வலைவீசும் எண்ணங்கள்
37. ஆசையா? குறிக்கோளா?
நாம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் எல்லாம்
நிறைவேறவேண்டும் என்று அந்த ஆசைகளுக்கும் மேலான ஆசை இருக்கும். ஆனால் ஆசைகள்
எல்லாமே நிறைவேறுவது இல்லை.
நாம் மனதில் கொண்டிருக்கும் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றால் அந்த
ஆசைகளை நமது குறிக்கோளாக மாற்ற வேண்டும். அந்த குறிக்கோளை நோக்கி மனதை
நிலைநிறுத்தி நமது செயல்களை வடிவமைக்கும்போது நாம் கொண்ட ஆசைகள் நனவாகிறது.
இல்லையேல் அது கண்களிலும், மனதிலும் மட்டுமே இருந்து மறையும் கனவாக மாறிவிடும்.
“ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது. ஆனால் அச்சிறு வித்தியாசமே மிகப்பெரிய மாற்றத்தை அவரவருக்குள்
தருகிறது. அந்த சிறு வித்தியாசம் தான் அவரவர்களுக்கு உள்ளே இருக்கும்
எண்ணங்கள்.. நம்
எண்ணங்களே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது”.
நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? இந்த கேள்வியை நம்மில் பலரும் பள்ளி
வயதிலோ, கல்லூரி வயதிலோ நிச்சயம் எதிர்கொண்டு இருப்போம். அந்தந்த நேரத்தில் நாம்
கண்ட காட்சி, ஆளுமை, சிறப்பு பெற்றவர்கள் போன்ற பலரை மனதில் நிறுத்தி அவற்றை நமது
ஆசையாக சொல்லுவோம். இந்த ஆசைகள் பலருக்கு அவ்வப்போது மாறிக்கொண்டே
இருந்திருக்கும். அவைகள் வெறும் ஆசைகள் மட்டுமே.
ஒருவரால் மனதின் அடி ஆழத்தில் கொண்ட ஆசைகள் மேலும் மேலும் வலு
பெறும்போது அதுவே வாழ்வின் குறிக்கோளாக மாறி வெற்றியை தொட வைக்கிறது.
என்னில் நான் கொண்ட ஆசை ஆசிரியப்பணி, ஆனால் அதை என்னுடைய குறிக்கோளாக
மனதில் வைத்தாலும் அந்த குறிக்கோளை நோக்கிய எனது பயணத்தில் சில தொய்வுகளுக்கு
இடம்கொடுத்து, “வாழ்ந்தாக வேண்டும்” என்ற வாழ்க்கைப்போராட்டத்தில் அந்த குறிக்கோளை
கொஞ்சம் ஒத்திவைத்து செயல்பட்டது இன்றைக்கு என் ஆசையான குறிக்கோள் நிறைவேறாமல்
மனதில் நின்று வாட்டுகிறது..
ஆக குறிக்கோள் என்பது அதை அடையும் வரை போராடும் எண்ணத்தோடு இருக்க
வேண்டும். பலரும் இப்படித்தான் ஆசைக்கும் குறிக்கோளுக்கும் இடையில் உள்ள நூலிழை
வேறுபாட்டை சரியாக பகுக்கவும், வரையறுக்கவும் தெரியாமல் தங்கள் குறிக்கோளை
அடையமுடியால் மனதால் துயரப்படுகிறார்கள்.
விண்ணிலே பறக்க வேண்டும் என்ற ஆசையை கொண்ட அப்துல்கலாம் அவர்கள் அந்த
ஆசையை தன்னுடைய குறிக்கோளாக மாற்றி செயல்பட்ட போது தான் விண்ணிலே நேரிடையாக
பறக்கமுடியாத போதிலும் விண்ணை ஆட்சி செய்யும் ஏவுகணைகளை மெருகேற்றும் வெற்றி
நாயகனாக திகழ்ந்தார்.
“ஒருமுறை வந்தால் கனவு. இருமுறை வந்தால் ஆசை. பலமுறை வந்தால் லட்சியம்”
இதுவே திரு. அப்துல்கலாம் அவர்கள் வைரவரிகள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, குறிக்கோள், ஆசை,
நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது. அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு
மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். அந்த கனவை, குறிக்கோளை,
நோக்கத்தை, ஆசையை, எதிர்பார்ப்பை அடைந்துவிட்டார்களா எல்லோருமே? தெரியாது.
ஆனால் ஒன்று மற்றும் பேருண்மை.. நம்மால் முடிக்க முடியாத குறிக்கோள்
என்று எதுவுமில்லை இந்த உலகத்தில். ஆசைகள் அனைத்தையும் அள்ளி முடித்து அவற்றை
வரிசைப்படுத்தி அதை நிறைவேற்றும் பாதையில் நமது பயணத்தை திட்டமிட்டு எடுத்து
வைத்து செல்லும்போது நமது குறிக்கோள் என்பது எட்டிவிடும் தூரம் மட்டுமே..
நாம் எல்லோருமே கடந்த காலத்தில் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் அந்த
தவறுகளை மனதில் கொண்டு ஓரிடத்தில் தேங்கி நிற்க வேண்டாம். நாம் இவ்வுலகில் ஒரு
சிறந்த காரணத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் உள்ளோம், அதனால்
கடந்த காலத்தின் தவறுகளை எண்ணி வருந்திக்கொண்டே இருக்காமல், நமது
எதிர் காலத்தை நிர்ணையிக்கும் சிற்பியாக நம்மை மாற்றிக்கொண்டு சிறப்படையும்
பாதையில் பயணிப்போம்..
நமது நாடு சுதந்திரம் அடைந்த போது படிப்பறிவில்லாத இந்த நாட்டின்
குடிகளைக்கொண்டு என்ன சாதித்து விட முடியும் என்று ஏளனம் கொண்ட பல நாடுகளும்
மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவு நாம் சாத்தித்தது பல. இன்றைக்கு உலகில் ஒரு
தவிர்க்க முடியாத சக்தியாக நமது நாடு எழுந்து நிற்பது நமது நாட்டு மக்களின் இலக்கு
நோக்கிய கடுமையான உழைப்பு மட்டுமே..
என்றைக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமே எண்ணிப் பார்க்கும்
போது, துன்பங்களே அதிகமாக நம் கண்களில் தெரிகிறது.. ஆனால்,
அந்த பிரச்சினைகளின் தீர்வுகளை எண்ணிப் பார்க்கும் போது, நமக்கு
முன்னே விரிந்திருக்கும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் புலப்படும்.
ஆதியிலே இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில், “நம்மால்
முடியுமா?” என்ற கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்காமல் “முடியும்” என்ற கொண்ட
குறிக்கோளின் மேலிருந்த நம்பிக்கையில் எடுத்த கடுமையான முயற்சியில் கரிகாலன்
கண்டது தான் இன்றைக்கும் பலமாக நின்று பலன் தரும் கல்லணை.
நீ கொல்லும் ஆயுதங்கள் கோடிகோடியாய் எங்கள் முன்னே குவிந்தாலும்
நாங்கள் அஞ்சமாட்டோம். இதோ.. உன் முன்னே எந்த ஆயுதமும் இல்லாமல் நம்பிக்கையை,
துணிவை மனதில் கொண்டு நிற்கிறோம். விடுதலை இல்லை வீர மரணம் என்ற தேசப்பிதாவின்
கொள்கைப்பிடிப்பு, அதன் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை, அவர் பின்னால் கொள்கை வெறியோடு
திரண்ட மக்கள் எல்லாம் சேர்ந்து சாதித்தது தான் நமது சுதந்திரம்.
நமது நாட்டின் பசுமைப்புரட்சியும், வெண்மைபுரட்சியும் எப்படி
சாத்தியமானது? முதலில் நமது குறிக்கோள் எது என்று தெளிவான திட்டமிடலோடு மக்களை
அந்த குறிக்கோள் மீது நம்பிக்கையும் ஊக்கமும் பெறும்படி செய்து அதை நோக்கிய
பயணத்தை முடிக்கிவிட்டு அவர்களோடு எல்லோரும் சேர்ந்து பயணித்தது தானே?
“முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்படுகிறது”.
“முடியுமா?” என்ற கேள்வி கொண்டு மலைத்து நிற்பவன் வெறும் கல்லை
மட்டுமே பார்க்க முடியும்.
“இது முடியாதா என்ன?” என்று எதிர்கேள்வி கேட்டு தன்னுடைய முயற்சியை
தொடங்குபவரால் அந்த கல் அழகு சிலையாக, வணங்கும் தெய்வமாக எப்படி வேண்டுமானாலும்
மாறலாம்.
ஆசையும், குறிக்கோளும் மனதின் புரிதலில் மனதோடு வாழும் கனவில்,
தினந்தோறும் நமது எண்ணத்தில் வாழ தொடங்கும்போது வெற்றியாய் நம்மை இன்புற வைக்கும்.
நமது ஆசையின், குறிக்கோளின் பாதையில் எப்போதும் “எதிர்பாராததை
எதிர்பாருங்கள்”, ஏனெனில் எதிர்பாராதவை தான் நமக்கு என்றைக்கும் முட்டுக்கட்டை
போடும் முக்கிய எதிரி.
ஆக அந்த “எதிர்பாராததை” எதிர்பார்த்து நமது லட்சியப் பயணத்தை திடமுடன்
தொடங்கும்போது இடைபடும் இடர்கள் எல்லாம் இடிபடும், உடைபடும், நமது திடம்
வெளிப்படும், பாதை வலுப்படும், குறிக்கோள் எட்டப்படும்.
பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார், “நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால், நீ
எண்ணியது உன்னை வந்து சேரும்” என்று..
“நமக்கு நிச்சய வெற்றி தருவது எப்போதாவது ஒருமுறை எடுக்கும் முயற்சி
அல்ல, நாம் எடுக்கும் சீரான மற்றும் ஒழுங்கான தொடர் முயற்சிகளே நமது குணத்தையும்
வாழ்வையும் செதுக்குகிறது”
லட்சியத்தின் வேர்கள் நமது மனதில் ஆழத்திற்கு செல்லும்போதே வெற்றியின்
ஒரு பகுதி சாத்தியமாகி விடுகிறது.
என்றைக்குமே மகிழ்ச்சிக்கான காரணம் வெற்றியாக இருப்பதில்லை. ஆனால்
நம்முடைய வெற்றிக்கு காரணம் நாம் விரும்பிய செயலை மகிழ்ச்சியோடு செய்வதே ஆகும். ஒவ்வொருவரும்
தாம் விரும்பிய செயலை செய்யும்போது, வெற்றி வீரன் ஆகிறோம்.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக