புதன், 31 ஆகஸ்ட், 2016

பெண் மனம்.....



அன்பைத்தூவிட பூவாய் மலர்ந்திடும்..
கோபத்தைவீசிட தீயாய் எரித்திடும்..
ஆசையில் அணைத்திட மோகத்தில் தூய்திடும்..
பெண்ணின் மனமே மாயக்கண்ணாடி..

ஆழியின் ஆழமோ அறிதற்கு எளிது...
தூங்கும் எரிமலையோ துயரத்தின் வாசல்..
துடிக்கும் இதயமோ உயிரின் ஊஞ்சல்..
புரிந்தது கொஞ்சம் புரியாதது பெண் நெஞ்சம்..

அன்பென சொன்னால் பேரன்பு என்பாள்..
நட்பென சொன்னால் உயிரென நிற்பாள்..
காதல் என்றாலே கவிதையாய் உருகுவாள்..
தாய்மை மொழியில் மனதில் நெகிழ்வால்..

துரோகம் கண்டதும் கொதித்திடும் உதிரமாய்..
கர்வம் கொண்டதும் சொல்வதே மெய்யென..
ஆசைக்கொண்டதும் அகிலமே சிறிதென..
நேசம் தந்தும் எனக்கே எனக்கென..

அன்பில் அதிரடி தேனடி..நீ..
இப்பூவினில் விளங்காத புதிரடி நீ
வாயடி சொல்லடி வைப்பதில் பேயடி..நீ.
ஓரடி ஈரடி உன்மடி சொர்க்கமடி..

புரிந்தும் புரியாத இயற்கையின் ரகசியமாய்
கண்முன்னே நிற்பது பெண்ணின் மனமே..
புரிந்தவன் கொள்வது மௌனம்..

புரியாதவன் வாழ்வது போர்க்களம்..

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சில நேரங்களில் சில வெட்கங்கள்..! – 2



என் உயிரை குடிக்க வந்த துளியாய்
வீழ்ந்தாய் மழையே..
அவள் நெற்றியில் முத்தமிட்டு நாசி தழுவி
மெல்ல இதழணைக்க..
என்னை நோக்கிய அவள் வழிகளில் வழிந்த
வெட்கத்தை துடைத்து நீயும்
மேனியில் வழிந்தோடி மோகத்தை ஊற்றி சென்றாய்..
மோகத்தில் துடித்த மெல்லிடையாள் கை
வெட்கங்கொண்டு வழிகளை மூட..
நீயோ வெற்றிகொண்ட போதையில்
வீதிவழி குதித்தோட....
மேனி சிலிர்த்தவளோ வேரோடு என்னை
வீழ்த்தி என் வெட்கத்தையும் வெற்றிகொண்ட

கட்டில் கதை இனி எதற்கு....?

சில நேரங்களில் சில வெட்கங்கள்..!



என் வெட்கங்கள் என் வார்த்தைகள் போலவே
கூடப் பிறக்காதவை...
எனக்கும் உண்டு வெட்கங்கள்..
அறியாப்பருவத்தில் பெண்களுடன் பேசுவதே
வெட்கப்படும் செயலாய் வளர்ந்தவன்..
கொஞ்சம் வளர்ந்த பருவத்தில்
பொய்யாய் பல பொய்கள் சொல்லி விளையாடினாலும்
உண்மையாய் பொய்கள் பேச வெட்கப்பட்டேன்..
வாழ்க்கையை அறிந்த பருவத்தில்
பொய்களை உண்மையாய் பேசும் நிலை வந்தபோது
என் செயலை எண்ணி வெட்கப்பட்டேன்..
முதன் முதலில் கை நீட்டியொருவனுக்கு மறுக்காமல்
கையூட்டு தந்தபோது என் நிலையெண்ணி வெட்கப்பட்டேன்..
இன்றைக்கும் மாற்றமுடிய செயல்களை கண்டு
தலைகுனிந்து கடந்து செல்வதில்
என் வெட்கமும் கூடவே பயணிக்கிறது...
தோல்விகளுக்கு நான் என்றும் வெட்கப்பட்டதில்லை..
ஆனால் தோல்வியிலிருந்து எழாமல் இருப்பதில் வெட்கப்பட்டேன்..
இங்கோ வெட்கப்பட வேண்டிய
செயலுக்கு வெட்கப்படாத கூட்டமும்..
வீராப்பாய் செய்ய வேண்டியவற்றை
வெட்கத்தோடு கடந்து போவதும்
புது நியதியாய் மாறியதைக்கண்டு

வெட்கியே போகிறேன்....

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

35. காரணமும், கற்பிதங்களும்

வலைவீசும் எண்ணங்கள்

35. காரணமும், கற்பிதங்களும்

வாழ்க்கையில் மாறி மாறி சோதனைகளை சந்திக்காத மாந்தர்கள் இந்த உலகத்தில் மிக மிக குறைவு. அதே போலவே குறைகள் இல்லாத மனிதர்களும் இந்த பூமியில் இல்லை.

இன்றைக்கு உலகில் ஒருவரைப்பற்றிய அளவீடுகள் பெரும்பாலானவர்களால் பணத்தை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. பணம் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய பலம், பெரிய பாக்கியம். அந்த பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்று பலரும் எண்ணலாம்.

ஆனால் பணம் வைத்திருப்பவர்களை கேட்டால் தங்களிடம் இல்லாத அல்லது நிறைவேறாத ஆசைகள் பற்றி ஒரு பெரிய அட்டவணையே போடுவார்கள்.

மனம் எப்போது போதும் என்று திருப்பதி நிலையை அடைகிறதோ அப்போது மகிழ்ச்சி நம்மை தேடி வருகிறது.

இன்னும் இன்னும் வேண்டும் என்று தேடி தேடி பணத்தில் பின்னால் அலைபவர்கள் என்றைக்கும் அவர்கள் தேடும் அமைதியையும், நிம்மதியையும் அடைவதில்லை.

தூரத்தில் இருந்து பார்க்கும் சிலர் சொல்லாம் அவர்களைப்போல பணம் இருந்தால் நான் நினைத்தை எல்லாம் சாதிப்பேன்?. எல்லாவற்றையும் வென்று முடிப்பேன் என்று.?

உண்மையில் பணத்தைக்கொண்டு எல்லாம் வாங்கலாம் என்று நினப்பவர்கள் அப்பழுக்கற்ற அன்பை, பரிபூரணமான நம்பிக்கை, நேர்மையை என்றைக்கும் ஒருவரிடம் இருந்து பெற முடியாது.

இப்படி இருக்கையில் பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை கொஞ்சம் மனிதன் மீதும், மனிதத்துவத்தின் மீதும் வைப்போமே.

இறைவைனை நம்புகிறவர்கள், இறைவனே இல்லை என்று சொல்லுபவர்கள், இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி வாழ்க்கை அமைதியாக இருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள் என மக்களில் பல மனநிலை கொண்டு வாழ்கிறார்கள் இருக்கின்றனர்.

கடவுளை நம்புகிறவர்கள் வாழ்க்கையில் துன்பம், சோதனைகள் வரும்போது, “எல்லாம் கடவுள் செயல், நம்முடைய பூர்வ ஜென்மத்து பாவம்” என்று ஏற்று அமைதியாக கழிப்பவர்கள் சில வகை.

நமக்கு மட்டும், “ஏன்  இந்த கடவுள் இத்தனை துன்பங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் தருகிறான்” என்று எண்ணி அந்த நேரத்தில் கடவுளை தூற்றுகிறவர்கள் சில வகை.

இந்த துன்பங்கள், வேதனைகள் எதனால் வந்தது?, எப்படி தீர்க்கலாம்?. இதில் இருந்து மீள வேறு வழிகள் இருக்கிறதா? என்று ஆராய்பவர்கள் சிலர்.

இப்படி மனித மனங்கள் பல சூழலில் பல வழிகளில் தங்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப்பற்றி எண்ணியும், அதை அனுபவித்தும், சிலர் மற்றவர்மேல் பழியை போட்டும் வாழ்ந்து கழிக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது எப்போதும் நிலையானதும் இல்லை. எப்போதும் நேரானதும் இல்லை. எப்போதும் இன்பமானதும் இல்லை. அது ஒரு அலைகடல் போன்றது.

உலகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்த உலகத்தின் விருப்பு, வெறுப்புகளை தங்களுக்குள் சுமந்து அதில் சமாளிக்க முடியாமல் மேலோட்டமான வாழ்க்கை வாழ்த்து தத்தளிப்பவர்களின் வாழ்க்கை பொங்கி எழும் அலைகடலின் கரை அருகில் படகில் பயணம் செய்வதை போன்றதாகும்.

வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பவர்கள் நடுக்கடலில் கொஞ்சம் பாதுக்காப்பாக கப்பலில் பயணிப்பவர்கள் போல பெரிய அளவு அலைகளில் சிக்காமல் மெல்ல அசைத்து அசைத்து பயணிக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

வாழ்க்கை பற்றிய எந்த பற்றுதலும் இல்லாமல் எதோ வந்தோம் வாழ்கிறோம் என்று வாழ்க்கையை கழிப்வர்கள் நிலை கடலின் கரையில் நின்றுக்கொண்டு வரும் அலைகளை ரசித்தும், அலைகளால் ஒவ்வொரு வினாடியும் தாக்கப்பட்டு நிலைகுலைந்து விழும் ஒரு நிலையில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

கடவுளின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். ஏன் இறைவன் நமக்கு இந்த துன்பங்களையும், சோதனைகளையும் தருகிறான்?

ஒரு சிறிய கதை.. சிலர் ஏற்கனவே படித்து இருக்கலாம்..

குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.

யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்என்றார் குரு.

ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவேஅனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.

நல்ல கேள்வி!. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.என்று கூறினார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.

தெரியவில்லை."

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியேவந்தது.

மற்றொரு ஜாடியை கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை உங்களுக்கு தெரியாது. வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது.

"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது."

"நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்என்றார்.

மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒன்றை நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”

அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!

தேன் ஜாடியை மட்டும் நீங்கள்வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?

கெட்டவர்களுக்கும், சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும்” பெரிய வித்தியாசம் இல்லை, ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களுக்கு அவன் செவிசாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் அதற்குத்தான். நாம் நமது உண்மையான குணத்தை அறிந்து நம்மை நாமே மாற்றிக்கொண்டு நமது செயல்களில் அன்பும், நேர்மையும், பிறருக்கு உதவும் குணமும் கொண்டு சிறந்தவர்களாக மாறவும் மட்டுமே இந்த சோதனைகள்.

நம்மை பற்றி இறைவன் அறிந்துகொள்வதற்கு அல்ல.

நம்மை நாம் எப்போது அறிந்து கொண்டு திருத்திக்கொள்ள கிடக்கும் சந்தர்ப்பங்களில் நம்மை செம்மைபடுத்தி கொண்டு வாழ்கிறோமே எந்த கணத்தில் நாமே இறைவனுடன் ஒன்றி இறைவனாகிறோம்.

ஆம்.. நம்மை நாமே புரிந்துகொண்டு எல்லாவற்றையும் கடந்து செல்வது தானே கடவுளை அடையும் வழி.

உலக வாழ்க்கை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது.

கூர்ந்து நோக்குபவர்கள் அதில் இருந்து பாடங்கள் படித்து நல்வழியை அடைந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

தவற விட்டவர்கள் தடுமாற்றத்துடன் இந்த பூமியில் இருக்கும் உயிர்களுள் ஒருயிராய் வாழ்ந்து மடிகிறார்கள்.

நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் கையில் மட்டுமே? இதில் மற்றவர்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்... அவர்களே காரணமாக இருக்க முடியாது.

யாரையும் காரணமும், குறையும் சொல்லாமல் பயணிக்கும் வழியில் வீசப்படும் குப்பைகளை சுமந்தாலும் கடலில் கலந்து தன்னை தூய்மைப்படுத்தி ஆழியின் அடிமடியில் துகிலும் ஆறுகள் போல மெல்ல பயணித்து வாழ்க்கையில் வரும் வெல்லவும் முடியும்.

பிறரை கைநீட்டி அவர்தான் காரணம், அவரால் தான் என் நிலை இப்படி என்று குறை சொல்லி நின்ற இடத்தில் குப்பையை சேர்த்து சாக்கடையாக தேங்கும் ஒரு குட்டையாகவும் வாழ்க்கையில் தோல்வியை ஏந்தும் ஒருவராகவும் இருக்கலாம்.

காரணங்களும், கற்பிதங்களும் நமது மனதின் எண்ணங்கள் மட்டுமே. வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அவைகள் ஒரு தடையாக என்றைக்கும் இருப்பது இல்லை.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஏனடி தந்தாய் வேதனை

உயிராய் தான் நினைக்கிறேன்..
ஏனோ புரிதலை தொலைத்து நீயும்
அர்த்தமில்லா மௌனத்திற்கும்
கோப முலாம் பூசி
மெல்ல மெல்ல நெஞ்சை நிமுண்டுகிராய்..

உனக்கு மட்டும் எங்கே கிடைகிறது..
வார்த்தைகளில் சொருகிய
குத்தீட்டிகளும், கொலை வாள்களும்..

உந்தன் மௌன யுத்தம்
மெலிய கீறலை
பெரும் விரிசலாக்கி வேதனை கூட்டுகிறது..

வரம்பில்லா வார்த்தைகள்
வரப்பில்லா நிலத்தின் ஓடையாய்
மனதை அரிக்கிறது..

பளபளக்கும் நட்சத்திரங்களை மறுத்து
மறைந்து விட்ட நிலவுக்காய்
உன் வேதனைகளை மற்றவர் மேல் வீசுகிறாய்..

என் நம்பிக்கைகளை
குயவனின் காலடி மண்ணாய்
கொட்டிவிட்டாய்..
நானோ புது உருவம் கொண்டு வரும்போது
போட்டு உடைக்கிறாய்..

சோதனைகள் மனதை புடம் போடலாம்..
நீ  தரும் வேதனைகளோ
அடிவேரையே வெட்டிக் சாய்க்கிறது..

மனதின் பாரங்களை குறைக்கும்
வார்த்தைகளை தேடும்போதுதான்
பாய்ந்து வந்து இதயத்தை துளைக்கிறது

வார்த்தை கணைகள்..

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

நினைவுகளில் நீ

தூங்காத இரவுகளில் தொல்லை கொடுக்கும்
உன் நினைவுகளின் பிடியில் இருந்து
என்னை விடுவித்து விடு..
நீங்காத பொழுதுகள் போய்
இன்று
நினைவு சிறையில் இருந்து
தினம் தினம் என்னை வதைக்கிறாய்..
விழிகள் திறக்கும் போதெல்லாம்
எங்கும் உன் உருவமே..
உன் வேடிக்கை சீண்டல்கள் எனக்கு
வெக்கத்தை பரிசளிக்கையில்
நீயோ..
அருவமாக இருந்து என் வேதனையை
ரசிக்கிறாய்..
தூரங்களை தொலைத்து மனதோடு நீ
இருந்தாலும் வாட்டிடும் வேதனை

உனது முகத்திலும்....?

சனி, 20 ஆகஸ்ட், 2016

பாசத்துக்கு ஒரு வரி (ரக்க்ஷாபந்தன்)

பாசம் என்பது பணம் காசு கொடுப்பதால் வருவதல்ல..
அன்பை அள்ளிக்கொடுப்பதால் மட்டுமே...
உணர்வுகளின் சங்கமம் சகோதர பாசம்..
நெகிழ்ச்சி தருவதோ
அண்ணன் தங்கையாய்..
அக்கா தம்பியாய் முகிழும் பாசம்...
உடன்பிறந்த சகோதரி இல்லை தான்..
நானும் உணர்ந்தேன் அந்த பாசத்தை
என் அன்னை தந்தை வழி சகோதரிகளிடம்..
என்றைக்கோ வரும் சந்திப்பில்
தித்திப்பு தரும் அந்த பாசம்..
இப்போதெல்லாம் முகநூல் நுழைந்தாலே
என் அன்பு தங்கைகளின் பாச மழையும்..
அருமை தமக்கைகளின் நேச வார்த்தைகளும்..
மனதின் வலிகளுக்கு இதமாய்
வருடிவிடும் வசிய மருந்தாய் இருக்கிறது..
முகம் பார்த்து, குரல் கேட்டு சிலரும்..
முகவரியும், முகவடிவும் தெரியாத
மனதின் நேசத்தில் பலரும்
அன்பை அள்ளி தருகையில்..
எப்பிறப்பில் எங்கு

என்ன தவம் செய்தோனோ....