வலைவீசும் எண்ணங்கள்
சிதறிக்கிடக்கும்
எண்ணங்களால் ஒரு கருத்தை உருவாக்க முடியாது. அவற்றை ஒன்றிணைத்து சொல்லும்போது ஒரு
சிறந்த கருத்து உருவாகி ஒரு மாற்றத்திற்கு விதையாகிறது.
நமது நாட்டின் மக்களின்
மனதில் எழுந்த சுதந்திர எண்ணமும் பலரின் எண்ணங்களில் சிதறிக்கிடந்த கருத்துக்களின்
ஒருங்கிணைப்பு தான். சிதறிக்கிடக்கும் அனைத்தையும் அழகாக அதனதன் இடத்தில்
ஒழுங்குபடுத்தி வைப்பதன் மூலம் நமது வேலைகளும் எளிதாகிறது. வாருங்கள் இந்த வாரம் இதுபற்றி
வ்லைவீசலாம்.
“ஒழுங்குபடுத்தல் அல்லது
ஒழுங்கமைத்தல் என்பது ஒரு நோக்கை முன்வைத்து பொருட்களை, வளங்களை
ஒரு ஒழுங்கில் அமைத்து அல்லது அடுக்கி அந்த நோக்கை திறனாக செய்ய ஏதுவாக்கும்
செயற்பாடாகும். எல்லாதரபட்ட வேலைகளுக்கும் ஒழுங்கமைத்தல் அவசியம். வீட்டில் எல்லா
பொருட்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கி வைப்பது, பயணத்தை ஏற்பாடு செய்வது, நிகழ்ச்சியை
ஒழுங்குசெய்வது, பொருளை வடிவமைப்பது, நிறுவனத்தின் நிர்வாகம் என எல்லா நிலைகளிலும்
ஒழுங்கமைப்பு தேவை” என்ற கருத்தின் துணைகொண்டு தொடரலாம்.
ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியின்
அறை எப்படி இருக்கும். மிகச்சிறந்த விருந்து பரிமாறல் என்பது எப்படி இருக்கும்?
விமான பயணத்தில் வழங்கும் உணவு பொட்டலம் எப்படி இருக்கும்.. அட.. அதை விடுங்கள்.. நாம் வைத்திருக்கும் பர்ஸ் எப்படி
வடிவமைக்கப்பட்டு இருக்கிறது..?
பார்வையற்ற மாற்றுத்திறனாளியின்
அறையில் எல்லாபொருட்களுக்கும் இடம் ஒதுக்கி அதுஅது அதனதன் இடத்தில் எப்போதும்
மாற்றி வைக்காமல் ஒரே முறையில் வைக்கப்படும். இதன் மூலம் பார்வையற்றவர் எளிதாக
தனது வேலைகளை செய்ய முடிகிறது.
சிறந்த விருந்து
பரிமாற்றம் என்பது இனிப்பு, உப்பு, மற்ற பதார்த்தங்கள், சோறு, பின்னர் குழம்பு,
ரசம், மோர் இப்படி வரிசைக்கிரமமாக இருக்கும்.
விமானத்தில்
வழங்கப்படும் உணவுப்பொட்டலத்தில் இடம் சிறியதாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் இடம்
ஒதுக்கி நேர்த்தியாக கட்டப்பட்டது இருக்கும்..
நமது பர்ஸில் வங்கி
அட்டைகளுக்கு (Credit & Debit Card) ஓரிடம், அறிமுக அட்டைக்கு (Business card) பணத்தாள்களை (currency) வைக்க ஓரிடம், சில்லறைகளை (coins) வைக்க
ஓரிடம், சிறிய புகைப்படம் (photo) வைக்க ஓரிடம் என்று ஒரு ஒழுங்கு முறையுடன்
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்
இது தான் அடிப்படை.
ஒரு கட்டிட வடிவமைப்பாளரிடம் வீடு கட்டுவதற்கான இடத்தின் அளவை கொடுத்து நமது
தேவைகளை சொன்னால் எப்படி மிக நேர்த்தியாக ஒவ்வொரு தேவைக்கும் எங்கு எப்படி இடம்
ஒதுக்கவேண்டும் என்று திட்டமிட்டு அழகுற வடிவமைத்துத் தருகிறார். இதுதான் அவர்களின்
திறமையை காட்டும் கலை. வெளிப்புற அழகு ஒருபுறமிருக்க, இருக்கும் குறைந்த இடத்தில்
வீட்டுத்தேவைகளை வைக்க இடங்களை ஒதுக்குவது தான் சிறப்பான அம்சம்.
இப்போது நாம் வீட்டில்
சாவிகளை மட்டும் வைக்க ஓரிடம் ஒதுக்கிவிட்டு அங்கு மட்டுமே சாவிகளை வைத்தால் எந்த
அவரசத்திலும் பதற்றம் ஏற்படாது. இது போலவே எல்லாவற்றிக்கும் ஓரிடம், அனைத்தும்
அதனதன் இடத்தில் என்று நாம் திட்டமிட்டு பழகி அப்படியே செய்ய நமக்கு எந்த
நிலையிலும் பதற்றமோ, பயமோ இருக்காது.
இப்படி நமது வாழ்வில்
உள்ள இடைவெளிகளை நாம் தீர்மானித்து அதை திறம்பட ஒழுங்குபடுத்தி செயல்படுவது என்பது
பொருட்களுக்கு மற்றுமின்றி நமது நேரத்திற்கும் செயப்படுத்தலாம்.
உடற்பயிற்சிக்கு ஒரு
நேரம், படிக்க, விளையாட, நண்பர்களுடன் செலவழிக்க, குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான
நேரத்தை பகிர்ந்துகொள்ள, எழுந்திருக்க, தூங்க இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரம்
ஒதுக்கி அதுஅது அதனதன் நேரத்தில் என செயல்படும்போது மனம் மிகத்தெளிவாக இருக்கும்.
அப்போது நமது வாழ்வின் முன்னேற்றம் பற்றி திட்டமிடலும் மிக எளிதாகும்.
சரி இதையெல்லாம்
நம்மால் செயல்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தால்?? நிச்சயம் முடியும் என்பதே
பதிலாக இருக்கும்.
இப்படி
ஒழுங்கமைத்துக்கொள்ள நமக்கு தேவையானது எல்லாவற்றையும் வரையறுக்கும் திறன். பின்னர்
நாம் ஏற்படுத்தும் வரையறைக்கு ஏற்ப நம்மைபொருத்திக்கொள்ளும் மனவுறுதி. (ஆமாங்க..
புத்தாண்டு சபதம் போல இருக்கக்கூடாது). இப்படி ஒரு ஒழுங்குமுறையுடன் இருக்கும்போது
நாம் நமது சொந்த வடிவமைப்பாளர் ஆகிறோம்.
“என்னோட வாழ்க்கைல
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கினதுடா... !!!” என்ன எங்கயோ கேட்டா மாதிரி இருக்கா. இது போலவே
நாமும் நம்முடைய வாழ்கையை திட்டமிட்டு செதுக்க முடியும்.
எப்போதுமே இந்த உலகம்
நமது மனநிலைக்கு தகுந்தவாறு தான் காட்சியளிக்கிறது. என்றைக்கும் நமது எண்ணங்களே
உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.
எண்ணியார் எண்ண
மிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். – என்பது திருக்குறள்
துன்னியார் துன்னிச் செயின். – என்பது திருக்குறள்
ஒருவனது செயற்திட்டத்தை
வெல்வதற்கான கருத்தெண்ணம் உடையவர்கள், அவன் தக்க இடத்தைச் சார்ந்திருந்து விரைந்து கருமமாற்றும்போது
அக் கருத்தெண்ணத்தையே கைவிட்டுவிட வேண்டும்.
ஒரு செயலின் வெற்றி
தோல்விகளை நிர்ணயிக்கும் காலத்தைப்போல், இன்னொரு முக்கியமான அம்சம் இடம். காலம் அல்லது
பருவம் எனப்படுகிற அம்சம் அதிகமாகவும் காத்திருத்தலோடு தொடர்புடையதாக இருக்கிறது.
இடம் அல்லது தளம் எனப்படுகிற இந்த அம்சமோ பெரும்பாலும் கற்றறிவு பட்டறிவுகள்
சார்ந்த நிலைப்பாட்டில் வலிமையைப் பிரயோகித்தலின் தளமான கருத்தாகிறது.
நாம் என்றைக்கும் குறிக்கோளை
மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின்
ரகசியமே அடங்கி கிடக்கிறது
“நாம் மட்டும்
சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில்
அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட
முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும்
மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்” என்ற அன்னை சாரதாதேவி
அவர்களின் வார்த்தைகளை மனதில் கொண்டு வாழ்வில் சிறப்படைவோம்.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக