வலைவீசும் எண்ணங்கள்
36. குப்பையான
மனது
நம்மை சுற்றி எங்கும் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் நமக்கு தருவது
என்ன? துர்நாற்றமும் நோய்களும் தானே. அதிலிருந்து வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது?
எல்லாமே வேண்டாம் என்று போட்டவையும், ஒன்றுக்கும் உதவாத கழிவுகளும் தானே..
எல்லாவற்றையும் சேகரித்து குப்பை கிடங்கில் போட்டு வைக்கலாம் யாருக்கும் எந்த
பயனும் இல்லாமல்...!
இன்றைக்கு அது தானே நடக்கிறது. நோய்களின் உற்பத்தி மையமாக மட்டுமே
அந்த குப்பை கிடங்குகள் இருக்கிறது. கொஞ்சம் புத்திசாலித்தனமாக திட்டமிட்டால் அந்த
குப்பையையும் பொன்னாக்கலாம். உரம் தயாரிப்பு, மின்சாரம் தயாரிப்பு என்று சில
வழிகள்..
மேலே கூறியது நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் நாம் எல்லோராலும்
சேர்க்கப்படும் குப்பைகள் பற்றியது.
உண்மையில் நாமும் நம்முடைய மனதில் குப்பைகள் சேர்த்து சுமக்க
முடியாமல் சுமந்து தினம் தினம் துன்பப்படுகிறோம் என்பதை அறிவோமா?
நம்முடைய மனதில் நாம் பிறர்மேல் வைக்கும் கோபம், பொறாமை, வேண்டாத
வெறுப்பு, நாமே நமக்கு சேர்க்கும் சோம்பல் எண்ணம், ஆணவம், அகங்காரம், தீய எண்ணம்,
கோபம் இப்படி பல குப்பைகளை சேர்த்து அதை சுமக்க முடியாமல் சுமந்து வாழ்க்கையில்
தள்ளாடிக்கொண்டு இருக்கிறோம்.
இப்படி நம்முடைய மனதில் சேர்க்கும் குப்பைகளால் எந்த ஒரு பயனும்
இல்லை. உண்மையில் அதன் மூலம் நம்முடைய மனதும், உடலும் தான் கெடுகிறது. இதனை மாற்று
வழியிலும் உபயோகிக்க முடியாது..
ஒரு சிலர் இருப்பார்கள்.. யாரைக்கண்டாலும் ஒரு இனம்புரியாத வெறுப்பு
அவர்கள் மனதில் எழும். உண்மையில் எதிராளி பற்றி சரியாக அறிந்திருக்கமாட்டார்கள்.
அவர்களுடன் புரிந்துகொள்ளும் அளவிற்கு நீண்ட பழக்கமோ, நட்பு இருக்காது. ஆனாலும்
அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் இவர்களே உருவகப்படுத்தி அவர்களை நோக்கி
கணைகளை வீசுவார்கள். அதுவும் நேரடியாக அல்ல. மறைமுகமாக பிறரின் மூலம். இதனால்
எதிராளிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அவர்கள் அறிவதில்லை.
வேறு சிலர் இருக்கிறார்கள்.. அவர்கள் முதலில் ஒருவரைப்பற்றி முழுமையாக
எதுவும் தெரியாமல் “அவரா? அவர் அப்படித்தான்” என்று ஒரு முத்திரை குத்தி
விடுவார்கள். அதாவது முதலில் ஒருவரைப்பற்றி தீர்ப்பை எழுதிவிட்டு பின்னர்
பொறுமையாக விசாரணையை தொடங்குவார்கள்.
இப்படி மனிதர்களின் மனமும், குணமும் பல விதமான குணாதிசயங்கள் கொண்டு
இருக்கிறது. இந்த குணங்களுக்கு இடையே அவர்கள் மனதில் சேர்க்கும் குப்பைகள் பற்றி
அறியாமல் தங்களுடைய மனதின் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதைபற்றி அறியாமல் அவர்கள்
வாழ்கிறார்கள்.
நம்மில் சிலர் எதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் மீது மனபேதம் கொண்டு
சண்டை போட்டு இருப்போம். உண்மையில் அந்த சண்டைக்கு முன்பு அவர்கள்
நினைத்துப்பார்க்க பல நல்ல நிகழ்வுகள் இருவருக்கு இடையில் நிறையவே நடந்து
இருக்கும். அந்த இனிய நினைவுகளை மனதில் வைக்கலாம் சண்டையிட்ட அந்த மறக்க வேண்டிய
தருணத்தை மட்டுமே மனதில் குப்பையாக வைத்து இருப்பார்கள்.
இனிய நினைவுகள் என்றும் சுகந்தம் தரும் மனதின் உற்சாக ஊக்கிகள். இனிய
நினைவுகள் வசந்தத்தில் வளரும் வாச மலர்களை போன்றவை.
கோபத்தருணங்களும், வேதனை சம்பவங்களும், புரிதல் இல்லாமல் எழுந்த
பிரச்னைகளும் நமது மனதின் உற்சாகத்தை உறிஞ்சும் கடும்கோடையின் வெப்பம் போன்றவை.
வாழ்க்கை இனித்திருக்க வேண்டியது வசந்தகால நினைவுகள் மட்டுமே..
வேண்டாத குப்பைகள் இல்லை.
யாராவது தீயைக்கொண்டு தீயை அணைத்துவிட முடியுமா? அப்படி இருக்க
வெறுப்பை வளர்ப்பதால் பிறருடன் எழும் எந்த பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியாது.
நமது உள்ளத்தில் வெளிச்சம் வேண்டும் என்றால் நல்ல எண்ணங்கள் என்ற
தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கு முன்பு நமது உள்ளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற
வேண்டும். அப்போது தான் உள்ளத்தின் இருள் அகன்று வெளிச்சம் பரவும்.
எல்லோருக்கும் தெரியும்... எல்லா வித காயங்களுக்கும் மறதியும்,
காலமும் மட்டுமே மருந்து.
நீங்கள் விடாப்பிடியாக தேவையற்ற எண்ணங்களை மனதில் தேக்குவதால் அது
உங்களின் பாரத்தை குறைக்காது. மேலும் மேலும் கூட்ட உரமாக இருந்து ஊக்குவிக்க மட்டுமே
செய்யும்.
யாருடைய முதுகில் குத்தியும் எதையும் சாதிக்க முடியாது, அதே நேரத்தில்
ஒருவருடைய முத்திகள் தட்டிக்கொடுத்து நாம் நினைப்பதை சாதிக்க முடியும்.
முகநூல் சகோதரி மனநல ஆலோசகர் Selvi Arulmozhi
Psychologist அவர்களின் பதிவில் இருந்து சில செய்திகளை இங்கு பகிர்கிறேன்..
“வாழ்க்கை சில சமயங்களில் நம்மை மிக வேதனை படுத்துவதாக இருக்கும்...
அதற்கு யாரோ காரணமாகவும் இருக்கலாம்... யாருக்குமே உடனடியாக அவர் மீது கோபமும்..துவேஷமும்தான்
கொள்ளத்தோன்றும்..!
ஆனால் நம்மில் எத்தனைபேருக்கு... நிதானமாக “ஏன் அப்படி செய்கின்றார்?:
என்ற காரணத்தை கண்டறிய தோன்றும்...!!!
யாரோ ஒருவர் நமக்கு தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறார். நம்மை வருத்தப்பட
வைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்...
“அவரா?.... அவருக்கு என்னை பிடிக்கவேபிடிக்காதே..! அவரோட முதல்
எதிரியே நான்தான்... என்னை அழிப்பதுதான் அவரது நோக்கமே...!” இந்த வசனத்தை அடிக்கடி
கேட்டுகொண்டிருக்கின்றோம்...
ஆனால் ஏன் இப்படி நடக்கிறது..? நம்மாள் அவருக்கு என்ன தீங்கு..அல்லது
நம்மையறியாமல் நம்மாள் அவருக்கு என்னென்ன பிரச்சனை... அல்லது எந்த வகையில் அவரது
துன்பத்திற்கு நாம் காரணமானோம்...? என்று கொஞ்சம் தீவிரமாக ஆராய்ந்து
பாருங்களேன்...
நமது கோபத்தையும் எரிச்சலையும் கொஞ்சம் மூட்டைகட்டி வைத்துவிட்டு... வெகு
சுவாரசியமான.. தேவையான...ரசிக்கும்படியான விபரங்களெல்லாம் வெளிவரும்...
சில சமயங்களின் நம்மில் அன்பானவர்களையும்..நம்மை நேசிப்பவர்களையும்கூட
அடையாளம் காண வாய்ப்பாகிவிடும்...
எத்தனையோ உண்மைகள்..மாற்றிகொள்ளவேண்டியவை மாற்றவேண்டியவைகள் என
வகைபடுத்தபடும்....
முட்டாள்தனமாக..பகையையும்..வழிவாங்கும் முயற்சியையும்
கைவிட்டுவிட்டு... சற்றே நிதானமாக வேறுகோணத்தில் ஆராய்ந்தறிந்துதான்
பாருங்களேன்....
அமைதி ..நிம்மதி... மகிழ்ச்சி எல்லாம்..நம்மை தேடி ஓடிவரும்... முயற்சித்துதான்
பாருங்களேன்... - செல்வி....மனநல ஆலோசகர்”
இது நாம் எல்லோருக்கும் மிக எளிதாக அறியக்கூடியதாக இருக்கும்
உண்மைகளே. இதை எளிதாகவும் பின்பற்ற முடியுமே.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
பிறர் நம்மீது கொண்ட பிணக்குகளை நம் மீது தவறு இல்லை என்ற போதும் நமது
மனதில் அதைப்பற்றிய வெறுப்பை அவர் மீதான எதிர்மறை எண்ணங்களை வளர்த்து நமது மனதின்
குப்பையை அதிகப்படுத்துவதற்கு பதில் மனதால் எதிராளியை மன்னித்து நாம் நல்ல
தெளிவான, இனிய மனதுடன் இருப்போமே..
ஒருவேளை நாம் தவறு செய்து அந்த பாரம் மனதில் இருந்தால் வெட்கப்படாமல்
எதிராளியிடம் மன்னிப்பு கேட்டுவிடுவோம். எதிராளி மன்னித்தாலும்,
மன்னிக்காவிட்டாலும் நமது மனதின் பாரம் குறைந்து விடும். இனி அவர் மனம் அவரின்
பாரம். நாம் லேசான மனதுடம் வேலையை பார்ப்போமே..
ஒருவரை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகிக்கும் முன்பு கொஞ்சம்
யோசியுங்கள்.. நீங்கள் வார்த்தை கணைகள் வீசிய பிறகு மன்னிப்புக்கேட்பதால் அவருக்கு
நெஞ்சில் பட்ட காயம் ஆறாது..
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக