வியாழன், 8 டிசம்பர், 2016

அவனும் அவளும்.. வர்தாவின் நாளில்..



எதையோ இழந்துவிட்ட சோகம் அங்கே சுழன்றுகொண்டு இருந்தது. இப்படி ஒருநாளும் முடங்கியதும் இல்லை.. முடக்கியதும் இல்லை. அவளின் கைகள் முடங்கிக்கிடக்க முடியாமல் துடிதுடித்துக்கொண்டு இருந்தது. அவனது மனமோ எப்போது முடியும்.. அது நிகழும் என்ற எதிர்பார்ப்பில்...

வெளியே நின்று போயிருந்த சூறாவளியும் கொட்டித்தீர்த்த பேய்மழையும் வெள்ளக்காடாக இந்த சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளும் முறிந்து கிடந்த மரங்களும் பரபரப்பான போக்குவரத்தை முடக்கி இயல்புநிலைக்கு அன்று விடுமுறை விட்டிருந்தது..

இதுபோன்ற நிலையை அவனும் அவளும் இதுநாள் வரை சந்தித்ததும் இல்லை. மூடிக்கிடந்த அறையின் தனிமையில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் அவர்கள் இருவர் மட்டுமே..

அவளின் நெஞ்சுக்குள் ஒரு தவிப்பு. அவனின் கைகளோ பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.. நெருக்கமாய் அவர்கள் இருக்க அந்த அறையில் ஒரு பேரமைதி..

“என்னங்க.. எப்ப முடியும்? வேகமா செய்யுங்க.. நேரம் ஆகுது..” இருவிழிகளிலும் பெரும் ஏக்கம். இரண்டு நாட்களாய் முடங்கி இருந்த நிலையில் அப்போது தான் மின்சாரம் வந்திருந்தும் ஒரு முனை மின்சாரம் வேலை செய்யாத இருட்டில்.. அவன் இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.

“எதுக்கு இந்த வர்தா வந்தது.. நடா போல நாடாம போயிருக்கக்கூடாதா? பேசிக்கொண்டே அவர்களின் செயல்கள் தொடர்ந்தது..

“ஆமா.. ரொம்பே தவிக்க விட்டிடுச்சி..” என்னும் நெருங்கிப்பிடித்து வேகமாக செயல்பட துவங்கினான்..

“ம்ம்..  சீக்கிரங்க.. நேரம் ஆகிட்டே இருக்கு” என்றாள் அவள்..

“அவசரப்படாதடி.. அப்புறம் மறுபடியும் செய்ய வேண்டியது இருக்கும்..” சொல்லிக்கொண்டே இன்னும் செயலை வேகப்படுத்திய அவன்.....

“ம்ம்ம்.. இதோ முடிஞ்சிடுச்சி” என்று சொல்லிக்கொண்டே முடுக்கிய வயரை கொண்டு ப்யூஸ்கேரியர் போட.....

“ஆ.ஆஹா.. வந்திடுச்சி..” என்று பரவசத்தோடு கத்தினாள் அவள்.. மின்விசிறி வேகமாக சுழல.. பளிச்சென்று மின்விளக்கு எரிய.. அப்பாடா என்றனர் அவனும் அவளும்..

பிறகு..

அவள் தாவி எடுத்தால் டிவி ரிமோட்டை.... தட்டியவுடன் அவளின் மனதிற்கினிய தொடர் ஒளிர தொடங்கியது..அவனோ.. விரைந்து அலைபேசிக்கு சார்ஜ் போட்டு அப்படியே இயக்கி இணைய உலகிற்குள் நுழைந்தான் “வாங்க பேசலாம்” நண்பர்கள் பதிவை காண..



சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: