திங்கள், 5 டிசம்பர், 2016

பிடித்த படம்...



சின்ன வயதில் அம்மா தான் எங்க எல்லோரையும் டென்ட் கொட்டாய்க்கு படம் பார்க்க கூப்பிடு போவாங்க. அவங்க அப்ப எல்லாம் ரொம்ப படம் பார்ப்பாங்க.. அப்ப எல்லாம்னா?? இப்ப பார்க்கிறது இல்லை..

பல பழைய படங்கள் டென்ட் கொட்டாயில் பார்த்து இருக்கேன்.. அப்புறம் அத மூட்டிட்டு அதுக்கு எதிர்தாப்புல புதிய திரையரங்கம் வந்தது. நாங்களும் கொஞ்சம் வளர்ந்துட்டோம்..

நல்ல படம் வந்த அனுப்புவாங்க.. நாங்க எல்லோரும் நாற்பது பைசா நுழைவு சீட்டு வாங்கி முன்னாடி வரிசையில உட்கார்ந்து பார்ப்போம். தலை வலிக்கும். காரணம் தெரியாம படம் பார்ப்பேன்..

அப்புறம் ரொம்ப படம் மதுராந்தகத்துக்கு அம்மா தான் கூட்டிட்டு போவாங்க.. விக்ரம் அதுல ஒன்னு. அப்பத்திக்கு அது ரொம்ப த்ரில் படம்..

நடுவில ஒரு தரம் அன்னை ஓர் ஆலையம் படம் எங்க நெருங்கிய குடும்ப நண்பர் ரவி அண்ணா கூட்டிட்டு போனார். அப்ப தான் கூட்டம் அதிகமாயி போலிஸ் வந்து அடிச்சு வரிசையில் நிற்க வச்சு.. எப்படியோ படம் பார்த்துட்டு வந்துட்டோம்..

மனிதன் படம் வந்தது.. எல்லோரும் என்னை மட்டும் விட்டுட்டு தனியா போய் பார்த்துட்டு வந்தாங்க. ரொம்ப வருத்தப்பட்டேன். அப்புறம் தான் தனியா போய் படம் பார்க்க ஆரம்பிச்சேன்..

சென்னைக்கு தனியா நண்பர் கூட அறை எடுத்து தங்கி வேலை பார்க்கும்போது வரம் எப்படியும் ஒரு படம் இரண்டாவது ஆட்டம் பார்த்துடுவோம். மடிப்பாக்கம் குமரன் திரையங்கம் தான் எப்பவும் போறது.. அதுவும் போனதும் கடைசி மூணு வரிசையில் தான் உட்கார்ந்து படம் பார்ப்பேன்..

புதுப்படம் வந்தா கூடம் அதிகம் இருக்கும். சைக்கிள் நிறுத்தும் இடத்தில் டோக்கன் கொடுக்கிறவர் கொஞ்சம் டிக்கட் வச்சிருப்பார். வரிசையில் நிற்காம அவர்கிட்ட வாங்கி உள்ள போயிடுவேன்.

யாரையும் படத்துக்கு போக எதிர்பாத்துட்டு இருக்க மாட்டேன். ஞாயிறு ஆனா இரவு இரண்டாவது ஆட்டம் நிச்சயம். யார் படம் என்ன படம் எல்லாம் பார்க்கிறது இல்லை. பெரும்பாலும் நல்ல படமா தான் இருக்கும்.

பார்த்த மொக்கை படம் அர்ச்சனா நடிச்ச பாலுமகேந்திராவின் படம்.. ரொம்ப நொந்து போன படம்.

கல்யாணம் ஆகிறது வரைக்கும் இது தொடர்ந்தது. அப்புறம் என்ன ஆச்சா? அட போங்க.. தெரியாத மாதிரி இல்ல கேட்கிறீங்க.. இப்ப எல்லாம் திரையரங்கம் போயி படம் பாக்கிறதே ரொம்ப அதிசயமா இருக்கு..

சரி எல்லாம் சொல்லியாச்சு.. என்ன படம் பிடிக்கும்..

ரொம்ப படம் திரும்ப திரும்ப பார்ப்பேன்.. பாட்சா ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் ரொம்ப மனம் விரும்பியது “அன்பே சிவம்”..

இன்றைய நவீன கால இளைஞன். யாரை பத்தியும் கவலை படாம தன்னை பத்தி மட்டுமே கவலைப்படுபவன் அவன். இன்னொருவரோ தன்னை பத்தி தவிர எல்லோர் பற்றியும் கவலைப்படும் மனிதர். இருவரும் சேர்ந்து பயணிக்கும் விதத்தில் கதை அமைப்பு. நாமும் கூடவே பயணிக்கலாம்.. மறுபடி மறுபடி பார்த்தாலும் சலிக்காத படம்..

அப்புறம்... “வானம்”...

பணக்காரனாக வாழ ஆசைபடும் அடித்தட்டு பையன்.. நாட்டைப்பற்றி கவலை இல்லாத மேட்டுக்குடி பையன்.. விபச்சாரியாக இருக்கும் பெண்.. இப்படி மூன்று தாளத்தில் இருக்கும் எல்லோரும் ஒரு நிலையில் ஒன்றாய் ஒரு நிகழ்வில் ஒன்று கூடி பரந்த வானம் போன்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கதை..

“வானம்” அப்படின்னு தொடங்கும் பாடல்.. கேட்டாலே ரொம்ப நல்லா இருக்கும்..
அவ்வளவு தான் சொல்ல இப்பத்திக்கு தோணுது..இன்னும் எவ்வளவோ மனம் பாதித்த படங்கள் இருக்கு.. “அபியும் நானும்”, தங்க மீன்கள்.. எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை.. சொல்லிட்டே போகலாம்..

அப்புறம் எல்லார் படத்தையும் விருப்பு வெறுப்பு இல்லாம பார்ப்பேன்.. இருந்தாலும் ரொம்ப பிடிச்ச நடிகர்ன்னா அது நம்ம சூப்பர் ஸ்டார் தான்..


சங்கர் நீதிமாணிக்கம்..

கருத்துகள் இல்லை: