வலைவீசும் எண்ணங்கள்
16.பக்குவம்
நாம் அனைவரும் வாழ்வின் பல கட்டங்களை தாண்டியே பயணப்படுகிறோம்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் அப்படி கிடைக்கும் அனுபவங்கள் நம்மை
பலவிதங்களில் பக்குவப்படுத்துகிறது..இந்த பக்குவம் என்பது என்ன? எப்படி
வருகிறது?.இந்த வாரம் வலைவீசுவோம்.
உண்மையில் மனிதர்கள் என்றைக்கும் ஒரே இரவில் முழுமையான மனிதர்களாக
மாறிவிடுவதில்லை. என்ன.. காளிதாசன்
என்ற மகாகவி ஒரேநாளில் மாற்றம்
பெற்றாரா?.. இல்லை.. அவரும் வாழ்வில் பலபடிகளில் அவமானங்களை சந்தித்து மெல்ல மெல்ல
பக்குவப்பட்டத்தின் வெளிப்பாடே அவர் ஞானம் பெற்றதின் சாராம்சம்.
எப்படி நம்முடைய பசிக்கு எப்படி நாம் எடுக்கும் ஒவ்வொரு கவளமும் நம்மை
பசியில் இருகுந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு ஒரு குறிப்பிட்ட கவளத்தில் அதாவது
பத்தாவது கவளத்தில் பசி உணர்வு அடங்குவதாக கொண்டால் அதுவே ஞானம் பெற்ற நிலைக்கு
உதாராணமாக கொள்ளலாம். ஆனால் அந்த பசி உணர்வு அடங்கும் நிலையை அடைய நாம் ஒன்பது
கவளம் உணவு எடுக்கிறாம். ஒவ்வொரு கவளமும் பசியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கிறது.
இது தான் பக்குவம் பெரும் படிகளாக
கொள்ளலாம்.
நம்மால் வறண்ட நிலத்திலும் பயிர் செய்ய முடியும். ஆனால் ஒரேநாளில் அது
நடக்கக்கூடியது இல்லை. நீர் இருப்பு அறிந்து கிணறு தோண்டி மண்ணை உழுது
பக்குவப்படுத்தி பின்னரே பயிர் செய்ய முடிகிறது.
ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன? அடைந்த
பின் காணும் நிலை என்ன? பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில
அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
ஒன்று…
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்’ கென்று சத்தம் உண்டாகிறது.
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
இரண்டு….
ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள்
போடும் சத்தம் அதிகமாக இருக்கும். சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.
இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும், முக்கால்வாசிச்
சத்தம் நின்றுவிடும். கடைசியாகத் தயிர் பரிமாறும்போது, அதை
உண்ணும் `உஸ் உஸ்’ என்ற சத்தம்தான் கேட்கும்.
மூன்று…
தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு
வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும்.
ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.
நான்கு…
புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம்
அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான். அந்த மொழியில் விற்பன்னனோ, தன்
தாய் மொழியில் பேசும்போது, அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.
ஐந்து…
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத்தெரியாத
`ஓ’ என்ற
சத்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்
கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக்
கேட்கிறான்.
ஆறு…
சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில்
போட்டால் முதலில் `பட்பட்’ என்ற சத்தம் உண்டாகும். அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.
முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.
பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் ராமகிருஷ்ண
பரமஹம்சர் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.
ஒருவன் பக்குவம் அடைவதற்கு முன்பு இருக்கும் தகுதியின்மைக்கு மூன்று
காரணிகள் அடிப்படையாக இருக்கிறேது. அவை தகவலின்மை, புரிதலின்மை மற்றும்
அனுபவமின்மை.
முதலில் தகவலின்மை என்ற தன்னுடைய நிலையை அறிந்து தகவல்களை பெற தன்னை
ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் நல்ல
புரிதலை பெற வேண்டும். கடைசியில் அபப்டி கிடைத்த புரிதலின் மூலம் அனுபவங்களாய்
பெற்று பக்குவ நிலைக்கு தாயாராகி தன்னுடைய அறிவின் இலக்கு நோக்கிய பயணத்தை தொடர வேண்டும்.
எல்லா நிலைகளிலும் இப்படியான நிலைகளை, பக்குவ படிகளை கடந்தே ஒருவரால்
சிறந்த மனிதராக உருவாக முடிகிறது.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில்
சொல்லியிருக்கும் தகவலை இங்கே அப்படியே பகிர்கிறேன்..
“உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை. தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது. அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.
“உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை. தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது. அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்,
நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப்
போகிறது. ஆரம்பத்தில் `இதுதான் சரி’
என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால்
`இது
தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.
சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள். முதற்
கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து. இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால்
தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.
மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும்
மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.
இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு. சுவாமி
விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு. அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம
புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள். மற்றவர்கள், அனுபவத்தின்
மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!
எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால்
என்ன என்பதை உணர முடிந்தது.
ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம
புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.
`மனப்பக்குவம்’
என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை. அந்த
நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது. `இருக்கக்கூடும்’ என்றே சொல்லத்
தோன்றும்.”
இப்படி பக்குவப்படும் நிலையில் நாம் ஒருசிலரின் உள்வாங்கும் திறனை,
மனநிலையை அடிப்படையாக கொண்டு பக்குவப்படும் வேகத்தை விரைவு படுத்தலாம். ஆனால்
பக்குவப்படுத்தும் செயலில் காலம் என்ற காரணியை யாராலும் தவிக்க முடியாது. ஏனெனில்
நாம் காலத்தின் ஊடே பயணப்பட்டே ஆகவேண்டும்.
ஆக பக்குவமடைதல் என்பது என்றைக்கும் ஒரு படிப்படியான நிகழ்வு ஆகும்.
அதில் மாற்றம் இல்லை. ஒரு வேலை ஒரே நாளில் சிறந்த மனிதனாக மாறிவிட்டார் என்று
தோன்றினால் அந்த மாற்றத்தை அடையும் நிலைக்கு அவருடைய மனது பலபடிகளில் பட்டை தீட்டி
பக்குவ நிலை அடைந்திருக்கும். எப்படி திரைப்படங்களில் வில்லனாக இருப்பவர்
கடைசியில் கதாநாயகன் பேசும் பேச்சுக்கு உண்டனே திருந்தி நல்லவனாக மாறுவது போல
காட்டப்பட்டாலும், படம் முழுக்க பல படிகளில் பல கதாப்பாத்திரங்கள் மூலம் அவனின்
மனம் பக்குவமடைய வைக்கப்படுகிறதோ அதுபோலவே இந்த நிகழ்வுகளும்.
எப்படி கல்லூரியில் படிக்கும்போது,
இளையோர்க்கு எல்லாமே வேடிக்கையாகத்
தெரிகிறது. கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு
வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது புரிகிறது. இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை
அடைய அடையக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.
இந்த படிப்படியான அனுபவங்களே ஒருவரை பக்குவப்படுத்தும் நிலைகளாகும்.
மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை
என்றால் அவன் அப்பாவி;
முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது
என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது. ஐம்பது வயதில்
கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும். இதில் வெறும் பருவங்களின்
வித்தியாசம் மட்டுமில்லை. பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக