வெள்ளி, 16 செப்டம்பர், 2016

38. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தது போதுமே!

வலைவீசும் எண்ணங்கள்

38. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தது போதுமே!

இந்த உலகின் உயிர்கள் எல்லாமே தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையில் அதற்கென்று இருக்கும் உணர்ச்சிகளோடு வாழ்கின்றன. அதிலும் மனித இனமாகிய நாம் ரொம்பவே உணர்ச்சிப்பிழம்பானவர்கள், அதே நேரத்தில் அதை அடக்கியாளும் மனோபலத்தையும் கொண்டர்வர்கள்.

இந்த உணர்ச்சிகளின் கூறுகள் தான் மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. மகிழ்ச்சியில் நாம் சிரிக்கும் உணர்வு வேறு எந்த விலங்களுக்கும் இருப்பது அரிதிலும் அரிது. இந்த உணர்ச்சிகளே ஒருவரை மற்றொருவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

உணர்ச்சி வசப்படாதவன் மனிதனில்லை. அந்த உணர்ச்சியை கட்டுக்குள்ளே அடக்கி வாழத்தெரிந்தவர்கள் சிறந்த மனிதராக இருக்கிறார்கள். உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள் வாழ்வின் துண்பகள் பலவற்றை ருசிக்கிறார்கள்.

பலநேரங்களில் ஒரு மனிதனை முழுக்க முழுக்க சீரழிப்பது இந்த உணர்ச்சிகளே..

மெல்ல எழும் அலைகள் வேகமாக பாய்ந்து கரையை மோதிய நிலையில் தன்னிலை உணர்ந்து பணிந்து பின்வாங்குவது போல உணர்ச்சிகரமான நிலையில் மனதில் கொஞ்சம் பொறுமையும், நிதானமும் கொள்ளவேண்டும்.

உணர்ச்சிப்பெருக்கில் உலகையே மறப்பவன் தன்னுடைய சுயம் தொலைத்து யாரும் விரும்பப்படாதவராக ஒதுக்கப்படுகிறார்.

வாழ்க்கையில் உண்மை பேசுவதும், நேர்மையாக இருப்பதும் சிறந்தது, அதே நேரத்தில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனதில்பட்டது எல்லாம் சரி என்று உரைப்பதும், “தான்” தான் சரி என்று இருப்பதும் எல்லா கால நேரத்துக்கும் ஒவ்வாதது.

நாம் பலகாரியங்கள் பற்றி பேசினாலும், சுற்றி சுற்றி என்று தொட்டாலும் அங்கே மனம் என்ற அறிவின் வாசல் வந்து நிற்கிறது. இந்த மனம் கெட்டுவிட்டால் குணமும் கெட்டு விடுகிறது. குணம் கெட்டு விட்டால் வாழ்வே கெட்டு விடும். இந்த மனதை எளிதில் வீழ்ந்தக்கூடியது உணர்ச்சிகள்.

மனம் கெட்டுப் போவதற்கு காரணமாக உள்ள உணர்வுகள் பதிமூன்று என்று நம் முன்னோர்களால் வரிசைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. அவை ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்பவையாகும்.

இது எல்லாமே மனிதனின் இயல்பான குணங்களாக இருந்தாலும் எல்லா உணர்ச்சிகளையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் அடக்கி வாழ வேண்டும். அடக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சிகளுக்கு அடிமையானால் நாக்கு பொங்கி எழும், வார்த்தைகள் தடித்து விழும், வாதங்கள் திசைமாறும், முடிவில் நடப்பது எல்லாமே எதிர்பாராததாக இருக்கும்.

ஒரு மனிதன் தனது பிறப்பால் இல்லாமல் தனது செயல்களின் மூலமே சிறந்தவனாகிறான்!. அந்த செயல்கள் அவனது நிதானமாக, பொறுமையான, மென்மையான, அன்பான அணுகுமுறையில் இருக்கிறது.

உலகில் மிகவும் சிறந்தவர்கள் என்று புகழப்படும் அனைவரும் உணர்ச்சிக்கு அடிமையாகாத அல்லது உணர்ச்சிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கத்தெரிந்து நிதானத்தை கைகொண்ட மனிதர்களாகவே இருப்பார்கள்.

உணர்ந்த நிலைக்கு சென்ற பிறகு உணர்ச்சியின் பிடியில் சிக்கி சிந்தனை மறந்து, நிதானம் இழந்து, செய்யும் செயல் மறந்து வீழ்ந்தவர்கள் பலர்.

“கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே!  மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே!  அழுகையில் ஒருவரையும் நம்பாதே!” என்பது நாம் எல்லோரும் அறிந்த புகழ்மிக்க வரிகள். எல்லாமே உணர்வுகளோடு தொடர்புடையது. இப்படி உணர்ச்சிகரமான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் தவறானவையாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்த உலகம் ஒருவனை அழிக்க வேண்டும் என்று நினைத்ததும் செய்யும் முதல் வேலை அவனின் உணர்ச்சிகளை தூண்டி உணர்ச்சிப்பெருக்கில் ஆட்பட வைப்பது ஆகும். அதிலே சிக்குபவன் எதிரிக்கு நல்ல இரையாக சிக்கிக்கொள்கிறான்.

இந்த உலகில் நம்மை சுற்றி மாறும் உணர்வு சூழல்கள் என்பது சுழன்றடிக்கும் சூறாவளி போன்றது. இந்த உணர்வு சூழலில் கோபம் என்ற எரிநெருப்பில் சிக்குபவர்கள் மீளாத்துயரத்தில் ஆட்படுவது உறுதி.

அன்பென்ற உணர்வுக்கு அடிமையாகும் போது நம்மை பலவீனமாக்கும் ஆயுதமாக சிலர் அதை கையாளலாம். ஆனால் இதில் நாம் ஏமாற்றப்படலாமே ஒழிய அழிந்துவிடப் போவதில்லை. இதனால் பெறும் காயம் மனதை வாட்டும் ஆனால் அந்த அன்பே நல்ல மருந்தாக இருக்கும்.

ஆத்திரம் என்ற உணர்வு கோபத்தின் ஊற்றுக்கண்.. ஆத்திரம் கூடக்கூட கோபமும் கூடும். துடிக்கின்ற தேகத்தில் எல்லாமே உணர்ச்சிகளின் கூடாரமாய் ஒன்று சேர யோசனையும், சிந்தனையும் ஓடி ஒளிந்து கொள்ளும். சிந்தனை இல்லாத இடத்தில் செயல்களும், விளைவுகளும் விபரீதமாகவே இருக்கும்.

நிதானம் என்ற உணர்வு இருளடைந்த பாதையில் நமக்கு கிடைக்கும் ஒளிக்கீற்று போல நமக்கு வழிகாட்டும் பேரொளி ஆகும். நிதானம் தவறுவது ஒளியை இழந்து இருளின் செய்யும் பயணம். பாதையும் தெரியாது, சேருமிடமும் புரியாது.

இந்த உணர்ச்சிகளில் ஆங்காரமும், இறுமாப்பும் கூட வேண்டாத விருந்தாளிகளே. இவர்கள் இருவரும் இருக்கும் இடத்தில் பணிவு என்ற பண்பாளர் காணமல் போய் அறிவு என்ற உண்மைக்காவலனும் விட்டு ஓடிவிட எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களுமான கோபமும், அவரசமும் ஆத்திரத்தோடு சேர்ந்து கோட்டை ஏறி கொடிபிடிக்க அது கொண்டவரையே வெட்டிச்சாய்க்கும் கோடாரிக்காம்பாக மாறிவிடும்.

நாம் எல்லோருக்குமே உணர்ச்சிவசப்படுதல் என்பது இயல்பான நிகழ்வு தான். அந்த உணர்வுகள் இல்லை என்றால் நாமெல்லாம் உயிரில்லாத வெறும் பிண்டம் மட்டுமே. அதே நேரத்தில் அந்த உணர்ச்சிக்கு நாம் அடிமையாகக்கூடாது என்பது தான் முக்கியம்.

இன்றைக்கு பல வழக்குகளில் குற்றவாளி கூண்டில் நிற்பவர்கள் பலரும் உணர்ச்சிக்கு அடிமையாகி நிதானம் இழந்து கோபப்பட்டு கணநேரத்தில் செய்த செயல்களே காரணமாக இருக்கும்.

எல்லாமே முடிந்து பின்னர் நிதானமாக யோசிப்பதில் ஒரு பயனும் இல்லை.

நாம் உணர்ச்சியின் பிடியில் சிக்காமல் வாழ ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. கொஞ்சமே நிதானத்தோடும், யோசனையோடு கூடிய கட்டுப்பாடும் கொண்ட மனிதராக இருப்பதே போதும்..

வல்லவனும், அறிவில் சிறந்தவனும் கர்வம் கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்த கர்வம் “தான்” என்ற அகந்தையாக கூடு மாறும்போதுதான் பிரச்சனைகளின் வேர்கள் ஊன்றி பற்றிக்கொள்கிறது.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: