ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மெல்லினமும் காதல் நதியும்



புள்ளினத்தின் பூவினத்தின்
வெண்மேக மெல்லினத்தின்
வருடி செல்லும் தென்றலென
வார்த்தை தரும் மென்மையென
முயலாத வேளையிலே
முயலினத்தின் துள்ளலென
பார்வையாலே எனைப்பருகி
பைய்ய நடந்துவரும்
பருவ எழில் பொன்மயிலே
பாய்ந்து வரும் காட்டாறாய்..
பின் தவழ்ந்து வரும் நதியெனவே
காதல் சுமந்து வரும்
பொன்மகளே பெண்மகளே
என் காதல் கனவுகளை
சுமப்பதெல்லாம் நீ தானே
காவியமோ ஓவியமோ
காமனவள் தூதுவளோ
உன் விழி இமைக்க சிறைப்பட்டேன்
இதழ் விரிக்க அகப்பட்டேன்
காதல் நதியினிலே...
கண்மணியின் மெல்லினமே
கட்டி அணைத்து விடு
உயிர் தீயை ஏற்றி விடு
இச்சை அகற்றி விடு
இன்பத்தை ஈந்துவிடு


சங்கர் நீதிமாணிக்கம்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

** தொடரட்டும் சுகமாக **



இனிமை தரும் கனவுகளும்..
இன்பம் தரும் நினைவுகளும்..
வெப்பம் தரும் சுமைகளும்..
அன்பு தரும் உறவுகளும்..

நட்பு தரும் இதங்களும்..

புதன், 22 பிப்ரவரி, 2017

உயிர் பறவை



அந்த பறவை பறந்துவிடாமல் இருக்க
எல்லா பாதைகளும்
அடைக்கப்பட்டிருந்தது
அடைபட்ட கூண்டுக்குள்
அந்த பறவை சுற்றிச்சுற்றி வந்தது..
இன்பங்களில் சிரித்து
துன்பத்தில் அழுது
வேதனையில் வெம்பி
துக்கத்தில் செருமி
எல்லா பாரங்களையும் சுமந்து
வெளியேறும் பாதையறிமால்
சுற்றி வந்தது..
சில நேரத்தில்
மகிழ்ச்சியின் களிப்பில் பாதை திறக்க
சில நேரத்தில்
சோகத்தின் அழுத்தத்தில் பாதை திறக்க
சில நேரத்தில்
எதிர்பாரா நிகழ்வில் பாதை திறக்க
சில நேரங்களில்
பாதையே பலவீனப்பட்டு தானாக திறக்க.
சில நேரங்களில்
சிறைவாழ்க்கை பிடிக்காமல் பாதை உண்டாக்கியும்
பறந்துவிடுகிறது அந்த பறவை..


சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஜீபூம்பா...

ஜீ பூம்பா..
சொல்லுங்கள் ஆலம்பனா...

என் சித்தம் கலக்கும்
சொல்லொண்ணா துயரம் தரும்
கடன் சுமை நீங்கி சிரித்து மகிழ
கொஞ்சம் பணம் வேண்டுமே...
முடிக்கும் முன் அடுக்கியது
புத்தம்புது கட்டுக்கள்..

என்னவள் பெண்ணவள் நல்லவள்
அவள் தேகம் அலங்கரிக்க கொஞ்சம் அணிகள்..
முடிக்கும் முன்னே
நகைக்கடை பரப்பியது என் முன்னே..

வறண்டு கிடக்குது பூமி..
வற்றிக் கிடக்குது ஆறு..
உயிர் தர வேண்டுமே.. உதவுவாயா?
மழைமேகம் கூட்டும் மரக்காடுகளை
எங்கும் நட்டு செழிக்க செய்தது..

உழைத்து களைத்து இருக்கின்றனர் மக்கள்..
கொஞ்சம் இளைப்பாற..
கொஞ்சம் சோர்வு நீங்க..
கொஞ்சம் இன்புற்றிருக்க...
என்ன செய்வாய் ஜீபூம்பா...?

வண்ணக்காட்சிகளும் வகையான உணவுகளும்
எண்ணத்தில் மகிழ களிப்பூட்டும் நடனமும்
காட்சி படுத்தியது..

நல்லது ஜீபூம்பா..
எங்கும் கையூட்டு எங்கும் ஊழல்..
எங்கும் சுயநலம்..! மறைந்தது பொதுநலம்..!
நீயா... நானா? போட்டியில் மறக்கப்பட்டனர் மக்கள்..
சுத்தம் செய்யவேண்டுமே..! என்ன செய்வாய்...?
ஐயகோ...என்ன செய்வேன்..
சடுதியில் காணமல் போய்விட்டதே..
இந்த ஜீபூம்பா...


சங்கர் நீதிமாணிக்கம்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

6. நினைப்பதெல்லாம்...

திசையறியா பாதையிலே

6. நினைப்பதெல்லாம்...


அன்றைக்கு ஏனோ ஒரே குழப்பமான மனநிலை. பல பழைய நினைவில், பழைய நிகழ்வுகள் மனதில் மீண்டும் மீண்டும் சுற்றி சுழன்று மனதை அமைதி இல்லாமம் செய்தது.

என்றோ ஒருநாள் நிகழ்ந்த நிகழ்வில் இன்றைக்கு நாம் நினைக்கும் மாறுதலுடன் இப்படி நிகழ்ந்திருந்தால் இன்றைக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்?”, அன்றைக்கு நமது மனதில் இன்றைக்கு தோன்றும் கேள்விகள் தோன்றி, கேட்டு, தெளிவு பெற்று, அந்த நிகழ்வே வேறு மாதிரி இருந்தால்? எப்படி இருக்கும்..

எல்லாமே முடிந்து போன செயலில் மாற்றி நடந்து இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற மனவருத்தம், ஏக்கம், கவலை எல்லாம் மனதை துவைத்து, அலசி, காயப்போட்டு அமைதியில்லாமல் பிழிந்துகொண்டிருந்தது.

இதை போல மனநிலை எனக்கு மட்டுமல்ல.. உங்களில் பலருக்கும் தோன்றி இருக்கலாம். வாழ்க்கையில் வாய்ப்புகள் அவ்வப்போது வராது? வாய்ப்பு வரும்போது பயன்படுத்திகொள்ள வேண்டும். தவறவிட்டுவிட்டால் மீண்டும் அதே போல ஒரு வாய்ப்பு உங்களில் வாழ்வில் மீண்டும் வரவே வராது.

வேறு வாய்ப்புகள் வேறு நேரங்களில் வேறு சூழலில் வரலாமே தவிர முதல் வாய்ப்பு வாய்த்தது போல இருக்காது. அதற்குள் நமது பயணம் நெடுந்தொலைவு கடந்து இருக்கும். மீண்டும் திருப்பி சென்று திருத்த முடியாத பாதையில் நாம் வந்துவிட்டிருப்போம்.

என் தந்தை மறைவின் போது தொழில் தொடங்குவது சார்ந்து சில வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. இளவயது. சரியாக யோசிக்காது, துணிந்து செய்யவேண்டிய செயல்களை சந்திக்க பயந்து அந்த வாய்ப்பை தவறவிட்டேன். இன்றைக்கு நினைத்தாலும் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இப்போது தவறவிட்டுவிட்டோம் என்று என்னும்போது வரும் மனவருந்தம் சொல்லி மாளாது.

என்றைக்குமே நாம் நினைப்பது எல்லாமே நடப்பது இல்லை. அதற்காக நினைப்பது நடக்காது என்றும் இல்லை. நடக்கும். அதற்கான வாய்ப்புகள் வரும்போது நாம் தவறவிடாமல் இருக்கவேண்டும்.

இப்படி வாய்ப்புகள் தவிர்த்து சில நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் சில நேரங்களில் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்ற எண்ணமும் சமயங்களில் தோன்றும்.

ஆம். இங்கேயும் என் தந்தையின் மறைவு பற்றியே எண்ணம் மீண்டும் எனக்கு வருகிறது. அன்றைக்கு அவருடைய முடிவு நிகழாமல் இருந்திருந்தால், சில காலங்களில் வந்த மாற்றம் அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்பார்த்த சில நல்ல நாட்களை அவருக்கு தந்திருக்குமே? என்னுடைய அண்ணனின் திருமண நிகழ்வு நடக்கும்போது “எவ்வளவோ பேருக்கு தன்னுடைய சொந்த வீட்டு திருமணம் போல முன்னின்று நடந்திய அவரால் தன்னுடைய மகனின் திருமணத்தில் மகிழ்வுடன் ஓடியாடி எதையும் செய்து இன்புராமல் இருக்கும் நிலையை: நினைத்து மனதில் வருத்தம் இருந்ததை மறுக்க முடியாது”.

அதேபோலவே நாம் மட்டும் ஒரு சிலரை சந்திக்காமலே இருந்திருந்தால் மிகவும் நல்லதாக இருந்திருக்குமேஎன்ற எண்ணம். இதுவும் நமக்கு வருவது தான். ஒரு சிலரால் நாம் அவ்வளவு துன்பம் அடைந்திருப்போம். அந்த நிகழ்வில் நம்முடைய கவனக்குறைவும் இருந்தாலும் பெரும் பங்கு அந்த நபருடையதாகவே இருக்கும்.

