் படித்தெடு...
உள்ளம் ஒருங்கிணை..
மூச்சை அடக்கு..
தெளிவு கொள்..

மெல்ல கூட்டைப் பிரித்து
வெளியே வா...

பார்..
சந்தோசம் தரும்
உலகை..

உன்னையும் கொஞ்சம் உற்றுப் பார்..
உன் புதிய வடிவை மெல்ல நோக்கு..
இப்போது உன் மெல்லிய
சிறகுகளை
விரி...
.
நீ புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சி....

இப்போது
சிறகடி..
உலகம் எல்லாம் உனதே..

-சங்கர் நீதிமாணிக்கம்

வியாழன், 15 அக்டோபர், 2015

அந்த ஆலமரம்...

காணாமல் போயிருந்தது
அந்த ஆலமரம்...

ஊர்கூடி ஒன்றுபட்டு
வழக்குரைத்த மரத்தடி மேடை..

நண்பர்கள் புடைசூழ நாளும்
விளையாடிய இடம்..

இலைப்பறித்து பங்கிட்டு
பந்தியிட்ட மரத்தடி கோயில்..

கோபம்கொண்ட நாட்களில்
பஞ்சுமெத்தையான நிழல்வெளி..

பரந்து விரிந்து விழுதுகள் இடை
கண்ணாம்பூச்சி ஆட்ட நினைவுகள்..

தனிமையின் அமைதியில் கவிதையோடு
இசை தந்த பறவைகள்...

சடுதியில் இல்லாமல் போனது..

வளம்தருவோம் என்றுசொல்லி
வந்த வெளிநாட்டு நிறுவனத்தால்..

காணாமல் போயிருந்தது
அந்த ஆலமரம்...

பால்யத்தின்நினைவுகளை
எப்போதும் தாலாட்டும் அதன்
விழுதுகளும்...

சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

20 Things You Don’t Owe Anyone

“Never explain – your friends do not need it and your enemies will not believe you anyway.” – Elbert Hubbard
How many things in your day do you do because you feel you should? Well honestly, the word “should” should be eliminated from our vocabulary. The things we “should” do take us away from the things that matter, the things we must do to live our best and happiest life.
When we stop doing things because we feel we should and start defining the boundaries around what will add value to our lives, we can get on with the business of living our life.
The biggest thing we need to stop doing is explaining our decisions to others in hopes of their support. We should be confident enough in our decisions that someone else’s opinion doesn’t matter.
We all judge even when we try our hardest not to. We watch people, form opinions and make assumptions based entirely on their observations. So it’s no surprise that we assume other people are judging us. Knowing judgment is happening all around us, we feel the need to constantly explain ourselves to make sure people see us as we want to be seen.
How many times have you pretended to feel fine and tried to convince someone of this fact even though it is clear you don’t feel fine at all? We’ve all done it. Instead of faking fine try just being real without the need to apologize or explain. Give yourself the freedom to … Just. Be. Human. Everyone has imperfections, why bother to hide it?
Explaining takes your power and gives it to the other person. The best decisions come when we listen to how we feel and our gut instinct. But those sources aren’t usually well received in an explanation, so we make up an explanation the other person can relate to.
Unfortunately, there are many of us that feel the need to explain even though we know we shouldn’t. An explainer is waiting for someone else’s approval, and there is a lot of wasted energy in the waiting. It’s this waiting period that doubt creeps in; depression begins to expand, and unhappiness takes root. Waiting is wasted time.
When we explain, we move away from our greatest source of wisdom – our inner guide. We stop honoring ourselves and start placing more importance on the other person.
It’s hard to overcome the tendency to explain, but it can be done with focus and intention. Awareness is the key. To help you become more aware, here are 20 things you don’t owe anyone an explanation for.
  1. You don’t owe anyone a justification for your values and your priorities.
  2. You don’t owe anyone a yes when you want to say no.
  3. You don’t owe anyone an explanation for your relationships, whether lovers or friends.
  4. You don’t owe anyone assistance with their happiness journey at the cost of your own.
  5. You don’t owe anyone a debate around your political views especially when the other person’s mind is made up.
  6. You don’t owe anyone an apology when you are not sorry, and you would make the same decision again.
  7. You don’t owe anyone a rationalization about why investing in yourself is important
  8. You don’t owe anyone the meaning of what you believe in.
  9. You don’t owe anyone a change in your appearance just to please them.
  10. You don’t owe anyone friendship, especially when they do not share your values.
  11. You don’t owe anyone a negative mindset so that you can commiserate with them.
  12. You don’t owe anyone access to information about your life that makes you uncomfortable
  13. You don’t owe anyone gossip material about other people just to fit in.
  14. You don’t owe anyone your time for their projects or for things that matter to them unless they matter to you too.
  15. You don’t owe anyone the commitment to try something “new” just because you were asked.
  16. You don’t owe anyone a safe place for constant complaining and dwelling in their poor choices.
  17. You don’t owe anyone an answer other than the truth to prevent them from being uncomfortable.
  18. You don’t owe anyone your services as a crisis counselor unless you are actually a crisis counselor.
  19. You don’t owe anyone false compliments just to make them feel better.
  20. You don’t owe anyone anything that doesn’t make you feel good and goes against your gut instinct.
Just remember this:
“What other people think of me is none of my business.” – Wayne Dyer
and then remember this:
“You alone are enough. You have nothing to prove.” – Maya Angelou

Taken from: https://www.powerofpositivity.com/20-things-you-dont-owe-anyone/

உதிர்ந்த மலர்கள்

உதிர்ந்த மலர்கள்
மீண்டும் கொடி சேர வழியில்லை..
கடவுளின் பாத மலராகலாம்..
மங்கையர் கூந்தலிலே மணக்கலாம்..
மரணப்பாதை வழி வீழலாம்...
எதற்குமின்றி வாடியும் போகலாம்..
வார்த்தைகளும் கூட

சங்கர் நீதிமாணிக்கம்

தேவையான புரிதல்

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.

அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.
ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். 

இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்,” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான்.
இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்

மாற்றம்

மாற்றம் ஒன்றே
மாற்றம் இல்லாதது..

நேற்றிருந்த நாம்
இன்று இல்லை..

நேற்று தொலைத்த
நிமிடங்கள் போனது..

நினைவுகள் சில
நீங்கிப்போய் இருக்கலாம்..

சில கேள்விகளுக்கு
விடையும் கிடைத்திருக்கும்..

பல புதிய கேள்விகளும்
முளைத்திருக்கும்..

ஒவ்வொரு நொடி மாற்றமும்
நமதானதே..

மாற்றங்களை உணர்ந்தாலே
பலவும் விளங்கும்..