“யாதும் ஊரே.. யாவரும் கேளிர்” என்று உலகுக்கு ஓங்கி உறைந்த நாம் தான்
இன்றைக்கு உறவுகள் மேம்பட என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறோம்.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
-- செம்புலப் பெயல்நீரார் அவர்களின் குறுந்தொகை பாடலில் யாரென்று தெரியாத
இரண்டு உள்ளங்கள் செம்மண்ணில் கலந்த நீரைப்போல அன்பில் கலந்தது வாழ்ந்ததை
அறிகிறோம்.
“உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.:
என்ற இந்த நாளைய கங்கை அமரன் அவர்களின் மிக எளிமையான வரிகளும் உறவுகள்
அவற்றிக்கிடையே இருக்கும் உணர்வுகள், உரசல்கள் பற்றி மிக அழகாக கூறுகிறது.
உறவுகள் மலர்வதே அன்பின் அடிப்பையிலும், நம்பிக்கையின் பேரிலும் தான்.
அந்த உறவுகள் எல்லாமே முடிவிலாத தொடர்கதை. இந்த உறவுகளுக்குள் இடையே உணர்ச்சி
வசப்படுதலால் வரும் பிணக்குகள் என்பது சிறுகதை போல..
உறவுகள் மேம்பட என்ன செய்யலாம்.. முதலில் உறவுகளை, அவர்களின் குணங்களை
புரிந்துகொண்டாலே பல பிரச்சனைகள் எழுவதற்கு முன்பே சீர்படுத்தி விட முடியும்.
நீங்கள் உறவுகளுடன் மகிழ்ந்து வாழ விருப்பப்பட்டால் முதலில்
விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். தவறுகள் நேரும் பட்சத்தில் முதலில் மன்னிப்பு
கோருபவர் நீங்களாக இருங்கள்.
உறவுகள் பிரியாமல் இருக்க சில நேரங்களில் மௌனம் சிறந்த மருந்து. ஆனால்
அந்த மௌனமே பல நேரங்களில் உறவுகளின் விரிசலை பெரிதாக்கக்கூடும். ஒவ்வொரு
வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடிக்காமல் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு புன்னகையில் நாம் இழக்கக்கூடியது ஏதுமில்லை, ஆனால் அந்த ஒரு
சிநேகப்புன்னகை பல உறவுகளை நமக்கு பெற்றுத்தரும்..
ஒருவருக்கு ஒருவர் உபயோகமாக இல்லை என்றாலும் யாருக்கும் உபத்திரவம்
தரும் நபராக இருக்க வேண்டாம்.
பணிந்து செல்வது என்பது கோழைத்தனம் அல்ல. அது தான் உறவுகளை பலப்படுத்தும்
வீரமான செயல்.
கூடுமானவரை பிரச்சனைகள் எழும்போதே மனம் விட்டு பேசிக்கொண்டால் அந்த
பிரச்சனை அதோடு முடிந்து விடும். பேசாமல் மூன்றாம் நபர் தலையிட என்றைக்கும்
அனுமதிக்க வேண்டாம்.
உறவுகள் அதில் எழும் பிரச்சனைகள் பற்றி எல்லோரிடமும் கருத்து கேளுங்கள்,ஆனால்
தீர்க்கமான முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். இழந்து பெறுவது தான் உறவு.
கொடுத்துப்பெறுவது தான் அன்பு.
நாம் அன்பை புன்னகையோடு கொடுப்போம்.. உறவுகளை பெறுவோம்.
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக