வெள்ளி, 30 செப்டம்பர், 2016

40. விடுதலும் பெறுதலும்

வலைவீசும் எண்ணங்கள்

40. விடுதலும் பெறுதலும்

சிலதை விடுவதன் மூலம் மனஅமைதியும் சாந்தமும் பெரும் நாம், சிலதை பெறுவதன் மூலம் மகிழ்ச்சியும், இன்பமும் அடைகிறோம். எல்லா நேரங்களிலும் எல்லா பெறுதலும் நமக்கு இனிமையாக இருப்பதில்லை. அதே போலவே விடுதல் என்பது எல்லா நிலையிலும் நம்மை பிரச்சனைகளில் இருந்து விடுவித்து விடுவதும் இல்லை.

நிலத்தோடு இருக்கும் தொடர்பு ஓடும் நதிக்கு எங்கும் எப்போதும் அறுந்து போவதில்லை. அதே நேரத்தில் அந்த தொடர்பு மட்டுமே நித்தியம் என்று நதியும் எங்கேயும் தேங்கி விடுவதில்லை. ஓடிக்கொண்டே இருப்பது நதியின் இயல்பு. வாழ்க்கையில் எல்லை காண இன்பத்தின் பெருவெளியை அடைய ஓடக்கொண்டிருப்பது மனிதத்தின் இயல்பு..

வாழ்வின் சூழலில் ஒருவன் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், சொந்த பந்தங்களை விட்டு விலகி தனித்திருந்து இறைவனை அடையும் பாதையில் பயணிப்பதை விட பெரிய சாதனை வாழ்க்கையின் எல்லா பந்தங்களிலும் இணைந்து வாழ்ந்துகொண்டே இறைவனை நோக்கி நடக்கும் பயணத்தில் கிடைப்பது ஆகும்..

இப்படி வாழ்த்த மகான்களில் ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி, லாஹிரி மகாசாயர் ஆகியோர்கள் நல்ல உதாரணம். இவர்கள் இல்லறத்தில் இருந்தாலும் இல்லறத்தின் சுமைகளோடு துறவறத்தின் கடமைகளையும் நிறைவேற்றி நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார்கள்.

உண்மையில் துறவறத்தை விட இல்லறத்தில் துறவறம் என்பது மிகவும் சிறந்த மனம் கொண்ட மனிதர்களுக்கே சாத்தியம். இந்த வாழ்க்கையில் நாம் விடுதலும் பெறுதலும் மிக மிக அதிகம்.

ஒரு சாதாரண மனிதராக நாம் விடாமல் பற்றிக்கொண்டு இருப்பது ஆங்காரம். உண்மையில் ஆங்காரம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. எல்லோருக்கும் எதோ ஒரு உருவத்தில் ஆங்காரம் மனதில் குடிகொண்டு இருக்கிறது. அந்த ஆங்காரம் இருக்கும் வரை மனதிற்கு  நிம்மதி எனபது கடினமானது. அதை விடும்போது கிடைக்கும் மனஅமைதியை அனுபவித்து பார்க்க மிகவும் சுகமாக இருக்கும்.

இறைச்சியை கொந்திக்கொண்டு பறக்கும் காகத்தை எல்லா காகமும் துரத்தும் சூழலில் அந்த இறைச்சியை விட்டு விட துரத்தும் மற்ற பறவைகளின் கவனம் திசை திரும்பி விடும். பற்றுதலை விட்ட காகம் சுதந்திரமாய் வலம் வரும். ஆங்காரம் என்ற இறைச்சியை நம்மால் விட முடிந்தால் நாமும் அந்த காகத்தை போல சுதந்திரத்தை உணர முடியும்.

இந்த ஆங்காரம் என்பதை பிறரின் கவனத்தை நம் மீது திருப்பும் ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். இளவயதில் நாம் செய்யும் சாகச விளையாட்டுக்கள் எல்லாம் எதற்காக? மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும். அந்த இடத்தில் நாமே சிறந்தவர்களாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனதின் உந்துதலாய் மட்டுமே இருக்கும். அந்த உந்துதலை தருவது ஆங்காரம்.

இந்த ஆங்காரம் கொண்ட மனதுடன் நாம் யாரையும் இளக்காரமாக பார்க்க வேண்டாம். எல்லோரிடமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏதாவது ஒரு நல்ல காரியமாவது இருக்கும்.

சில நிலைகளில் இந்த ஆங்காரம் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பதால் கெட்டவையும் நல்லவைகளாக தெரிய வைக்கும். அதே நேரத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாத நல்ல செயல்களும் கெட்டவையாக, மோசமானவையாக தோற்றமளிக்கும் அல்லது கருதப்படும்.

இந்த ஆங்காரத்தின் வேர் பொறாமை, கோபம், தான் என்ற அகந்தை போன்றவையாக இருக்கும். இந்த வேர்களை வெட்டிவிட மனிதம் அங்கே செழிக்கும். ஆனால் இந்த வேர்களை எளிதில் வெட்டிவிட முடியாத அளவு ஆழமாக மனித மனதில் ஊன்றப்பட்டு செழித்து வளர்ந்துள்ளது.

மனதில் ஆங்காரம் பெருகும்போது அனைத்தும் நம்மை விட்டு போய்விடும். மனதில் ஆங்காரம் விலகும்போது அனைத்தும் நம்மை நாடி ஓடி வரும். ஆங்காரம் கட்டுக்குள் வைத்திருந்தால் இயல்பான வாழ்க்கையை இன்றைய நாளில் வாழ முடியும்..

உண்மையில் இன்றைக்கு நமது ஆங்காரத்தை காப்பாற்றுவதற்காக பல உறவுகளை பலி கொடுக்கிறோம். எதை விட்டுவிட்டு எதை பெற வேண்டுமோ அதை செய்யாமல் நாம் பெற வேண்டியதை விட்டு விட்டு, விட வேண்டியதை பற்றிக்கொண்டு அதுதான் வாழ்க்கை என்று புரியாத ஒரு பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

காகம் விட்டுவிட்ட இறைச்சித் துண்டாய் ஆங்காரம் என்ற இறைச்சியை விட்டுவிட சுதந்திரம் என்பதை பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளத்தில் தான் என்ற எண்ணம் பெருக பெருக கோபம், ஆங்காரம் மேலும் மேலும் பெருகுகிறது. அந்த நிலையில் நாம் நேசிப்பவரை பிரியும் சூழல் உண்டானால் அவர்களை சபிக்கும் மனநிலையில் தான் மனித மனம் இருக்கிறது. ஆனால் விட்டொழித்த ஆகங்காரம் அவர்களை அன்பாய் அரவணைத்து வாழ்த்த வைக்கும்.

அறிவு என்பது எல்லோரையும் அரவணைத்து எல்லோரிடமும் கற்கும் மனம் கொண்டது. ஆங்காரம் என்பது அறிவின் முனையை மழுங்கடித்து எல்லோரையும் குறைமட்டுமே காண வைக்கும். அந்த நிலையில் தன்னுடைய குறைகளை அறிய மனிதன் மறக்கிறான். எவன் ஒருவன் தன்னுடைய குறைகளை சரிசெய்ய முடியாமல் மனஇருளில் மூழ்கி இருக்கிறானோ அவனின் செய்கைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் மற்றவர்களிடம் வெறுப்பை மட்டுமே உருவாக்கும்.

நாம் வாழ்க்கையில் எல்லோரையும் அரவணைத்து வாழும்போது கிடைக்கும் இன்பம் இந்த உலகத்தில் கோடிகோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது. வெறுப்பால் ஒருவரை விலக்குவது பெரிய காரியமே அல்ல.. அன்பால் அணைப்பது தான் உண்மையான சிறப்பு.

நாம் யாரையும் தவிர்க்க முற்பட வேண்டாம். அப்படி தவிர்க்கும் முன் ஒரு மணித்துளி நேரம் நம்மை பற்றி சிந்திப்போம். நம்மை பிறர் இந்த வகையில் தவிர்த்தால் தாங்க முடியுமா என்று? பிறகு செயல்படுவோம்.

உலகத்தில் நம்மை விட சிறந்தவர் நமக்கு எதிரில் இருக்கிறவர் என்ற எண்ணத்துடன் நமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள நாம் கற்பதும், பெறுவதும், விடுவதும் அதிகம் இருக்கும். எல்லோரையும் ஒரு புன்னகையில் கடந்து செல்லும் மனம் இருக்குமானால் எதிரிகளின் எண்ணிக்கை நமக்கு கூடாது.

அப்படியும் நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகி செல்லுவோம். விலகி செல்வதால் நமக்கு என்ன இழப்பு வரப்போகிறது? அவர்களை நம்பியா நாம் இந்த உலகில் பிறந்து, வளர்ந்து வாழ்கிறோம். இல்லையே.. வாழ்க்கை பெரும்பயணத்தில் அவர்களும் ஒரு பயணியே.. வழியில் சந்தித்தோம், இருவரின் பயணமும் இரு வேறு திசைகள் என்ற போது நமக்கு என்ன இழப்பு..?

வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியும் நம்மை வாழவைத்து பார்ப்பதில் தான் சிறப்பு காண்கிறது. யாரோ எவரோ, எங்கோ பிறக்கிறோம், எதோ ஒரு வகையில் இணைகிறோம், பயணிக்கிறோம். வாழ்க்கையின் பயணப்பாதை கொஞ்ச நேரமே. அதில் விட வேண்டியதை விட்டும், பெறவேண்டியதை பெற்றும் வாழ்க்கையை இனியதாக்கி வாழ்ந்து பார்ப்போமே..

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: