வலைவீசும் எண்ணங்கள்
48. வேடங்களே வாழ்க்கையா..?
இன்றைக்கு
எல்லாமே வெளிவேடம், எதுவுமே உண்மை இல்லை, எங்கும் நேர்மை இல்லை. எல்லாமே நடிப்பு
என்று நமது மனம் நினைக்கிறது. இதில் உண்மையும் இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு நிலை
வர யார் காரணம்?.. நாம் தானே.
வாழ்க்கையில்
வெற்றியும் தோல்வியும் இயல்பு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது மனம் வெற்றியை
தேடி அலைகயில் போடுவது தானே இந்த வெளிவேடங்கள்.
பிறர் எதிரில்
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வது போலவும், தனிமையில் துக்கத்தை மனதில் தாங்கி துயரத்தில்
துடிப்பது என்ற நிலையில் தான் பெரும்பாலும் வாழ்கிறோம்.
இதற்கிடையில்
நம்மில் பலரும் நேர்மையாய் இருப்பதாகவும், நேர்மையை வாழ்வதாகவும் போடும் வேடம்
தவிர்க்கவே முடியாத ஒரு செயலாய் இன்றைய காலகட்டத்தில் அமைந்து விட்டது. எல்லா
இடங்களிலும் அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் இன்றைக்கு நேர்மை என்பது போல
உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் மன
சுத்தியுடன் இருந்தாலும் வெளி வாழ்க்கையில் நம்மால் இன்றைய நிலையில் முழுமையான
நேர்மையை கடைபிடிக்க இன்றைய சூழல்கள் நம்மை விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும்
நாம் இந்த போராட்டத்தில் வேடம் போட்டு வாழவே முடிகிறது.
வாழ்க்கையில் வெற்றி
எனபது எப்போதும் நிரந்தரமில்லை அதே போல தோல்வி என்பது நிரந்தர முடிவும் இல்லை
என்கிறார் மைக் டிட்கா (Mike Ditka). இந்த
நிரந்தமில்லாத இரண்டுக்காகவும் தான் நாம் வேடம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
இதுபோல தான் இன்றைக்கு
நாம் துன்பமே கூடாது என்ற மனநிலையில் வளர்ந்து அதற்காக இயல்பாக நாம் பெற்று
மகிழவேண்டிய இன்பத்தையும் பலநேரங்களில் தவிர்த்துவிட்டு பயங்கொண்டு தள்ளி
போய்விடுகிறோம்.
எப்படி இரவும்
பகலும் போல நல்லதும் கெட்டதும் இயல்போ வாழ்க்கையில் இன்பத்தின் சுவையை நாம்
முழுமனதுடன் சுவைக்க வேண்டும் என்றால் துன்பத்தை அனுபவித்தால் தான் முடியும்.
நிழலின் அருமை வெயிலில் மட்டுமே தெரியும். நிழலிலேயே இருந்தால் எப்படி தெரியும்?
நம்மடைய
இன்றைய சந்ததிகள் தனிமையே இனிமை என்பது போல தவறான எண்ணத்தில் வளர்த்துக்கொண்டு
இருக்கிறோம். சொந்தங்கள் என்றாலே சிக்கல்கள் போலவும், செலவுகள் போலவும் நமது
தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்பதுபோலவும் எண்ணிக்கொண்டு குழந்தைகளுக்கும்
சொந்தங்களில் தேவை பற்றி புரிய வைக்காமல் வளர்ப்பதால் “தனிமை தான் நல்ல வாழ்க்கை”
என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. அவர்கள் வளர்ந்து பந்தங்களுக்குள் நுழையும்போது
விட்டுக்கொடுத்தலும், அனுசரிப்பும் இல்லாமல் தனிமையை நாடி தங்களை
சுருக்கிக்கொள்வதால் இயல்பான குடும்பவாழ்வும் இனிக்காமல் கசப்பில் வந்து
பிரிந்துவிடுகிறது.
இப்படி வளரும் தலைமுறைகள் இழப்புகளையும் ஏற்றுக்கொள்ள
முடியாமல், ஏமாற்றங்களையும் தாங்கமுடியாமல் ஆறுதலுக்கும், துணைக்கும் சொந்தம்
இல்லாமல் தனிமையில் தவிக்கிறது.
முந்தைய தலைமுறைகள் எப்படி இழப்புகளைகூட ஏற்றுக் கொண்டோம்,
தங்கிக்கொண்டோம் என்பதை எண்ணிப்பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ள முடியும்
நாம் போடும் இந்த வேடங்கள் நமக்கு எப்போதும் முழுமையான மகிழ்ச்சியை
தராது. ஆம் மரியா மிட்செல் சொல்லுவது போல “மகிழ்ச்சிக்கு எந்த ஒரு முகப்பூச்சும்
இல்லை”
எல்லா தவறுகளையும் நாம் தான் செய்கிறோம். நமது மனம் இந்த சமுதாயத்தில்
போட்டு மகிழ விரும்பிய வேடத்தை போட முடியாத நிலையில் நமது குழந்தைகள் மீது
திணித்து அவர்களையும் இயல்பாய் வளரவிடாமல் செய்து விடுகிறோம்.
நாம் என்னவாக மாற விரும்பினோமோ அதுவாக மாறவில்லை என்றாலும் நாமும்
அந்த சின்ன ஏக்கத்தை தவிர மற்ற குறைகள் இல்லாமல் வாழ்கிறோம் என்பதை மறந்து நம்
குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை மாற்றவிடாமல் நமது விருப்பங்களை
அவர்கள் மீது கண்மூடித்தனமாக திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது இந்த
வேடம் போடும் மனம் உணருவதே இல்லை.
“பொங்கி எழும் வேகமிக்க நீரோட்டத்தின் மேல்
சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி குழந்தை” என்கிறார் ஜேனஸ் கோர்ச்சாக்.
நம்முடைய குழந்தைகள் மென்மையானவர்கள். அந்த
மென்மையான குழந்தைகளின் இறகுகள் மீது நம் மகிழ்ச்சிகளை, ஆசைகளை, கனவுகளை
ஏற்றி கிழித்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பெற்றோரின் எதிர்பார்ப்பின் சுமை
தாங்காமல் பெரும் குழப்பத்திற்கு ஆளாகும். அந்த
நிலையில் நமது குழந்தை சற்றே பின் தங்கும் போது அதிர்ச்சியடைந்து, அவர்களின்
வளர்ச்சியின் மீது குறை கூற ஆரம்பிக்கின்றோம், ஏனோ நமது குறைகளை சுத்தமாக மறந்தே
விடுகிறோம்.
அதுமட்டும் இல்லாமல் மென்மனம் கொண்ட பிஞ்சுகளை
பிற குழந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு அவர்களின் இறகினை துடிக்கத்துடிக்க பிய்த்து
எறிகின்றோம்.
“The bad news: nothing is
permanent. The good news: nothing is permanent.” - Lolly Daskal என்பது போல மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் கொண்டு இனிதாக வாழ
முயற்சிக்கலாமே.
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக