வலைவீசும் எண்ணங்கள்
45. ஏற்றம் பெறலாமே..?
உங்களிடம் ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள்
ஒரு எண்ணை சொல்ல சொன்னால் எந்த எண்ணை சொல்லுவர்கள்? உங்கள் எண் கணிதம் மூலம்
கணிக்கப்பட்ட ராசி எண்ணை தானே சொல்லுவீர்கள்.
ஒரு ஆசிரியை தன்னுடைய வகுப்பில் உள்ள
மாணவர்களிடம் இதே கேள்வியை கேட்ட போது எல்லோரும் அவர்கள் மனதில் தோன்றிய எண்ணை
சொல்ல, ஆசிரியை ஒரு மாணவனை எழுப்பி “நீ ஏன் அந்த எண்ணை சொன்னாய்? ஏதாவது காரணம்
இருக்கிறதா?” என்று வினவினார். மாணவனோ அப்படி எதுவும் இல்லை. நீங்கள் கேட்டதால்
மனதில் தோன்றிய எண்ணை சொன்னேன் என்று சொல்லிவிட்டு, “சரிங்க டீச்சர்.. உங்களுக்கு
எந்த எண் பிடிக்கும்” என்ற எதிர் கேள்வி வைத்தான்.
உடனே ஆசிரியை, “எனக்கு பிடித்தது
எட்டு” என்று சொல்லி விளக்கம் அளித்தார்கள். அந்த விளக்கம் தெரிந்துகொள்ளும்
முன்பு நீங்கள் எல்லோரும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை ஒருமுறை எழுதி பாருங்கள்..
வாழ்க்கையில் ஒவ்வொரு சிறிய சிறிய நிகழ்வுகளும்
நமக்கு ஏதாவது ஒரு படத்தை நிச்சயம் சொல்லிக்கொடுக்காமல் போவதில்லை. சில பாடங்கள்
அறிவில் பதிந்து நமக்கு வழிகாட்டியாக இருக்க, பலவற்றை நாம் மறந்துவிடுகிறோம்.
எல்லவாற்றையும் நம்முடைய அனுபவங்களில்
இருந்து மட்டுமே கற்க முடியாது? அப்படி தான் கற்க வேண்டும் என்றால் ஒரு பிறவி
போதாது. மற்றவர்களின் அனுபவங்களே நமக்கு சிறந்த பாடங்கள். சில விசயங்களை
குழந்தைகள் போகிற போக்கில் மிக எளிதாக, அதே நேரம் மிக ஆழமாக நமது மனதில்
பதியவிட்டு போய்விடுகிறார்கள்.
எல்லா எதிர்மறை செயலிலும் ஒரு
நேர்மையான விடயம் ஒளிந்து இருக்கும். அவற்றை ஆராயும் போது மிக அதிக சுவாரசியங்கள்
நமக்கு கிடைக்கும். இங்கு குறிப்பிட்டுள்ளதை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொண்டு வருவோமே..
தோல்விக்கு இணையான ஆங்கில பதமான FAIL என்ற வார்த்தைக்கு “'first Attempt In Learning”, அதாவது
“கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு” என்று
நாம் எடுத்துக்கொள்ளலாமே.
எல்லா முடிவுகளும் நிரந்தரமான
முடிவுகள் அல்ல. அதனால் END என்பதற்கு “Effort Never Dies”. அதாவது
“முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை’ என்று
பொருள் கொண்டால் நாம் அடுத்த முறை அடுத்த முயற்சியில் மிகவும் தெளிவாகவும்,
திட்டமிடலுடனும் இறங்க முடியுமே.
அதே நேரத்தில் “இல்லை”
என்ற “NO” நமக்கு
“அடுத்த வாய்ப்பை” “Next Opportunity” வழங்கும். பொறுத்திருந்து முயற்சிகள் செய்ய வெற்றி
நமக்குத்தானே..!
சரி எண்களை எழுதிப்பார்த்தீர்களா? என்ன
உணர்ந்தீர்கள். இப்போது அந்த ஆசிரியர் சொன்ன பதிலை பார்ப்போம்..
எல்லா எண்களும் மேலிருந்து தொடங்கி கீழே
முடிய, எட்டு மட்டும் கீழே வந்தாலும் அங்கேயே நிற்காமல் மீண்டும் மேலே வந்து
நிற்கிறது. உண்மைதானே..
எவ்வளவு நுணுக்கமான பார்வை. சரிங்க
டீச்சர்...”இதன் அர்த்தம் என்ன?” என்று மாணவன் கேட்க... “வீழ்ச்சிகள் வாழ்க்கையில்
வரலாம், ஆனால் அந்த வீழ்ச்சியில் தேங்கி நின்றுவிடாமல் மேன்மேலும் முயற்சித்து
மீண்டும் மேலே வர வேண்டும்” இதுதான் பாடம் என்று முடித்தார்.
எவ்வளவு எளிதாக ஒரு எண்ணைக்கொண்டு
மாணவர்களுக்கு வாழ்க்கையை போதித்து விட்டார். மாணவர்களுக்கு மட்டுமா? நமக்கும்
தானே..
இன்னொரு முக்கிய தகவல் இந்த
எட்டுக்குள் தான் மனித வாழ்வின் முயற்சிகள், அர்த்தங்கள், செயல்கள் அடங்கி உள்ளது.
வைரமுத்து அவர்கள் எழுதிய திரைப்பாடல் “எட்டுக்குள் இருக்கும் வாழ்க்கையை” நமக்கு
மிகவும் தெளிவாக சொல்லிவிட்டதே.
ஆக.. வாழ்க்கையில் எல்லோரும் ஒரு
வீழ்ச்சியை, தேக்கத்தை சந்தித்து இருப்போம் அல்லது வரலாம்? அந்த நேரத்தில் நாம்
துவண்டுவிடாமல் “8” போல மீண்டு எழவேண்டும்.
என்றைக்கும் வீழ்வது தவறில்லை. வீழ்ந்தாலும்
எழாமல் இருப்பது தான் தவறு. முயற்சிகள் தோற்கலாம் அதற்காக முயற்சியையே விட்டுவிட
கூடாது. எழாமல் இருக்கும் நிலையில் இகழ்ச்சிகள் தான் இந்த உலகம் நமக்கு தரும்
பரிசாக இருக்கும்.
இந்த உலகம் தான் உங்களை கண்டு
பரிகசிக்கும். உலகம் என்பது நம்மை பொறுத்தவரை நம்முடைய வீடு, சொந்தங்கள்,
சுற்றங்கள் தானே.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தர
மகிழ்ச்சியை நமக்கு தரப்போவதில்லை. நடப்பவனுக்கு மிதிவண்டியும், மிதிவண்டியில்
செல்பவனுக்கு மோட்டார் வண்டியும், அவனின் பார்வை மகிழுந்திலும் இப்படி மேலே மேலே
போகும் நிலையில் மனதிற்கு மகிழ்ச்சி தருவது எது?
தூய அன்பும், பிறருக்கு உதவும் மனதும்
மட்டுமே உளார்ந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும். பணம் மனிதனின் வாழ்க்கை
தரத்தை மட்டுமே உயர்த்தும் எப்போதும் அது மனதின் தரத்தை உயர்த்தாது.
மனமில்லாதவனிடம் கோடிகள் கொட்டி
இருந்தாலும் ஈயப்போவது இல்லை. மனமிருப்பவனுக்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் தன்னுடைய
உழைப்பையாவது மற்றவர்களுக்கு ஈந்து மகிழ்வான்.
முக்கியமாக இன்றைய தலைமுறைகளை நாம்
வாழ்வின் கஷ்டங்கள் அறியாமல் வளர்க்கிறோம். அது அவர்களின் மனதில் சின்ன தோல்விகள்,
தடைகள் வந்தாலும் மிகவும் சோர்ந்துவிட வைக்கிறது.
சென்ற தலைமுறைகள் பட்ட கஷ்டங்கள் பற்றி
உங்கள் பிள்ளைக்கு சொல்லுங்கள். மதிய சாப்பாட்டிற்காக பள்ளிக்கு சென்றதையும்,
தேர்வுக்கு நாற்காட்டி அட்டையை உபயோகித்ததையும், திருகு தேய்ந்த பேனாவில் நூல்
சுற்றி பத்திரப்படுத்தி எழுதியதையும் சொல்லுங்கள்.
உங்கள் வாரிசுகளுக்கு அவை எல்லாம்
கேலியாக தெரியலாம் ஆனால் இந்த கஷ்டங்கள் மனதில் பதிந்தால் தான் தோல்விகளில்
அவர்கள் துவண்டு விடாமல் கம்பீரமாக எழுந்து நிற்க முடியும்.
இன்றைக்கு நமக்கு வசதி இருப்பதால்
எல்லாவற்றையும் நம்மால் அவர்களுக்கு அள்ளி அள்ளி செய்துவிட முடிகிறது, ஆனால் கொஞ்சம்
யோசியுங்கள். புதிய துணிக்கு நம் பெற்றோர்களிடம் வருடத்திற்கு ஒருமுறை தவம் இருந்த
நிலையை.
நாம் கேள்வி இல்லாமல் பிள்ளைகளுக்கு செய்யும் ஒவ்வொரு செலவிலும் அவர்களின்
பிடிவாதங்கள் தான் கூடுகிறது. அதுவும் இன்றைக்கு பலரும் இரண்டுக்கு மேல் வேண்டாம்
என்ற வாசகத்தையும் மறந்து ஒன்றே போதும் என்று தனிமரமாக அவர்களை வளர்த்து விட்டு
போகும் நிலையில் பிடிவாதம் என்றைக்கும் வாழ்க்கையில் நிம்மதி தராது.
எல்லோரையும் பணத்தினால் அல்லது குணத்தினால் மட்டுமே
அணைத்துக்கொள்வோம். இந்த உலகத்தில் பாசங்கள் மறந்தாலும் மனிதம் மறக்காமல் வாழ்வது
தான் சிறப்பு.
பாசம் இரத்த சொந்தங்கள் மீது மட்டுமே வருகிறது. மனிதம் கொண்ட எதிர்பார்ப்பு
இல்லாத நேசம் எல்லா உயிர்கள் மீதும் வருவது. நாம் நேசம் கொண்டவர்களாக வாழ்வோம்..
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக