வியாழன், 15 டிசம்பர், 2016

உணர்வுகள்..


வழித்துணை ஏதுமில்லா பாதையில்
நான் நடந்துகொண்டே இருந்தேன்..

இக்கட்டில் இருந்த சிலருக்கு உதவிட
வாழ்த்தி சேவை மனதுக்காரன்
என்றனர் சிலர்..

உரிமைகள் முடக்கப்பட்ட மக்களுக்காக
குரல்கொடுத்த போது பொதுவுடமைவாதி
என்றனர் சிலர்...

வாழ்வின் உன்னதங்கள் நன்னூல்கள்வழி
மக்களுக்கு சொல்லி சென்றபோது ஆன்மீகவாதி
என்றனர் சிலர்..

மதக்கலவரக்காரர் மத்தியில் மதமெதிர்த்து
வாதங்கள் வைத்தபோது நாத்திகன்
என்றனர் சிலர்..

அரசின் நல்லவைகளை பாராட்டுகையில்
ஆளுங்கட்சி சார்பு ஆள்
என்றனர் சிலர்..

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி
தட்டிக்கேட்ட போது எதிர்க்கட்சி கைக்கூலி
என்றனர் சிலர்...

என்னிடம் இருந்ததை எல்லாம் ஏழைக்கு
தந்தபோது எதற்காகவோ செய்கிறான் ஏமாளி
என்றனர் சிலர்..

உழைக்கமறுத்து உதவிகேட்ட சோம்பேறிக்கு
உதவ மறுத்தபோது சுயநலக்காரன்
என்றனர் சிலர்..

வழித்துணை ஏதுமில்லா பாதையில்
நான் நடந்துகொண்டே தான் இருகிறேன்..

யாருக்குமே தெரியவில்லை
நானும் அவர்களைப்போல்
ஒரு மனிதனென்று...!


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: