வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இப்படித்தான் ஆரம்பம்



எது எப்படி ஆரம்பமானது என்று அறியா
நொடியில் தான் எல்லாமே ஆரம்பமாகிறது..
வாழ்க்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும்...
இன்பமும் வேதனையும்..
நேசமும் வெறுப்பும்...
உண்மையும் பொய்யும்..

ஒற்றை நொடியில் வெடிக்கும் விதை தான்
மாவிருட்சமாய்......

எல்லா நொடிகளும் விழிப்புடன் இருப்பது முடியுமா?

இந்த பிரபஞ்சவெளியாய்..
முடியாத தொடக்கமும்..
முடியாத முடிவும் தான்
வாழ்க்கையின் நிலையோ?

புரட்டிப்போட்ட மாற்றங்கள் எல்லாமே..
இப்படிதான் ஆரம்பம் என்று வரையறுக்கப்பட்ட எல்லையில்
என்றைக்கும் இருப்பதில்லை..

ஒன்றை வார்த்தையில்..
ஒற்றை சிரிப்பில்...
ஒற்றை மௌனத்தில்...
ஒற்றை இகழ்ச்சியில்..
ஒற்றை பார்வையில்...

எல்லாமே ஒரு அறியா நொடியின் தொடக்கமே..
முடித்து வைத்த கோலத்தின் தொடக்கப்புள்ளி எது?
நமது பிறப்பின் தொடக்கம் எது?

கேள்விகள் எல்லாம் கேள்விகளாய் வரிசையில் நிற்கட்டும்..
இப்படிதான் ஆரம்பம்...
எந்த புள்ளியில் என்பது...
முடிவு பெறாத கேள்வி....


சங்கர் நீதிமாணிக்கம்

40. விடுதலும் பெறுதலும்

வலைவீசும் எண்ணங்கள்

40. விடுதலும் பெறுதலும்

சிலதை விடுவதன் மூலம் மனஅமைதியும் சாந்தமும் பெரும் நாம், சிலதை பெறுவதன் மூலம் மகிழ்ச்சியும், இன்பமும் அடைகிறோம். எல்லா நேரங்களிலும் எல்லா பெறுதலும் நமக்கு இனிமையாக இருப்பதில்லை. அதே போலவே விடுதல் என்பது எல்லா நிலையிலும் நம்மை பிரச்சனைகளில் இருந்து விடுவித்து விடுவதும் இல்லை.

நிலத்தோடு இருக்கும் தொடர்பு ஓடும் நதிக்கு எங்கும் எப்போதும் அறுந்து போவதில்லை. அதே நேரத்தில் அந்த தொடர்பு மட்டுமே நித்தியம் என்று நதியும் எங்கேயும் தேங்கி விடுவதில்லை. ஓடிக்கொண்டே இருப்பது நதியின் இயல்பு. வாழ்க்கையில் எல்லை காண இன்பத்தின் பெருவெளியை அடைய ஓடக்கொண்டிருப்பது மனிதத்தின் இயல்பு..

வாழ்வின் சூழலில் ஒருவன் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், சொந்த பந்தங்களை விட்டு விலகி தனித்திருந்து இறைவனை அடையும் பாதையில் பயணிப்பதை விட பெரிய சாதனை வாழ்க்கையின் எல்லா பந்தங்களிலும் இணைந்து வாழ்ந்துகொண்டே இறைவனை நோக்கி நடக்கும் பயணத்தில் கிடைப்பது ஆகும்..

இப்படி வாழ்த்த மகான்களில் ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி, லாஹிரி மகாசாயர் ஆகியோர்கள் நல்ல உதாரணம். இவர்கள் இல்லறத்தில் இருந்தாலும் இல்லறத்தின் சுமைகளோடு துறவறத்தின் கடமைகளையும் நிறைவேற்றி நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார்கள்.

உண்மையில் துறவறத்தை விட இல்லறத்தில் துறவறம் என்பது மிகவும் சிறந்த மனம் கொண்ட மனிதர்களுக்கே சாத்தியம். இந்த வாழ்க்கையில் நாம் விடுதலும் பெறுதலும் மிக மிக அதிகம்.

ஒரு சாதாரண மனிதராக நாம் விடாமல் பற்றிக்கொண்டு இருப்பது ஆங்காரம். உண்மையில் ஆங்காரம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. எல்லோருக்கும் எதோ ஒரு உருவத்தில் ஆங்காரம் மனதில் குடிகொண்டு இருக்கிறது. அந்த ஆங்காரம் இருக்கும் வரை மனதிற்கு  நிம்மதி எனபது கடினமானது. அதை விடும்போது கிடைக்கும் மனஅமைதியை அனுபவித்து பார்க்க மிகவும் சுகமாக இருக்கும்.

இறைச்சியை கொந்திக்கொண்டு பறக்கும் காகத்தை எல்லா காகமும் துரத்தும் சூழலில் அந்த இறைச்சியை விட்டு விட துரத்தும் மற்ற பறவைகளின் கவனம் திசை திரும்பி விடும். பற்றுதலை விட்ட காகம் சுதந்திரமாய் வலம் வரும். ஆங்காரம் என்ற இறைச்சியை நம்மால் விட முடிந்தால் நாமும் அந்த காகத்தை போல சுதந்திரத்தை உணர முடியும்.

இந்த ஆங்காரம் என்பதை பிறரின் கவனத்தை நம் மீது திருப்பும் ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். இளவயதில் நாம் செய்யும் சாகச விளையாட்டுக்கள் எல்லாம் எதற்காக? மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும். அந்த இடத்தில் நாமே சிறந்தவர்களாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனதின் உந்துதலாய் மட்டுமே இருக்கும். அந்த உந்துதலை தருவது ஆங்காரம்.

இந்த ஆங்காரம் கொண்ட மனதுடன் நாம் யாரையும் இளக்காரமாக பார்க்க வேண்டாம். எல்லோரிடமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏதாவது ஒரு நல்ல காரியமாவது இருக்கும்.

சில நிலைகளில் இந்த ஆங்காரம் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பதால் கெட்டவையும் நல்லவைகளாக தெரிய வைக்கும். அதே நேரத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாத நல்ல செயல்களும் கெட்டவையாக, மோசமானவையாக தோற்றமளிக்கும் அல்லது கருதப்படும்.

இந்த ஆங்காரத்தின் வேர் பொறாமை, கோபம், தான் என்ற அகந்தை போன்றவையாக இருக்கும். இந்த வேர்களை வெட்டிவிட மனிதம் அங்கே செழிக்கும். ஆனால் இந்த வேர்களை எளிதில் வெட்டிவிட முடியாத அளவு ஆழமாக மனித மனதில் ஊன்றப்பட்டு செழித்து வளர்ந்துள்ளது.

மனதில் ஆங்காரம் பெருகும்போது அனைத்தும் நம்மை விட்டு போய்விடும். மனதில் ஆங்காரம் விலகும்போது அனைத்தும் நம்மை நாடி ஓடி வரும். ஆங்காரம் கட்டுக்குள் வைத்திருந்தால் இயல்பான வாழ்க்கையை இன்றைய நாளில் வாழ முடியும்..

உண்மையில் இன்றைக்கு நமது ஆங்காரத்தை காப்பாற்றுவதற்காக பல உறவுகளை பலி கொடுக்கிறோம். எதை விட்டுவிட்டு எதை பெற வேண்டுமோ அதை செய்யாமல் நாம் பெற வேண்டியதை விட்டு விட்டு, விட வேண்டியதை பற்றிக்கொண்டு அதுதான் வாழ்க்கை என்று புரியாத ஒரு பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

காகம் விட்டுவிட்ட இறைச்சித் துண்டாய் ஆங்காரம் என்ற இறைச்சியை விட்டுவிட சுதந்திரம் என்பதை பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளத்தில் தான் என்ற எண்ணம் பெருக பெருக கோபம், ஆங்காரம் மேலும் மேலும் பெருகுகிறது. அந்த நிலையில் நாம் நேசிப்பவரை பிரியும் சூழல் உண்டானால் அவர்களை சபிக்கும் மனநிலையில் தான் மனித மனம் இருக்கிறது. ஆனால் விட்டொழித்த ஆகங்காரம் அவர்களை அன்பாய் அரவணைத்து வாழ்த்த வைக்கும்.

அறிவு என்பது எல்லோரையும் அரவணைத்து எல்லோரிடமும் கற்கும் மனம் கொண்டது. ஆங்காரம் என்பது அறிவின் முனையை மழுங்கடித்து எல்லோரையும் குறைமட்டுமே காண வைக்கும். அந்த நிலையில் தன்னுடைய குறைகளை அறிய மனிதன் மறக்கிறான். எவன் ஒருவன் தன்னுடைய குறைகளை சரிசெய்ய முடியாமல் மனஇருளில் மூழ்கி இருக்கிறானோ அவனின் செய்கைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் மற்றவர்களிடம் வெறுப்பை மட்டுமே உருவாக்கும்.

நாம் வாழ்க்கையில் எல்லோரையும் அரவணைத்து வாழும்போது கிடைக்கும் இன்பம் இந்த உலகத்தில் கோடிகோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது. வெறுப்பால் ஒருவரை விலக்குவது பெரிய காரியமே அல்ல.. அன்பால் அணைப்பது தான் உண்மையான சிறப்பு.

நாம் யாரையும் தவிர்க்க முற்பட வேண்டாம். அப்படி தவிர்க்கும் முன் ஒரு மணித்துளி நேரம் நம்மை பற்றி சிந்திப்போம். நம்மை பிறர் இந்த வகையில் தவிர்த்தால் தாங்க முடியுமா என்று? பிறகு செயல்படுவோம்.

உலகத்தில் நம்மை விட சிறந்தவர் நமக்கு எதிரில் இருக்கிறவர் என்ற எண்ணத்துடன் நமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள நாம் கற்பதும், பெறுவதும், விடுவதும் அதிகம் இருக்கும். எல்லோரையும் ஒரு புன்னகையில் கடந்து செல்லும் மனம் இருக்குமானால் எதிரிகளின் எண்ணிக்கை நமக்கு கூடாது.

அப்படியும் நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகி செல்லுவோம். விலகி செல்வதால் நமக்கு என்ன இழப்பு வரப்போகிறது? அவர்களை நம்பியா நாம் இந்த உலகில் பிறந்து, வளர்ந்து வாழ்கிறோம். இல்லையே.. வாழ்க்கை பெரும்பயணத்தில் அவர்களும் ஒரு பயணியே.. வழியில் சந்தித்தோம், இருவரின் பயணமும் இரு வேறு திசைகள் என்ற போது நமக்கு என்ன இழப்பு..?

வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியும் நம்மை வாழவைத்து பார்ப்பதில் தான் சிறப்பு காண்கிறது. யாரோ எவரோ, எங்கோ பிறக்கிறோம், எதோ ஒரு வகையில் இணைகிறோம், பயணிக்கிறோம். வாழ்க்கையின் பயணப்பாதை கொஞ்ச நேரமே. அதில் விட வேண்டியதை விட்டும், பெறவேண்டியதை பெற்றும் வாழ்க்கையை இனியதாக்கி வாழ்ந்து பார்ப்போமே..

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


வியாழன், 29 செப்டம்பர், 2016

தீபாவளி திண்டாட்டம்..



அன்று
பத்து பைசா ஓலை வெடிக்கு
ஏங்கிய தவித்து
கையில் கிடைத்தவுடன் மகிழ்ந்ந்த
மனது தான்
இன்று வண்ணவண்ணங்களாய்
வாரி இறைக்கும்
வானஜல வாணவெடிகள் வெடிக்கும் போதும்
திருப்தி இல்லாமல்
வெறுமையாய் உணர்கிறது


சங்கர் நீதிமாணிக்கம் 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

அன்பு – 2



அன்று
எல்லோரும் திருப்தியாய் பசியாற..
ஒற்றை அமுதசுரபி கொண்டு
பசித்தோரின் பசிப்பிணி நீக்கினாள் மணிமேகலை..

வள்ளலாரும் வந்தோர்க்கு அமுது படைத்து
பசித்தோரின் உயிர்த்தீயை அணையாது காத்தார்..

ஒரு அப்பமும் இரு மீன்களையும் கொண்டு
அன்பால் அனைவருக்கும் பகிர..
கொடுக்க கொடுக்க குறையால்...
ஐயாயிரம் பேரை போஷித்தார் இயேசு..

நம்மிடமும்

அதுபோல ஒரு அமுதசுரபி இருக்கிறதே..
அறியாமல் உழல்கிறோம் இந்த பூமியில்..

இது பசி தீர்க்காது..பசியை மறக்கடிக்கும்..
ஆறாத காயங்களாய்
நெஞ்சில் இருக்கும் வடுக்களையும் மாற்றும்..

கொடுக்க கொடுக்க குறையாது..
பெற பெற திகட்டாது..

இது ஏற்றத்தாழ்வுகள் பார்க்காது..
கருணையே இதன் பார்வை...
காதலே இதன் மொழி..
பாசமே இதன் வெளிப்பாடு..

அது  தான்.. அன்பு..
அன்பை கொடுங்கள்..
நீங்களும் வள்ளலே..


சங்கர் நீதிமாணிக்கம்

அன்பு..



அன்பு..
உயிரின் ரத்த ஓட்டம்..
அன்பு கொடுப்பதும் அல்ல
பெறுவதும் அல்ல.
உணர்வது..
அன்பை உணராதவர்.
அன்பை கொடுக்க முடியாது..
அன்பு என்றும் விட்டுக்கொடுக்கும்..
அன்பு என்றும் அடிமையாக்க நினைக்காது..
அன்பை ஆயுதமாக்கி அடிமையாக்க நினைப்பது கோழைத்தனம்....
இருப்பவன் இல்லாததை தேடுகையில்
வைத்திருந்தும் கொடுக்காதவன் எதை தான் பெறுவான்..
சுற்றி ஆயிரம் சுற்றம் இருந்தாலும்..
அன்பு இல்லாதவன் அனாதையே....
அன்பில்லா உடம்பு வெறும் கூடென்று
அய்யன் வள்ளுவன் சொன்ன சொல் மாறுமோ?


அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

பெண் என்பவள் யார்..



உயிரின் உயிர்..
உயிர்மையின் வேர்..
ஆணின் அடிமையாய் நினைக்கப்படும் பொய்யின் உண்மை
ஆணை ஆளும் உண்மையின் பொய்..
புரிந்துகொள்ள முடியாத புதிர் என்று
விலகிச்செல்லும் ஆண்களில் பிரதி....
அன்பின் ஊற்றும் அவளே..
அன்பை விட்டுக்கொடுக்க மறுப்பவளும் அவளே..(Possessiveness)
காமத்தை மறைக்கும் காதல் தேவதை..
காமத்தை வெல்லும் கடவுளும் அவளே..
உயிரோடு உயிராய் இருப்பவளும் அவளே..
உயிரை உறிஞ்சம் இன்பமும் அவளே..
புதிராய் தோன்றும் புன்னகை தருவாள்..
புன்னகை கொண்டு புதிரையும் அவிழ்ப்பாள்..
கடவுளாய் நினைக்க இல்லை என்பாள்..
பேயென ஒதுங்க அன்பால் அணைப்பாள்..
அடங்கியும் வாழ்வாள்..
அடக்கியும் ஆள்வாள்..
முரண்களில் முரண் அவள்..
எல்லோரையும் பிரதிபளிக்கும் கண்ணாடி அவள்..
நாம் நினைப்பதும் அவள் தான்..
நாம் நினைக்காததும் அவள் தான்..
ஆணின்றி அவளுண்டு..
அவளின்றி ஆணில்லை..
இதுதான் பெண் என்று சொல்லும்போதே
அதுவல்ல நான் என்று மாறி நிற்பாள்..
இருக்கும்போது வேண்டாமென நினைக்கவும்..
இல்லாத போது இல்லையே என்று ஏங்கவும் வைப்பவள்..


சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 26 செப்டம்பர், 2016

வார்த்தைகளின் வரிகள்



“ம்ம்..” என்று வலியில் முனங்கினாலும்
“நானும்” தான் “நெஞ்சுருகி”
பேசுகிறேன்..
“புயலாய்” வீசிய உன்னுடைய கோபத்தில்
கரைந்து போனது எல்லா “நேசம்”..
“உதவி” கேட்டு “அதிகாலை” உறக்கத்தில்
எழுப்பிய கூக்குரல்
யாருடைய செவியையும் எட்டவில்லை..
யாரும் உன் பிரதிநிதியாக
என்னை பார்க்கவும் இல்லை.
இதோ வாகனத்தில் செல்கிறது
என் கடைசி பயணம்..
பூத்திருக்கும் “ரோஜா”க்கள்
எனக்காய் “இறைவனின்”
சந்நிதியில் தன்னுடைய
பிரார்த்தனையை வைக்கட்டும்..
மீண்டும் ஒருமுறை பிறக்கும்போது
நீ அன்பாய் என்னில் வாழவேண்டுமென்று...


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஆதலினால் சிவந்தது கன்னம்..!


ஓரப்புன்னகையில்...
ஒற்றை வரியில்..
சொல்லிய வார்த்தையில்..
அவள் கன்னங்கள் சிவந்தது..
“ஹேய்.. நீ ரொம்ப அழகா இருக்க”

கவிதையை படித்து சிரித்துக்கொண்டே தன் கணவனைப் பார்த்தால் நித்யா..

நித்தியமல்லியைப் போல மலர்ந்திருந்த அவள் முகம் கண்ட வேந்தன், “என்ன  நித்யா” ஒரே ஏகாந்த புன்னகையா இருக்கு.. என்ன விஷயம்.. எனக்கும்  சொல்லிட்டு சிரியேன்” என்றான்.

“ஒன்னுமில்லைங்க” என்றால் சிவந்த கன்னங்களை காட்டி....

அதை பார்த்த வேந்தன், “அப்ப என்னவோ இருக்கு” எனக்கும் சொல்லேன் என்று கொஞ்சும் தொனியில் கேட்டான்.

“இல்லை... ஒரு  கவிதை படிச்சேன்” உடனே நீங்க நம்ம கல்யாணம் ஆனா புதுசுல சொன்ன ஒரு கவிதை ஞாபகம் வந்தது.. அதை நெனச்சதும் சிரிப்பு வந்தது என்று சொல்லி ஒரு வெட்கப்பார்வை பார்த்தால்..

“ஓ.. அதுவா! ம்ம்.. அந்த கவிதை உனக்காக நானே ரொம்ப யோசிச்சு எழுதினது செல்லம்... என்று ஒரு மோக பார்வையில் நித்யாவை நோக்கினான் வேந்தன்..

“போதும்... போதும்.. கொஞ்சம் ஆரம்பிச்சா... உடனே “அந்த” ஞாபகம் வந்திடுமே..என்று சொல்லி விலகிப்போக முயன்றவளை இழுத்து அணைத்தவன் அவளின் இதழ்களில் விரலால் மெல்ல கொடு போடும் வகையில் ஓவியம் வரைந்து அவள் காதில் மெல்ல “அந்த கவிதையை” மீண்டும் படிக்க...

“ச்சீ... போங்க” என்று வெட்கத்தில் சிவந்த கன்னங்களை அவனின் உதடுக்கு பரிசளித்து அவனை இழுத்து அணைத்துக்கொண்டால்..

கதை அவ்வளவு தாங்க.....! என்ன கேட்கறீங்க....?. அந்த கவிதை எதுன்னா?.. அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்க.. அதை எல்லாம் கேட்டுக்கிட்டு... போங்க.போங்க... இன்னும்  இங்க  என்ன வேடிக்கை.. அவங்களை  தொந்தரவு பண்ண வேண்டாம்..


சங்கர் நீதிமாணிக்கம்

39. நதிக்கு கடலின் முகவரி தந்தது யார்?

வலைவீசும் எண்ணங்கள்

39. நதிக்கு கடலின் முகவரி தந்தது யார்?

யாரவது இந்த கேள்வியோடு இது பற்றி சிந்தித்தது உண்டா? என்ற கேள்வியை உங்கள் முன்பு நான் வைக்கப்போவதில்லை. ஏனென்றால் எல்லா கேள்விகளும், பதில்களும், சிந்தனைகளும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாரவது ஒருவரால் என்றோ கேட்கப்பட்டும், சொல்லப்பட்டும் இருக்கும்.

நதிகளும் அது தேடும் கடலின் முகவரியும் நமக்கு சொல்லுவது என்ன?

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் நமக்கு நோக்கம் ஒன்று தேவை, ஆனால் அந்த நோக்கத்தை அடையும் பயணத்தில் தொடர்ச்சியாக பயணிக்க ஊக்கமும், ஒழுக்கமும் தேவை.

எங்கோ ஒரு மலையில் மழைத்துளிகள் ஒன்றிணைந்து சிற்றோடையாக பரிணமித்து மெல்ல தானொத்த ஓடைகளை தன்னில் சேர்த்து பெருநதியாக மாறியல்லவா கடலைத் தேடும் தனது பயணத்தை தொடங்குகிறது ஒரு நதி.

நதியாக நமது வாழ்க்கையை கொஞ்சம் உருவகப்படுத்திக்கொண்டால்... நமது பயணம் எதை நோக்கி செல்கிறது? நாம் தேடும் முகவரி என்ன? வாழ்க்கையின் இடையில் கிடைக்கும் இன்புமும், இளைப்பாறுதலுமா? முடிவில் அமைதி கொடுக்கும் மரணமா? ஏகாந்த பெருவெளியில் நிறைந்திருக்கும் இறையோடு கலக்கும் பேரின்ப நிலையா?

நமக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்வெனும் பெரும் நிலையை கடக்கும் வாழ்க்கைப்பயணத்தில் கடலும், நதியும் நமக்கு சொல்லும் செய்தி தான் என்ன? நதியின் பயணத்தோடு நாமும் நமது பயணத்தை இங்கே தொடரலாம்..

ஒரு நதியின் ஆரம்பமே நமது வாழ்க்கையின் நெளிவு சுளிவு பற்றிய போதனையுடன் தானே துவங்குகிறது? மழைத்துளிகள் ஒன்றிணைந்து, சிற்றோடைகள் ஒன்றிணைத்து பெருநதியாக, மகா நதியாக பிரவாகம் எடுக்கும் அதன் மாற்றம் நமது வாழ்க்கையின் சுற்றங்களை, சொந்த பந்தங்களை, நட்புக்களை ஒருங்கே அணைத்து எல்லோருடனும் ஒரு ஒத்திசைவான மனதுடன் அல்லவா நமது வாழ்க்கைப்பயணமும் தொடங்கிகிறது..

ஓடும் நதியின் பாதையில் வரும் தடைகளைப் போலவே நமது வாழ்க்கையிலும் தான் எத்தனை எத்தனை இடர்கள். தடைகள். நதிகள் தடைகளைக்கண்டு துவண்டு தேங்கி விடுவதில்லை. பெருமலைகளையும், பெரும் பறைகளையும் கண்டு மலைக்காமல், தேவையின்றி போராடி சக்தியை வீணடிக்காமல் செல்லும் தனது பாதையை லாவகமாக மாற்றிக்கொண்டு அல்லவா அது கடலின் முகவரியை தேடி செல்லுகிறது.

டகார்ட்டீஸ் (Descartes) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதையும், தத்துவ அறிஞரும் முழங்கிய ‘I think therefore I am’  என்ற வரிகள் மிகவும் பிரபலமானது. நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்”, அதாவது தேங்காமல் நிற்பதும், சிந்திப்பதும் தான் வாழ்வியலுக்கு ஆதாரமானது

அதே நேரதில் தனது பயணத்திற்கு தடையாக இருக்கும் மலையையும், பாறையையும் அது கவனிக்காமல் இருப்பதும் இல்லை. தன்னால் முடிந்த மட்டும் தன்னுடைய பயணத்தை விடாமல் தொடர்ந்துக்கொண்டே தன்னுடைய எதிர்ப்பையும், மோதலையும் மெல்ல மெல்ல கொடுத்துக்கொண்டே தான் இருக்கும். மலையும், பாறையும் அவைகள் அறியாமலே மெல்ல மெல்ல அரிக்கப்பட்டது பலவீனப்படுத்தப்படுகிறது.

காலங்கள் பற்றி அது பார்ப்பது இல்லை. தொடரும் பயணத்தில் தொடரும் போராட்டமும் நிற்பது இல்லை. காலம் கனியும் நாளில் பெருவெள்ளமாக பொங்கி வரும் நதி மலை கரைத்து, பாறையை உருட்டி புதிய பாதையை அங்கே திறந்து பிரவாகமெடுத்து பாயும்.

அந்த நேரத்தில் நதியின் பாதை திசை திரும்பலாம் அல்லது அங்கு இரண்டாக பிரிந்து மீண்டும் ஓரிடத்தில் ஒன்று கூடி தனது பயணத்தை தொடரலாம். எப்படி இருந்தாலும் கடலை தேடும் நதியின் பயணம் கடலில் மட்டுமே முடிகிறது.

நமது வாழ்க்கையில் நம்மைவிட பலம் கொண்ட தடை வரும்போது எதற்காக முட்டி மோதி நமது சக்தியை வீணடித்து அங்கேயே தேங்கி நிற்க வேண்டும்? தடைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து போராட்டத்தை மெல்ல நடத்திக்கொண்டு, அதே நேரத்தில் நமது பாதையை மாற்றி நமது பயணம் தொடர்ந்து செல்லலாமே.

காரணம் எவனொருவன், தனது கடமைக்கான முக்கிய வேலைகளை செய்துக்கொண்டே இடையில் தன் மனதிற்குப் பிடித்த வேலைகளையும் செய்து முடிக்கிறானோ, அவன் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வெற்றி பெற்றவனாகவும் இருக்கிறான்

எதிரியாக இருந்தாலும் தடைகள் போடுவோரிடம் வீம்புக்கு அல்லாமல் தேவைக்கு மட்டுமே போராடி, அதே நேரத்தில் அந்த தடைக்கு நாமே ஒரு தடை போட்டு, மெல்ல நமது பாதையை வேறு திசையில் திருப்பி பயணம் தொடரலாமே.

எதிரி தன்னிடம் போராடுவதாக நினைத்து முட்டி மோதிக்கொண்டு இருக்கையில் நமது பயணம் வேகமெடுக்க, அதுவே நமக்கு தரும் உத்வேகமாக மாறி, எதிரியின் தடைகளை தகர்க்கும் சக்தியை நமக்கு தரலாம் அல்லது வேறு பாதையில் தடையில்லா வழியில் நமது பயணம் வேகம் பெறலாம்..

நதிகளுக்கு கடல்தான் இலக்காக இருந்தாலும் போகும் வழி எங்கும் ஏரி, குளம், நீர்நிலைகள், அணை என்று சிறுது ஒய்வு எடுப்பது போல தண்ணீரை பகிர்ந்து வளப்படுத்தி செல்வது போல நமது பிறவிப்பெருங்கடலை கடக்கும் பெரும் குறிக்கோளில் வழியில் செல்லும் போது அதில் சிறு சிறு குறிக்கோள்களை மனதில் கொண்டு மெல்ல மெல்ல அவைகளை நிறைவேற்றி முடிவில் நமது பெரிய லட்சியத்தை வென்றெடுக்கலாமே?

ஒடுங்க வேண்டிய இடந்தில் ஒடுங்கி, பாயவேண்டிய இடத்தில் பாய்ந்து, விழ வேண்டிய இடத்தில் அருவியாக வீழ்ந்து அமைதியாக இருக்க வேண்டிய சமவெளியில் மௌனமாக கடந்தும்... எத்தனை எத்தனை சூட்சுமங்கள் நதி கையாண்டு கடலை அடையும் தனது பயணத்தை வென்றெடுக்கிறது.

ஏன்.. நம்மளும் முடியும் தானே? பணிய வேண்டிய இடத்தில் பணிவும், துணிய வேண்டிய இடத்தில துணிவும், தெளிவு வேண்டிய இடத்தில் அமைதியும், சீற வேண்டிய இடத்தில் சீற்றமும், அமைதியாய் கடக்கவேண்டிய நேரத்தில் மௌனமாகவும்.. நமது செயல்களை மாற்றிக்கொண்டு பயணிக்கும்போது நமக்கும் வெற்றி என்பது இலகு தானே..

“முணுமுணுப்பவர்களுக்கு வெற்றி கைக்கூடாது” என்பது ஜப்பானிய பழமொழி. சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் திடமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும், நமது கருத்துக்களை சொன்னால் தான் அது வெற்றியாக மாறும்.

வாழ்க்கையில் காதலிக்கும் நேரத்தில் மனதில் தோன்றும் ஆசையை மனதை விட்டு சொல்லும் போது வெற்றியோ, தோல்வியோ எதோ ஒரு பதில் கிடைப்பது நிம்மதி தருகிறது.

அப்படி இல்லாமல் மௌனம் காத்து பின்னர் தோல்வி என்று புலம்புவதில் யாருக்கும் பலனில்லை. இது காதலில் மட்டும் அல்ல வாழ்க்கையின் எல்லா முடிவிலும் தான், ஏனென்றால் ஒரு மனிதன் தனது பிறப்பால் இல்லாமல் தனது செயல்களின் மூலமே சிறந்தவனாகிறான்!

மலைகளில் இருந்து ஆடி, ஓடி, தேடி வரும் நதியானது கடலை அடையும் நிலையில் கைகளை பரந்து விரித்து அணைப்பது போல நாணலும், கோணலுமாக பிரிந்து தளர்த்து தன்னின் தேடலை கடலை அடைந்து  ஒன்று கலந்து தன்னுடைய அடையாளத்தையும் விட்டு கடலோடு ஒன்றாக நதி கலக்கிறதோ அதுதானே வாழ்க்கையும்..

நமக்கு கடலைப்போல, நதியைப்போல இயற்கையானது பல விதங்களில் போதிக்கும் பாடங்கள் ஏராளம். வாழ்க்கையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் உங்களிடம் என்ன வசதிகள், சாதனங்கள் இருக்கிறது என்பதைக் காட்டிலும் இருக்கும் சூழ்நிலையில் எத்தனைச் சிறப்பான செயலைச் செய்கிறீர் என்பதே உங்களை வித்தியாசப் படுத்திக்காட்டும். அப்படிப்பட்டவரே வெற்றியையும் விரைந்து அடைய முடியும்.

பார்த்தோம், ரசித்தோம் என்பதோடு இல்லாமல் கூர்ந்து நோக்கி அது சொல்லும் சேதிகளை மனதில் இருத்தி பாடங்களை படித்துக்கொள்ள.. வாழ்க்கையின் இன்பத்தில் பொங்காமல், துன்பத்தில் துவளாமல் சமவெளி செல்லும் நதியாக நமது அமைதியுடன் நமது வாழ்க்கைப்பயணத்தை தொடரலாம்.

வாழ்க்கை என்பது நதியைப்போல... இடத்திற்கு ஏற்ப இயல்பையும், குணத்தையும் மாற்றிக்கொண்டு ஓடினாலும் அதன் இயல்பான ஓட்டத்தை நிறுத்துவதில்லை. நாமும் தொடர்வோமா?

“நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள் தொடர்ந்து முன்னேறுங்கள்!”

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்



வியாழன், 22 செப்டம்பர், 2016

என்னைப்படித்த புத்தகம் ...

என்னைப்படித்த புத்தகம் ...
&^&^&^&^&^&^&^&^&^&^&^&^&

என்னை சுற்றி நடக்கும் அனுதின நிகழ்வுகளே என்னை படிக்கும் புத்தகமும், நான் படிக்கும் புத்தகமும் ஆகும். இந்த அனுபவங்களை மனதில் நிறைத்துக்கொண்டு அதில் இருந்து படிக்கும் பாடங்களே எனக்கு கிடைக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷம். (உங்களுக்கும் கூட)

வாழ்க்கை ஓயாது கரையை தொடும் அலைகள் போலவே நம்மை சில நாட்கள் தாலாட்டும், சில நாட்கள் அசைத்துப்பார்க்கும், எதிர்பாராத நாளில் அப்படியே புரட்டியும் போடும்.

பள்ளியில் படிந்த படங்கள் அறிவை புகட்டினாலும் இந்த உலகமே உண்மையனா ஆசிரியனாய் நமக்கு கற்பிக்கிறது.

படிக்கமுடியாத சூழலில் வாழ்க்கை துரத்திய பாதையில் வேலையில் சென்று கடுமையாக உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் கையில் சிக்கும் துண்டு காகிதமும் அதில் உள்ள வரிகளும் எதையாவது போதித்துக்கொண்டு தான் இருந்தது.

வாழ்க்கையின் நடந்த சில நிகழ்வுகள் என்னக்கும் கடவுளுக்குமான இடைவெளியை பெரியதாக்கி இருந்தாலும் அவ்வப்போது பல உருவங்களில் கடவுள் வந்து என்னை நலம் விசாரிக்கையில் எனக்கு தோன்றுவது, “இந்த இடைவெளியை தந்தது கடவுளோ, மனிதர்களோ இல்லை மனிதர்களை மதம்பிடிக்க செய்யும் “மதங்களே”” என்ற புரிதல் மனதில் நின்றபோது வாழ்க்கை என்னை “அன்பாய்” இருக்கச்சொல்லி ஏந்திக்கொண்டது. உலகில் அன்பு தானே கடவுள்..!

பள்ளியில் படிக்கும் போதே வாசிக்கும் இன்பம் என்னை வசியப்படுத்தியதால் வாசிக்காத நாட்கள் கொஞ்சம் வறண்டே இருந்தது. சென்னையில் வந்து மருந்துக்கடையில் வேலை செய்தபோதும், விடாத வாசிப்பின் சுகானுபவம் பின்னர் சைக்கிளில் கடைகளுக்கு மருந்து விநியோகிக்கும் அடுத்த நிலையிலும் நான் வாசித்த புத்தகமும், என்னை வாசித்த உலகமும் என்னை என்றும் நிலை தடுமாறாமல் கைகளால் மெல்ல அணைத்துக்கொண்டது.

பாலகுமாரனை வாசித்ததில் மனிதத்தையும், அன்பையும் சொல்லி மனதை நேசிக்க சொல்லிக்கொடுத்த போது, கண்ணதாசனும் என்னை மெல்ல அணைத்துக்கொண்டது இயல்பாய் நடந்தது. கல்கியும் சாண்டில்யனும் தமிழை எனக்குள் இன்னும் நெருக்கி வைக்க, என்டமூரியும், காண்டேகரும் கொஞ்சமாய் நெஞ்சில் நிறைந்தார்கள்.

மாஸ்டர் சோவா கோக் சூயி அவர்களும், பரமஹம்ச யோகானந்தரும், ரா.மஹாத்ரேயா வழியில் என்னை வசீகறது என்னை கொஞ்சம் நிதானப்படுத்தி வாழ்க்கையை இன்னும் சுவையாக படிக்க வைத்தார்கள். எவ்வளவு தான் படித்தாலும் “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” அல்லவா?..

“இடுக்கண் வருங்கால் நகுக” என்ற உலகம் படிக்கும் வள்ளுவம் என்னை உரமேற்றி வைத்திருக்க... ஏணிகளாய் இருந்தாலும் ஏற்றமின்றி இருப்பதும் அதுதானே.. வாழ்க்கையின் பணயப்பாதை எல்லாமே சுகம்தரும் பாதையா என்ன?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் தேக்கம் என்னையும் அணைபோட்டு தடுத்த போது என்னை வசமிழக்காமல் தடுத்து படித்தவற்றை பலரோடு பகிரவும், தேக்கத்தில் குட்டையாகிப்போகாமல் மாற்றுவழி தேடி பயணிக்கவும் ஒரு பற்றுக்கோலாய் கைபிடித்து மெல்ல வழி நடத்துகிறது “வாங்க பேசலாம்” குழுவும் அதில் வரும் பதிவுகளும்.

இவனுக்கும் உள்ளுக்குள் ஒரு சிறுபொறி இருப்பதை கண்டு பாராட்டு என்ற தூண்டுகோலாக இருந்து என்னையும் தூண்டி என்னை படித்தது நமது குழுவும் தலைமையும். எவ்வளவோ சொல்ல முடியாத வேதனைகள், இழப்புகள் இடையேயும் என்னை தேங்க விடாமல் ஓட வைப்பதும் குழு தானே..

இங்கே அனைத்துக்கொண்டு அன்பாய் போதிக்கும் உறவுகளும் உண்டு, தானென்ற அகந்தை தலையில் ஏறாமல் இருக்க அவ்வப்போது தலையிலேயே குட்டி, தட்டி வைத்து கூடவே பாராட்டி தட்டியும் கொடுத்து அன்பு சொல்லும் நட்புகளும் இருப்பது என்னைப்படிக்கும் முயற்சியில் நான் காணும் பெரும்பலனே.

எதிர்பார்ப்புகளை ஓரம் கட்டி ஆசைகளை மனதின் ஓரத்தில் பதியனிட்டு பயணிப்பதில் எனக்கான ஏமாற்றங்கள் வலிக்காமல் என்னை பயணம் செய்ய வழிவிட்டு அவைகள் ஏமாந்து நிற்கிறது. இன்றைக்கும் எதாவது ஒரு வரி எங்காவது கண்ணில் பட்டு என்னை படிக்கவைத்து பாடமும் சொல்லிகொடுத்துக்கொண்டே இருப்பதில் என்னுடைய பயணம் சுவாரசியம் குறையாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.

எல்லாமே தொடர் புள்ளிகளாய் இருந்து அவைகளே வாழ்க்கையின் சுவாரசியம் வற்றிவிடாமல் பார்த்துக்கொள்கிறது. என்றைக்கு எனக்கான முற்றுப்புள்ளி வருகிறதோ அன்றைக்கு இந்த உலகம் என்னை வாசிக்க நிலையில் நானிருக்க வேண்டும்.


சங்கர் நீதிமாணிக்கம்