அன்றைக்கு தான் பட்டணத்தில் கால் வைத்தான் அந்த இளைஞன். பள்ளி இறுதி
தேர்வு முடிந்து முதல்முறையாக தந்தையின் துணையுடன் மெட்ராஸ் பட்டினம் வந்து
இறங்கியவனுக்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்து ஆச்சரிப்பட்ட அந்த
LIC‑யின் உயர்ந்த கட்டிடம் முதல் முதலில் கண்ணில் பட்டபோது எழுத பிரமிப்பும்
பெருமையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது. நான் நேர்ல பார்த்துட்டேன்
பார்த்துட்டேன் என்று நண்பர்களிடம் பெருமையாக சொல்லவேண்டுமென ஒரு ஆர்வம்
பொங்கியது.
அது 90-ஆரம்பம். மெல்ல அங்கு இருந்த பிரமாண்டமான கட்டிடங்கள், நெரிசல்
மிகுந்த போக்குவரத்து, யாரையும் நின்று பார்க்கவும் நேரமில்லாமல் ஓடும்
மனிதர்கள்.. எல்லாமே அதிசயமாக இருந்தது அவனுக்கு.
மெல்ல நடைபோட பிரமாண்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக குடிசைகளும், கூவம்
மணக்கும் கரையும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. நகரின் மறுபக்கம் அந்த அண்ணா
சாலையில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் கரையோரமே
இருந்தது.
பளபளக்கும் உடையணிதவன் உள்ளே உடுத்தி இருக்கும் ஓட்டைகள் விழுந்த
பனியன் போல இருந்தது அந்த மறுபக்கம்.
தேடிவந்த நண்பரை கண்டுபிடித்து முதல் முதலாக ஒரு உணவகத்தில் உணவு
அருந்தும்போதும் அங்கு இருந்த நடைமுறையும் அவனுக்கு ஆச்சர்யமே.
பின்னர் அவனே சில வருடங்கள் கழித்து மிதிவண்டியில் அந்த பட்டணத்தில்
சுற்றி வரும்போது கொஞ்சம் பிரமிப்பு விலக ஒரு தோழமை ஒட்டிக்கொண்டது. எத்தனை விதமான
மனிதர்கள்.. எந்தனை விதமான நிறுவனங்கள். பளபளக்கும் காரில் வரும்
பணக்காரர்களுக்கான மிகப்பெரிய கடையும் சரி, ஏழைகள் பேரம் பேசி வாங்கும் வீதியோர
கடைகளும் சரி.. எல்லாமே இன்றைக்கு சாதாரணமே..
திருவல்லிக்கேணி வீதிகளில் பாரதியின் இல்லம் பார்த்து, மெல்ல மெல்ல
கடந்து செல்ல சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் பழைய புத்தகக்கடைகள், அப்படியே
கிழக்கு நோக்கி செல்ல விவேகானந்தர் இல்லமும், பரந்துவிரிந்து பலருக்கு சாமரம்
வீசும் மெரினாவும் எல்லாமே இன்றைக்கும் அவனுக்கு ஆச்சர்யத்தை குறைக்கவில்லை.
மீண்டும் மீண்டும் வலம் வந்தாலும் எல்லாமே புதியாதாய். சமீபத்தில் ஒரு
நாள் அவன் நகரின் வீதிகளில் நடைபோடும்போதும் அதே பிரமிப்பு..
தமிழகத்தின் அடையாளமாய் இருந்த LIC
கட்டிடம் . விண்முட்டும் பல கட்டிடங்களின் முன்பு அடங்கி
ஒடுங்கிவிட்டது.. பிரமாண்ட அலங்கார், சபையர் திரையரங்க வளாகம் காணமல் போய்விட்டது.
இன்னும் அவன் உள்ளே நுழைந்திராத மேல்நாட்டு பொருட்கள் விற்கும் பல்லடுக்கு வணிக
வளாகங்கள், பல்லடுக்கு திரையரங்குகள், மாறிப்போன பண்பாடு, உடை வழக்கம், இரவுநேர
ஆட்டம்பாட்டம், அன்றைக்கு எளிதாக நடையில் கடந்த அண்ணா சாலையில் இன்று நடக்க
திணறும் வாகன நெருக்கும்.
எல்லாமே மாறிவிட்ட பட்டணத்தில் அவனுக்கு இன்னும் அந்த
வேடிக்கைபார்த்துக்கொண்டே நடக்கும் ஆசை மட்டும் குறையவே இல்லை. பார்க்கும் ஒவ்வொரு
முறையும் எல்லாமே புதியதாய்.. எல்லாமே பிரமிப்பாய்... அன்றைக்கு மெட்ராஸ் பட்டிணம்
மட்டும் இன்றைக்கு சென்னை பட்டிணமாக...அவன் மட்டும் இன்னும் மனதில் அதே
கிராமத்தானாக.
- சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக