வெள்ளி, 2 டிசம்பர், 2022

கடவுளின் தற்கொலை

கடவுள் இருக்கிறாரா?
அட...
இல்லாமலா...?
கண்டவர் எல்லாம்...
கடவுளைக் கண்டவரில்லை
(ஏளனத்தில்) கண்டவரெல்லாம்...
கடவுளைப் படைத்தும்
கடவுளைப் போற்றியும்
கடவுளைத் தூற்றியும்
கடவுளை வணங்கியும் வாழ்கிறார்கள்...
அது சரி..
நெருப்பில்லாமல் புகையுமா?
 
நானும் கடவுளைத் தேடி
கொஞ்சம் பயணித்தேன்...
 
அம்மா..
என்றொரு அழுகுரல்..
அணைக்க ஆளில்லை
அன்னமிட ஒருவருமில்லை
அநாதையாய் நின்றது ஒரு குழந்தை
அக்குழந்தை சுற்றித் திரிந்த வீதியில் எல்லாம்
கோவிலில் சொகுசாய் அமரவைத்து
பூட்டப்பட்டிருந்த கடவுள்
தனக்கு சாற்றப்பட்ட பூமாலையில் மூச்சு முட்ட
தற்கொலை செய்து கொண்டார்..
 
படைத்தவன் படைத்தான்
அழகாய் பெண்களை
ஆணவத்தில் ஆண்களை அவனைப் போலவே...
அவளுக்கு ஆடையில் குறையில்லை
இவனுக்கோ பார்வையில் குறைவு
ஆதிக்க வெறிகொண்டு
வன்புணர்ச்சி செய்து தூக்கி எறிந்துவிட்டு
அவள் உள்ளத்தையும் எரித்துவிட்டு
கோவிலில் பாவமன்னிப்பு கேட்ட பொழுதில்
மீண்டும் ஒருமுறை
கடவுள் தற்கொலை செய்துகொண்டார்..
 
என்னைப்போலவே உன்னைப் படைத்தேன்
என்று இறைவன் சொன்னதாய்
ஏட்டில் எழுதிவைத்தார்..
ஆனால்
நிற பேதம் ஏதுமில்லை..
இன பேதம் ஏதுமில்லை..
சாதி பேதம் ஏதுமில்லை..
சகலரும் ஒன்றே
என்று ஆணி அடித்தாற்போல்
சொல்ல மறந்தானோ?
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று
அவன் முன்னே ஒதுக்கியது கண்டு
மற்றுமொருமுறை
கடவுள் தற்கொலை செய்துகொண்டார்...
 
மெல்லக் கடந்து செல்கையில்
ஐயா... பசி...
ஈனமாய் ஒலித்தது ஒரு குரல்
ஆய்ந்து ஓய்ந்து உலகு விடும் வயதில்
முதியவர் ஒருவர்..
கடவுளிடம் கேட்க முடியாமல்
மனிதன் முன் கை நீட்டி நிற்க..
பார்த்துக்கொண்டிருந்த கடவுள்
பட்டென்று தற்கொலை செய்து கொண்டார்...
 
உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம்..
எத்தனைக் கடவுள்கள் இங்குண்டு?
எத்தனை முறை அவர் தற்கொலை செய்வார்?
 
எனக்கு அந்த ஐயம் இல்லை
இல்லவே இல்லை..
 
அண்டவெளி தன்னில்
ஒரு பால்வெளியில்
உள்ளடங்கி இருக்கிறது பூமி..
ஒரே ஒரு பூமிக்கு இருப்பது
ஒரே ஒரு வானம்..
எனில் படைத்தவன் பலவாக
எப்படி இருக்கமுடியும்?..
யாரும் கேள்வி கேட்கவில்லை..
 
கற்பனை கோடிட்டு
வானம் பிரித்தான்
பூமி பிரிந்தான்..
கடல் பிரித்தான்
காடு பிரித்தான்...
சுடு...காட்டையும் பிரிந்தான்
தன்னல மனிதன்..
இந்த வையகத்தில் இருக்கும்
ஒரே ஒரு தன்னல உயிரி
நாம் தானே..
 
பிரித்த
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு தேவைக்கும்
ஒவ்வொரு வேளைக்கும்
தன் விருப்பம் போல ஆட்டிப்படைக்க
என்ன செய்யலாம் என்று நினைத்தவனுக்கு
வந்து வாய்த்தது தான்
அந்த அற்ப போதை...
அட.. மதத்தைத் தான் சொல்லுகிறேன் தோழர்களே..
 
ஒருவனுக்கு ஒரு மதம் பிடித்தால்..
ஒரு கடவுள் போதுமா?
திசைக்கொரு கடவுள்
மொழிக்கொரு கடவுள்..
இனத்திற்கொரு கடவுள்..
அவன் மனம் எண்ணும் போதெல்லாம்
படைத்தான் எண்ணிலடங்கா கடவுள்கள்..
 
அதில் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டு
சிலுவையில் அறையப்பட்டார்..
ஒருவர் தவறுதலாக
அம்பெய்திக் கொல்லப்பட்டார்..
ஒருவர் விதி நொந்து
தற்கொலை செய்துகொண்டார்..
 
இன்றைக்கும் கடவுள் இருக்கிறார்
மரணமில்லாக் கடவுள்
அவர் மரணித்துக்கொண்டே இருக்கிறார்..
மதமெனும் சிறையில் இருந்து
மீளவே முடியாமல்..
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

சிறையில் கடவுள்

 எதோ ஒரு நாளில்
எதோ ஒரு இடத்தில்
அறிமுகமானார்
அறிமுகமில்லாத அந்த மனிதர்..
 
மெல்ல பேசிக்கொண்டதில்
உலகத்து உயிர்கள் தன் படைப்பென்றார்
தான் நினைப்பதே இவ்வுலகில் நடக்குமென்றார்
இவ்வுலகத்தில் இருப்பவனவற்றில் எல்லாம்
உயர்ந்தது நானேயென்றார்...
 
எதோ ஒரு இறுமாப்பு
எதோ ஒரு தற்பெருமை
உன்னால் என்ன முடியும் என்ற இளக்காரம்...
 
பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருந்தான் அவன்
அந்த மனிதனோ சளைக்கவில்லை...
தன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக...
 
பொறுமையிழந்த அவன் கேட்டான்..
நீங்கள் யாரென்று...
நான் தான் கடவுள் என்றார் அந்த மனிதர்..
 
மெல்லச் சிரித்த அவன் சொன்னான்...
உலகத்தை படைத்தது நீரென்றால்
இந்த உலகத்தில் உம்மைப் படைத்தது நான்தானே..
பிறகெப்படி நீர் என்னை விட உயர்ந்தவர் என்றான்..
 
நீண்ட விவாத்தில்
ஒருவருக்கொருவர் சளைக்காத நிலையில்
அவன் சொன்னான்..
கடவுளே..
பொறுத்தருள்க...
உம்மை மதச்சிறையில் அடைக்கிறேன்...
முடிந்தால் மீண்டு விடுதலை பெறுங்கள் என்றான்...
தோல்வியில் அமைதியானார் கடவுள்..
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

புதைந்த உலகம்

 சொற்கள் சேராத இடங்களில்
மோதிக்கொண்டிருக்கிறது
எண்ணத்தின் சிதறல்கள்...
வாஞ்சையுடன்
முகம்பார்த்து
சொல்லொன்று
இடிந்த இதயத்தின்
வலி நீக்க
இதமாக வருமோ...?
ஏங்கி எதிர்பார்த்த வேளையில்
எல்லாம் பொய்யென்று ஆனது...!
இவ்வுலகம் காலடியில்
புதைந்தே போனது...!
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

நானில்லா நாள்

 ஏதோ ஒரு நாளில்
மரங்களில் இருந்து
உதிர்ந்து விழுகிறது இலைகள்
வானில் இருந்து
மண்ணில் விழுகிறது மழை
கண்ணில் இருந்து
கொட்டுகிறது கண்ணீர்த் துளி
கரை தாண்டி பாய்கிறது
தாலாட்டும் கடலலை
ஏதோ ஒரு நாளில் தான்
நீயும்
பூக்களாய்த் தூவுகிறாய்
உன் புன்னகையை....
அந்த நாளில்
நான் எனோ இருப்பதில்லை
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

அழகின் கவிதை

 இறகு விரித்த வண்ணத்துப்பூச்சி
நீயென வியந்து நின்றேன்
மலர்ந்த நறுமலர்
நீயென மயங்கி நின்றேன்
ஆடும் மயில்
நீயென அசந்து நின்றேன்
இசைக்கும் குயில்
நீயென கிறங்கி நின்றேன்
இதயம் தொட்ட உன்னழகை 
கவிதையாக்கி
காலடி நின்றேன்
சொல்லாத உன் மவுனம்
மெல்லத்தான்
கொல்லாமல் கொல்லுதே
இவ்வுலகை...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்