சனி, 29 ஜூலை, 2017

எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)



வார்த்தைகளின்றி வந்த
பாவையுன் பார்வை மொழியில்
எண்ணங்கள் முத்தமிட...
கைபடர்ந்த வேளையிலே..
மெய் மறந்து நின்றுவிட்டேன்..

தேன்குமிழாய் பொங்கிவிட்ட
தேகச்சிதறலில் மௌனத்தின் மௌனங்கள்
மெல்ல மெல்ல பேசிக்கொள்ள....
கொல்லுகின்ற எண்ணங்களின் மொழி தான் என்ன??

சத்தமின்றியும் பேசுகிறாய்!
முத்தமின்றி இதழ் கவிதை சொல்லுகிறாய்!
சொல்லுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்கள் காண்பதற்குள்
எல்லாமே கரைந்து போகிறது

உன் பார்வையின் வீச்சில்..
நித்திரைகள் குலைகின்ற இரவின் பிடினியிலே
மோகத்திரை பின்னால் நின்று
எட்டிப்பார்க்கும் பெண்ணிலவு நீ.

உயிர் துடிக்கும் வேளையிலே
உயிர் பறிக்கும் புன்னகையில்
என் எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)

நொறுங்கிப்போனது என் வார்த்தைகளின் சத்தம்..

வெள்ளி, 28 ஜூலை, 2017

ஆண்களின் அர்ப்பணிப்பு



ஓயாது கரைதேடும் அலையாகி..
பொருள்தேடி உழைக்கின்றான்...

உருகுகின்ற மெழுகாகி
ஒளி தரும் தீபமாகி..
பாசத்தின் கனி நெஞ்சை மறைத்து
முள்ளான பலாவெனவே நிற்கின்றான்..

சுட்டுவிடும் சூரியனாய் தோன்றினாலும்
உள்ளுக்குள் எரிவதை யார் அறிவார்....

வேதனையின் சுவடுகளை நெஞ்சில் தாங்கி..
இன்பத்தின் மழையினை பொழிந்துவிடும்
கல்நெஞ்ச கார்மேகம் அவனல்லவா...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக சுயம் மறைத்து
அவர் விருப்ப உருமாறும் பச்சோந்தி பாசக்காரன்...

கிளைபரப்பி தழைத்து செழிக்க...
தன் நிழலிலே ஒதுங்கி
தானே வேரென்பதை மறக்கும் நெஞ்சே..

தியாகம் என்று பார்ப்போர்கள் பாராட்ட..
என் மக்கள்..
என் கடமை...

புன்னகையில் கடந்து போகும் மாமனிதம்...

செவ்வாய், 25 ஜூலை, 2017

நவரத்தின மாலை



“எதிர்பார்க்கிறேன்”..
இந்த “பூந்தோட்டத்தில்” பூத்த மலர்களாம்
நட்பூக்களை சந்தித்து “மகிழ்ச்சி” கொள்ள..
சந்திக்கும் வேளையில்
வார்த்தைகள் தொலைந்து போனாலும்
உள்ளம் துள்ளுமே மகிழ்ச்சியில்..

“கவலை” என்று எண்ணி தனித்திருக்கும் வேளையிலே
மெல்ல “நான்” உணர்வுகளை பதியன் போட
ஆயிரம் அன்புடன் “எத்தனை” எத்தனை
அன்பான வார்த்தைகள்..

ஆறுதல் சொல்லி மெல்ல தட்டிக்கொடுத்து
இனிய நினைவுகளை மனதில் கிளறி
ஏக்கங்கள் போக்கும் “நீயே”..
எங்களை இணைத்திட இனிய மேடை..

“தமிழினும்” “இனிய” சுவையுண்டோ?
கேள்விக்கணைகளால் யாரும்
துளைக்க வேண்டியதில்லை....? உண்டு..
இங்கே நட்புக்களும், நட்பின் வாழ்த்துகளும்
திகட்டாத சுவைதானே..

காற்றில் தலையாட்டி இசைபாடும் மரமாய்
பாராட்டில், வாழ்த்தில், போற்றுதலில்
எல்லோரும் சுகித்திருப்பதை யாரும்
மறந்திடத்தான் முடியுமா?
மறுத்திடத்தான் முடியுமா?


சங்கர் நீதிமாணிக்கம்

சனி, 22 ஜூலை, 2017

சண்டையும் சமாதானமும்



முடிந்து போகும்
எல்லாவற்றிக்கும் இங்கே சண்டைகள்...
கடந்து போகும்
கண்ணிமைக்கும் காரணத்துக்கும் சண்டைகள்...
சிறு புன்னகையின் வீச்சில்,
சிறு மௌனத்தின் பார்வையில்
ஒரு சிநேகத்தின் அணைப்பில்
முடிந்து போகும் எல்லா சண்டையும்...
சமாதனம் என்பது பிறருக்காக என்னும்
மனநிலை விடுத்து நமக்காக என்று நினைத்து
வைக்கும் அடிகளில் நமக்கான நிம்மதி
பூக்க காத்திருக்கிறது..

அன்புக்கும் ஆசைக்கும் விட்டுக்கொடுக்க
ஏன் காதல் மனைவியுடன் சண்டை வரும்..??

அந்த யுத்ததில் காணும் சமாதானம் இனியது...
அதற்காக வேண்டும் ஊடல்..
ஊடலின் சமாதானம் என்னவென்று அறியதார் யார்??
அந்த சமாதானத்திற்கு விரும்பாதர் யார்...??
அந்த போர்க்களத்தின்
காயங்கள் எல்லமே சொல்லும்
யாரும் அறியாத இன்பக்கதைகள்..
அட.. அப்புறம் என்ன
சண்டையும் சமாதானமும் வாழ்க்கைச் சாகரதின்
இனிமை தானே..

வளருகிறோம் என்கையில் கூடவே
களையாக வளருவதும் பகைமை  தானே...
எங்கும் வளரும் இந்த பகைமையின் சண்டையில்
தொலைப்பது நமது வளர்ச்சிதானே...
ஒரு சமாதான கோட்டில் வளர்வது தானே
நாடுகளின் வளர்ச்சி..
இதில் நமக்கென்ன அயர்ச்சி..
ஒற்றுமையின் கொடி பிடித்து
ஒன்றாய் வளர்கையில்
வேற்றுமையின் வேர்கள் எல்லாம்
அடியோடு அல்லவா அறுக்கப்படுகிறது..
வாருங்கள் கைகொடுப்போம்..

சண்டைகள் முடித்து சமாதானத்திற்கு...

சனி, 15 ஜூலை, 2017

புயலில் சாயாத வேர்கள்...



பூமியுடன் பிரியாத தாகம் கொண்ட வேர்கள்..
எந்த புயலையும் கண்டு அஞ்சுவதில்லை..
தலையசைந்து தலையசைந்து காற்றில் ஆடினாலும்
என்றைக்கும் விட்டுவிடுவதில்லை தன் நேசத்தின் பிடியை..
பாசத்தின் வேரில் வாழும் உள்ளங்களின் உணர்வுகள்
போராட களங்களில் தலைகீழாகி பிரிவதில்லை..
சுழலும் சூறாவளியானாலும்
சுடும் வெப்பக்காற்றின் சலனமாலும்..
வேர்கொண்ட நம்பிக்கைப்பிடிப்பு வீழாது நிற்கும்..
காற்றின் கரம் மெல்ல தழுவி மோக தென்றல் வீசி
வேர் கிளப்ப நினைத்தாலும் முயற்சியில் தோல்வி கண்டு
தோற்றே ஓடிவிடும்..

நம்பிக்கை... அது புயலில் சாயாத வேர்கள்.. 

புதன், 12 ஜூலை, 2017

திமிரெனும் திரவியம்

புன்னகையில்
கோபத்தை மூட்டி 
புரிதலில்
தன்னிலை நாட்டினாய் 

பூக்கள்
தூவியிருக்கும் பாதையில் அல்லாது
கரடுகளின் வழியே
என் பயணத்தை அமைத்தாய்....

நேசங்களை
நான் நேசிப்பாய் சுவாசிக்கையில்
வேஷங்களை மட்டுமே
உன் வேதமாக்கினாய்..

நம்பிக்கையின் வேர்களில்
நான் நீரூற்றி செல்ல
ஆணிவேரை அறுக்கவே
பின் தொடர்ந்தாய்..

திசையெல்லாம் வீசிச்செல்லும்
காற்றாய் நானிருக்க..
உன் மூச்சுக்காற்றில்
அடைத்துக்கொள்ள துடிக்கிறாய்..

என் சுயத்தில் நானும்
எரியும் தீபமாய் ஒளிர –நீயோ
திமிரெனும் திரவியம் தீர

தீயை தீண்ட தோன்ற வைத்தாய்..!

செவ்வாய், 11 ஜூலை, 2017

துருப்பிடித்த ஆணி

எல்லா மாய, பேய்க்கதைகளிலும் வருகிறது
அந்த துருப்பிடித்த ஆணி..
கட்டுக்குள் இருக்கும் யாரோ ஒருவர்
அந்த ஆணியை யார் பிடுங்குவர்
தம்மை விடுவிப்பவர் யார்? என்று
காத்திருக்கும் தருணங்களே கதையின்
உயிரோட்டமாய்...
கற்பனை கதையை விடுங்கள்..
நாமும் நமக்கான அந்த மாய ஆணியை
யாரோ ஒருவர் பிடுங்கவே காத்திருக்கிறோம்..
நம்மை சுற்றிக் கட்டிப்போட்டு இருக்கும்
பல மாய கட்டுக்களில் இருந்தும்..
நம்மை பின்னிப்பிணைந்து இருக்கும்
பிரச்சனை வலைகளிலும்..
மூச்சுமுட்ட மூழ்கடித்துக் கொண்டிருக்கும்
மாய அழுத்தத்திலும்..
எதோ ஒரு ஆணியில் நமது சுதந்திரமும்
விடுதலையும்
பிரச்சனைகளின் விடிவும்
துக்கங்களின் விடுதலையும்
இருப்பதாக நினைத்து காத்திருக்கிறோம்
அந்த ஆணியை பிடுங்கும் யாரோ ஒருவருக்காக..
அது தேவதையகினும் சரி..
தேவதையை சிறைவைத்த அரக்கனாகிலும் சரி
பேயை விரட்டும் மந்திரவாதியானாலும் சரி..
அந்த ஆணி பிடுங்கப்படவேண்டும் என்பதே
நம்மின் காத்திருப்பு..
எல்லா கற்பனை கதைகளையும்
வென்றுவிடுகிறது
கொஞ்சமும் முனைப்பின்றி காத்திருக்கும்
நம் யாதார்த்த வாழ்க்கை....


(தடம் பத்திரிகை கே. முரளிதரன் கட்டுரை பாதிப்பு)

திங்கள், 10 ஜூலை, 2017

கனவு

அந்த தருணங்கள் நன்றாகவே இருந்தது..
எண்ணியது எல்லாம் ஏமாற்றம் இல்லாமல்
நன்றாகவே இருந்தது..
நானே என் எண்ணங்களின் ஆளுமையாகவும்
நானே என் எண்ணங்களின் சேவகனாகவும்
நானே என் எண்ணங்களின் அடிமையாகவும்
புதிய அனுபவத்தில் நான் புதியவனானேன்
காலக்கெடு இல்லாத செயல்களும்
குற்றங்கள் சொல்லாத பார்வையாளர்களும்
அவசரத்தின் ஓட்டத்தில்…….
பிறரின் எண்ணங்களுக்கு மண்டியிட்டு
என்னைத் தொலைத்தும் சுயமிழந்தும்
என்னைச் சுருக்கியும் குறுக்கியும்
வாழ்ந்த நாட்களை போலல்லாமல்
இது வேறுபட்டிருந்தது...
யாரோடும் பேசுவதற்கு யோசித்து
வார்த்தைகள் தேடவேண்டிய
அவசியமில்லாமல் போனது..
காலவெளி தாண்டிய பயணமாய் அது இருந்தது
அடிச்சுவடுகள் காணமல் போயின..
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை
தூர நின்று வேடிக்கையும் பார்க்க முடிந்தது
எனக்கான இடங்கள் எல்லாமே
எனக்காக மட்டுமே இருந்தது
இருக்கட்டுமே..
என்னை கொஞ்சம் எழுப்பாமல் விடுங்களேன்..

இந்த கனவுகளை கொஞ்சம் ஆண்டுக்கொள்கிறேன்..

பூமி நரம்புகள்

காவியங்கள் புகழ்ந்தன...
கவிஞர்கள் புகழ்ந்தார்கள்..
மேவிய ஆறுகள் பல ஓட
மேனி செழிந்த நாடு என்று
புகழப்பட்டடும் இந்த மண் தான்..
இன்றோ உயிர் தொலைக்கும் நிலையில்
மூச்சுமுட்ட நிற்கிறது....
பேராசைகள் மனிதனை ஆண்டு
அவன் கைகள் மண்ணை சுரண்ட
கிழவியின் வற்றிப்போன தனங்களாய்
ஊற்றுகளின்றி நீரற்ற பாலைவனமாய்..
இயற்கையின் கண்ணீர் வரிகள் தான்
சில நேரங்களில் ஊசலாடும் உயிரை காக்கிறது..
வரிவரியாய் எம்மண்ணின் மேனியெங்கும்
ஓடும் இந்த ஆறுகள் எங்களின்
வறுமைக்கு விடுதலை தரவில்லை..
கொள்ளிக்கண்களோ எங்கே எப்படி மடக்கி
கொள்ளையிடலாம் என்று கணக்கு போடுகிறது..
நாகரிகத்தொட்டில்கள் இன்றைக்கு
அள்ளித்தாலாட்ட ஆளின்றி தவிக்கிறது..
நாடி நரம்புகளாய் என்றும் சுற்றி ஓடினாலும்
மண்ணின் மைந்தர்களை முறுக்கேற்ற முடியவில்லை..
கைவைத்தால் ஊரும் நீர் என்ற நிலைமாறி
எலும்புக்குவியலின் கொல்லைமேடாகி
மெல்ல தன் கற்பை காவு கொடுக்கிறது..
வாயிருந்தும் ஊமையாய் மனிதர்கள் வாழும் நாட்டில்
கற்பே களவு போகையில்
வேலியில்லா இந்த உயிர்த்தடங்கள் எம்மாத்திரம்..
ஒரு தலைமுறையாய் உயிருக்கு போராடுகிறது

இந்த நரம்புகளின் உயிரை காப்பது யார்.....?