திங்கள், 31 அக்டோபர், 2016

** காணாமல் போன எழுதுகோல் **



வாளின் முனையைவிட கூர்மையானது
வடிக்கும் வார்த்தைகளோ….
எண்ணத்தின் மறுவடிவமாய்
வந்தது வார்த்தைகள்....
வார்த்தைகளில் பிம்பக்கள் தந்தது
வாளுக்கு பதிலான கூராயுதம்
எழுதுகோல்..

குத்திக்கிழித்த வல்லூறுகள் பல...
வாழ்த்தி எழுதிய கவிதைகள் பல...
சொல்லி சென்ற காவியங்கள் பல..
வாழ வைத்த காதல்கள் பல..

வெற்றிகள் கொண்டாடிய எழுதுகோலும்
காலவெள்ளத்தில்
காணமல் போனது..

முத்துமணியாக கைஎழுத்து என்று
பார்த்து வியந்த எழுதுகோல் வரிகள்
எங்கே சென்றது?

வாள்முனையை பறித்த துப்பாக்கியாய்..
எழுதுகோலை களவாடியது காலம்..

சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 28 அக்டோபர், 2016

44. நாம் எந்த வகை..?

வலைவீசும் எண்ணங்கள்

44. நாம் எந்த வகை..?


உலகில் பலவகை மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களை வாழும் வகை கொண்டு இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம். ஒன்று “இதுவே போதும்” என்று இருப்பதில் திருப்தி கொண்டு வாழ்பவர்கள். மற்றொன்று “இதுவல்ல என் இடம், இதுவல்ல என் வாழ்க்கை, இதுவல்ல என் செயல், அடுத்து என்ன?” என்ற கேள்விகளோடு வாழ்கிறவர்கள்.

அதாவது “இப்படியே இருந்து விடமாட்டோமா? என்ற ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து வெளியே வர துணிவில்லாமல் அப்படியே இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்கள் இந்த முதல் வகையினர்..

இரண்டாம் வகையினரோ “இப்படியே.இருந்து விடுவோமோ?” என்ற ஒரு கேள்வியை மனதில் கொண்டு இதில் இருந்து மீண்டு மேலும் மேலும் உயர்வது எப்படி என்ற சிந்தனையில் தங்களை செதுக்கிக்கொண்டு வாழ்பவர்கள்..

இந்த இரண்டுவிதமான மனிதர்கள் கொண்டது தான் இந்த உலகம். “இப்படியே இருந்து விடுவோமோ? இப்படியே இருந்து விடமாட்டோமா?” இந்த வரிகள் பல பதிவுகளை படிக்கும்போது கடந்து வந்த ஒரு ட்விட்டர் பதிவு, ஆனால் பாருங்கள் எவ்வளவு எளிதாக மனிதர்களை இரண்டே வரிகளில் இந்த ட்விட்டர் சொல்லிவிட்டது.

இதுவே போதும் என்று வாழும் முதல் வகையினர் ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து எந்த ஒரு புதிய முயற்சியையும் செய்ய முயலாமல் கிடைக்கும் வாழ்க்கையில் திருப்தி படுபவர்கள். இவர்களின் வாழ்க்கை மாடிப்படியில் ஏறுவது போல் சீரான இடைவெளியில் உயரும். சமயங்களில் சமதளப்பாதை போல ஒரே மாதிரியாகவும் இருக்கும்.

இரண்டாம் வகையினர் பயணிக்கும் பாதை மலையில் இருக்கும் ஒரு கரடு முரடான பாதையில் பயணம் செய்வது போன்றது. இவர்கள் பல இன்னல்கள், சவால்கள், இக்கட்டுக்கள் எல்லாம் கடந்து தங்கள் பயணத்தை முடிக்கும்போது அவர்கள் இருக்கும் உயரம் இந்த உலகமே கண்டு வியக்கும். குறைந்த பட்சம் அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகம் அவர்களை வியந்து மிகுந்த மரியாதையுடன் பார்க்கும்படியாக கூட இருக்கும்.

பல விளையாட்டுகளில் ஆட்டக்கார்கர்கள் சிலநேரங்களில் பாதுகாப்பு ஆட்டத்தையும் (DEFENSE PLAY), மிகவும் இக்கட்டான தருணங்களில் மிகவும் ஆபத்தான முறையிலான துணிச்சலாக (RISK PLAY) விளையாடுவார்கள். இந்த பாதுகாப்பு ஆட்டம் ஆடுபவர்கள் தான் நாம் கண்ட முதல் வகையினர். ஆபத்தை எதிர்கொண்டு துணிந்து விளையாடுபவர்கள் இரண்டாம் வகையினர்.

முதல் வகையினர் பார்வையாளர்களாய் கை தட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அரங்கில் இரண்டாம் வகையினர் கைதட்டல் பெரும் வகையில் மேடையில் அமர்ந்திருப்பார்.

இந்த இரண்டாம் வகையினர் மனதில் ஊக்கமும், நெஞ்சில் துணிவும், கூடவே துணையாக தன்னுடைய நம்பிக்கையையும் நிறைய வைத்திருப்பார்கள். அவர்களே மேன்மை பெற்று வாழ்கிறார்கள்.

உண்மையில் இருவருமே வாழ்க்கையில் வெற்றிபெற்று திருப்தியாக வாழ்ந்தாலும் முதல் வகையில் ஒரு சலிப்பு இருக்கும். இவர்கள் கூடவே பயணம் தொடங்கியவர்கள் துணிந்து செயல்பட்டு ஏணியில் ஏறி சென்றிருப்பர். முதல் வகையினரோ அவர்களை அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

முதல் வகையினர் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவராக இரண்டாம் நபர்கள் இருப்பார்கள்.

“வாய்ப்புகளால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்துவிட முடியாது, அதற்கு மாற்றங்களும் மிக அவசியம்” என்ற அறிஞர் ஜிம் ரான் குறிப்பிட்டுள்ளபடி இவர்கள் இந்த நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாற நிச்சயம் மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றம் நாம் துணிச்சலாக ஒரு செயலை செய்வதில் இருக்கிறது.

இந்த உலகத்தில் தேவைகள் தான் பெரும்பாலும் உயிரினங்களை இயங்க வைக்கிறது. அதிலும் முக்கியாக நமது மனித இனம். இங்கு தேவை என்பது நம்மைப்பொறுத்தவரையில் வெறும் பணம் என்றே கணிக்கப்படுகிறது, ஆனால் அதையும் மீறிய தேடல் தான் உண்மையில் நம்மை இயக்குகிறது.

பணம் படைத்த ஒரு மனிதனும் தேடலில் இருப்பன், இல்லாதவனும் ஒரு தேடலில் இருப்பார்கள்.. பணமிருப்பவனுக்கு அன்பு, நிம்மதி, நம்பிக்கையான மனிதர்கள், அமைதி, திருப்தியாக சாப்பிடும் வாழ்க்கை இப்படி பல தேடல்கள் இருக்கிறது. என் என்றால் அவர்கள் பணம் தேடும் முயற்சியல் இதை எல்லாம் இழந்தவர்கள்.

இந்த உலகத்தில் நம்மால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும், ஆனால் அப்படி வாழ்வது தான் வாழ்க்கையா? .புழுக்களும், பூச்சிகளும், ஈக்களும், எறும்புகளும் தான் வாழ்ந்து மடிகிறது? என்ன பெருமை அதில்.

“ஒருவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தாமல் இவ்வுலகத்தை விட்டுச் செல்வதைப் போல ஒரு துன்பம் ஏதுமில்லை”.

அந்த திறமையை வெளிப்படுத்த நாம் துணிய வேண்டும். துணித்து வாழ்க்கையில் செய்யும் ஒரு செயல் தோல்வியை தந்தாலும் அது நமக்கு ஒரு நல்ல பாடமே. நிச்சயம் இழப்பு அல்ல. அது முன்னேற்றத்தில் சிறிய தடை மட்டுமே. முன்னேற்றத்தையே முடக்கியது ஆகாது.

இருவகை மனிதர்கள் பற்றிய ஒரு ஒப்பீடுக்கு வித்தக கவிஞர் பா. விஜய் அவர்கள் ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ள இந்த கவிதை நல்ல உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறன். அது:

“ஏக்கத்தோடு வாழ்பவனுக்கு
எல்லா நாளும் மின்வெட்டு..
ஊக்கத்தோடு வாழ்பவனுடைய
ஒவ்வொரு செயலும்
கல்வெட்டு”

அவரே சொல்லியது போல

“உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்..

இந்த இருவகை மனிதர்களை தாங்கியது தான் இந்த உலக வாழ்க்கை.. நாம் எப்படி வாழவேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்.


திங்கள், 24 அக்டோபர், 2016

பூமகள் கரங்கள்..

நேசத்தில் சுட்டுகிறது பூமகள் கரங்கள்..
வானதேவனே என்னை வஞ்சித்து விடாதே..
உன் உன்னத அன்பின் அணைப்பிலே நான்..

உன் அழகின் சிரிப்பில்
என் குழந்தைகள் பசியாருகிறது..
உன் பாசமழையில் களைப்பு நீக்கி
தலையாட்டி புதியாய் கிளைக்கிறது..

வா.. என் கரம் பிடித்து
மெல்ல மெல்ல மண்ணுக்கு இறங்கி வா..
வேட்கை கொண்டு வெட்கம் இல்லாமல் வேண்டுகிறேன்.
நம் தாபம் தீரும் நேரத்திலே தான்
இங்கே இன்பம் சிரிக்கும்..

நீ என்னை வெறுத்து நின்றுபோவதால்
பின்னாளில்
உன்னை ரசித்து கவிதை எழுத
ஒருவரும் இல்லாமல் போவர்கள்..

வா..
மேகத்தை துணையாக்கி வந்து விடு..
உன் மழைக்கரங்களால்
வெட்கம் தீர அணைத்துவிடு..


சங்கர் நீதிமாணிக்கம்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

*காணாமல் போன காதல் கவிதை வரிகள்*




கண்களுக்குள் நின்று
நெஞ்சிலாடும் ஊஞ்சலாய்
நீங்காத நினைவுகளாய்...
என்னில் நிழலாடுகிறது உந்தன் உருவம்..

காலம் கல்லையும் கரைந்து செல்கையில்
உன் மனதின் கருமேகங்கள்
விலகாமல் என்னை இருளில் வைப்பது ஏனோ..

காதலின் தூரத்து நினைவுகள் எல்லாம்
என் கண்களில் குளிரினிமை தருகிறது..
மனமோ அனலில் சுருளும் சருகாக..

தெளிந்த நீராய் இருந்த மனதில்
கல்லெறிந்து கலக்கிவிட்டு
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்..

வெள்ளை தாளில் கிறுக்கி சென்றதுபோல
உன் நினைவுகளை என்னில் சிதறவிட்டு
எங்கு மறைந்துகொண்டாய்..

கூர்தீட்டிய கத்தி கொண்ட உன் கையில்
கண்ணுக்கு தெரியாத இழையில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது நமது உறவு..

ஆனாலும்..
எனக்குள் எப்போதும்
இருந்து விடுகிறது
உனக்கான நேசம்....


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

43. ஒருவேளை..?

வலைவீசும் எண்ணங்கள்

43. ஒருவேளை..?


ஒருவேளை.. இந்த சொல்லை நாம் பல நேரங்களில் பயன்படுத்தி இருப்போம். இது முடிந்து போன நிகழ்விற்கும் எதிர்கால நிகழ்விற்கும் நாம் பயன்படுத்தும் ஒரு சொல்.. நிகழ்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

இந்த ஒற்றை சொல் நமக்கு பல நினைவுகளை சமயங்களில் இனிமையாக்கும். நமது கனவுகளை வளமாக்கும்..

“இன்றைக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது இங்கு முக்கியமில்லை.... ஒருவேளை....! முடிந்து போன ஒரு நிகழ்வில்...! அந்த நொடியில், அந்த நிமிடத்தில், அந்த நாளில் நான் வேறு முடிவு எடுத்து இருந்தால் இன்றைக்கு நான் இருக்கும் நிலையே வேறு” இப்படி நம்மில் சிந்திக்காதவர் யாரும் இல்லை..

அன்றைக்கு ஒருவேளை நான் வேறு முடிவு எடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த கஷ்டங்கள் எனக்கு இருந்திருக்காது என்று தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்களும்.. “ஒருவேளை அன்னைக்கு மட்டும் நான் எங்க அம்மா அப்பா பேச்சை கேட்டு அவங்க சொன்ன முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்தா? இனைக்கு இப்படி புலம்ப வேண்டியது இல்லை என்று பல தம்பதியர் புலம்புவதும் காதுகளில் விழுகிறது.

இந்த “ஒருவேளை” என்பது எதிர்காலம் சார்ந்து வரும்போது பெரும்பாலும் எதிர்மறை கேள்விகள் தாங்கியும், சமயங்களில் எச்சரிக்கை உணர்வு கொண்டு நமது செயல்களை பல கோணங்களில் ஆராய்ந்து நடைமுறை படுத்தும், எதிர்மறையாக நாம் எடுக்கும் காரியம் போக வாய்ப்பிருந்தால் அதுபற்றி நன்கு சிந்திக்கவும், அந்த செயலின் பல கூறுகளை கண்டறியவும், வெற்றிக்கான வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவும், சமயங்களில் தந்த முடிவுக்கும் மனதை தயாராக வைத்துக்கொள்ளவும் இந்த “ஒருவேளை” என்ற கேள்வி நமக்கு பயன்படுகிறது.

எதிர்காலம் பற்றிய “ஒருவேளை” என்ற தொனியில் எழும்பும் கேள்விகள் நமக்கு மிக மிக அவசியம். இதன் மூலம் வரும் கேள்விகள் நமது செயலை நன்கு திட்டமிட்டு சிறப்பான வழியில் உறுதியாக முடிக்க உதவுகிறது..

அதே நேரம் முடிந்துபோன ஒரு செயலில் “ஒருவேளை” இப்படி நடந்து இருந்தால் என்பது வெறும் கற்பனை மட்டுமே. முடிந்துபோன செயலை நம்மால் மற்ற முடியாது, ஆனால் அதே போலவே வேறு ஒரு நிகழ்வு தற்காலத்தில் நடக்க வேண்டும் என்றால் “ஒருவேளை” அப்படி நடந்தது போல நடந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியோடு அந்த அனுபவம் கொடுத்துள்ள முதிர்சியோடு கொஞ்சம் சாதுர்யமாக நம்மால் செயல்பட முடியும்.

நாம் எந்த ஒரு செயலையும் செய்ய திட்டமிட்டாலும் அந்த செயல் தொடங்க முதல் அடி நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். உலகம் முழுவதும் சுற்ற கிளம்பினாலும் முதல் அடி வீட்டிற்கு வெளியில் தான் வைக்க வேண்டும் என்பது பிரபல வாக்கியம்.

ஒருவேளை அந்த முதல் அடியை எடுத்து வைக்காவிட்டால் எந்த காரியம் நடைபெறும்?

“ஒருவேளை” என்ற கேள்வியை நாம் செய்யும் ஒவ்வொரு செயலை செய்யும் முன்பும் கேட்டு வாழ்க்கையில் தெளிவாக செயல்பட்டால் “ஒருவேளை” என்ற கேள்வியைக் கொண்டு இறந்த காலத்தை பற்றி நினைப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க முடியும்.

எல்லோர் வாழ்க்கையிலும் அள்ள முடியாத அளவிற்கு சோகங்கள் குவிந்து கிடக்கின்றன ஆனால் நாம் அதைவிடுத்து சிதறிக்கிடக்கும் சந்தோசங்களை மட்டும் தேடி எடுக்க தான் ரொம்பவே மெனக்கெடுகிறோம். எல்லா சந்தோசங்களும் அவமானங்கள், தோல்வி, ஏமாற்றங்கள் என்ற பலவற்றோடு கலந்த கலவையாக மட்டுமே நமக்கு கிடைக்கும்....

இந்த உலகத்தில் நம்மால் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் நமக்கான கவலையை நாம் யார் மீது சுமத்த முடியாது. அந்த சுமைகளை நாம் மட்டுமே சுமக்க முடியும்.

ஒருவேளை நமக்கு கவலைகளற்ற வாழ்க்கை வேண்டும் என்றால் நாம் குழந்தைகளாக இருக்க வேண்டும். அவர்கள் தான் நாம் யாரும் எதிர்பாக்காத கற்பனை உலகுக்கு நம்மை கூட்டிச்சென்று பல உண்மைகளை மிக எளிதாக உணரவைக்கிறார்கள், ஆனால் நாம் தான் குழந்தைகளும் இன்றைக்கு அவர்களாகவே இருக்க விடுவதில்லையே.. பேச ஆரம்பித்தவுடன் இந்த உலகத்தையே படிக்கவேண்டும் என்ற நமது எண்ணத்தை அவர்கள் மேல் திணித்து ஒரு யந்திரமாக மாற்றிவிடுகிறோமே..

“ஒருவேளை” நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றால் இந்த தொடரை, இந்த பதிவை படிக்காமலேயே தப்பி சென்றிருக்க முடியும், ஆனால் விதி அப்படி அல்லவே. நடக்கவேண்டியது எல்லாம் நடந்தே தீரும் என்று இருக்கும்போது நீங்கள் இதையும் சகிக்க வேண்டியது தான்..

கடவுள் நமது கோரிக்கைகளுக்கு பல சமயங்களில் செவி சாய்க்காமல் நம்மை அமைதி காப்பது உண்டு. நாம் தான் அந்த நேரங்களில் அமைதி இழந்து தவிப்பும். நீங்கள் ஒரு வெள்ளிக்கு ஆசைப்படும் போது அதை உங்களுக்கு தராமல் உங்களை உழைக்க செய்யும்போது அல்லல் படும் மனம் ஒருவேளை உங்களுக்கு ஒரு தங்கமே கிடைத்தால்? அது தான் கடவுளின் செயலக இருந்தால்? பொறுமையும், ஆழ்ந்த அமைதியும் மட்டுமே கடவுளை நமக்கு உணரவைக்கும்.

அதிக புத்திசாலித்தனம், அதிக பணம், அதிக பாசம், அதிக சொத்து, அதிக அதிகாரம் என்று எந்த அதீதும் நமக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதில்லை. அளவோடு இருக்கும் எல்லாமே மனதுக்கு இன்பம் தான். மனம் தான் நமது எல்லை. ஆனால் உண்மையில் நம் எல்லோருடைய மனதுக்கும் வானம் கூட எல்லையாக இருப்பதில்லை. ஒருவேளை எல்லோர் மனதின் எல்லையை சுருக்கி வாழ்ந்தால் உலகம் மிகவும் அமைதியாக, இன்பமாக இருந்திருக்குமோ என்னவோ?

சில ஆய்வுகள் படி மகிழ்ச்சியான மனம் என்பது பிறவியிலேயே பரம்பரையாக மரபணுவில் பதியப்பட்டு இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸ் மெகேலோஸ் என்ற விஞ்ஞானி பல நாடுகளிலிருந்தும் 18,000 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடம், மகிழ்ச்சி குறித்து செய்த ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளாரம்.

அதாவது, மரபணு வழியாக இந்த மகிழ்ச்சி, தன்னிறைவு வரும் வாய்ப்பு இருக்கிறதாம். அது, தாய் தந்தை வழியாகவும், அவர்கள் வளர்ப்பு முறையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியப்படுகிறது. சலிப்போ, சங்கடமோ மகிழ்ச்சியோ எதுவாகினும், பரம்பரைப் பழக்கமும் துணை போகிறது. பெற்றோர் எவ்வழியோ, குழந்தைகள் அவ்வழி இல்லையா?

ஒருவேளை பணமும் இப்படி மரபணு வழியாக வருவதாக இருந்தால் இப்போது இருக்கும் வர்க்க பேதம் இந்த உலகில் இன்னும் பெருகி ஒரு நிம்மதி இல்லாத உலகமாகவோ, அல்லது ஒரு ஆண்டான், அடிமை என்ற சமுதாயமாகவோ மட்டுமே இருந்திருக்கலாம்... சமதர்ம, சமத்துவ என்ற வார்த்தைகள் அகராதியில் இல்லாமலேயே போய் இருக்கும்.

உண்மையில் எல்லா வேளைகளும் நமக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும், நாம் புரிந்து செயல்படக்கூடியாதாகவும் தான் இருக்கிறது. நாம் தான் பல சந்தர்பங்களை நழுவ விட்டு பின்னாளில் “ஒருவேளை” அப்படி நடக்காமல் போயிருந்தால், “ஒருவேளை” அப்படி நடந்து இருந்தால் என்று சொல்லி முடிந்ததை நினைத்து புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

முடிந்தவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள், ஆனால் அந்த முயற்சியில் யாரையும் காயம் படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கான வாழ்க்கையை வாழ எப்படி உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறதோ அதேபோலவே மற்றவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

நாம் அடைந்த, பெற்ற வாழ்க்கையை நாம் தான் அனுபவிக்க வேண்டும். எல்லாமே ஒரு திட்டமிட்ட சுற்றில் இந்த உலகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.

எதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ முற்பட்டால் நல்ல அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.

நமக்கு ஏற்றபடி மாற்றி முடியுமானால் நம்மால் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

“ஒருவேளை” நம்மால் நமது வாழ்க்கையை பலருக்கும் பயன்படும்வகையில் மாற்றி வாழ முடிந்தால்.....? எதற்கு இந்த கேள்வி..

வாழ்ந்து தான் பாருங்களேன்.. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இந்த பூமியில் வாழ்கிறீர்கள் என்பதை உங்களால் உணரமுடியும்.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


புதன், 19 அக்டோபர், 2016

"பெண் என பிறக்கவில்லை..!"



நாங்கள் யார்...
முற்றுப்புள்ளியும் அல்ல,
தொடர் புள்ளியும் அல்ல..
கேள்விக்குறியாய் குறுகிக்கிடக்கிறோம்..
நாங்கள் வார்த்தைகள் பிறழ்ந்து போன வாக்கியமானோம்..
தழைக்க முடியா விழுதுகளானோம்..
தாயிருந்தும் தாயணைப்பு கிடைக்கவில்லை..
தந்தை இருந்தும் அவர் நெஞ்சம் இறங்கவில்லை..
சேயாக வாழவும் எங்களுக்கு வழியில்லை..
வசமில்லா காகிதப்பூ வம்சமாகி போனோம்..
நாங்கள் மகரந்தம் இல்லா வெற்று மலர்கள்..
அன்பும் மனமும் இல்லா சிற்பங்கள் அல்ல..
பெண் என பிறக்கவில்லை ஏனோ
பெண்ணாக மறுபிறவி தந்துவிட்டான் படைத்தோன்..
நெஞ்சமெல்லாம் பெண்மையிலே பூரிக்க..
சுற்றமெல்லாம் மென்மனதை சுடுகிறதே..
நாங்கள் வாழ்க்கை கேட்கவில்லை..
வாழ வழியை விடுங்கள் என்றே வேண்டுகிறோம்..
ஒதுங்கக்கூட வழியில்லை
ஒதுக்கி வேதனை கூட்டுகிறது சமூகம்..
புராணங்களில் மட்டுமே சாபங்கள் வாரங்களாக
எங்கள் வாழ்வில் சாபங்கள் மட்டுமே....
வரம் தருவது யாரோ?


சங்கர்  நீதிமாணிக்கம் 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஓடியது ஊடல்...



வெண்மேகம் இல்லாத இருண்ட வானத்தில்
பூப்போல பூத்ததடி நட்சத்திரங்கள்..- எல்லாம்
உன் புன்னகைக்கு ஈடாகுமா?

மௌனத்தை மொழியாக்கி கொல்லுகிறாய்
என் நினைவுகளில் உன்நினைவை கூட்டுகிறாய்..

நிலாக்கால இரவுகளும் தென்றல் தழுவும் சோலைகளும்
சொல்லிடுதே நீ அணைத்த நாட்களை தான்..
என் மனதும் ஏங்கிடுதே ஊடல் போகும் இரவைதான்..

அந்நாளில் நீ தந்த அன்பு முத்தங்களும்
ஆசையோடு அணைத்துக்கொண்டு தலை கோதிய இனிமைகளும்

அன்பாலே நீ அடிக்க தங்கிவிடும் மனது..
வம்பாலே அடிக்காதே நொறுங்குதடி மனசு..

என் விழியை உன் விழியில் கலந்துவிடு கண்ணே..
மௌனத்தை உடைந்து விட்டு வார்த்தை ஒன்று சொல்லிவிடு..

ஊடலிலே தொலைத்துவிடும் கோபம் தானே..
கூடலிலே வந்துவிடும் நாணம் தானே..
அழகில்ல கோபத்துக்கு விடை கொடுத்து நாணத்தில் சிரித்துவிடு..

முழுநிலவாய் நாணத்தோடு வந்துவிடு..
அந்த நீலவான ஆடை மெல்ல தள்ளிவிடு..

தளிர்மேனி குளிர்கரங்கள் அணைக்கட்டுமே..
இதழ்கள் சேர்ந்து புதுகவிதை படிக்கட்டுமே..


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

42. எங்கே தேடுகிறோம்..?

வலைவீசும் எண்ணங்கள்

42. எங்கே தேடுகிறோம்..?

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும் என்பது உலகியலில் முக்கிய கோட்பாடாக இருந்தாலும் சிலவற்றை சில இடங்களில் மட்டுமே பெறமுடியும். அப்படி பெறக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை இன்றைய நாளில் நாம் தேட வேண்டிய இடத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா இடங்களிலும் தேடி அலைகிறோம்.

வறுமையிலும் செழுமையாய் வாழ்ந்து காட்டி நமக்கு போதித்த இந்த சமூகமும், பண்பாடும் இன்றைக்கு மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து வசதிக்காக எதைவேண்டுமாலும் செய்யலாம் என்ற மனநிலையில் வந்து நிற்கிறது.

இந்த தேடல் ஒருவரை துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்து பின்னர் பணத்தை, பகட்டை, செல்வாக்கை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசையில் தள்ளிவிடுகிறது. அப்படி அதிகரிக்கும் ஆசையில் ஒவ்வொருவரும் தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு இப்படி ஓடி ஓடி தேடி சம்பாதித்தாலும் அந்த ஓட்டம் என்பது ஓடிக்கொண்டு இருக்கும்வரை மட்டுமே சிறப்பாக இருக்கும். எங்கோ எதோ ஒரு காரணத்தில் அவர்கள் தேங்கி நிற்கும்போது எல்லோர் மனதிலும் இந்த ஓட்டங்களில் தாங்கள் எதையோ ஒன்றை இழந்து விட்டோம் என்ற வெறுமையை மட்டுமே தருகிறது.

ஆம்.. அந்த வெறுமை என்பது இழந்துவிட்ட மகிழ்ச்சியான நாட்களும் தங்களை விட்டு விட்டு ஒதுங்கி நிற்கும் நிம்மதியும் என்பது அவர்களுக்கு புரியவே நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது.

செல்வம் தேடும் ஓட்டத்தில் கிடைக்கும் இன்பங்கள் எல்லாமே உண்மையான மனஅமைதி தரும் சந்தோசமோ, நிம்மதியோ அல்ல. அது எல்லாம் இரண்டு மணி நேர இருட்டுகளில் செயற்கையாக கிடைக்கும் பொழுதுபோக்கு நிம்மதி போன்றவையும், இரண்டு மணிநேரம் பகட்டான கூட்டத்தில் ஊற்றிக்குடித்து உதட்டளவில் பாராட்டப்படும் வார்த்தைகள் மட்டுமே.

எதிலும் உண்மை இல்லா போலிகள் மலிந்துள்ள உலகில் இன்றுக்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எங்கு நோக்கினாலும் யார் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சியின் பிரகாசத்தை பார்க்க முடிவதில்லை. எல்லா மனதிலும் துன்பங்களும், சுமைகளும், கவலைகளும், வெறுமையும் பிரதிபலிக்கும் புன்னகை தான் வெளிப்படுகிறது.

எந்த வசதியும் இல்லாத நாளில் கடுமையாக உழைத்து நிறைவாக வாழ்ந்த வாழ்க்கையில் கிடைத்த அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் இன்றைக்கு பெருகியுள்ள நவீன வசதிகள் நமக்கு தரவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. உள்ளங்கள் சேர்ந்து இருந்த அன்றைக்கு இருந்த வசதி குறைந்த இனிய நாட்கள் இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத மெல்லிய படலமாக உறவுகளை பிரித்திருக்கும் பகட்டு என்ற திரை தருவதில்லை.

எல்லா இழப்புகளும் நமக்கு மட்டுமே..

இந்த பூமி அதன் போக்கில் எப்போதும் போலவே சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது. நாம் தான் நமது போக்கை மாற்றிக்கொண்டு எது முக்கியமோ அதை எல்லாம் இழந்துவிட்டு வேண்டாததை பற்றிக்கொண்டு தவிக்கிறோம்.

எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை தான் நம்மில் இருக்கிறார்கள்.

நியாயமான கவலைகள் மனித இயல்பு.

நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைப்படுவதும், அடுத்து தொலைத்ததை விட அதிகபணம் மற்றவர்களை உபயோகப்படுத்தி ஈட்டிவிட முடிமா? என்ற எதிர்பார்ப்பதும் தான் இன்றைக்கு பலரின் மனதில் நிறைந்து கிடக்கும் கவலையாகும்?

கவலைகள் எல்லாமே மழைக்கால காளான்களைப் பல எந்த காரணமும் இல்லாமல் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

நாம் அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்கும்போது அவை நமது கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை நமது ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழக்க நேர்ந்தால் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

ஒருவன் ஒன்றை தேடுகிறான் என்றால் அது மற்றவனின் கையில் அவன் பார்த்து ஏங்கியதாக இருக்கும். எப்பாடுபாட்டாவது அதை அவன் பெற்றுவிட்டால் சில நாட்களில் அந்த பொருள் எந்த மூலையில் இருக்கும் என்பது அவனுக்கே தெரியாது.

ஆக நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் மட்டுமே இருக்கிறது.

அதையும் தாண்டி உண்மையான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதில் இருக்கிறது? இனிய பாடலில், ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆனால்.... மனம் நிறைந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் எங்கே இருக்கிறது என்றால்.....? அது நம்மிடம் மட்டுமே இருக்கிறது. நமது மனமே அவற்றின் மூலம். எதிலும் அதீத பற்று இல்லாமையும், போதும் என்று சொல்லும் மனமும் நம்மிடம் இருந்தால் நாம் தான் இந்த உலகத்தில் மிகமிக மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்த மனிதன்.

இந்த மண்ணில் எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. நம்புவோம். நாம் எல்லாமே பெற்றிருக்கிறோம் என்று... நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

நம்மிடம் ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தாலே போதும். சிறிய விதைதான்ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோதுஅது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? அது நம்மிடம் மட்டுமே இருக்கிறது. நாம் ஒவ்வொரு கணங்களையும் ரசித்து அனுபவித்து வாழ்தோம் என்றால் அதுவே மகிழ்ச்சி. ஒரு பொருள் இருந்தால் தான் மகிழ்ச்சி என்றால் ஏன் அந்த பொருள் நமக்கு கிடைத்த பிறகும் மனம் வெறுமையாய் உணர்கிறது. காரணம் நாம் அந்த கணத்தை அனுபவிக்க மறந்துவிடுகிறோம்.

ஒரு குழுவாக வெளியில் செல்லும் போது சிலர் உற்சாகமாக நடனமாடுவார்.. நம்முடைய மனமும் அப்படி நடனமாட விரும்பும்.. ஆனால் நாம் அந்த கணத்தை அங்கேயே கொண்டாடாமல் தள்ளி வைத்து நமது மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். நமக்கு தடைபோடும் வெட்க உணர்வுகள், யார் என்ன நினைப்பார்களோ என்ற மூன்றாம் நபரின் கருத்தின் மீதான நமது எண்ணமே நம்மை அந்த கணத்தை உண்மையான மகிழ்ச்சியுடன் கழிக்கமுடியாமல் தடை செய்துவிடுகிறது.

பந்தயத்தில் முதலிடம் பெறுபவன் அந்த கணத்தில் மகிழ்ச்சியை கொண்டாடாமல் வேறு நாளில் அந்த கணத்தின் பெருமிதத்தை, மகிழ்ச்சியை என்ன தான் நினைத்து பார்த்தாலும் நிச்சயம் பெற முடியாது.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவனுக்கு கிடைக்கும் ஆரவார ஊக்குவிப்பும், அரங்கம் அதிரும் கைத்தட்டலும் அந்த கணத்தில் அவனக்கு கிடைக்கும் பரவசமும்.. மீண்டும் பதிவின் ஒளி பிம்பக்காட்சிகளை திரும்பத்திரும்ப போட்டு பார்க்கும்போது நிச்சயம் கிடைக்காது. அது போலவே நமது மகிழ்ச்சியான தருணங்கள் மனதில் இருந்தாலும் அந்த கணத்தில் கொண்டாடாமல் பிறகு நினைத்து பார்ப்பதில் உண்மையான நிறைவு கிடைக்காது..

மகிழ்ச்சியும் நிம்மதியும் நம் கையில் தான் உள்ளது....

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


வியாழன், 13 அக்டோபர், 2016

கொஞ்சுவது சினம்.

கொஞ்சுவது சினம்.

ஈரடியால் உலகளந்த வள்ளுவனும்
மூன்றடியில் தேவர் காத்த வாமனனும்
நான்கடியில் உண்மை சொன்ன நாலடியாரும்..
ஒன்றாகி சொல்லுவது ஒரு நீதியே..
சினம் தவிர்த்தல் ஒன்றே நன்மக்கள் கொள்ளும் நீதி..

மதித்து நடப்பாரும் சரி..
மதியாதார் செயலும் கூட சரி..
நடப்பது நடந்துவிடும்..
அற்ப ஈயும் நம்தலையில் நார்த்தனமாடும்..
செயல்தடுக்க ஏலாது நம்மாலே..
உணர்ந்தாலே சினம் நம் தலைக்குள் இறங்காது..

அஃதே..
காவாத சினமேன்றால் நம்மையே கொல்லும்..
புரிந்தோரே வார்த்தைகளை சிறையிட்டு..
சிந்தித்து வெளியிடுவர்..
நன்மக்கள் நாமாவோம்....

வாலிபத்தின் புலனடக்கம் போல்தானே
நல்லோர் மனதடக்கும் சினமும்....
புன்னகையால் சினம் வென்று
பொறுமை காத்தால்...

ஆத்திரத்தில் அறிவிழந்து சதை கௌவும் நாய் தானே..
யார் இங்கே திருப்பியதை கௌவுவது..
இல்லையன்றோ....
சினம் கொண்டு சீரின்றி வார்த்தை சொல்லும்
புல்லோரை நாம் தவிர்த்து – நம்முடைய
நாவடிக்கி ஒதுங்கி செல்லுதலே இழிவல்ல....
இவ்வுலகில் சினமடக்கி கொஞ்சுவதும் சிறப்பே..

(கருத்துக்கள் – நாலடியார் – சினம் இன்மை)

சங்கர் நீதிமாணிக்கம்..