வலைவீசும் எண்ணங்கள்
22. துன்பங்களும், சோதனைகளும்
எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும் முன்னேறினாலும் வாழ்வில் பல
ஏற்றத்தாழ்வுகளையும், துன்பங்களையும், சோதனைகளையும் கடந்துதான் சிகரங்களாய் அடைய
வேண்டி இருக்கிறது. துன்பங்கள், சோதனைகள் வரும்போது அதை தாங்கி, வெற்றிகரமாக
வென்று முன்னேறுகிறவர்கள் சிகரத்தை அடைகிறார்கள். இந்த துன்பங்களும், சோதனைகளும்
தரும் வேதனைகள் பற்றி இந்த வாரம் வலைவீசுவோம்.
எல்லா உயிர்களும் தினம்தினம் வேதனைக்கும், துன்பத்திற்கும் சோதனைக்கும்
உள்ளாகிறது. இவைகளில் ஆட்படும்போது எப்படி அதை விட்டு வெளியேறலாம் என்ற ஆறாம்
அறிவை அதிகப்படியாக பெற்றுள்ள உயிராக நாம் இருக்கிறோம். சோதனைகளில் வெல்லுகிறவர்கள்
வெற்றிக்கொடி கட்டி வாழ்வில் சிறப்பு பெறுகிறார்கள். சோதனைகளில் துவண்டு
விழுகிறவர்கள் அங்கேயே நின்று விடுகிறார்கள்.
இந்த சோதனைகளும், துன்பங்களும் எப்படி வரும்.
நமக்கு தான் தெரியுமே. பட்ட
காலிலே படும்.. கேட்ட குடியே
கெடும் என்ற பழமொழி. அதற்கு ஏற்பதானே துன்பமும், சோதனையும் நமக்கு
மாறிமாறி வருகிறது. இருப்பவன் ஓடத்தில்
ஏறி ஓடிக்கொண்டே இருக்க இல்லாதவன் வீழ்ச்சியின் படிகளில் உருண்டு செல்கிறான்.
மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே
உள்ளது.
இன்றைக்கு நமது செயல்கள் செயல்கள் அனைத்தும் வாழ்க்கையின் இனிமையை
ரசிப்பதற்கு மட்டுமே என்ற கோணத்தில் இருக்கிறது. அப்படி இனிமைகளை எதிர்பார்க்கும்
நேரத்தில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் நாம் ஏற்க முடியாமல் மனமுடைந்து விடுகிறோம்.
இதிலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் ஒரு பற்றுக்கோலை வைத்திருக்கிறோம்.
தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, விதி இப்படி.
கண்ணதாசன் தனது கவிதையில் இந்த துன்பங்கள், சோதனைகள் பற்றி இப்படி
சொல்லி இருக்கிறார்..
“நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!”
ஆம் நாம் சோதனைகளில் இருக்கும்போது கடவுளின் நிலைப்பாடு இது தான்.
கால ஓட்டத்தில் வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.
குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில்
உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம்
செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம்
துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம்
இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.
“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்”
என்றான் வள்ளுவன்
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
சீனாலவில் மாசே - துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில்
ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம பெற்றிருந்தார்.
புரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில்
படுத்தார்.
ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.
புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார். பதவிக்கு வந்த
சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே
மரணமடைந்தார்.
இவ்வுலகத்தின் சோதனையிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது
ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை.
அது சரி.. நாம எல்லாம்
சின்ன சின்ன சோதனைக்கே சமாளிக்க முடியாமல் தள்ளாடுறோமே... இதோ இந்த விவேக
சிந்தாமணி பாடலில் வருபவனைப் போல ஒருசேர துன்பங்களும், சோதனைகளும், வேதனைகளும்
வந்தால் என்ன செய்வது...
பாருங்களேன்
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே.
இந்த பாடல் - விவேக சிந்தாமணி (77)
ஒருவன் வீட்டில் பசு கன்றைப்
ஈன, அப்போது மழை விடாது பெய்து அவனது வீடு இடிந்து விழுகிறது. ஆனால் அவனது
மனைவியோ உடல் வேதனையில் இருக்கிறாள்.. அப்போது சோதனையாக அவனின் வேலையாள் இறந்துவிட
வேறு வழியே இல்லை, நிலத்தில் ஈரம் காயும் முன்னே விதைக்க வேண்டும் என்று இந்த சோதனைகளுக்கு நடுவிலும் வயலுக்கு செல்ல,
போகும் வழியில் கடன் கொடுத்தவன் பணத்தை வைத்தால் தான் ஆச்சு என்று மறித்துக்கொள்கிறான், அவனை
சமாளித்து செல்ல அரசனின் ஆள் வந்து வரி பாக்கி தரும்படி கேட்க, தட்டுத்தடுமாறி
அடுத்த காரியம் செய்ய முயலும்போது குருக்கள் வந்து தட்சனை கேட்க, அப்போது வந்து
புலவர் இவனை புகந்துபாடி சன்மானம் தர வேண்டிக்கொள்ள..
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.. நாமாக இருந்தால் என்ன ஆகியிருப்போம்?
இது கற்பனை பாடல் தான். ஆனால் நம்மில் சிலர் இதுபோல சூழல்களை
சந்தித்து இருப்போம்.
எதுவரினும், எப்படி நமது வாழ்க்கை அடித்துச்சென்றாலும் நமக்கு கிடைத்த
இந்த அழகிய வாழ்வெனும் பொக்கிஷத்தை மனத்துயரால் தவறவிடாது நமக்கும், நம்மைச் சார்ந்தோருக்கும் உபயோகமாக வாழ முயற்சிப்போம்.
“நமக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்து பார்த்து நிம்மதி நாடு”
ஒரு சுவாரஸ்யமான பதிவை இங்கே உங்களோடு பகிர்த்து கொள்கிறேன்.
நாம் ஏன் கவலைப் படுகிறோம்?
இரண்டே இரண்டு விஷயங்கள் உள்ளன கவலைப் படவதற்கு.
நீ நலமாக இருக்கிறாயா?
நோய் வாய்பட்டுள்ளாயா?
நீ நலமாயிருந்தால் எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒருவேளை நோய் வாய்பட்டிருந்தால் கவலைப் படுவதற்காக இரு விஷயங்கள்
உள்ளன.
குணமடைவாயா?
இறந்து விடுவாயா
குணமடைந்தால் எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒரு வேளை இறந்துவிட்டால் கவலைப் படுவதற்காக இரு விஷயங்கள் உள்ளன
சொர்க்கம் செல்வாயா?
நரகம் செல்வாயா?
சொர்க்கம் சென்றால் எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒருவேளை நரகம் சென்றால் பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவுவதற்கே நேரம்
சரியாக இருக்கும்.
கவலைப்படுவதற்கே நேரம் இருக்காது
ஏன் கவலைப்படுகிறாய்?
கவலை கொண்ட மனதால் சரியான முடிவெடுக்க இயலாது.
பிரச்சினையின் தீவிரத்தை முழு மனதாக உள்வாங்கி ஏற்றுக் கொண்டால் தான்,
அதற்கு சரியான தீர்வு காண இயலும்.
ஆக கவலையை கொஞ்சம் தூர நிறுத்தி அதனோடு இயைந்து வாழ பழகலாம்
கஷ்டத்திலும் நேர்மையாக இரு
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.
(இந்த பதிவில் கவிஞர் கண்ணதாசனின் பதிவுகள் பெருமளவில்
கையாண்டுள்ளேன். நன்றி )
இனிய
வணக்கங்கள்....
அடுத்த
பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்.