வெள்ளி, 30 டிசம்பர், 2016

53. தொடரும்...

வலைவீசும் எண்ணங்கள்

53. தொடரும்...


மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும் உலகம் தொடரும்.. இது தானே உலகின் நியதி..

நாம் எல்லோர் வாழ்க்கையிலும் தான் எவ்வளவு எவ்வளவு மாற்றங்கள்.

இதோ....! இப்போது தான் தொடங்கியது போல இருக்கிறது 2016 ம் ஆண்டும். இதோ 53-வது வாரம்.. ஆண்டின் கடைசி வாரம். இந்த தொடரின் கடைசி அத்தியாயம்.

நானும் இப்படி ஒரு தொடர் எழுதுவேன் என்று நினைத்துப்பார்த்தது இல்லை. அன்பின் நண்பர்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கமும், உற்சாகமான பின்னூட்டமும் இந்த ஆண்டை நிறைவு செய்ய வைத்துள்ளது.

முற்றும் என்பது ஒரு கற்பனை புள்ளியே. இந்த நிலையில் வெற்றியின் முதல் படியானது ஒருவரின் ஆறுதலிலும் தட்டி கொடுத்தலிலுமே அமைக்க படுகிறது. 

உண்மையில் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள், இடையூறுகள், வேதனைகள், ஏற்றங்கள், இறக்கங்கள், நம்பிக்கைகள், துரோகங்கள், பாசம், வேடம் என்று மாறி மாறி நாம் சந்தித்து வந்தாலும் ஒவ்வொன்றிலும் வாழ்க்கை முடிந்துவிடாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் இருக்கும் வரை தொடரும்.

இந்த பூமி இருக்கும் வரை மானுடமும், உயிர்களின் வாழ்க்கையும் தொடரும். இந்த பரந்த அண்டவெளி இருக்கும்வரை பூமியும் தொடரும்..

மானுட வாழ்வின் முடிவு இந்த உலக வாழ்வு என்பது வெளிப்படையாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையும் இந்த புவியில் தொடர்கிறது..எப்படி.. ? ஒருவரின் சிறந்த செயல்கள், தன்னலமற்ற தொண்டுகள், தங்களை மக்களின் மனதில் நிலைநிறுத்தும் வகையில் என்று வெளிப்படையாக நம்மிடையே பலரும் இன்றும் முற்றுபெற்ற வாழ்க்கையிலும் சிறப்பு பெற்று நமது மனதில், எண்ணங்களில் தொடர்கிறார்கள்.

நாமும் எதாவது ஒரு வகையில் நம்முடைய பங்களிப்பினை இந்த சமுதாயத்திற்கு தரும்போது நம்முடைய வாழ்க்கையும் நமக்கு பிறகும் தொடரும். குறைந்த பட்சம் நமது குடும்பத்தில் சில தலைமுறைகளுக்காவது நாம் நிச்சயம் தொடருவோம். அதற்கு நமது செயல்கள் தான் அடிப்படையாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு திறமை நிச்சயம் இருக்கும். திறமை இல்லா உயிர்கள் எதுவும் இந்த பூமியில் நிலைப்பதில்லை. இருக்கும் திறமையை நாம் தெரிந்துகொள்வோம். அதுவரை நம்முடைய செயல்களில் நாம் அடக்கம் கொள்வோம். நமது திறமைகள் எதுவென்று தெரிந்தபின்பு வெற்றிகளை நாம் நமது வாழ்க்கையில் அடக்கம் கொள்வோம்.

பகல்வானில் பிரகாசிக்கும் சூரியானாக இருக்க நினைக்கையில் வாழ்க்கை நம்மை இருளில் தள்ளினால் நாம் அந்த இரவுவானில் நட்சத்திரமாக ஒளிர்வோர். இங்கே ஒருவாசலா இருக்கிறது வாழ்வதற்கு. ஏராளமாக அல்லவா இருக்கிறது. மனதின் நம்பிக்கை கதவு அடையாதவரை வாழ்க்கை என்றென்றும் தொடரும்..

நம்முடைய பயணத்தில் நிராகரிப்பு என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒன்றாகும். அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நமது மனதிற்கு பிடித்தமானவர்கள் நம்மை உதாசினமாக நினைத்து நிராகரிக்கும் போது மட்டுமே உணர்வுப்பூர்வமாக உணர முடியும். அந்த வலிகளாய் உணர்ந்தவன் என்ற முறையில் யாரையும் நிராகரிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

பலருக்கு என்னால் இது முடியுமா..? என்னால் இதை செய்யக் கூடுமா? என்று தாழ்வுமனப்பான்மை கொண்டிருப்பார். ஒருசிலருக்கு மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதிலே மாபெரும் இன்பம் இருக்கும்.

ஆனால், தாழ்வுமனப்பான்மை என்பது பிறர் நம்மை குறைத்து பேசுவதில் இல்லை.நமக்கு நாமே அடிமனதில் குறைவாக எடை போட்டு வைத்து இருக்கிறோம் என்பதில் இருக்கிறது. அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால் இன்றே உடைத்தெறிவோம். நம்மால் முடியாது என்று பிறர் எப்படி சொல்லலாம்? நம்மால் முடியாதது என்ன இருக்கிறது?.

முடியும். எதுவும் முற்றுபெற்ற முழுமையானது அல்ல. எல்லாமே தொடர்கதைகள் தான். யாரையாவது நம்பும் போது தான் யாரோ ஒருவர் யாரையும் நம்பகூடாது என்ற அனுபவத்தையும் நமக்கு தருகிறார்கள். அதற்காக நம்பிக்கையை கைவிட்டுவிட முடியுமா? நாம் எச்சரிக்கை உணர்வை அல்லவா நம்மோடு கூட்டுசேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை அழகியல் நிறைந்தது. வாழ்க்கை இனிமைகள் நிறைந்தது. வாழ்க்கை ஒரு கண்ணாடி. நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதையே உங்களுக்கு காட்டும் மாயக்கண்ணாடி. நல்லது பார்க்க நல்லது காட்டும். தீயது பார்க்க தீயது காட்டும்.

வாழ்க்கையில் நமக்கு வரும் காயங்களை பலசமயங்களில் நம்முடைய அன்பானவர்களிடம் இருந்தே பெறுகிறோம். உண்மையில் அதை வெளியில் சொன்னால் நம்பவும் யாரும் தயாராக இருப்பதில்லை. அன்பின் இழைந்து வாழும் உங்களுக்கு அந்த அன்பால் காயமா? என்ற கேள்வியே நமக்கு எதிராக தொடுக்கப்படும்? இது தான் ஆம்.. அன்பானவர்களை விட நம்மை மிக அழகாக யாராலும் காயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் நம்முடைய உயிரானவர்களின் முழுமையான அன்பிற்கு ஏங்குவது கொடுமை.

எதுவாக இருந்தாலும் எல்லாம் தொடரும். தொடர் பயணத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
அந்த மகிழ்ச்சி வாசனை திரவியத்தைப் போன்றது. அதை நம்மீதே சிறு துளியாவது தெளிக்காமல் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சியின் மணத்தை கொடுக்க முடியாது. நாம் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்களையும் மகிழ வைப்போம்.

எதிர்வரும் புத்தாண்டில் ஒரேயடியாக எல்லாம் மாறிவிடப்போவது இல்லை. எல்லாமும் தொடரும், ஆனால் மாற்றங்களுக்கான முயற்சிகளை நாம் விடாமல் தொடருவோம்.

இன்றைக்கே தொடருவோம் உழைப்பை முதலீடு செய்ய.... அது விதையாகி உயிராகி வளர்ந்து விருட்சமாகி நமக்கு பலன் தரும். கொஞ்சம் பொறுப்போம். மனமார்ந்த செயலுக்கு நிச்சயமாக பலன் உண்டு.

வெளியிடங்களில் ஏதேனும் தவறுகள் பார்த்து திருத்த நினைக்கும் முன் அந்த தவறுகள் நம்மிடம் இருந்தால் நாம் முதலில் திருத்த்க்கொள்வோம்.

இனிய வணக்கங்கள். ஓராண்டாக என் பதிவுக்கு ஆக்கமும், ஊக்கமும், குட்டுதலும், தட்டிக்கொடுத்தாலும் தந்த அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கம்.

மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது தொடருவோம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: