வலைவீசும் எண்ணங்கள்
52. எதிர்பார்ப்புகளே
ஏமாற்றங்கள்
வாழ்க்கையில் ஏமாற்றங்கள் வருவது இயல்பானது. ஏமாற்றங்களில் போது
துவண்டுவிழாமல் மனத்துணிவுடன் நிமிர்ந்து நின்று வாழ்க்கையை எதிர்கொள்வதே ஒரு அழகு
தான்.
நாம் எல்லோருக்கும் சில கனவுகள், பல எதிர்பார்ப்புகள், ஆசைகள்
வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் கண்டிப்பாக இருக்கிறது.
இந்த கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நமது வாழ்வின் இலக்காக
இல்லாமல் ஒரு ஆவலாக மட்டுமே இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் மனதில் பல இனிமைகளை
நமக்கு தந்து வாழ்வில் உத்வேகமும் அளிக்கிறது
ஆனால், இப்படி ஒரு காலத்தில் வாழ்வை அழகாக்கிய சில
எதிர்பார்ப்புகளே பின்வரும் காலங்களில் வாழ்க்கையை வெறுக்க வைக்கும் ஒரு காரணியாய்
மாறிவிடுகிறது.
கனவுகள் எல்லாமே நினைவுகள் ஆவதில்லை, அப்படி எல்லா கனவுகளும் உண்மையாகத்
தொடங்கினால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கும். எதிர்பாராத நிகழ்வில் நமக்கு
கிடைக்கும் ஆச்சர்ய பரிசுகள் தரும் இன்பங்கள் வேறு எதிலும் கிடைப்பதில்லை.
எதிர்பார்ப்புகள் இல்லாமல் நிச்சயம் வாழ்க்கையின்
செயல்பாடுகள் இல்லை, அதே நேரத்தில் வெறும் எதிர்பார்ப்புகளை மட்டுமே மனதில் கொண்டு
வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி வெறும் எதிர்பார்ப்பில் மட்டுமே நமது வாழ்க்கையை
நகர்த்தினால் ஏமாற்றங்கள் நம்மை சிதைத்து வாழ்க்கையை சின்னாபின்னமாகி விடும்.
குறைந்த எதிர்பார்ப்புகள் கொண்ட வாழ்க்கை எப்போதும்
இனிமைதான். எதிர்பார்ப்புகள் கூடக்கூட தான் ஏமாற்றங்களின் எல்லைகள் விரிகிறது.
ஏமாற்றங்கள் கூடும் போது வாழ்வின் மீதான பிடிப்பு குறைந்து வெறுப்பு கூடுகிறது.
சில நேரங்களில் இந்த எதிர்ப்பார்ப்புகள் கூடுவதன் மூலம்
நம்முடைய பொருளையும் நாம் இழந்துவிடக்கூடும். இப்படி இருப்பதை "இழக்கும்"
போதே தான் தாம் இழந்த எல்லாவற்றையும் அல்லாமல் இல்லாததையும் பெற வேண்டுமென்ற
"வெறி" பிறக்கிறது..!
வாழ்க்கை சுவாரசியங்கள் நிறைந்த நாடகம், விளையாட்டு, போர்களம்
என ஒவ்வொருவரின் பார்வையை பொருத்தும் வாழ்க்கையின் இலக்கணம் மாறுகிறது. உண்மையில்
வாழ்க்கை என்பது கடந்துபோகும் நொடியிலெல்லாம் வாழ்வது மட்டும் அல்ல, கடக்கமுடியாத நொடியிலெல்லாம் வீழாமலும் இருப்பதே... இது தானே சுவாரசியமும்
கூட.
உலகம் ஒரு வட்ட சுற்றில் சுற்றுவது போலவே வாழ்க்கையும் ஒரு
சுற்றில் தான் இருக்கிறது. நம்மை கடந்து போய் சுத்தமாக மறந்து போனவர்களுக்கு கூட நம்முடைய
நினைவானது ஒருநாள் வரும். அன்றைக்கு அவர்களுக்கு நம்முடைய தேவை என்பது
முக்கியமானதாக இருக்கும்.
இந்த சுற்றில் ஒருவரின் மனதில் முக்கியமில்லை என்று ஒதுக்கி
வைக்கப்பட்ட நாம் ஒருநாள் அந்த நபருக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய நபராக
மாறுகிறோம். இதே நிலையில் நாம் மறந்தவர்கள் கூட நமக்கு ஒருநாள் அவசியமானவராக
இருக்கக்கூடும்.
என்றைக்குமே நாம் ஒரு பொருளின் மீது அன்பை வைப்பதை விட நம்
கண்ணுக்கு முன்னால் உலவிக்கொண்டிருக்கும் நபரின் மீது உண்மையான அன்பை வைப்போம்.
கனவுலகில், கற்பனை உலகில், கண்ணில் காணாத மெய்நிகர் உலகில் என்றும் நம்மால் காண
முடியாத உலகில் உள்ளவர்களிடம் இன்றைக்கு அன்பு செலுத்தி ஒரு கற்பனை வாழ்க்கையில்
திளைக்கிறோம்.
இதயத்துக்குள் வைக்கும் அன்பு வாழ்க்கையில் அமைதியும்,
இன்பமும் தந்து பரந்த வானம் போல விரிந்து இருக்கிறது. மூளையில் வைக்கும் அன்பு
கணக்குகள் போட்டு என்ன பிரதிபலன் என்று நினைத்து குறுகிய வழிப்பயணமாக
மாறிவிடுகிறது.
எல்லையில்லா எதிர்பார்ப்புகள்
இல்லாத அன்பே உலகில் சிறந்தது. இதை பெறுபவர்கள் சிறந்தவர்கள் என்றால் கொடுப்பவர்
மிகவும் சிறந்தவர்கள். சிலருக்கு அன்பை பரிமாறுவதும் ஒரு பண்டமாற்று போலவே
தோன்றுகிறது. அது தான் உறவுகளில், நட்புகளில், குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு
தோற்றப்புள்ளியாய் மாறுகிறது.
சொல்லுபவர்கள்
என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத
ஒன்றாக இருக்கட்டும். உங்களுக்கு எந்த ஏமாற்றங்களும் என்றைக்கும் இருக்காது.
இதயத்தில் மூலம்
அன்பு கொண்ட பிணைப்பு என்றைக்கும் மாறுவதும் இல்லை மறைவதும் இல்லை மருங்குவதும்
இல்லை. அன்புகொண்டவர்களை இதயத்தில் வைப்போம்... மூளை(லை)யில் அல்ல.
அதே நேரத்தில்
நமது அன்பை கொண்டே நம்மை பலவீனப்படுத்தும் நபர்களிடம் நாம் கொஞ்சம்
எச்சரிக்கையுடன் இருப்போம். அன்பு விற்பனைக்கும், ஏமாற்றங்களுக்கும் அல்ல. அன்பு அன்பினால்
ஆளுமை செய்ய மட்டுமே.
சில நேரங்களில் எதிர்ப்பாப்புகள் நம்மை, “இது முடியாது, இது நடக்காது, அது தப்பு,
இது தப்புன்னு ஆயிரம் கட்டுக்கோப்புக்குள் இருக்கும் பல
காரியங்களில் அந்த கட்டுக்களை மீறி நம்மை நடக்க வைத்து திட்டமிட்டு அந்த ஒவ்வொரு
கட்டுக்களையும் உடைத்தெறிய நம்மை தூண்டுகிறது...
இந்த எதிர்ப்பார்ப்புகளே பலநேரங்களில் நம் அன்பானவர்களின்
மனதை புரிந்துக்கொள்ளாமல் அவர்களை மனம் நோக செய்து ஒரு நிலையில் அவர்களை
தொலைத்துவிட வைக்கிறது. பின்னர் உண்மைகள் நமக்கு புரியும் நிலையில் அவர்களின்
நினைவுகளை மட்டும் பத்திரமாக நமது மனதில் வைத்திருந்து மருகுவதால் யாருக்கு என்ன
பயன்??
நா.பார்த்தசாரதி அவர்கள் சொல்லுவது போல “அடுத்தவன் தோள் மீது
ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?” இது தான்
அன்பின் பெயரை சொல்லி எதிர்பார்ப்புகள் கூட்டி அவர்கள் மீது ஏமாற்றங்களை திணிக்கும்
மற்றவர்களின் செயல் ஆகும்.
ஒரு சிலர் சொல்லுவார்கள் “அனைவரையும் வெறுத்து ஒதுக்குங்கள்! யார்
மீதும் அன்பு செலுத்தாதீர்கள். தன்னலமாய் இருங்கள். நிம்மதியான வாழ்விற்கு அதுவே
சிறந்த வழி!” இப்படி தன்னலமாய் வாழ்தலில் என்ன இருக்கிறது?
ஓரறிவு கொண்ட மரமே தன்னலம் இல்லாமல் மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்து
மடிகையில், ஐந்தறிவுள்ள விலங்குகளே மனித குலத்திற்கு தேவையான உதவிகள் செய்து நன்றியுடன்
இருக்கையில்.. ஆறறிவு கொண்ட மனிதன் தன்னலம் கொண்டவனாக இருப்பது சரியா? அப்படி
வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?
இப்படி தன்னலமாக
சிந்திப்பதே எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றங்களில் விளைவுகள்
மட்டுமே. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ தேவையற்ற, சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை
கூட்டிக்கொள்ளாமல் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ்வதே சிறந்த வழி.
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக