வெள்ளி, 16 டிசம்பர், 2016

51. விவேகானந்தரும் வாழ்க்கை தத்துவமும்

வலைவீசும் எண்ணங்கள்

51. விவேகானந்தரும் வாழ்க்கை தத்துவமும்
  
வாழ்க்கையில் கனவுகள் காணாத யாரும் இல்லை. நமது வாழ்க்கை நம் எண்ணப்படி இருந்தால் எப்படி இருக்கும்? நாம் நினைக்கும் எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று பல கனவுகள் காணும் ஒரு சராசரி மனித மனம் கொண்டவர்கள் தான் நாம் எல்லோரும்.

“கனவுகளே! ஓ...கனவுகளே! கனவுகள் தொடரட்டும்.. கனவின் மாயஜாலம் தான் இந்த வாழ்க்கைக்குக் காரணம்; பரிகாரமும் அதுவே. கனவு, கனவு, கனவு மட்டுமே... கனவாலேயே கனவை ஒழி!” என்று கனவுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு இணைப்பை தருகிறார் சுவாமி விவேகானந்தர்.

சோம்பிக்கிடப்பது அல்ல வாழ்க்கை. வாழ்க்கையில் சிறு சிறு தடங்கல்கள் எப்போது வேண்டுமானாலும் இடைபட்டு நம் வாழ்வில் நம்மை இடித்து தடைபோடும். இந்த தடைகளுக்கு நாம் சிறிது தயங்கி நின்றாலும் நம்முடைய கடமையில் தவறும் நிலை வரும்.

சொல்லவியலா மனத்துயரங்கள், மனஅழுத்தங்கள், வேதனைகள் என்னை அழுத்தியபோது சுதாகரிக்காமல் கொண்ட தடுமாற்றம் தான் பல வரமாக  தவறமால் எழுதி பதிவிட்டு வந்த “வலைவீசும் எண்ணங்கள்” தொடர் சென்றவாரம் தடைபட காரணமாக இருந்துவிட்டது.

“இது தான் வாழ்க்கை – வேலை, வேலை.. ஓயாத வேலை.. அதைத்தவிர நாம் வேறு என்ன தான் செய்துவிடுவோம்? செய்து கொண்டே போ...! எதோ ஒன்று வரும்.. எதோ ஒரு பாதை திறக்கும்” என்ற விவேகானந்தரின் வார்த்தைகள் தான் கீதையின் வழியில் நின்று எனக்கு இன்று உத்வேகம் அளித்துள்ளது.

“இதயபூர்வமாக காரியங்கள் செய்பவனுக்கு இறைவன் உதவி புரிகிறான். உன்னால் இயன்றவரையில் நற்செயல்களை செய்” என்ற அவரின் வரிகள் நமக்கு சோர்வுறும் வேளையில் புதிய உற்சாகம் தரும்.

சோர்வுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதுதான் நமது பயணத்தில் பெருந்தடை. அதை எதிர் கொண்டு வெற்றிக்கொண்டால் நிச்சயம் புதிய பாதை திறக்கும்.

“எழுந்திருங்கள்.. விழித்திருங்கள்.. கருதியது கைக்கூடும் வரை சலியாது உழையுங்கள்” -  இதுதான் விவேகானந்தர் வாழ்க்கையில் சலிப்படைந்து இனி என்ன இருக்கிறது? என்ன செய்வது? என்று தடுமாறும் மனிதருக்காக சொல்லி சென்றது. அந்த மனிதர் நாமாக கூட இருக்கலாம்.

வாழ்க்கை என்பது என்ன? அது ஆசைகள், ஏமாற்றங்கள், தவறுகளும், கனவும், துன்பங்களும், களிப்பும், உழைப்பும் நிறைந்தது.

“நான் பிறந்ததற்காக மகிழ்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டதற்காக மகிழ்கிறேன். பெரிய தவறுகளை செய்ததற்காக மகிழ்கிறேன். அமைதியில் புகுவதற்காக மகிழ்கிறேன்” என்பதை புரிதலுடன் நம்முடைய மனம் ஏற்கையில் தவறுகள் படிப்பினை தந்து அனுபவங்கள் சேர்ந்து நம்மை அமைதியான பண்பட்ட மனமுள்ளவனாக இந்த வாழ்க்கை மாற்றுகிறது.

“வைரச்சுரங்கமாகிய நான், நன்மை மற்றும் தீமையாகிய கூழங்கற்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். தீமையே வா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நன்மையே நீயும் வா! உனக்கும் மங்களம் உண்டாகட்டும். என் காதுகளுக்கு அருகில் பிரபஞ்சமே தலைகீழாக வீழ்ந்தாலும் அதனால் எனக்கென்ன? அறிவு கடந்த அமைதியே நான். அறிவு நமக்கு நன்மையையோ தீமையையோ மட்டும்தான் கொடுக்கிறது. நான் அதற்கும் அப்பால் உள்ளேன். நானே அமைதி” என்கிறார் அந்த வீரத்துறவி. ஆம் எதையும் ஏற்றுக்கொண்டு அது போகும் போக்கில் அறிவு கொண்டு நாம் பயணித்து செல்கையில் எது நம்மை என்ன செய்துவிடும்?

இன்றைக்கு எல்லா காரியங்களிலும் நம்மை தடுமாற வைப்பது பணம் என்ற உருவில் இருக்கும் செல்வமே..

“உனது செல்வம் கடவுளுடையது, நீ அதற்குப் பாதுகாப்பாளன் மட்டுமே என்று கொள். பணத்தில் பற்றுக்கொள்ளாதே” என்ற விவேகானந்தர் வார்த்தைகள் இந்த விடயத்தில் நமக்கு பெரும் தருமாற்றம் தரும் ஒன்றாகவே இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் தேவைக்கு மேலாக நம்மை ஆட்டி வைப்பது பகட்டும் படாடோபமும். இதில் இருந்து மீளமுடியாத நிலை தான் நாம் கொள்ளும் பலவித துன்பங்களுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது.

இது புரிந்தும் சேற்றில் சிக்கி சுழலும் வண்டி சக்கரமாக நமது வாழ்க்கை இங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறது.

“அனைத்தையும் ஒரு வேள்வியாக, இறைவனுக்கு அர்ப்பனமாகச்செய்.. உலகில் வாழு, ஆனால் அதில் ஒட்டிக்கொள்ளதே. தாமரையின் வேர் சேற்றில் உள்ளது, அதன் இலையோ எப்போதும் தூய்மையாக இருக்கிறது. பிறர் உனக்கு என்ன செய்தாலும் சரி, உன் அன்பு எல்லோர் மீதும் பரவட்டும்” என்று அதற்கும் ஒரு வழி சொல்லி சென்றுள்ளார் நம் வாழ்வியலை புரிந்துகொண்ட ஞானதுறவி.

சேறு சகதி என்று இருக்கும் இந்த உலகவாழ்வில் தாமரை இலை போல தூயதாக நமது மனதை கொண்டு வாழ்வியல் நன்மைகளை பெற முயற்சிக்கலாம்.

நமது நாட்டில் இல்லாத தத்துவ தேடல்களோ, அறிவுச்செல்வமோ, ஒழுக்கமான வாழ்வியல் முறையோ எங்கேயும் காண முடியாது, ஆனால் இன்றைக்கு அந்த நிலை ஒரு பரிதாப சூழலை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. “பொருள் தேடுவதில் நமக்குள்ள வேகத்தால் அந்த அறிவுத்திறனை இழந்து வருகிறோம்” என்ற உண்மையை உலகுக்கு அன்றே சொல்லி சென்றவர் நமது நரேந்திரன். இன்றைக்கு அது இன்னும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

நாம் பந்தத்தில் பிணைந்து வாழும்போது சமயங்களில் மற்றவரை அடிமையை போல நடத்த முயற்சிக்கிறோம் அல்லது அந்த எண்ணம் தானாக மேலோங்குகிறது. ஆனால் “சுதந்திரமும் மேலான அன்பும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் – அப்போது இரண்டுமே பந்தமாகத்து” என்ற தெளிவான வாழ்வியலை நமக்கு போதிக்கிறார் விவேகானந்தர்.

“ஆசை என்னும் மதுவை அருந்தி, உலகம் பித்துப்பிடித்துப்போய் இருக்கிறது. இரவும் பகலும் சேர்ந்து வருவதில்லை, அதுபோலவே ஆசையும் இறைவனும் சேர்ந்திருக்க முடியாது” என்பது போல ஆசையை நாம் விடும்போது நமக்கு அமைதி வருகிறது. அமைதி தான் இறைவன்உறையும் இடமாகிறது.

இனி கடந்துபோனது அப்படியே போகட்டும். “நடந்ததை எண்ணி வருந்தாதே. கடந்ததை எண்ணி கலங்காதே. நீ செய்த நல்ல செயல்களை நினைவில் வைத்துக்கொள்ளாதே. சுதந்திரனாக இரு/ பலவீனானாக, பயந்தவனாக, முட்டாளாக இருப்பவன் ஆன்மாவை அடைய முடியாது” என்பது தான் விவேகானந்தரின் எளிய உண்மை.

“நாம் துயருறுவதற்கு நாம், நாமே தான் காரணம். வேறு யாரும் அல்ல. நாமே விளைவுகள். நாமே காரணம்” இந்த நிலையில் நாம் கோழையாக இருப்பதால் எதையும் வெற்றிட முடியாது. உண்மையில் “கோழைத்தனத்தை விட பெரிய பாவம் எதுவுமில்லை. கோழைகளுக்கு கதிமோட்சமே கிடையாது. அது உறுதி” என்கிறார் வீரத்துறவி. கதிமோட்சம் கூட நினைக்க வேண்டாம். ஒரு கோழையாக இந்த உலகில் இன்றைய நிலையில் எளிதில் வாழ முடியுமா? எண்ணிப்பார்ப்போம்.

ஆகவே விவேகானந்தரின் போதனைகளை எப்போதும் மனதில் வைப்போம். “முற்றிலும் ஒழுக்க வழியில் நில்! தைரியமாக இரு! இதயம்முழுமையான தூய்மையுடன் திகழட்டும்! முழுமையாக நீதி வழியில் செல்! உயிரே போனாலும் தைரியத்தைக் கைவிடாதே! மதக்கொள்கைகளைப் பற்றி எல்லாம் மூளையை குழப்பிக்கொள்ளாதே!.

இதுவே வாழ்க்கையை வென்று எளிதாய் வாழும் வழியாகும்.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: