சனி, 23 மே, 2015

"மனோன்மணியம்" சுந்தரம் பிள்ளை

"மனோன்மணியம்" சுந்தரம் பிள்ளை
------------------------------------------------------
"நீராரும் கடலுடுத்த.." என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய நாடக ஆசிரியர் பேரா.பெ.சுந்தரம் பிள்ளை, கேரளத்தின் ஆலப்புழை நகரில் பிறந்தவர். இளம் வயதில் தேவாரம்,திருவாசகம் படித்தவர். 1876 இல் BA பட்டப் படிப்பை முடித்தார்.

திருநெல்வேலியின் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் (ம.தி.தா.இந்துக் கல்லூரி தான் ...) முதல் முதல்வர் இவரே.
இதற்கு முன்பு திருவனந்தபுரம் மகராஜா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அங்கு பேரா.ராபர்ட் ஹார்வே யுடன் தொடர்பு ஏற்பட்டது.

ஒருமுறை விவேகானந்தர் திருவனந்தபுரம் வந்தபோது, ஒரு அரங்கக் கூட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், அன்று இரவு விவேகானந்தர் இவரது வீட்டில் தங்கி இருந்ததாகவும், இவரது சைவ சித்தாந்த நூல்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

1891-இல் இவர் எழுதிய "மனோன்மணியம்" நாடகத்தை அரங்கேற்றினார். நாடகத்தை பேரா.ராபர்ட் ஹார்வே க்கு சமர்ப்பணம் செய்தார்.
இந்த நாடகத்தில் வரும் ஒரு பிரார்த்தனைப் பாடல் தான் இது :

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

இதில் சில வரிகளைத் தவிர்த்து விட்டு ஜூன் 1970 இல் தமிழக அரசு தமிழக அரசின் அதிகாரப் பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்து என அறிவித்தது. இதற்கு இசைஅமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1885 இல் திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையை உருவாக்கினார்.

1897 இல் ஏப்ரல் 26 இல் சர்க்கரை வியாதியால் இறந்து போனார் இந்த தமிழ் அறிஞர். அப்போது அவருக்கு வயது 42.

இவர் எழுதிய நூற்றொகை விளக்கம் மற்றும் " திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி " போன்ற நூல்கள் பிரபலமானவை. பிரிட்டிஷ் அரசு இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி ராவ் பகதூர் பட்டம் அளித்தது. Fellow of Madras University உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றவர் இவர்.

இவரது பெயரில் நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்ளது.
கேரளா முன்னாள் நிதி அமைச்சர் பி.எஸ்.நடராஜ பிள்ளை இவரது மகன் ஆவார்.

இவரது மகள் வழிப் பூட்டன் டாக்டர் மனகாவலப் பெருமாள். நெல்லையில் மருத்துவராக பணிபுரிகிறார்.

ரெண்டு புகைப்படத்தில் இருப்பதும் சுந்தரம் பிள்ளை தான்.

 


சனி, 16 மே, 2015

நான் பெரிய பதிவர் எனும் அகந்தை!

மனிதர்களுக்குக்  மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்,

மனிதர்களை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிக 

முக்கியமானவை ‘நான் ’,’எனது’.


வடமொழியில் நான் என்பதை அகங்காரம் என்றும் 
எனது என்பதை மமகாரம் என்றும் குறிப்பர்.

ஒரு குட்டிக் கதை.ஒரு நாட்டில் சிறந்த ஞானி ஒருவர் 
இருந்தார் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் 
ஆசி பெற்றுப் பலன் அடைந்தனர்.

அவரைப்பற்றி அறிந்த அந்நாட்டு மன்னன் ஒரு நாள் 
அவரைக் காணத் தன் பரிவாரங்கள் புடை சூழ 
ஆர்ப்பாட்டமாக வந்தான்.அவன் ஞானியின் குடிலுக்குச்
 சிறிது தொலைவில் வந்தபோது, அவனைப் பார்த்த அவர், 
குடிலுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
மன்னன் மிகவும் கோபம டைந்தான்.   

குடிலின் வாசலில் நின்று சத்தம் போட்டுச் சொன்னான்”
நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்;வெளியே 
வந்து  ஆசி வழங்குங்கள்.”

பதில் இல்லை.

மீண்டும் சொன்னான்”நான் திரிபுவனச் சக்ரவர்த்தி 
கேசரிவர்மன் வந்திருக்கிறேன்.வெளியே வந்து 
அருள் செய்யுங்கள்”

உள்ளிருந்து குரல் வந்தது”நான் செத்த பின் வா”

மன்னன் திகைத்தான்.என்ன இவ்வாறு சொல்கிறார்?
அவர் செத்த பின் எவ்வாறு ஆசி வழங்குவார்?

அமைச்சரைப் பார்த்தான்.

அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்.
நன்மை தீமையை மன்னனுக்கு எடுத்துச் சொல்பவர்களாக 
இருந்தனர்

அமைச்சர் சொன்னார்.”நீங்க நான் ,நான் என்று உங்களை 
பற்றிப் பெருமை யாகச் சொன்னீர்களல்லவா?அந்த நான் 
எனும் அகந்தை அகன்ற பின் வா என்று சொல்கிறார்”

மன்னன் தெளிவடைந்தான்.

நான் எனது என்ற எண்ணம் நிறைந்திருந்தால் மனம் 
குழம்பித்தான் இருக்கும்.

நீங்கள் உங்கள் காரில் ஏறி அமர்கிறீர்கள்.சாரதியிடம் 
சொல்கிறீர்கள், ”சாரதி,காரை தெரு முனையில் நிறுத்து”
என்று.

அப்படித்தானே சொல்வீர்கள்?

என் காரைத் தெருமுனையில் நிறுத்து என்று சொல்வீர்களா?

மாட்டீர்கள்தானே?

ஏனெனில் அதற்கு அவசியமில்லை.

ஆனால் குருட்சேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு இந்த மமகார 
உணர்வு ஏற்படுகிறது

சாரதியான கண்ணனைப் பார்த்து,”இரண்டு சேனைகளுக்கும் 
நடுவே என் தேரைக் கொண்டு போய் நிறுத்து” என்று 
சொல்கிறான்.

”சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத’”

இது அவனது அகங்காரத்தை,மமகாரத்தைக் காட்டவில்லையா?

கீதை வகுப்பில் ஸ்வாமிஜியிடம் நான் இதே கேள்வியைக் 
கேட்டேன். சரியான பதில் கிடைக்கைவில்லை.

அர்ஜுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே இந்த அகந்தையால்தான்
என நான் எண்ணுகிறேன்.

நான்,எனது ரதம்,என் உறவினர்,நான் கொல்லப்போகிறேன் 
— நான்,நான்,நான்.

முடிவு குழப்பம்.

எனவே இயன்றவரை இந்த நான்,எனது என்னும் செருக்கை
விட்டொழிக்க வேண்டும்

வள்ளுவர் சொல்கிறார்-

”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு”---347-

யான்,எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் 
கொண்டு விடாதவரை,துன்பங்களும் விடாமல் பற்றிக் 
கொள்கின்றன.


பதிவு: http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_26.html