நினைத்து பார்க்கும்போது எல்லோருக்கும் இப்படியான நினைவுகள் சில நேரங்களில் மனதில் மின்னலென வந்து போவதுண்டு. அது மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கலாம். மனதின் சுமைகளை கூட்டுவதாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான நேரங்களில் நமது குழப்பமான மனநிலையிலும், சோகமான தருணங்களிலும், கையறுநிலையிலும் இப்படியான நினைவுகள் வந்து நம்மை மிகவும் சிந்திக்க வைக்கும், ஆனால் எதுவும் செய்ய முடியாத வகையில் எல்லாமே முடிந்து இருக்கும்.

வாய்ப்புகள் வரும்போது சிந்தித்து தைரியமாக அதை பயன்படுத்துவோம், நட்புகள் நெருங்கும்போது பொறுமையுடன் அணுகி நல்ல நட்பை போற்றுவோம், சில நேரங்களில் அவசரப்படாமல் பொறுமையாக பேசி “சொற்கள் பயன்படுத்துவதால் வரும் வேண்டத்தகாத விளைவுகளை” தவிர்ப்போம்.

வாழ்க்கை என்பது நாம் வாழும் வரை குதூகலத்துடன். அமைதியாக, நிம்மதியாக, மனநிறைவுடன் வாழ்வதற்கே.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


** களவாடப்பட்ட கனவுகள் **



அண்ணார்ந்து பார்த்து
நிலவுக்கு பாதை யோசிக்கையில்
மெல்ல களவாடப்பட்டது

பூமியில் வேர்கள்..

வியாழன், 16 பிப்ரவரி, 2017

நேசம்


நேசங்களை மனதில் சுமக்கிறேன்
நாளும் அதை அன்போடு
என்னிடம் வரும் எல்லோரிடமும்
பகிர்கிறேன்..
சிலரிடம் பார்வையில்
சிலரிடம் புன்னகையில்
சிலரிடம் ஆழமான பரிமாற்றத்தில்

ஆனால் நேசங்கள் என்றும் மாறுவதில்லை..

புதன், 15 பிப்ரவரி, 2017

அன்பு

உனக்கான அன்பை
சிறுக சிறுக
இன்னும் என் இதயத்தில்
சேமித்துக்கொண்டு தான்
இருக்கிறேன்
உன் உள்ளம் தான்
பெற தயாரில்லாமல்

வெறுப்பில் நிறைந்து வழிகிறது 

இம்சை வாழ்க்கை

எதிரிக்கும் வேண்டாம் இந்த இம்சை வாழ்க்கை
கனவுகள் கானலாக
பேரன்பு கொண்ட மனம்
பேரண்டவெளியில் தனியுலகாய் தத்தளிக்க
யாசித்தும் கிடைக்காத கனிவான காதல்...
நேசங்கள் பொய்யுமில்லை
பாசத்தில் வேடமில்லை
பயணந்தான் கடுக்கிறது

பாழும் மனம் துடிக்கிறது

திங்கள், 13 பிப்ரவரி, 2017

ரோஜா கூட்டம்



காதல் நல்ல அழகு ரோஜா தான்

காதல் சொல்லுவதும் அழகா?
அது இதயத்தின் துடிப்பை
வார்த்தைகளில் உடைத்தெறியும் இன்ப வலி..!

சொல்ல நினைக்கையில் குழறும் நாவும்
எண்ணி நினைவினில் மருகும் மனமும்..
இன்பம் கூட்டும் துன்ப நேரங்கள் அது..

கடைக்கண்ணின் பார்வையிலே
பாய்ந்து வரும் மன்மதனின் அன்பு..
குழலோசைதான் காதலில்
சொல்லாத வார்த்தைகளும்

ம்ம்ம்ம்.. என்ற வார்த்தைகளே
இரு உதடும் உச்சரிக்கும் அதிகபட்ச சொல்லோவியம்..
கொஞ்சும் விழிகளும் கூடவே வழியும் மொழிகளும்..
காதல்....! காதல் தான்..

எழுத்துக்கொண்டு விளையாட அது கவிஞனாக்கும்
அமைதி கொண்டு பார்த்திருக்க அது ஞானியாகும்..
தனிமையிலே நினைத்திருக்க அது சித்தனாக்கும்
நினைவினிலே சிரித்திருக்க அது பித்தனாக்கும்..

காதல் உள்ளங்களில் கூட்டா?
ஒரு உள்ளத்தில் வருவதும் காதல் தானே..
நினைவுகளில் நீந்தி திளைப்பதும் காதல் தானே..

விழி மூடி யோசிக்கையில் எல்லாம்
மின்சார அதிர்வலையாய் இனிமை பாய்கையிலே..
ஆதியோ அந்தமோ..
பிறப்போ இறப்போ....
என்ன செய்துவிட முடியும் இந்த காதலிடம்..


சங்கர் நீதிமாணிக்கம்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தூண்டில் வார்த்தை

தூண்டில் வார்த்தையில் மயங்கிய நேரத்தில்
அன்பே ஆயுதமாய் சுமக்க..சுமையான சுகராகம் மனமிசைக்க
கையில் இருந்து களவாடப்பட்டது சுதந்திரம்
அடைக்கலமென நம்பிய கரங்கள் அடக்குகிறது..
எங்கோ மிதக்கும் கனவுகளின் வெளிகளில் உள்ளம் துடிக்க
வாரி அணைத்திட்ட வண்ணமிகு நாட்கள்..
உறங்காத உள்ளத்தில் இன்பத்தின் கனவுகள்
தேடித்தேடி அலைந்த துயரத்தை துரத்துகிறது
ஆராதிக்க தெரியாத உள்ளத்தில் என்றும்
அடங்காத கோபம் கொதிநீராய்..
கனல்வீசி கணையாய் பாய்கிறது அந்த விழிதூண்டில்


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஏமாளிகளே நாம்


.
.
ஒருநாள் திருவிழாவில்
உரிமைகள் விரல் நுனி மையில்
உருவிக்கொள்ளப்பட்டது...

நமது ஏக்கத்தின் கூப்பாடு
எவர் காதிலும் விழுவதில்லை

மக்களாட்சி தூண்களோ
சட்டத்தின் ஓட்டையில் ஒளிந்து கொள்கிறது
எளிய மக்களின் எண்ணங்கள் கவனிப்பாராற்று

நான்காம் தூண்களோ
பணநாயகத்தின் கால்களிடையே காத்துக்கிடக்கிறது
கிடைக்கும் எலும்பு துண்டுக்காய்

வீதியில் இறங்கமாட்டார்கள் என்பதும்
பொய்யாகி போனதும்
அறிந்திருத்தும் அடங்கா கொட்டம்..

அடங்குவார்களா????


சங்கர் நீதிமாணிக்கம்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

5. நீ தானே எந்தன் புன்னகை மன்னன்...

திசையறியா பாதையிலே

5. நீ தானே எந்தன் புன்னகை மன்னன்...


வளைந்து நெளிந்து ஓடும் பாம்பு போல வயலின் ஊடே புரண்டு செல்லும் பாதை தாண்டி பயணப்படுக்கொண்டு இருந்தேன் நான்.. நிமிர்ந்து எட்டிப்பிடிக்க கூடிய தூரத்தில் சின்னஞ்சிறு மலையும் மலையடிவாரம் ஒட்டி செல்லும் வீதியும் அங்கே உயர்ந்து நிற்கும் நீர்த்தேக்க தொட்டியும்..
மனம் முழுக்க பாரம் சுமந்து வழியிலேயே நடந்து கொண்டிருந்தேன். எப்போதும் மகிழ்ச்சியோடு துள்ளி வேகவேகமாக நடக்கும் நடையில் ஒரு தளர்வு. கூடவே துணைக்கு சில நண்பர்கள்..

உற்சாகமாய் சிரிந்து என்றைக்கும் மனதில் பெரும் சக்தியாய் இருந்து என்னை வழிநடத்திய உயிர் அங்கே வெறும் உடலாய் இருப்பதை பார்க்க மனமின்றி மெல்லவே நடக்கிறேன்..

துக்கம் நெஞ்சில் இருந்தாலும் அழாமல் மனபாரத்தோடு நடந்த என்னை ஊருக்குள் நுழைந்தவுடன் பார்த்து பரிதாபத்துடன் பேசியவர்களின் வார்த்தைகள் செய்த மாயத்தில் பெருக்குண்ட கண்ணீரை அடக்கமுடியாமல் வெம்பி வெடிக்க வைத்தது..

வீட்டில்... புன்னகையுடன் பார்த்த அந்த முகம் கறுத்து புன்னகை வற்றி பார்க்க முடியாமல் கிடத்தப்பட்டிருக்க.. சில நிமிடங்களில் வெளியே வந்து வீட்டின் எதிரில் இருந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழிருக்கும் சிமென்ட் பலகையில் வந்து அமைதியாக படுத்துவிட்டேன்...

நேரம் கூடக்கூட நெருங்கிய உறவுகள் ஒவ்வொருவராக தேடி வந்து ஆறுதல் சொல்லுகிறேன் என்று தந்தையின் அருமை பெருமைகளை கூற அடக்கிவைத்த துக்கமெல்லாம் அணை உடைந்து பாயும் வெள்ளமாக கொட்டித்தீர்ந்து அடங்கும் வேளையில் தான் வேறு ஒருவர் வந்து மீண்டும் துக்கத்தை கிளறி விடுவார்.

நம்மால் எவ்வளவு வேண்டுமானாலும் துக்கத்தை மனதில் அடக்கி தனிமையில் இருந்துவிட முடிகிறது, ஆனால் உற்றார், உறவினர், நட்பு, நெருங்கியவர் என அருகில் வந்து மறைந்தவர் பற்றி சொல்ல தொடங்கும்போது வெடித்து அழத்தொடங்கி விடுகிறோம்.

நம்முடைய துக்கத்தை தாங்க ஒரு தோள் இருந்தால் நாள் முழுக்கக்கூட அழுதுகொண்டே இருக்கலாம் அவ்வளவு சுகமாக மனதிற்கு இருக்கிறது அந்த தோளின் அணைப்பு.

நினைத்துப்பார்க்கையில் வெளிப்படுத்தும் துக்கம் தொலைந்து போகிறது. வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

அன்றைக்கு என் தந்தையின் முகத்தை முழுதாக பார்க்கும் திராணியற்ற ஒருவனாகவே நான் இருந்தேன். என்றைக்கும் என் தந்தையின் புன்னகை முகம் மட்டுமே என் மனதில் சிற்பமாய் நிலைத்து நிற்கிறது.

புன்னகை கொண்ட அந்த முகம் எனக்கு போதித்தது தான் இன்றைக்கும் என்னை பெரும்பாலான நேரங்களில் தடுமாறாமல் நிலைக்க வைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

எவ்வளவோ இக்கட்டான சூழலில் எங்களை வளர்த்தெடுத்தாலும் என்றைக்கும் அவரின் புன்னகையை விட்டுக்கொடுத்ததில்லை. அவரின் கால் தூசுக்கு கூட நானெல்லாம் சமமாக மாட்டேன். மற்றவர்களுக்கு உதவும் குணத்தில் நானாவது சில தயக்கங்கள் கொண்டு தடுமாறுவேன், அவரோ யோசிக்காது உதவும் மிக சிறந்த மனம் கொண்டவர்.

இருந்தாலும் அவரிடம் இல்லாத ஒரு உறுதி என்னிடம் இருப்பதாக நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்றாலும் அதைப்பற்றி என்னை நன்கு அறிந்த உறவுகள் அறிவர்.

வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி தான் முக்கிய உறவுகளை இழந்து தவிக்கும் நிலையை கடந்து வந்திருப்போம்.

இழப்புகள் சில நம்மை சோர்வடைய வைக்கலாம், சில நிம்மதியடைய வைக்கலாம், சில நமது மனவுறுதியை கூட்டி இருக்கலாம், சில சொல்லமுடியாத குழப்பத்தில் ஆழ்த்தி சென்றிருக்கலாம்.

இழப்புகள் என்பது தவிர்க்க முடியாதது என்பதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் எதிர்பாராத நேரத்தில் வரும் இழப்புகள் நிச்சயம் நம்மை தடுமாற வைத்துவிடும்.

எல்லா நிலையிலும் மெல்ல மெல்ல முன்னேறி வந்தாலும் வாழ்க்கை பாடம் என்றைக்கும் எளிதானது இல்லையே. விட்டுக்கொடுத்தலும், தட்டிக்கொடுத்தலும், கொஞ்சம் விலகி இருத்தலும் தான் மனதின் பாரத்தை அதிகரிக்காமல் வாழவைக்கும் முக்கிய குணம் என்பதை அதிலே நான் படித்தேன்.

பெரும்பாலும் இதுபோன்ற நிலைகளில் நம்மை தூண்டி தூபம் போடவென்றே சிலர் இருப்பர். அவர்களின் வார்த்தைகள் எல்லாம் மிகவும் சரியானது போலவே இருக்கும், ஆனால் அவர்களின் வார்த்தைகளுக்கு நாம் செவிடர்களாக இருந்து விட்டால் பிழைத்தோம், இல்லையெனில் அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்த ஈசலாகிப் போவும்.

கடினமான வாழ்க்கையின் பாடங்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ளும் போது மிகமிக எளிதான ஒன்றாக மாறிப்போகிறதே அது பேரதிசயம்.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்