என்னைப்படித்த புத்தகம் ...
&^&^&^&^&^&^&^&^&^&^&^&^&
என்னை சுற்றி நடக்கும் அனுதின நிகழ்வுகளே என்னை படிக்கும் புத்தகமும்,
நான் படிக்கும் புத்தகமும் ஆகும். இந்த அனுபவங்களை மனதில் நிறைத்துக்கொண்டு அதில்
இருந்து படிக்கும் பாடங்களே எனக்கு கிடைக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷம்.
(உங்களுக்கும் கூட)
வாழ்க்கை ஓயாது கரையை தொடும் அலைகள் போலவே நம்மை சில நாட்கள் தாலாட்டும்,
சில நாட்கள் அசைத்துப்பார்க்கும், எதிர்பாராத நாளில் அப்படியே புரட்டியும் போடும்.
பள்ளியில் படிந்த படங்கள் அறிவை புகட்டினாலும் இந்த உலகமே உண்மையனா
ஆசிரியனாய் நமக்கு கற்பிக்கிறது.
படிக்கமுடியாத சூழலில் வாழ்க்கை துரத்திய பாதையில் வேலையில் சென்று
கடுமையாக உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் கையில் சிக்கும் துண்டு காகிதமும்
அதில் உள்ள வரிகளும் எதையாவது போதித்துக்கொண்டு தான் இருந்தது.
வாழ்க்கையின் நடந்த சில நிகழ்வுகள் என்னக்கும் கடவுளுக்குமான இடைவெளியை
பெரியதாக்கி இருந்தாலும் அவ்வப்போது பல உருவங்களில் கடவுள் வந்து என்னை நலம்
விசாரிக்கையில் எனக்கு தோன்றுவது, “இந்த இடைவெளியை தந்தது கடவுளோ, மனிதர்களோ இல்லை
மனிதர்களை மதம்பிடிக்க செய்யும் “மதங்களே”” என்ற புரிதல் மனதில் நின்றபோது வாழ்க்கை
என்னை “அன்பாய்” இருக்கச்சொல்லி ஏந்திக்கொண்டது. உலகில் அன்பு தானே கடவுள்..!
பள்ளியில் படிக்கும் போதே வாசிக்கும் இன்பம் என்னை வசியப்படுத்தியதால்
வாசிக்காத நாட்கள் கொஞ்சம் வறண்டே இருந்தது. சென்னையில் வந்து மருந்துக்கடையில்
வேலை செய்தபோதும், விடாத வாசிப்பின் சுகானுபவம் பின்னர் சைக்கிளில் கடைகளுக்கு
மருந்து விநியோகிக்கும் அடுத்த நிலையிலும் நான் வாசித்த புத்தகமும், என்னை வாசித்த
உலகமும் என்னை என்றும் நிலை தடுமாறாமல் கைகளால் மெல்ல அணைத்துக்கொண்டது.
பாலகுமாரனை வாசித்ததில் மனிதத்தையும், அன்பையும் சொல்லி மனதை நேசிக்க
சொல்லிக்கொடுத்த போது, கண்ணதாசனும் என்னை மெல்ல அணைத்துக்கொண்டது இயல்பாய் நடந்தது.
கல்கியும் சாண்டில்யனும் தமிழை எனக்குள் இன்னும் நெருக்கி வைக்க, என்டமூரியும்,
காண்டேகரும் கொஞ்சமாய் நெஞ்சில் நிறைந்தார்கள்.
மாஸ்டர் சோவா கோக் சூயி அவர்களும், பரமஹம்ச யோகானந்தரும், ரா.மஹாத்ரேயா வழியில் என்னை வசீகறது என்னை கொஞ்சம் நிதானப்படுத்தி
வாழ்க்கையை இன்னும் சுவையாக படிக்க வைத்தார்கள். எவ்வளவு தான் படித்தாலும் “கற்றது
கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” அல்லவா?..
“இடுக்கண் வருங்கால் நகுக” என்ற உலகம் படிக்கும் வள்ளுவம் என்னை
உரமேற்றி வைத்திருக்க... ஏணிகளாய் இருந்தாலும் ஏற்றமின்றி இருப்பதும் அதுதானே..
வாழ்க்கையின் பணயப்பாதை எல்லாமே சுகம்தரும் பாதையா என்ன?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் தேக்கம் என்னையும் அணைபோட்டு தடுத்த
போது என்னை வசமிழக்காமல் தடுத்து படித்தவற்றை பலரோடு பகிரவும், தேக்கத்தில் குட்டையாகிப்போகாமல்
மாற்றுவழி தேடி பயணிக்கவும் ஒரு பற்றுக்கோலாய் கைபிடித்து மெல்ல வழி நடத்துகிறது
“வாங்க பேசலாம்” குழுவும் அதில் வரும் பதிவுகளும்.
இவனுக்கும் உள்ளுக்குள் ஒரு சிறுபொறி இருப்பதை கண்டு பாராட்டு என்ற தூண்டுகோலாக
இருந்து என்னையும் தூண்டி என்னை படித்தது நமது குழுவும் தலைமையும். எவ்வளவோ சொல்ல
முடியாத வேதனைகள், இழப்புகள் இடையேயும் என்னை தேங்க விடாமல் ஓட வைப்பதும் குழு
தானே..
இங்கே அனைத்துக்கொண்டு அன்பாய் போதிக்கும் உறவுகளும் உண்டு, தானென்ற
அகந்தை தலையில் ஏறாமல் இருக்க அவ்வப்போது தலையிலேயே குட்டி, தட்டி வைத்து கூடவே பாராட்டி
தட்டியும் கொடுத்து அன்பு சொல்லும் நட்புகளும் இருப்பது என்னைப்படிக்கும்
முயற்சியில் நான் காணும் பெரும்பலனே.
எதிர்பார்ப்புகளை ஓரம் கட்டி ஆசைகளை மனதின் ஓரத்தில் பதியனிட்டு
பயணிப்பதில் எனக்கான ஏமாற்றங்கள் வலிக்காமல் என்னை பயணம் செய்ய வழிவிட்டு அவைகள்
ஏமாந்து நிற்கிறது. இன்றைக்கும் எதாவது ஒரு வரி எங்காவது கண்ணில் பட்டு என்னை
படிக்கவைத்து பாடமும் சொல்லிகொடுத்துக்கொண்டே இருப்பதில் என்னுடைய பயணம் சுவாரசியம்
குறையாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.
எல்லாமே தொடர் புள்ளிகளாய் இருந்து அவைகளே வாழ்க்கையின் சுவாரசியம் வற்றிவிடாமல்
பார்த்துக்கொள்கிறது. என்றைக்கு எனக்கான முற்றுப்புள்ளி வருகிறதோ அன்றைக்கு இந்த உலகம்
என்னை வாசிக்க நிலையில் நானிருக்க வேண்டும்.
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக