வலைவீசும் எண்ணங்கள்
46.இடைவெளி நிரப்புவோம்..
உலகில் புகழ்பெற்ற எல்லோருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். அந்த கனவே
அவர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கும்.
“எனக்கொரு கனவு இருக்கிறது” என்று மார்டின் லூதர் கிங் ஜூனியர்
முழங்கிய பிரசித்திபெற்ற சொற்பொழிவு அவரின் கனவை நனவாகும் போராட்டத்தில்
முக்கியமான ஒன்று.
நாம் இன்றைக்கு இருக்கும் இடத்திற்கும் எதிர்காலத்தில் இருக்க வேண்டிய
இடத்திற்கும் இடையில் நம்மை பிணைப்பதும், கூட்டி செல்வதும் தான் கனவுகள்.
மறைந்த மக்களின் அதிபர் அப்துல் கலாம் அவர்கள் சொல்லியது போல
“நம்முடிய உறக்கத்தில் வருவதால்ல.. நம்மை உறங்க விடாமல் செய்வதே” கனவு. அதுவே நமது
குறிக்கோளை அடைய நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து இருக்கும்.
எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் நமக்கு இருந்தால் வாழ்க்கை இன்பமானதாக
இருக்கும், ஆனால் வறுமையில் இருக்கும்போது நமது மனதில் வரும் போராட்ட குணமும்,
லட்சியமும், அதை நோக்கிய நமது பயணமும், போராட்டமும், அந்த நிலையில் நாம்
கொண்டிருக்கும் நேர்மையும், உண்மையும், தவறான பாதையில் பயணிக்காத உறுதியும் தான்
உண்மையான இன்பத்தை நமக்கு தரும்.
நம்மால் வாழ்க்கை பந்தயத்தில் கலந்துகொள்ள மட்டுமே முடியும். வெற்றி
தோல்வியை நம்மால் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் நீதிபதிகளும் நாம்
அல்லர். நாம் ஒரு தீர்வை நோக்கி உழைப்பை வைப்பவர்கள் மட்டுமே. தேர்வுகள்,
தீர்வுகள் எல்லாம் “அவன்” செயல்.
நம்முடைய வெற்றி என்று நினைக்கும் எல்லாமே மற்றவர்கள் பார்வையில்
தோல்வியாக தெரியலாம். அதுவும் இன்றைக்கு அன்பு, பாசம், நேசம் எல்லாம், “தான்,
தன்னுடைய குடும்பம்” என்று குறுகியதாக இருக்கையில் நாம் பெரும் வெற்றிகள்
உண்மையில் வெற்றியாகுமா?
இங்கு அனைவருமே நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமா? என்றால் இல்லை என்பது
தான் உண்மையான பதிலாக இருக்கும். ஆனால் “என்றாவது நமக்கும் விடியல் வராதா? நாமும்
நல்ல வாழ்க்கை வாழ மாட்டோமா” என்ற ஒற்றையிழையில் தொங்கும் நம்பிக்கையில் தான்
வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.
எப்போதுமே வாழ்க்கை நிலையில் சிறப்பாக இருக்கும்போது பெரிதான
மாற்றங்கள் தந்த கனவுகள் யாருக்கும் வந்ததில்லை. போராட்டங்கள், சோதனைகள்,
தோல்விகள், துக்கங்கள் எல்லாம் ஒருங்கே நம்மை நசுக்கும் நிலையில் தான் அதில்
இருந்து மீள வழி கண்டுபிடிக்கும் பெரிய கனவுகள் நம்மை வழிநடத்திய தலைவர்கள்
அனைவருக்கும் தோன்றியிருக்கும்..
நமது இடைவெளிகளை இட்டு நிரப்பும் இந்த கனவுகளை நாம் அடைவோமா? இல்லையா?
என்ற அலைபாயும் மனதுடன் அணுகாமல், “மனதின் மீது, அதன் சக்தியின் மீது நம்பிக்கை”
கொண்டு செயல்படுத்தினால் எதுவும் நிறைவேறும்.
இந்த குறுகிய வாழ்க்கை நாளில் இடைவெளிகளை
இட்டு நிரப்பும் பயணத்தில் அன்பை வெளிப்படுத்த ஆழ்ந்து யோசிக்கிற போது ஏனோ கோபத்தை
மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காமல் கொட்டி விடுகிறோம்!
வாழும் நாட்களில் லட்சியத்தை நோக்கிய
பயணத்தில் வரும் இடைவெளிகளை கனவுகள் எப்படி நிரப்புகிறதோ அதே நேரம் என்றேனும்
ஒருநாள் இந்த பயணத்தில் எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ.! அன்று நமது பாதை தவறான
பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று உறுதி செய்துகொள்ளலாம்.
தவறான பாதைகள் சமயங்களில் பயணத்தை
எளிதாக்குவது போல தோற்றம் மட்டுமே தரும், ஆனால் அது நம்மை சிக்கலில் கொண்டு
சேர்க்கும் என்பது உண்மை.
வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் ஒரு
சுழற்சி.. இன்றைக்கு வென்றவர் நாளை தோற்கலாம். தோற்றுக்கொண்டே இருப்பவரும் ஒருநாள்
வெற்றியை சுவைக்கலாம். இடையில் என்றைக்கும் தோற்றவனை கேவலப்படுத்தாதீர்கள் ஏனெனில்
தோற்பதற்கு ஆள் இல்லாத இடத்தில் நாம் பெறுவது வெற்றியாக இருக்கமுடியாது.
எழுத்தாளர் பிரபஞ்சன் "பிறக்கும்போதே
இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படி
சொல்வது?" சொல்லுவது போல நமது மனதை சிறகடிக்க வையுங்கள்.
தான் போக்கில் விட்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிலையில் அது மெல்ல மெல்ல உங்களின்
கட்டளைக்கு கீழ்ப்படியும். அதுவே தியானத்தின் ஆரம்பநிலை.
மனித மனம் சோர்வடைவது இயல்பு. நமது
குறிக்கோள் நோக்கிய பயணத்தில் சந்திக்கும் சோதனைகள், துரோகங்கள் எண்ணற்றவை.
துரோகம் நமக்கு குழிபறிக்கும் நேரத்தில் நட்பும், நம்பிக்கையும் நம்மை அங்கு
காக்கும்.
என்றைக்கும் துரோகத்தால் துக்கமடைந்து
துவள வேண்டாம். நமக்கு துரோகம் செய்தவர்கள் “துரோகத்திற்குப் பிறகு துளியளவும்
குற்ற உணர்வே இல்லாமல் சிரிக்க முடிகிறதென்றால் நம்மால் ஏன் மீண்டு வாழமுடியாது?”
கேள்விகளும் அதை தேடும் மனமும் தான்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்து முன்னோக்கிய பயணத்தில் மனத்தெளிவுடன் பயணிக்க
முடியும். “துக்கங்களோ, தோல்விகளோ, அடக்க முடியாத ஆற்றாமையின் வடுக்களோ” இல்லை
என்று இந்த உலக வாழ்க்கையில் யாரும் சொல்லமுடியாது. இது போன்ற நேரத்தில் மனதில்
உள்ள கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிரும் போது தான் மனதின் பாரம் குறைந்து மனம்
லேசாகிறது. அதன் பிறகு நாம் எடுக்கும் முடிவுகள் மிகவும் தெளிவான பாதையை நமக்கு
காட்டும்.
என்றைக்குமே நாம் “எதிர்பார்ப்பதை விட
எல்லாவற்றையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் இந்த உலகத்தில்
எல்லோருக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்கையைவிட எதிர்பாராத எதோ ஒன்றை எதிர்கொள்ளும் வாழ்க்கையே
எப்போதும் அமைகிறது...”
நாம் பயணிக்கும் பாதையிலேயே மகிழ்ச்சியாக
இருக்கும்படிக்கு நாம் வாழ்தல் தான் சிறப்பானது. நமது பயணத்தின் முடிவு தான் நமது மகிழ்ச்சியின்
இலக்காக என்று நினைத்து செயல்பட வேண்டாம், காரணம் நாம் பயணிக்கும் எந்த நிலையிலும்
எங்கு வேண்டுமானாலும் நமது பயணம் முடியலாம். அப்போது கிடைக்கும் இன்பத்தையும்
கடந்து வந்து துக்கத்தோடு நமது வாழ்க்கை முற்று பெறும்.
கவிஞர் வண்ணநிலவன் குறிப்பிடுவது போல “வாழ்க்கையில்
பல விஷயங்களில் சொல்லிவிட முடியாத நளினங்கள் உண்டு. அவற்றை நம்முடைய அனுபவத்தால்
மட்டுமே உணர முடியும்” அந்த அனுபவத்தை நம்முடைய ஒவ்வொரு நொடியிலும்
உணர்ந்து அனுபவித்து பயணிப்போம்.
இன்றைக்கு அதீத அன்பும், அதீத
வெறுப்பும் எதிரெதிர் திசைகளில் வேகமாய் பயணிக்கின்றன. அன்பை கொண்டவனுக்கு துக்கமும், ஏமாற்றமும் பரிசாக கிடக்கும்
நிலையில், வெறுப்பு கொண்டவர்கள் ஒரு நிலையில் தனிமையில் தாள்ளப்படுவார்கள்.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல
வேண்டிய இலக்கிற்கு போகும் இடைவெளியில் நமது பாதையை மனதின் விருப்பத்தோடு தெரிவு
செய்வோம். விருப்பம் இல்லாத ஒன்றை நிறைவேற்ற முயல்கையில் வருகிற கோபம்
பெரும்பாலும் நம்முடைய ஆற்றாமையை குறித்தே இருக்கும். ஆற்றாமை நம்மை
பலகீனமாக்கிவிடும்.
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக