வலைவீசும் எண்ணங்கள்
47. வெளிப்படுத்தலாமே..?
இப்படி ஒரு தலைப்பை பார்த்ததும் எதை
வெளிப்படுத்துவது என்ற கேள்வி உடனே மனதில் தொக்கி நிற்கும்.? ஆம்.. எதை
வெளிப்படுத்துவது?
யோசித்துப்பார்த்தால் எவ்வளவோ மனதில்
இருக்கும். சிலதை எளிதாக வெளிபடுத்த முடியும். சிலதை சூழ்நிலைகள் பார்த்து
வெளிப்படுத்த முடியும். சிலவற்றை வெளிபடுத்த முடியாத சிக்கல் மிகுந்த தனிமனித
செயல்களாக இருக்கும்.
எல்லோருக்கும் என்று வெளியில்
சொல்லமுடியாத தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கும். ஆனால் அதையும் யாரவது மனதிற்கு
மிகவும் நெருங்கியவர் அல்லது நாம் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு நபரிடம்
பகிர்ந்திருப்போம். அதையும் தாண்டிய சில இரகசியங்கள் வெளிப்படுத்தாமலே ஒருவரின்
மனதோடு இருந்து மறைந்து போவதும் உண்டு.
இவையெல்லாம் சரி தான். நாம் எதை
வெளிப்படுத்துவது?
முதலாவதாக நாம் சிலர் மேல் அளவிடற்கரிய
அன்பும், பாசமும் கொண்டிருப்போம், ஆனால் அதை உரியவரிடம் அவர்கள் புரிந்துகொள்ளும்
வகையில் பகிர்ந்து வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருப்போம்.
இது தான் பெரும்பாலான மக்களின்
மிகப்பெரிய பலவீனம். தமக்கு நெருங்கியவர்கள் மீதுள்ள நேசத்தை அவர்கள்
உயிரோடிருக்கும்போதே வெளிப்படுத்த தயங்குவதுதான். நேசமும், பாசமும்
வெளிப்படுத்தும் போதுதான் முழு மகிழ்ச்சியையும் நமக்கு தரும். நெஞ்சுக்குள்ளே
எல்லா பாசத்தையும் மறைத்து வைத்து யாருக்கு என்ன பலன்.
நாம் பல படங்களில் பார்த்து இருப்போம்.
அன்னையோ, தந்தையோ தங்கள் பிள்ளைகளிடம் நேரிடையாக பேசும்போது மிக கடுமையாக இருப்பது
போல பேச்சுக்கள், செயல்கள் இருக்கும், ஆனால் அவர்கள் கண்களில் இருந்து விலகிய
பிறகு அப்படியே மருகி பாசத்தில் உருகுவார்கள். யார் மூலமாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகள்
செய்வார்கள்.
இதனால் என்ன பயன்? உண்மையான அன்பு
இருக்கும்போது யாருக்கும் புரிபடாமல் பாசத்தை பகிர்ந்து மகிழ்ந்து குழவி களித்து
வாழமுடியாமல் எதற்கு போலி வேடம்.
நினைத்து பாருங்கள்...? இந்த நிமிடம்
நமக்கு நிரந்தரமா? யாராலும் அறுதியிட்டுக்கூற முடியுமா?
உண்மையில் யாருக்கும் இந்த நிமிடம்
நிரந்தரமில்லை..!! ஆனாலும் நாம் திட்டமிடுகிறோம் அடுத்த ஜென்மம் வரை என்ன
செய்யப்போகிறோம் என்று!! பலன் உண்டா? இல்லையே.
இதனால் தான் நம்முடைய பாசத்தையும்,
நேசத்தையும் உரியவரிடம் காலம் வரட்டும் என்று காத்திருக்காமல் அவ்வப்போது
வெளிப்படுத்த வேண்டும்.
இந்த வெளிப்படுதல் என்பது சிலர்
நினைப்பது போல பரிசுப்பொருட்களும், விலைமதிப்பற்ற நகைகள், ஆடைகள்,
வெளியிடங்களுக்கு செல்லும் இன்ப சுற்றுலா போல அதிக செலவு மிக்கதாக அல்ல. ஒரு
அன்பான அணைப்பும், நேசமான தலை கோதலும், அமைதியான வார்த்தையும் போதுமே. முடிந்தால்
உள்ளூரில் எங்காவது போய் வரலாமே?
சில உறவுகளில் நம்மால் என்ன
நினைத்தாலும் மனமுவந்து ஐக்கியம் ஆகா முடியாமல் தவிப்போம். அதற்கு என்று எந்த
காரணமும் நம்மிடம் இருக்காது. அதே போலவே சில உறவுகள் எந்த காரணமும் இல்லாமல்
யாரிடமும் அதிகம் ஒட்டாமல் ஒரு தனிமை வாழ்க்கயை விரும்புவார்கள்.
அவர்களுக்கு நம்மால் ஆனா சிறந்த உதவி
என்பது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான். அவர்களுக்கே ஒரு புரிதல்
வரும்போது அங்கே உறவுகள் மீண்டும் பூக்கும்.
மேலும் பலநேரங்களில் நமக்கு
முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தெரிந்தபோதும் விலக முடியாத உறவு போல
வாழ்க்கையை சுமையாக்குவது வேறில்லை.
இது போன்ற உறவுகளுக்கு பல உதாரணங்கள்
சொல்லலாம். குறிப்பாக கணவன் மனைவி உறவில் கூட பலவித நிர்பந்தங்கள் அல்லது
குழந்தைகள் மேல் உள்ள பாசம் காரணமாக ஒரு இழையில் தொங்குவது போல சிலருக்கு வாழ்க்கை
அமைவதுண்டு.
குடும்ப உறவுக்குள் பேசி தீர்க்க
முடியாத எதுவும் இல்லை என்று சொல்லுவது உண்மை தான். ஆனால் இன்றைய வர்த்தக அடிப்படை
உலகில் அதையும் தாண்டி சிலர் எதிர்பார்க்கும் போது அந்த உறவுகள் சுமையாகவே
இருக்கிறது.
மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத எந்த
ஒரு உணர்வுக்கும் உந்த உலகத்தில் மதிப்பே இல்லை. அது கோபமாக இருந்தாலும் நீங்கள்
வெளிபடையாக மற்றவர்களுக்கு உணர்த்தும் போது தான் அந்த உணர்ச்சியின் உண்மை தாக்கம்
மற்றவர்களுக்கு தெரியும்.
இந்த வாழ்க்கையில் நம்மின் மீது
வெளிப்படுத்தப்பட்ட துரோகம்,அவமானம் என்ற பல உணர்வுகளை நாம் கடந்து
வந்திருக்கலாம், ஆனால் இவை எல்லாவற்றிக்கும் பின்பும் நாம் பின்னர் வாழ்ந்து காட்டுவது
தான் நம் மீது வெளிப்படுத்தப்பட்ட அந்த உணர்ச்சிகளுக்கு மிகச்சிறந்த பழிவாங்கலாக
இருக்கும்.
சில நேரங்களில் நாம் எல்லாவற்றையும்
மெளனமாக கடந்து விடுவதில் கிடைக்கின்ற நிம்மதியைப்போல பேரமைதி வேறெதுவுமில்லை. இப்படி
கடந்துபோவது பல பிரச்சினைகள் எழுவதை முற்றிலும் தடுக்கும். ஆனால் எல்லாவற்றையும்
சுயநலத்தோடு கடந்துபோவதும் தவறு. நம் சொந்த காரியங்கள் தவிர்த்து பொதுவெளியில்
சமூக அக்கறையுடன் காரியங்களை நாம் அணுகினால் நமக்கு ஏற்படும் சில இழப்புகளை விட
இந்த சமூகம் சிறக்கும் என்ற நோக்கம் நமக்கு இருக்க வேண்டும்.
Don't
give up what you want most, for what you want now. - Zig Ziglar என்பது போல தற்போதைக்கு நெருக்கும் தேவையின் மன அழுத்தத்தில் உங்கள்
மனம் நீண்ட காலமாக என்ன விரும்பியதோ அதை விட்டுவிட வேண்டாம்.
வாழ்க்கையில் துன்பங்களும், வேதனைகளும்,
சோதனைகளும் வருவது என்பது தவிக்க முடியாத ஒன்று. ஆனால் சங்கடங்கள் வரும்போது தடுமாறாமல் இருப்பதும், சந்தர்ப்பங்கள்
வரும்போது தடம் மாறாமல் இருப்பதும் தான் உண்மையான மனவுறுதி.
கவிஞர் ஆத்மார்த்தி அவர்கள் ஒரு பதிவில் சொல்லியிருப்பது போல, “இந்த வாழ்க்கையில் தனி மனது சொந்தம் கொண்டாட
விழைகிற எல்லாமுமே அபத்தங்களாகவும் அற்பங்களாகவும் தான் பிறரால் பார்க்கப்படும். கலை
என்பது கூட்டத்தின் கண் காது மனது இத்யாதிகளுக்கானவை அல்ல. ஒவ்வொரு பூவாய்க் கோர்த்த
மாலை”.
நாம் வெளிப்படுத்த நினைக்கும் உணர்வுகளில் பொறாமையை முடிந்த மட்டும்
தவிர்ப்பது சாலச்சிறந்தது. இன்றைய சூழலில் நம்மிடையே இருப்பவர்களில் பலர் “ஒருவரது நற்செயலை பாராட்ட மனதில்லாமல் கடந்து போவதை
விட, காரணம் தேடி தேடி தரக்குறைவாக விமர்சிக்கும்
போக்கு கொண்ட பொறாமை நிறைந்தவர்கள்” தான் அதிகம்.
வாழ்க்கையில் வரும் எவ்வளவோ இழப்புகளைகூட
ஏற்றுக் கொள்ள முடிகிறது, ஏனோ சில ஏமாற்றங்கள் மட்டும் இன்னும் நம்மை ஏமாற்றிக் கொண்டே
இருக்கிறது..!
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக