வலைவீசும் எண்ணங்கள்
49. வாழ்க்கை எளிதானதா? கடினமானதா..?
சிலருக்கு
எளிதாகவும், பலருக்கு கடினமாகவும் இருப்பதாகவும் தான் பதில் கிடைக்கும். வாழ்க்கைப்பற்றிய
புரிதலே முதலில் நமது வாழ்க்கை எளியதா? கடினமானதா என்பதை நமக்கு சொல்லும்..
நல்வழியில்
அவ்வையார் எளிதாக பல வாழ்க்கை தத்துவங்களை போகிற போக்கில் அள்ளி தெளித்துவிட்டு
போய் இருக்கிறார். அதில் ஒன்று
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
என்பது வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை நமக்கு சொல்லித்தருகிறது.
நாம் என்னதான் வருந்தி தேடினாலும் சில நமக்கு கிடைக்காது. நம்மில் சேர்ந்துவிட்ட
சில நாம் விட நினைத்தாலும் விட்டு போக முடியாது. இதை எல்லாம் நினைத்து ஏங்கி
துயரத்தில் வாழ்ந்து கழிப்பதே மனித வாழ்க்கை.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் எப்படி
ஏற்றுக்கொள்கிறோம் என்பதில் தான் அது எளிதா? கடினமா? என்பதை தீர்மானிக்க
முடிகிறது.
பிறக்கும் போது சிலர் சிரிக்க அழுதுகொண்டே பிறக்கும் நாம்
வாழ்க்கையில் எப்படி வாழ்ந்து முடித்து செல்கிறோம் என்பதை நமது இறப்பு மட்டுமே
சாட்சியாக இருந்து சொல்லும். ஆம், நம்முடைய இறப்பில் எவ்வளவு பேரை கண்ணீர் விட
வைக்கிறோம் என்பதில் தான் நமது வாழ்வு என்பது எளிமையானதாக இருந்ததா கடினமாக
இருந்ததா என்பதை சொல்லும்.
சில காரியங்கள் ஆண்களுக்கு கடினமாக இருக்கும்போது பெண்களுக்கு
எளிதாகவும் சிலவற்றில் இதுவே எதிர்மறையாகவும் இருக்கும். வேதனைகள் பெரும்பாலும்
உடல் சார்ந்த வலியாகவும், மனம் சார்ந்த வலியாகவும் நமக்கு இருக்கிறது.
உடல் சார்ந்த வலி காயங்கள் ஆற மறைந்துவிடும் மறந்துவிடும்.
உள்ளம் சார்ந்த வலிகளோ நீடித்து நிலைத்து துன்பம் தரும். இதுபோன்ற மனம் சார்ந்த வலிகள்
உள்ள வாழ்க்கை கொஞ்சம் கடினமே.
இந்த வலியின் வேதனையை தான் வள்ளுவர் நமக்கு அளித்த குறளில்
தெளிவாக உள்ளது..
“தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
வாழ்க்கையில்
நாம் கடந்து செல்லவேண்டிய தூரத்தை பாதைகள் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. நமது
செயல்களும், நமது தேவைகளும், நமது உழைப்பும், நமது சூழலும் தான் தீர்மானிக்கிறது.
அப்படி நமக்கு அமையும் எல்லாம் சேந்து தான் வாழ்க்கை எளிதானதா, கடினமானதா
என்பதையும் தீர்மானிக்கிறது.
இந்த வாழ்க்கை
பயணத்தில் நாம் நினைத்தது எல்லாம் அப்படியே நடந்துவிடுவது இல்லை. அதற்காக நாம்
சோர்ந்துவிடலாகாது. Take it policy பல சமயங்களில்
வாழ்க்கையை நாம் எளிதாக கடக்க உதவி செய்யும்.
நம் கற்பனைகள்
எல்லாமே வாழ்வில் உண்மையாகிவிட்டால் வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?
எவ்வளவோ முடிவுகளை நாம் கண்டிப்பாக எடுக்கக் வேண்டிய அவசியம் வாழ்க்கையில் இருக்கிறது.
வெறும் கற்பனையை கொண்டு மட்டுமே அவற்றை எல்லாம் எடுத்து விட முடியாது.
“கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.
“பிறக்கின்ற போதே... இறக்கின்ற தேதி.. இருக்கின்றதென்பது.. மெய் தானே..”
நமக்காக காத்திருக்காத
மூன்று காரியங்கள் இருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டு தான் வாழ்க்கை என்ற
கடினமான பாதையில் நாம் பல சுமைகளோடு நடக்கிறோம்.
என்ன மூன்று
காத்திருக்காத காரியங்கள்..” நேரம், இறப்பு, உறவுகள்”..
உறவுகள்
வேண்டுமானால் சில வினாடிகள் நமக்காக காத்திருக்குமே ஒழிய, நிச்சயமாக இந்த காலமும்,
இறப்பும் நமக்காக சில வினாடிகள் கூட காத்திருக்கிறது. இதை கொண்டே நாமும்
வாழ்கிறோம்.
எது நிம்மதி
என்பது மனதின் செயல்கொண்டே அறியப்படுகிறது. பாடல் கேட்பதா, வெளியில் சுற்றுவதா,
அதிகம் செலவு செய்வதா, கையில் செல்வமே இல்லை என்றாலும் பிறருக்கு உதவுவதா? எல்லாமே
நம்முடைய மனதின் கரையோர எண்ணமே தெளிவு தருகிறது.
சேர சேர
போதாது என்று தேடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கும் இன்றைய நாளில் வாழ்க்கை
கொஞ்சமல்ல நிறையவே கடினமாக இருக்கிறது என்பது கொஞ்சம் கசப்பான உண்மையாக
இருக்கிறது.
எளிய வாழ்க்கை
வாழ்ந்த காலங்கள் எல்லாம் இன்றைக்கு கனவாகி போய் அருங்காட்சியகத்தில் வைக்கும்
நிலைக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம்மை மாற்றி விட்டது.
எல்லாம்
மாறிப்போனது போலவே
“ஆடி அடங்கும்
வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமாடா” என்று சொன்ன உவமைக்கவிஞர் சுரதா அவர்களின்
வார்த்தையும் இன்றைக்கு மாறி, ஆறடியும் இல்லை வெறும் “பிடி சாம்பலடா” என்றாகி
விட்டது.
வாழ்க்கை
என்பது எளிமையோ, கடினமோ வாழ்வதில் தான் இருக்கிறது அதை கடப்பதும். பிறந்த
எல்லோரும் வளர்வதும் வாழ்வதும் மறைவதும் ஒரு சுழற்சியான பின்பு எப்படியும்
வாழ்வோம் என்பதை விட இப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்கள் தான் இன்றைக்கு
வாழ்க்கையை அனுசரித்து, வளைத்து, நெளிந்து, கூனி, குறுகி வாழ்கிறவர்கள் வாழ்க்கை
கொஞ்சம் கடினமே.
இப்படியும்
வாழலாம் என்பவர்களை விட இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்களுக்குள் ஒரு
வட்டமிட்டு வாழ்பவர்கள் வாழ்க்கை உண்மையில் எளிதாகவே இருக்கிறது.
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக