வெள்ளி, 15 செப்டம்பர், 2017

"ஆண்களின் தேடல்களும் இலக்கும் "



இலக்கின்றி திரிபவரா ஆண்கள்?
இல்லையே....
அவர்களின் கனவுகளா இலக்குகள்..
அது மட்டுமேயில்லையே..
உயிர் உறவுகள் எல்லோரையும் மனதில் சுமந்து
தினம் தினம் அவர்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்து
அவர்கள் கொண்ட கனவுகளையும் மெய்யாக்க
தேடிக்கொண்டும் ஓடிக்கொண்டும்
இருப்பது தானே அவர்களின் இலக்கு..
தலைமகனாய் இருந்து விட்டால்
பின் பிறந்தவரின் வழிகாட்டியாக
பெண்களுக்கு சகோதரானாக வாழ்நாளில்
பெருநாட்கள் அவர்களுக்கு செய்வதிலே இன்பம் கண்டு
அதில் வரும் துன்பங்களையும் சுமந்துகொண்டு
நடைபோடுவதும் அவர்களின் இயல்புகளே..
கொண்டவளை கலங்காது காத்துக்கொண்டு..
முன்னோரையும், பின்னோரையும் கூடவே
அணைத்துக் கொண்டு..
தன்நலனே பார்க்கமால்
இரவு பகல் நோக்காமல்
ஓடுவதும், தேடுவதும் ஓயாமல் உழைப்பதுமே
ஆண் மகனின் தேடலும் இலக்குமாய்..


சங்கர் நீதிமாணிக்கம்

வியாழன், 14 செப்டம்பர், 2017

அரவணைப்பீரோ ஆண்களே..!



நீ பிடித்த கரங்கள் தான்...
நீ பார்த்து ரசித்த முகம் தான்..
நீ அணைத்துக்கொள்ளும் தோள்கள் தான்..
நீ துயில் சாயும் மடிதான்..
நீ உலா வரும் இதயம் தான்..

உனக்காக வந்தாள்..
உனக்காக உழைக்கிறாள்..
உனக்காக வாழ்கிறாள்..
உனக்காக வாரிசு சுமக்கிறாள்...
உன்னையே நெஞ்சிலும் தாங்குகிறாள்..

அதிகபட்சம்
என்ன கேட்கிறாள் உன்னிடம்.....?

களைத்திருக்கும் நேரத்தில் இதமான வார்த்தை..
சோர்ந்திருக்கும் நேரத்தில் கொஞ்சும் ஆறுதல் மொழிகள்..
பரபரப்பான நேரத்தில் கொஞ்சம் ஒத்தாசை..
பரிதவிக்கும் நேரத்தில் தரும் பாச தழுவல்..
கலங்குகின்ற நேரத்தில் குழல்கோதும் அரவணைப்பு..

அன்புக்கு அன்பு தரவும்..
ஆசைக்கு ஆசை தரவும்..
நேசத்துக்கு நேரம் தரவும்
பாசத்துக்கு பாசம் தரவும்
என்ன யோசனை.....?

வாழ்க்கையிலே உனக்காகவே உன்னோடு
பயணம் செய்யும் உயிர்தானே.....
உன்னில் பாதியென இருக்கும் அவள்..

இன்னும் என்ன தயக்கம் தோழர்களே..
மெல்ல உங்கள் ஜீவனை
அரவணைப்பீரோ ஆண்களே..!


சங்கர் நீதிமாணிக்கம்

புதன், 13 செப்டம்பர், 2017

"வீதியெங்கும் உலா..!"



அன்றைக்கு தான் பட்டணத்தில் கால் வைத்தான் அந்த இளைஞன். பள்ளி இறுதி தேர்வு முடிந்து முதல்முறையாக தந்தையின் துணையுடன் மெட்ராஸ் பட்டினம் வந்து இறங்கியவனுக்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்து ஆச்சரிப்பட்ட அந்த LIC‑யின்  உயர்ந்த கட்டிடம் முதல் முதலில் கண்ணில் பட்டபோது எழுத பிரமிப்பும் பெருமையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது. நான் நேர்ல பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என்று நண்பர்களிடம் பெருமையாக சொல்லவேண்டுமென ஒரு ஆர்வம் பொங்கியது.

அது 90-ஆரம்பம். மெல்ல அங்கு இருந்த பிரமாண்டமான கட்டிடங்கள், நெரிசல் மிகுந்த போக்குவரத்து, யாரையும் நின்று பார்க்கவும் நேரமில்லாமல் ஓடும் மனிதர்கள்.. எல்லாமே அதிசயமாக இருந்தது அவனுக்கு.

மெல்ல நடைபோட பிரமாண்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக குடிசைகளும், கூவம் மணக்கும் கரையும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. நகரின் மறுபக்கம் அந்த அண்ணா சாலையில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் கரையோரமே இருந்தது.

பளபளக்கும் உடையணிதவன் உள்ளே உடுத்தி இருக்கும் ஓட்டைகள் விழுந்த பனியன் போல இருந்தது அந்த மறுபக்கம்.

தேடிவந்த நண்பரை கண்டுபிடித்து முதல் முதலாக ஒரு உணவகத்தில் உணவு அருந்தும்போதும் அங்கு இருந்த நடைமுறையும் அவனுக்கு ஆச்சர்யமே.

பின்னர் அவனே சில வருடங்கள் கழித்து மிதிவண்டியில் அந்த பட்டணத்தில் சுற்றி வரும்போது கொஞ்சம் பிரமிப்பு விலக ஒரு தோழமை ஒட்டிக்கொண்டது. எத்தனை விதமான மனிதர்கள்.. எந்தனை விதமான நிறுவனங்கள். பளபளக்கும் காரில் வரும் பணக்காரர்களுக்கான மிகப்பெரிய கடையும் சரி, ஏழைகள் பேரம் பேசி வாங்கும் வீதியோர கடைகளும் சரி.. எல்லாமே இன்றைக்கு சாதாரணமே..

திருவல்லிக்கேணி வீதிகளில் பாரதியின் இல்லம் பார்த்து, மெல்ல மெல்ல கடந்து செல்ல சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் பழைய புத்தகக்கடைகள், அப்படியே கிழக்கு நோக்கி செல்ல விவேகானந்தர் இல்லமும், பரந்துவிரிந்து பலருக்கு சாமரம் வீசும் மெரினாவும் எல்லாமே இன்றைக்கும் அவனுக்கு ஆச்சர்யத்தை குறைக்கவில்லை.

மீண்டும் மீண்டும் வலம் வந்தாலும் எல்லாமே புதியாதாய். சமீபத்தில் ஒரு நாள் அவன் நகரின் வீதிகளில் நடைபோடும்போதும் அதே பிரமிப்பு..

தமிழகத்தின் அடையாளமாய் இருந்த LIC கட்டிடம் . விண்முட்டும் பல கட்டிடங்களின் முன்பு அடங்கி ஒடுங்கிவிட்டது.. பிரமாண்ட அலங்கார், சபையர் திரையரங்க வளாகம் காணமல் போய்விட்டது. இன்னும் அவன் உள்ளே நுழைந்திராத மேல்நாட்டு பொருட்கள் விற்கும் பல்லடுக்கு வணிக வளாகங்கள், பல்லடுக்கு திரையரங்குகள், மாறிப்போன பண்பாடு, உடை வழக்கம், இரவுநேர ஆட்டம்பாட்டம், அன்றைக்கு எளிதாக நடையில் கடந்த அண்ணா சாலையில் இன்று நடக்க திணறும் வாகன நெருக்கும்.

எல்லாமே மாறிவிட்ட பட்டணத்தில் அவனுக்கு இன்னும் அந்த வேடிக்கைபார்த்துக்கொண்டே நடக்கும் ஆசை மட்டும் குறையவே இல்லை. பார்க்கும் ஒவ்வொரு முறையும் எல்லாமே புதியதாய்.. எல்லாமே பிரமிப்பாய்... அன்றைக்கு மெட்ராஸ் பட்டிணம் மட்டும் இன்றைக்கு சென்னை பட்டிணமாக...அவன் மட்டும் இன்னும் மனதில் அதே கிராமத்தானாக.


- சங்கர் நீதிமாணிக்கம்

சனி, 9 செப்டம்பர், 2017

மாற்றங்கள்



ஹாய் டாடி....! கெட்டவங்க யாரு,? என்ற அப்பாவியாகக் கேட்ட சுரேஷின் தலையை கோதியபடி, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.? நல்லவங்களுக்கு அப்படியெல்லாம் யாரும் கிடையாது. பிடிச்சவங்க பிடிக்காதவங்களை நல்லவங்க கெட்டவங்க என்று எடுத்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுக்க, கார்த்திக்கை வியப்பாக பார்த்தான் சுரேஷ்.

கார்த்திக் தன் கண்கள் விரிய, "உனக்கு டாடியை பிடிக்கும் இல்லையா.,!" என்று கேட்க, அதற்கு பதிலாய் புன்னகையை உதிர்த்து விட்டு, அவனை அணைத்தபடி தூங்கத் தொடங்கினான் சுரேஷ்.

மென்மையான காற்றின் அமைதியில் அமிழ்ந்து கிடந்த இரவை உலுக்கி எழுப்பியது போல் அந்த சத்தம் வீட்டை அதிர வைத்தது. என்னவாக இருக்கும் என்று கார்த்திக் யூகிப்பதற்குள் யாரோ நான்கு பேர் ஓங்கி வாசற்கதவை அரைவது போல் தட்டினர். .....!

யாரது? இவனின் குரல் அவர்களுக்கு கேட்டிருக்குமா தெரியவில்லை அத்தனை பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிக்கொண்டு இருந்தனர்.  அந்த அதிரடி அவனது இதயத்தையே பிளப்பது போல இருந்தது..

மெல்ல எல்லா விளக்குகளையும் எரியவிட்டு கதவை திறக்க தெருவே ஒரே கலவர பூமி போல இருந்தது. அக்கம் பக்கம் வீட்டுக்கார்கள் எல்லாம் திரண்டிருந்தனர்.

என்ன ? என்று விசாரிக்கும் முன்னர் “சார்.. உங்க  கார் தீயில எரிஞ்சுட்டு இருக்கு”, “நம்ம தெருவுல வேற சில வண்டிகளும் மோட்டார் சைக்கிளும் எரியுது.. யாரோ  தீயை வச்சிட்டு போயிட்டாங்க.” என்று தகவலை சொல்லி முடித்தனர்..

வேகமாக சென்று தெருவில் நின்றிருந்த காரை பார்க்க அது முழுமையாக எரிந்து வெறும் கூடாக நின்று கொண்டிருந்தது..

சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் பறக்க எல்லோரும் அந்த இடத்தில வந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

எல்லா விசாரணையும் முடிய. “சார்.. நாளைக்கு ஸ்டேஷன் வந்து சம்பிரதயமா புகார் கொடுங்க.. நாங்க இங்க வண்டி இழந்தவங்க எல்லோருக்கும் சான்றிதழ் கொடுத்துடறோம். அத வச்சி உங்க காப்பீடு நிறுவனத்தில் இழப்பீடு வாங்கிக்கலாம். அப்படியே உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் வந்தாலும் சொல்லுங்க. அவங்களை கவனிச்சு  வாங்கறதா வாங்கிக்கலாம்.. இப்ப கிளம்பறோம்  என்று சொல்லி தலையை சொறிந்தார் காவலர்.. சில நூறுகள் கைமாற தூரத்தில் இருந்து பார்ந்தான் தூக்கம் கலைந்து வந்து வேடிக்கை பார்த்த சுரேஷ்..

மறுநாள் தெருவாசிகள் அவர்களுக்கும் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த தெருவில் வசிக்கும் நம்பிராஜின் மகன் செல்வம் தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது. பலமுறை கார்த்திக்கும் பார்த்து இருக்கிறான்.

அந்த செல்வம் பிறவிலேயே சிறிது மனநிலை பிறழ்ந்தவன். அவன் நடவடிக்கை எல்லா பிள்ளைகள் போல நன்றாக இருந்தாலும் திடீரென்று குணம் மாறி ஏதாவது முகம் சுளிக்க செய்திடுவான். சில நாட்கள் கையில் தீப்பெட்டி வைத்துக்கொண்டு இருக்கும் சறுக்கள், காய்ந்த மரம், குப்பைகள் போன்றவற்றில் தீ வைத்துவிட்டு ஓடிவிடுவான்.

நேற்று இரவு யாரும் அறியாத நேரத்தில் வீட்டில் இருந்து வெளியில் வந்த அவனால் வண்டிகளுக்கு தீ வைக்கப்பட்டு விபரீதமாக முடிந்தது.

எல்லோரும் நம்பிராஜனிடம் போய் சண்டையிட.... வசதி வாய்ப்புகளில் நலிந்த அவரால் கண்ணீர் விடுவதை தவிர ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தார்.

அப்போது மெல்ல அங்கு வந்த சுரேஷ் மெல்ல கார்த்திக்கை கூப்பிட்டு. “அப்பா நேத்து நீங்க சொன்னீங்க எல்லோரும் கெட்டவங்க இல்லை. நமக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க வேணா அப்படி சொல்லாம்னு சொன்னீங்க..

அப்படின்னா இப்ப நம்பி மாமாவும், செல்வம் அண்ணாவும் நமக்கு பிடிக்காதவங்களா? என்று பரிதாபக கேட்க.. கார்த்திக் தயங்கி நின்றான்.

அங்க பாருங்க அந்த அண்ணா எப்படி சிரிச்சுட்டு இருக்காக.. ஆனா நேத்து ராத்திரி நீங்க அந்த போலிஸ் மாமாக்கு எதோ பணம் தந்தீங்களே அது மாதிரி அந்த அண்ணனுக்கும் தாங்களேன்.. என்று அப்பாவியாக கேட்க.. கார்த்திக் தன்னுடைய தலையில் சம்மட்டியால் பலம் கொண்ட மட்டும் தாக்கியது போல திகைத்து நின்றான்....


சங்கர்  நீதிமாணிக்கம்

வியாழன், 7 செப்டம்பர், 2017

இருமுகன் ?



இருளென்று பகலென்று வையத்து வான்நிகழ்வு
சுற்றும் பூமியினால் வந்ததிங்கு..
உண்மை உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையிலே
பொய்யொன்று சுற்றிவரும் வாழ்க்கையிலே காண்கின்றோம்
இன்மையென்றும் மறுமையென்றும் ஆன்மிகம் சொல்லி
எழுதி வைந்தார் வாழ்க்கையை..
கடவுளுக்கே போலி என்று சாத்தனை
உலவவிட்ட சதிகார உலகமிது..
நாணயத்தின் இரு பக்கமாய்
நம்மை நடமாட விட்டதிந்த உலகம்
ஒருவன் நல்லவனா கெட்டவனா?
நிர்ணயிப்பது யாரென்று தேடுகிறோம்..
நல்லவனும் கெட்டவனே சிலருக்கு..
கெட்டவனும் நல்லாவே சிலருக்கு..
பார்வைகள் தருமே தீர்ப்பு..
பன்முக உறவு கொண்டோம் நாமே..
இருமுக உள்ளம் கொண்டோம் அங்கே..
போலியாய் புன்னகைத்து போலியாய் வாழ்த்து சொல்லி
ஒரு முகத்தை காட்டி நிற்கையிலே
மறுமுகமோ மனதிற்கும் வஞ்சனைகள் கொண்டு
வார்த்தைகளை மெல்ல துப்பும் வசீகரம் பூசி..
எண்ணங்களே வாழ்க்கை என்றார்.ஆன்றோர்.
நாமோ வண்ணங்களே வாழ்க்கையாய்
இருமுகம் கொண்டு இங்கே சுற்றி திரிகிறோம்....


சங்கர் நீதிமாணிக்கம்

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

** நிஜமான பொய்**



நிஜமென்றால் அங்கு பொய்யில்லை..
பொய் என்றால் அங்கு நிஜமேது...?

நிஜமான பொய்யும் உண்டோ?

இல்லாமலா..?
வார்த்தை வருகிறது....
கவிதைகளில் வாழ்கிறது..

நிலவும் இருக்கிறது பெண்ணும் இருக்கிறாள்..
நிலவுப்பெண்ணே என்பது நிஜமா? பொய்யா?
அன்பதனை அள்ளி கொடுக்கையிலே
ஒளிரும் முழுநிலாவாய் இருக்கும் பெண்ணே..
கோபத்தில் சுருண்டுவிட இருண்டுவிடும்
மறைநிலவாய் மாறிவிடுகிறாள்..

பொய்யென்று அறியாவகையில்
பொய் சொல்லுவான் சாமர்த்தியசாலி..

பொய் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும்
ஏமாறுவான் வாக்காளன்..

என் பொய்களோ யாரையும் காயப்படுத்தாது....
எல்லாமே விளையாட்டாய் என் சிரிப்பில் உதிர்ந்துவிடும்..
அதே சிரிப்பிலே உண்மையும் விளங்கிவிடும்...

வலிகள் தராத பொய்யென்றும் பொய்யல்ல
வள்ளுவனே வகுத்து தந்தான் வழியொன்று
நல்லது நேருமென்றால் பொய்யுரைக்க தவறில்லை..
அல்லது நேருமென்றால் தலைபோனாலும் பொய்யற்க..

பொய்மையிலும் வாய்மையுண்டு..
வாய்மையிலும் பொய்மையுண்டு..
வாழும் வழி அறிந்துகொண்டு
வாழ்ந்திடுவோம் உலகில் நன்று..


- அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

திங்கள், 4 செப்டம்பர், 2017

வலையில் வீழ்ந்த நிலவு..



நிலவுப்பெண்ணே..
கொஞ்சம் நிதானி....
அது தாலாட்டும் ஊஞ்சலென எண்ணாதே..
உன்னை சிறையிலிடும் பெருவலை..

இங்கே வஞ்சகம் வாசனை திரவியமாய்
உன்னை கவர்ந்திழுக்கும்..
கொஞ்சிடும் பார்வையிலே உன் கண்களை
மெல்ல ஈர்த்திடும்
அதன் கோரக்கரங்கள் கண்ணில் ஏய்த்திடும்..
தேனிலே தடவிய வார்த்தையில்
உண்மையை மாய்த்திடும்..
ஆசையாய் அணைத்து ஆலிங்கனம் செய்தே
பொய்யில் உன்னை துய்த்திடும்..

வானத்தின் நேசம் பொய்யாகுமா?
நீயும்
பூமி இறங்கி வந்து வலையில்
வீழ்வதும் மெய்யாகுமா?
வார்த்தை வலைவிரிக்கும்
இந்த வஞ்சக உலகை நம்பாதே பெண்ணே..


சங்கர் நீதிமாணிக்கம்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தாயுமானவன்..2



யாதுமாகி நிற்கும் அவன் வாழ்வது
பலனுக்காக அல்ல – பாசத்துக்கு

அன்புக்கு அடிமையாகிடுவான் என்றும்
நேசத்தை விட்டுவிட மாட்டான்..
சலிப்பு என்பது இல்லை அவன் அகராதியில்..
குட்டகுட்ட வாங்குவான்
எட்ட நின்றாலும் நினைவெல்லாம் பாசம் தானே..
வேசமிட்டோர் வாழ்கிற போது
உண்மையாய் தாங்கிடும் அவன்
வேதனையில் வீழ்ந்தாலும்
காத்திடம் குணத்தை மறப்பதில்லை..
மறுப்பதுமில்லை...
தன்னலம் ஒன்று அறியாதவன்
என்றும் அன்டினோர் நலனே காத்திடுவான்..
அவனுக்கான பரிசு பாராட்டு அல்ல
கனிவான அணைப்பில் ஒரு முத்தம்..

யாதுமாகி நிற்கும் அவன் வாழ்வது
பலனுக்காக அல்ல – பாசத்துக்கு


சங்கர் நீதிமாணிக்கம்

தாயுமானவன்...



அவன் யாதுமாகி நிற்கும் தாயுமானவன்..
அன்புக்கு அடிமை அவன்..
ஆணையிட்டு அடங்குவதில்லை
பாசமலர்களுக்கு பாசக்காரன்..
அன்னை ஒரு ஆலயம் என்று வாழும்
தாயைக் காக்கும் தனயன்..
காதலில் வாழும்போது
மனசுக்குள் மத்தாப்பூ பூக்க.
உழைக்கும் கரங்கள் அவன்
கௌரவம் என்பது நேர்மையில்
பார்த்தல் பசி தீராது கொஞ்சம்

பாலும் பழமும் வேண்டுமே..