வெள்ளி, 8 ஏப்ரல், 2016

15. ஆன்மிகம்

வலைவீசும் எண்ணங்கள்

15. ஆன்மிகம்

எல்லோரும் ஏதாவது ஒருவழியில் அமைதி தேடி  அலைகிறோம். எங்கே  நிம்மதி  கிடைக்கும் என்று நமது மனம் அனுதினமும் அலைகிறது. இந்த அமைதியை அடையும் வழியை சொல்லும் ஆன்மிகம் பற்றி இந்தவாரம் வலைவீசுவோம்..

முதலில் ஆன்மிகம் என்பது என்ன..? சொல்லிணக்கப்படி “ஆன்மிகம் என்றால் ஆன்மாவை சார்ந்தது, மாற்றாக ஸ்தூல(Physical) தன்மையையோ அல்லது ஒரு பொருளையோ சார்ந்தது அல்ல.

ஆன்மிகம் என்பது கடவுளை தொடர்பு படுத்தும் அனைத்து மதத்திற்கும் பொதுவான கருத்து. மதங்கள் தாங்கள் சார்ந்த கடவுளை முன்னிறுத்துகிறது ஆனால் ஆன்மிகம் என்றைக்கும் மதத்தை முன்னிருத்துவதில்லை. அது மனதையும், அன்பையும், கடவுளோடு இணைத்து நம்மை பயணிக்க வைக்கிறது.

நாம் சிறந்த ஆன்மிகவாதியாக இருக்கும் நிலையில் ஒரு மதவாதியாகவும் இருக்கலாம், ஆனால் ஒரு மதவாதி ஆன்மிகவாதியாக இருக்க வேண்டும் என்று நம்மால் எதிர்பார்க்கமுடியாது.

அப்படி என்றால் மதத்தை, கடவுளை விரும்பாத நாத்திகருக்கு ஆன்மிகம் இல்லையா என்ற கேள்வி எழலாம். மதமற்ற, மதச்சார்பற்ற மக்களுக்கு  ஆன்மிகம் என்பது மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு மனிதம் சார்ந்த சொலாக உணருகிறார்கள். அவர்கள் மனித குணங்களான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை மன்னிப்பு, பொறுப்பு, மற்றவர்களிடம்அக்கறை கொள்ளுதல் போன்ற நீதிநெறிகளை வலியுறுத்துகிறார்கள்.

ஆன்மிகம் என்பது எல்லாவற்றையும் துறந்துவிடுவது இல்லை. நாம் போகும் பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான். மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணையே இறை நிலை தான். இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம். போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது. அவனை ஆத்திகவாதி என்கிறோம்.

அதாவது அவர்கள் பார்வையில் ஆன்மிகம் என்பது வாழ்வியல் நோக்கம் மற்றும்மனித அனுபவம் போன்ற நம் கண் முன்னால் தெரிகின்ற நிலையான பொருட்களால் ஆன உலகத்தை சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு அமானுட சக்தியையோ அல்லது தெய்வீக சக்தியையோ நம்பிக்கைவைத்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அளவிலேயே இருக்கிறது.

சரி.. ஆன்மிகம் என்பதன் அடிப்படை வரையறை என்று எதை சொல்லுவது? நம் கண் முன்னால் தெரிகின்ற இந்த நிலையான பொருட்களால் ஆன உலகத்தை அறிந்து கொள்ளும் ஒருவரின் கூர்ந்து அறியும் திறனின் தரமாகும். எப்படி சாப்பிடுவது, அருந்துவது, உடல் வசதி, பாலுணர்வு போன்றவை உடலின் செயல்பாடுகளாக இருக்கிரததோ அதேபோல அன்பு, அறம், நேர்மை, இரக்கம், கருணை போன்றவை மனம்  சார்ந்த ஆன்மாவின் செயல்களாகும். இந்த குணதிசயங்களை நம் அறிவினால் நேரடியாக உணரமுடியாது. ஆனால் அவைகளின் மிகவலிமைவாய்ந்த தாக்கங்களை, கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும் .

நாம் அனைவரும் நாள் தவறாமல் கோவிலுக்கு சொல்லுவதாலோ, கடவுளை தியாநிப்பதாலோ, கடவுளின் அடையாளங்களை தரிப்பதாலோ ஆன்மிகவாதி ஆகா முடியாது.

நாம் நமது கடமைகளை மிகச்சரியாக செய்தாலே ஆன்மீகவாதி தான். எப்படி  கீதையில் “கடமையை செய், பலனை எதிர்பார்க்கதே என்று பரமாத்மா சொல்லியுல்லாரோ அதுதான் ஆன்மிகத்தின் நுழைவாயில்.

உங்கள் கணவரை/மனைவியை ஒருவரை ஒருவர் உண்மையுடன் நேசியுங்கள் உங்கள் சகோதரர் சகோதரியை நேசியுங்கள் யாருடனும் தேவையில்லாமல் விவாதம் பண்ணாமல் அமைதியை உணருங்கள் கோபப் படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு  தேவையான விசயத்தை சரியான நேரத்தில் கொடுத்து பழகுங்கள்.

ஒரு உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். நமக்கு மேலானவரை பொறுத்தவரை அவரின் ஆசீர்வாதம் நமக்கு தாமதப்படலாம்., ஆனால் என்றைக்கும் அது மறுக்கப்படுவதில்லை.

ஒரு கருத்தையோ, பொருளையோ கடவுளை மையமாகக்கொண்டு தேடும்போது நிம்மதி என்பது மெல்ல மெல்ல நம்மை  தேடிவரும். அதே காரியத்தை நம்மை மட்டுமே முன்வைத்து “தான் என்ற எண்ணத்துடன் அணுகும்போது சிலநேரங்களில் நெருங்கி வந்தாலும் பலநேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

எப்படி ஒவ்வொரு விதையிலும் ஒரு காட்டை உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளதோ அதேபோலவே நம்முடைய ஒவ்வொரு கணத்திலும் நாம் ஒரு சிறந்த மனிதனாககூடிய சாத்தியக்கூறுகள் நிச்சயம் இருக்கிறது.

ஒருவரின் கணநேர எண்ணங்களில் எழும் சிறு பொறியே மிகப்பெரிய கருத்துருவாக மலர்கிறது. அந்த கருத்துருவே ஒரு சமூகமாக மலர்கிறது. நமது ஒவ்வொரு மணித்துளிகளும் ஒரு கணத்தின் பரிமாணத்தை தன்னில் அடக்கிக்கொண்டுள்ளது. எப்படி கண்ணுக்கு புலப்படாத அணுவின் உள்ளே உறங்கும் சக்தி ஒரு கணத்தில் தூண்டப்பட்டு பெரும் வெடிப்பாக மாறி மாபெரும் சக்தி வெளிப்படுகிறதோ அதேபோல நமது எண்ணங்கள் இந்த உலகில் மாபெரும் மாற்றங்களை கொண்டுவரும்.

வெற்றி பெரிய பெரிய காரியங்களில் இருக்கிறது
மகிழ்ச்சி சின்ன சின்ன செயல்களில் இருக்கிறது
தியானம் வெறுமையில் இருக்கிறது
கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் - என்று மகாத்ராயாரா சொல்லுகிறார்.
நமது நம்பிக்கைக்கைகள் சோதிக்கப்படலாம், ஆனால் அது என்றைக்கும் வீணாகாது. நாம் தவறு என்று நினைக்கும் பலவிசயங்கள் பின்னாளில் சரி என்று உணர்த்தப்பட்டு உண்மை விளக்கப்படுகிறது. பரிபூரண நம்பிக்கை பல காரியங்களை சாத்தியப்படுத்தும்.

நாம் வெற்றிகளையும், சாதனைகளையும் அடையும்போது வரும் உணர்வு உலகத்தின் உச்சியில் இருப்பது போலாகும். ஆனால் ஆன்மிகம் நம்மை அந்த நிலையில் இருந்து மீட்டு நம்மை என்றைக்கும் ஒரு முழு மனிதனாக, கர்வமற்றவனாக, நேர்மையானவனாக மாற்றும். இப்படியான ஆன்மிக நிலையில் நாம் மௌனமாய் இருந்தாலும் பல உண்மைகளை நமக்கு விளக்கும்.

இந்த வாழ்க்கையில் நம்முடைய அடுத்த யோசனை, அடுத்த எண்ணம், அடுத்த வலி, அடுத்த அனுபவம் போன்றவை வாழ்வை பற்றிய எண்ணங்களை எளிதில் மாற்றிவிடும வல்லமை கொண்டவை. நாம் அடுத்தடுத்து சந்திக்கும் நபர்களில் பலர் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக மாறிவிடும் சந்தர்ப்பம் நிகழ்வது என்பது நம்மில் யாரும் மறுக்க முடியாத ஒன்று.
 
நாம் அனைவர்க்கும் வாழ்க்கையின் உயர்நிலையை எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியான வாழ்க்கை. அதில் இன்பம் தருவனவாக நாம் நினைப்பது அனைத்தும் புறப்போருட்களே. இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை நாம் ஓடி களைத்துவிடுகிறோம். பின்னர் எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத நிலைக்கு கீழே விழும்போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான். ஆனால் நமது ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே.

இந்த ஆன்ம பற்றிய நினைவு வரும்போது தான் நாம் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று மனம் பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. நாம் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் நமக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் என்ற உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட நம்முடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது.

இந்தநிலையில் தான் ஒரு மனிதன் “தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல் கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.மனம் நினைக்கிறது.

அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும்

ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர். அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும், தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர்.நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும் தன் வழிகள் தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மையை நாம் உணருவோம் “நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.

எந்த ஒரு செயலும் அந்தந்தக் கணங்களில் புதிராக இருந்தாலும், அவற்றிற்கு ஒரு திறப்பு இருக்கின்றது. ஒரு பதில் இருக்கின்றது. அது சற்று முன்பின்னாக நமக்கு கிடைத்துவிடுகின்றது. அப்படிக் கிடைப்பது விரும்பியதாகவோ, விரும்பாததாகவோ இருந்தாலுமே கூட, அதையும் கடந்து நம்மால் வாழ்ந்துவிட முடிகிறது. ஒவ்வொரு இடர் வரும்போதும், ஒவ்வொரு புதிர் அவிழும்போது நான் கொண்டிருந்த பதட்டங்கள் அப்போது தவிர்க்க முடியாததும், பின்னர் அவை அவசியமற்றதென்றே புரிய வைக்கப் பட்டிருக்கின்றன.
 
முப்பதே வயதான சிங்க்லானுக்கு திடீரென்று இப்படி ஓர் ஆர்வம் எப்படி எழுந்தது என்பது அவனுக்கே தெரியாது. சில மாதங்கள் முன்வரை சீன ராணுவத்தில் இருந்த அவனுக்கு திடீரென்று ஆன்மிகம் என்றால் என்ன என்று அறியும் ஆர்வம் வந்து விட்டது.

வேலையைத் துறந்து, ஒரு மாதமாக திபெத்தில் இதற்காகவே அலைந்து திரிந்தான். அங்கிருந்த சிலரது அறிவுரையின்படி, ஓர் மலை உச்சியில் இருந்த அந்த புத்த மடாலயத்தைச் சென்றடைந்தான். அந்த புத்த மடாலயமும், மலையின் இயற்கை அழகும் அவனைக் கவர்ந்தது. மடாலயத்திற்குள் நுழைய முற்பட்டவனை, ஓர் இளம் துறவி தடுத்து நிறுத்தி, ""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என வினவினார். 

""அய்யா, நான்காயிரம் கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள ஷாங்காயிலிருந்து வருகிறேன். ஆன்மிகம் என்றால் என்ன என்று அறியும் ஆர்வம் கொண்டுள்ளேன். இங்கே ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். அதில் கலந்து கொள்ள அனுமதியுங்கள்'' என்றான்.

""தம்பி! அதில் பங்கேற்க கடுமையான விதிமுறைகள் உள்ளன. உங்கள் அடையாளச்சான்றிதழின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கனவே வந்துள்ளன. அவற்றிலிருந்து தலைமை குரு இருபது பேரை மட்டுமே தேர்ந்தெடுப்பார். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்றார்.

""அய்யா, விதிமுறைப்படி விண்ணப்பிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை. மடாலயத்தின் உள்ளே சென்று, அரை மணி நேரம் கண்மூடி அமர்ந்து செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்'' என்று வேண்டினான்.

""அடையாளச்சான்றிதழ் ஏதேனும் இருப்பின் அதனை காட்டுங்கள்; பிறகு நான் அனுமதிக்கிறேன்''.

""என் அடையாளங்களைத் துறக்கவே நான் இங்கு வந்தேன். தயவு செய்து அனுமதி கொடுங்கள்''

""அது இயலாது. அதுவே எங்கள் விதிமுறை. நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்'' என்ற துறவி கதவுகளை அடைத்தார். அந்த இளைஞன்.

மடாலயத்தின் வெளியே இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்து விட்டான்.

மடாலயத்தின் உள்ளே குரு தியானத்தில் இருந்தார். விழிப்புணர்வின் உச்சத்தில் வாழும் அந்த தலைமை குருவுக்கு வாசலில் நடந்ததை உணர்வது பெரிய விஷயமாக இருக்கவில்லை. அனுமதி மறுத்த துறவியை வரவழைத்து நடந்ததைக் கேட்டார். அவரும் விதிமுறைப்படி அனுமதி மறுத்ததைச் சொன்னார்.

""மாபெரும் தவறிழைத்து விட்டீர். நமது ஆன்மிகப் பயிற்சியின் நோக்கமே "ஒருவன் தனது அனைத்து அடையாளங்களையும் துறப்பது தான். அடையாளங்களைத் துறக்காமல் ஆன்மிகத்தின் உச்சத்தை யாராலும் உணர முடியாது. எப்போது அவன் அடையாளங்களைத் துறக்க விரும்பி நம் வாயிலில் நுழைந்தானோ. அப்போதே அவன் நமது ஆன்மிக வகுப்பின் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டான். அடையாளங்களைத் துறக்க விரும்புபவனை அடையாளம் கண்டுகொள். வெளியே மரத்தடியில்தான் அவன் கண் அயர்ந்துகொண்டிருக்கிறான். அவனை அழைத்து வந்து இங்கு தங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்யும்,'' என்றார். தவறினை உணர்ந்த அந்த இளம் துறவி, அவனை அழைத்துவர ஒரு குழந்தையைப்போல் ஓடினார்.

ஆன்மீகம் பகுத்தறிவோடு இணக்கமாகசெல்கிறதா? என்றால் இல்லை என்பதே உண்மை காரணம், நீங்கள் ஒரு சிம்பொனி அல்லது ஒரு ஓவியத்தை பாராட்ட கலை மற்றும் அழகு பற்றிய புரிதல் வேண்டும். அதேபோல், நீங்கள் பிரபஞ்சத்தின் ஒழுங்கு குறித்து புரிந்துகொள்ள ஆன்மிகம் குறித்தவிழிப்புணர்வு வேண்டும்.

ஐன்ஸ்டீனின் ஆன்மீக கொள்கையை நான் நம்புவது எது? “, (“What I Believe.”) என்ற தலைப்பில் இயற்றினார். அதில் அவர் விளக்கும் போது, “நம்மால் அனுபவிக்க கூடிய, விசித்திரமானஅல்லது மர்மமான ஒன்றே நமது உணர்சிகளில் மிக அழகானதாகும். இந்த அடிப்படை உணர்வே, உண்மை கலையிலும், அறிவியலிலும் ஒய்யாரமாக மிளிர்கிறது. எவர் ஒருவருக்கு இந்த உணர்ச்சி அன்னியமாக தெரிகிறதோ, அவரால் ஆச்சரியப்பட்டு, மெய் மறந்து பிரமிக்க முடியாது. அது அவர் இறந்ததுக்கு சமானம் அல்லது கரைந்துபோன மெழுகுவர்த்திக்கு சமானம். அந்த உணர்வை அறிந்துகொள்ள, அனுபவிக்கக்கூடிய எதனின்பின்னும் உள்ள ஏதோ ஒன்றை நம்மால் கிரகிக்க முடியவில்லை. அதன் அழகு மற்றும் மேன்மை, மறைமுகமாக மட்டுமே நம்மை வந்தடைகிறது. இதுவே மதநம்பிக்கையாகும். இந்த ஒரு உணர்வு, மற்றும் இந்த ஒரு உணர்வு ஒன்றினால் மட்டுமே நான் பக்திமிக்க ஆன்மீகவாதி ஆகிறேன்..

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.


கருத்துகள் இல்லை: