வலைவீசும் எண்ணங்கள்
39. நதிக்கு
கடலின் முகவரி தந்தது யார்?
யாரவது இந்த கேள்வியோடு இது பற்றி சிந்தித்தது உண்டா? என்ற கேள்வியை
உங்கள் முன்பு நான் வைக்கப்போவதில்லை. ஏனென்றால் எல்லா கேள்விகளும், பதில்களும்,
சிந்தனைகளும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாரவது ஒருவரால் என்றோ கேட்கப்பட்டும்,
சொல்லப்பட்டும் இருக்கும்.
நதிகளும் அது தேடும் கடலின் முகவரியும் நமக்கு சொல்லுவது என்ன?
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் நமக்கு நோக்கம் ஒன்று தேவை, ஆனால் அந்த நோக்கத்தை
அடையும் பயணத்தில் தொடர்ச்சியாக பயணிக்க ஊக்கமும், ஒழுக்கமும் தேவை.
எங்கோ ஒரு மலையில் மழைத்துளிகள் ஒன்றிணைந்து சிற்றோடையாக பரிணமித்து
மெல்ல தானொத்த ஓடைகளை தன்னில் சேர்த்து பெருநதியாக மாறியல்லவா கடலைத் தேடும் தனது
பயணத்தை தொடங்குகிறது ஒரு நதி.
நதியாக நமது வாழ்க்கையை கொஞ்சம் உருவகப்படுத்திக்கொண்டால்... நமது
பயணம் எதை நோக்கி செல்கிறது? நாம் தேடும் முகவரி என்ன? வாழ்க்கையின் இடையில்
கிடைக்கும் இன்புமும், இளைப்பாறுதலுமா? முடிவில் அமைதி கொடுக்கும் மரணமா? ஏகாந்த பெருவெளியில்
நிறைந்திருக்கும் இறையோடு கலக்கும் பேரின்ப நிலையா?
நமக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்வெனும் பெரும் நிலையை கடக்கும் வாழ்க்கைப்பயணத்தில்
கடலும், நதியும் நமக்கு சொல்லும் செய்தி தான் என்ன? நதியின் பயணத்தோடு நாமும் நமது
பயணத்தை இங்கே தொடரலாம்..
ஒரு நதியின் ஆரம்பமே நமது வாழ்க்கையின் நெளிவு சுளிவு பற்றிய
போதனையுடன் தானே துவங்குகிறது? மழைத்துளிகள் ஒன்றிணைந்து, சிற்றோடைகள் ஒன்றிணைத்து
பெருநதியாக, மகா நதியாக பிரவாகம் எடுக்கும் அதன் மாற்றம் நமது வாழ்க்கையின் சுற்றங்களை,
சொந்த பந்தங்களை, நட்புக்களை ஒருங்கே அணைத்து எல்லோருடனும் ஒரு ஒத்திசைவான மனதுடன்
அல்லவா நமது வாழ்க்கைப்பயணமும் தொடங்கிகிறது..
ஓடும் நதியின் பாதையில் வரும் தடைகளைப் போலவே நமது வாழ்க்கையிலும்
தான் எத்தனை எத்தனை இடர்கள். தடைகள். நதிகள் தடைகளைக்கண்டு துவண்டு தேங்கி
விடுவதில்லை. பெருமலைகளையும், பெரும் பறைகளையும் கண்டு மலைக்காமல், தேவையின்றி
போராடி சக்தியை வீணடிக்காமல் செல்லும் தனது பாதையை லாவகமாக மாற்றிக்கொண்டு அல்லவா
அது கடலின் முகவரியை தேடி செல்லுகிறது.
டகார்ட்டீஸ் (Descartes) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதையும், தத்துவ அறிஞரும் முழங்கிய ‘I think therefore I am’ என்ற வரிகள் மிகவும்
பிரபலமானது. ‘நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்”, அதாவது தேங்காமல் நிற்பதும், சிந்திப்பதும் தான்
வாழ்வியலுக்கு ஆதாரமானது
அதே நேரதில் தனது பயணத்திற்கு தடையாக இருக்கும் மலையையும், பாறையையும்
அது கவனிக்காமல் இருப்பதும் இல்லை. தன்னால் முடிந்த மட்டும் தன்னுடைய பயணத்தை விடாமல்
தொடர்ந்துக்கொண்டே தன்னுடைய எதிர்ப்பையும், மோதலையும் மெல்ல மெல்ல கொடுத்துக்கொண்டே
தான் இருக்கும். மலையும், பாறையும் அவைகள் அறியாமலே மெல்ல மெல்ல அரிக்கப்பட்டது
பலவீனப்படுத்தப்படுகிறது.
காலங்கள் பற்றி அது பார்ப்பது இல்லை. தொடரும் பயணத்தில் தொடரும்
போராட்டமும் நிற்பது இல்லை. காலம் கனியும் நாளில் பெருவெள்ளமாக பொங்கி வரும் நதி மலை
கரைத்து, பாறையை உருட்டி புதிய பாதையை அங்கே திறந்து பிரவாகமெடுத்து பாயும்.
அந்த நேரத்தில் நதியின் பாதை திசை திரும்பலாம் அல்லது அங்கு இரண்டாக
பிரிந்து மீண்டும் ஓரிடத்தில் ஒன்று கூடி தனது பயணத்தை தொடரலாம். எப்படி இருந்தாலும்
கடலை தேடும் நதியின் பயணம் கடலில் மட்டுமே முடிகிறது.
நமது வாழ்க்கையில் நம்மைவிட பலம் கொண்ட தடை வரும்போது எதற்காக முட்டி
மோதி நமது சக்தியை வீணடித்து அங்கேயே தேங்கி நிற்க வேண்டும்? தடைகளை ஒருபுறம்
ஒதுக்கி வைத்து போராட்டத்தை மெல்ல நடத்திக்கொண்டு, அதே நேரத்தில் நமது பாதையை
மாற்றி நமது பயணம் தொடர்ந்து செல்லலாமே.
காரணம் எவனொருவன், தனது கடமைக்கான முக்கிய வேலைகளை செய்துக்கொண்டே இடையில் தன் மனதிற்குப்
பிடித்த வேலைகளையும் செய்து முடிக்கிறானோ, அவன் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வெற்றி பெற்றவனாகவும் இருக்கிறான்
எதிரியாக இருந்தாலும் தடைகள் போடுவோரிடம் வீம்புக்கு அல்லாமல் தேவைக்கு
மட்டுமே போராடி, அதே நேரத்தில் அந்த தடைக்கு நாமே ஒரு தடை போட்டு, மெல்ல நமது
பாதையை வேறு திசையில் திருப்பி பயணம் தொடரலாமே.
எதிரி தன்னிடம் போராடுவதாக நினைத்து முட்டி மோதிக்கொண்டு இருக்கையில்
நமது பயணம் வேகமெடுக்க, அதுவே நமக்கு தரும் உத்வேகமாக மாறி, எதிரியின் தடைகளை
தகர்க்கும் சக்தியை நமக்கு தரலாம் அல்லது வேறு பாதையில் தடையில்லா வழியில் நமது
பயணம் வேகம் பெறலாம்..
நதிகளுக்கு கடல்தான் இலக்காக இருந்தாலும் போகும் வழி எங்கும் ஏரி,
குளம், நீர்நிலைகள், அணை என்று சிறுது ஒய்வு எடுப்பது போல தண்ணீரை பகிர்ந்து
வளப்படுத்தி செல்வது போல நமது பிறவிப்பெருங்கடலை கடக்கும் பெரும் குறிக்கோளில்
வழியில் செல்லும் போது அதில் சிறு சிறு குறிக்கோள்களை மனதில் கொண்டு மெல்ல மெல்ல அவைகளை
நிறைவேற்றி முடிவில் நமது பெரிய லட்சியத்தை வென்றெடுக்கலாமே?
ஒடுங்க வேண்டிய இடந்தில் ஒடுங்கி, பாயவேண்டிய இடத்தில் பாய்ந்து, விழ
வேண்டிய இடத்தில் அருவியாக வீழ்ந்து அமைதியாக இருக்க வேண்டிய சமவெளியில் மௌனமாக
கடந்தும்... எத்தனை எத்தனை சூட்சுமங்கள் நதி கையாண்டு கடலை அடையும் தனது பயணத்தை
வென்றெடுக்கிறது.
ஏன்.. நம்மளும் முடியும் தானே? பணிய வேண்டிய இடத்தில் பணிவும், துணிய
வேண்டிய இடத்தில துணிவும், தெளிவு வேண்டிய இடத்தில் அமைதியும், சீற வேண்டிய இடத்தில்
சீற்றமும், அமைதியாய் கடக்கவேண்டிய நேரத்தில் மௌனமாகவும்.. நமது செயல்களை மாற்றிக்கொண்டு
பயணிக்கும்போது நமக்கும் வெற்றி என்பது இலகு தானே..
“முணுமுணுப்பவர்களுக்கு வெற்றி கைக்கூடாது” என்பது ஜப்பானிய பழமொழி.
சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் திடமாகவும், உறுதியாகவும்,
தெளிவாகவும், நமது கருத்துக்களை சொன்னால் தான் அது வெற்றியாக மாறும்.
வாழ்க்கையில் காதலிக்கும் நேரத்தில் மனதில் தோன்றும் ஆசையை மனதை
விட்டு சொல்லும் போது வெற்றியோ, தோல்வியோ எதோ ஒரு பதில் கிடைப்பது நிம்மதி
தருகிறது.
அப்படி இல்லாமல் மௌனம் காத்து பின்னர் தோல்வி என்று புலம்புவதில் யாருக்கும்
பலனில்லை. இது காதலில் மட்டும் அல்ல வாழ்க்கையின் எல்லா முடிவிலும் தான், ஏனென்றால்
ஒரு மனிதன் தனது பிறப்பால் இல்லாமல் தனது செயல்களின் மூலமே சிறந்தவனாகிறான்!
மலைகளில் இருந்து ஆடி, ஓடி, தேடி வரும் நதியானது கடலை அடையும்
நிலையில் கைகளை பரந்து விரித்து அணைப்பது போல நாணலும், கோணலுமாக பிரிந்து தளர்த்து
தன்னின் தேடலை கடலை அடைந்து ஒன்று கலந்து தன்னுடைய
அடையாளத்தையும் விட்டு கடலோடு ஒன்றாக நதி கலக்கிறதோ அதுதானே வாழ்க்கையும்..
நமக்கு கடலைப்போல, நதியைப்போல இயற்கையானது பல விதங்களில் போதிக்கும்
பாடங்கள் ஏராளம். வாழ்க்கையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் உங்களிடம் என்ன வசதிகள்,
சாதனங்கள் இருக்கிறது என்பதைக் காட்டிலும் இருக்கும் சூழ்நிலையில் எத்தனைச்
சிறப்பான செயலைச் செய்கிறீர் என்பதே உங்களை வித்தியாசப் படுத்திக்காட்டும்.
அப்படிப்பட்டவரே வெற்றியையும் விரைந்து அடைய முடியும்.
பார்த்தோம், ரசித்தோம் என்பதோடு இல்லாமல் கூர்ந்து நோக்கி அது சொல்லும்
சேதிகளை மனதில் இருத்தி பாடங்களை படித்துக்கொள்ள.. வாழ்க்கையின் இன்பத்தில்
பொங்காமல், துன்பத்தில் துவளாமல் சமவெளி செல்லும் நதியாக நமது அமைதியுடன் நமது
வாழ்க்கைப்பயணத்தை தொடரலாம்.
வாழ்க்கை என்பது நதியைப்போல... இடத்திற்கு ஏற்ப இயல்பையும்,
குணத்தையும் மாற்றிக்கொண்டு ஓடினாலும் அதன் இயல்பான ஓட்டத்தை நிறுத்துவதில்லை.
நாமும் தொடர்வோமா?
“நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில்
உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள் தொடர்ந்து
முன்னேறுங்கள்!”
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக